Published:Updated:

ஊதிய உயர்வு... எப்போது கிடைக்கும்? - பதில் சொல்கிறார் நிபுணர்

கோவிட் பாதிப்பால் பல ஊழியர்கள் மீண்டும் எப்போது ஊதிய உயர்வு கிடைக்கும் என்று கேட்டு வருகின்றனர்!

பிரீமியம் ஸ்டோரி
ரு நிறுவனத்தின் ஊழியர் தன்னுடைய உழைப்புக்கான பலனை அறுவடை செய்யும் நேரம்தான் ஊதிய உயர்வு அளிக்கப்படும் நேரம். ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றுவதும் அல்லது மற்றொரு நிறுவனத்துக்குப் பணிமாறவும் இந்த ஊதிய உயர்வின் தாக்கம் இருக்கும்.

பாதிப்படைந்த வளர்ச்சி...

இந்த ஆண்டில் ஏற்பட்ட கோவிட்-19 பெருந்தொற்று உலக அளவில் ஊதிய உயர்வையே சற்று அசைத்துப் பார்த்துவிட்டது.பெரும்பாலான உலக நாடுகளில் பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு தெருவோர சிறு வியாபாரிகள் தொடங்கி பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் பெரு நிறுவனங்கள் வரை அனைவரின் வர்த்தகத்தையும் முடக்கிப்போட்டது. விளைவு, ஊதிய உயர்வு என்ற சொல் மறக்கடிக்கப் பட்டு ஊதிய குறைப்பு, ஆட்குறைப்பு என்ற வார்த்தைகளை அதிகம் கேட்கும்படி ஆகிவிட்டது.

எஸ்.பி.பாலமுருகன்
எஸ்.பி.பாலமுருகன்

இந்தச் சூழலில் ஏயான் (Aon) என்ற சர்வதேச நிதி நிறுவனம் இந்தியாவில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த 1,050 நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவின்படி இந்தியாவில் 2021-ம் ஆண்டில் 87% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கத் திட்ட மிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தவிர, ஊதிய உயர்வு வழங்கும் நிறுவனங்களில் 61% தங்கள் ஊழியர்களுக்கு 10% வரை வழங்கத் திட்டமிட்டுள்னவாம். அதனால் 2021-ம் ஆண்டுக்கான சராசரி ஊதிய உயர்வு 7.3 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் சில முக்கியமான விஷயங் களும் தெரிய வந்துள்ளன. பெருந்தொற்று காலத்தில் இழப்பு ஏற்படாமல் தப்பித்த 29% நிறுவனங்கள்கூட ஊதிய உயர்வை அளிக்கவில்லை. லாக்டௌன் தளர்வுகள் அமலுக்கு வந்து, பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டாலும் 14% நிறுவனங்கள் 2021-ம் ஆண்டில் ஊதிய உயர்வு வழங்கப்போவதில்லையாம். கணிசமான நிறுவனங்கள் பெருந்தொற்று நேரத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை 2021-ம் ஆண்டில் திரும்பக் கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பெருந்தொற்று காலத்தின் தாக்கத்தின் காரணமாக இந்த ஊதிய உயர்வு சாத்தியமா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இதுபற்றி சோசியலாஜிஸ்ட் மற்றும் ஹெச்.ஆர் கன்சல்டன்ட் எஸ்.பி.பாலமுருகனிடம் கேட்டோம். விரிவான பதிலை அவர் நமக்குத் தந்தார்.

மிகக் குறைவான ஊதிய உயர்வு...

“2008-ல் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது நிறைய பேர் வேலை இழந்தனர். அந்தச் சமயத்தில் அளிக்கப்பட்ட சம்பள உயர்வின் சராசரி 6.3 சதவிகிதமாக இருந்தது. ஊதிய உயர்விலேயே மிகக் குறைவான பெஞ்ச்மார்க் அதுவாகத்தான் இருந்தது. தற்போது கோவிட்-19 சமயத்தில் பொருளாதார மந்தநிலை சமயத்தைக்காட்டிலும் ஊதிய உயர்வின் சராசரி 6.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

ஊதிய உயர்வு... எப்போது கிடைக்கும்? - பதில் சொல்கிறார் நிபுணர்

பொதுவாக, அனைத்து நிறுவனங்களிலும் ஒரு நிதியாண்டின் முதலாவது காலாண்டு நிறைவடையும்போதுதான் ஊதிய உயர்வு அளிக்கப்படும். 2020-2021-ம் நிதியாண்டைப் பொறுத்தவரை, முதலாவது காலாண்டு நிறைவடையும் நேரத்தில்தான் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்து இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்தச் சூழல் சில நிறுவனங்களுக்கு சாதகத்தை அளித்தது என்றுதான் கூற வேண்டும்.

குறிப்பாக, பார்மா நிறுவனங்களுக்கு. ஒரு நிறுவனம் செயல்படுவதற்கு செயல்பாட்டுச் செலவு மற்றும் நிர்வாகச் செலவு என்ற இரண்டும் தேவைப்படும். ஒரு நிறுவனம் அமைந்திருக்கும் கட்டடம், அதற்கான மின்சாரப் பயன்பாடு, போக்குவரத்து, பொருள்கள் பயன்பாடு உள்ளிட்டவை நிர்வாகச் செலவாகக் கருதப்படும். அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் மென்பொருள், ஊழியர்களுக்கான சம்பளம், தொழிலை மேம்படுத்துவதற்கான செலவு உள்ளிட்டவை செயல்பாட்டுச் செலவாகக் கருதப்படும்.

ஐ.டி நிறுவனங்கள், அத்தியாவசிய பொருள்கள் (FMCG) தயாரிப்பு நிறுவனங்களில் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த நிறுவனங்கள் ஊதிய உயர்வை அளிக்கத் தயங்காது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

80% செலவு குறைந்தது...

இந்த நிதியாண்டைப் பொறுத்தவரை, நிர்வாகச் செலவு மிகவும் குறைந்துவிட்டது. போக்குவரத்து முழுவதுமாகப் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதால், அலுவலகத்தில் மின்சாரப் பயன்பாடு, அலுவலகக் கட்டடத்தின் பராமரிப்பு உள்ளிட்ட ஐந்தில் ஒன்றாகக் குறைந்துவிட்டது. அப்படியென்றால் நிர்வாகச் செலவு என்பது 80% குறைந்து, நிறுவனங்களுக்கு சேமிப்பைக் கொடுத்தது.

செயல்பாட்டுச் செலவிலும் சேமிப்பு ஏற்பட்டது. காரணம், புதிய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை, தொழிலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. அதனால் செலவுகளுக்கான முதலீடு குறைவாகவே தேவைப்பட்டது. சில நிறுவனங்கள் 10 - 25% ஊதியக் குறைப்பை செய்திருக்கிறது. மேலும், நிறுவனத்தில் உபரியாக இருக்கும் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியிருக்கிறது.

அதிகம் உழைக்கும் பணியாளர்கள்...

மற்றொரு புறம், நிறுவனங்களுக்கான பயன்பாட்டு நேரம் அதிகரித்துவிட்டது. அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது ஒரு ஊழியர் எட்டு மணி நேரம் பணியாற்றுவார். ஆனால், வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது பணியாளர்கள் 24 மணி நேரமும் நிறுவனங்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார். இது நிர்வாகத்துக்கு சாதகமான உத்தியாக இருக்கிறது. இதனால் செலவு குறைந்து உற்பத்தி அதிகரித்துள்ளது. இவை அனைத்தின் அடிப்படையில் கணிசமான நிதி சேமிக்கப் பட்டிருக்கும். சேமிப்பு மற்றும் வர்த்தகம் சிறப்பாக அல்லது மேம்படத் தொடங்கியிருக்கும் நிறுவனங்களால் அடுத்த நிதியாண்டில் ஊதிய உயர்வை அளிக்க முடியும்” என்றார்.

எந்தெந்தத் துறையில் ஊதிய உயர்வு...

எந்தெந்த துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு ஊதிய உயர்வு சாத்தியம், எவற்றுக்கு சாத்தியம் குறைவு என்பதையும் அவரே விளக்குகிறார்.

“பார்மா நிறுவனங்கள் மற்றும் அதைச் சார்ந்த மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் நல்ல வருமானம் ஈட்டின. சரியாகச் சொல்லப் போனால், தேவை 200 சதவிதமாக அதிகரித்து உற்பத்தி 100 சதவிதமாக இருந்துவருகிறது. உற்பத்தியைவிட தேவை அதிகரித்துள்ளதால், பார்மா நிறுவனங்களின் வர்த்தகம் அதிகரித்துள்ளது.

ஐ.டி நிறுவனங்கள், நுகர்வோர் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள்கள் (FMCG) தயாரிப்பு நிறுவனங்களில் ஊதிய உயர்வை எதிர் பார்க்கலாம். ஐ.டி நிறுவனங்கள் வருமானம் ஈட்டியுள்ளது ஒருபக்கம் இருந்தாலும், அந்தந்த நிறுவனம் தனது திறமையான ஊழியரைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் என்பதால், ஊதிய உயர்வை அளிக்கத் தயங்காது.

எது அவசியம், எது அநாவசியம்...

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பாலான மக்கள் அத்தியாவசியத் தேவை எது, ஆடம்பரம் எது என்ற புரிந்து கொண்டுள்ளனர். உணவு, மருந்து போன்றவை அத்தியாவசியம் என்றும், இந்தச் சமயத்தில் வாகனம் வாங்குவது, விலை அதிகமான ஆடை, ஆபரணங்கள் வாங்குவது எல்லாம் ஆடம்பரம் என்றும் நினைக்கின்றனர். மக்கள் ஆடம்பரம் என்று நினைக்கும் பொருள்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால், அந்த நிறுவனங்களில் ஊதிய உயர்வு மிகவும் குறைவாகவோ, இல்லாமல் போகவோ வாய்ப்புண்டு. இந்த நிறுவனங்களின் வர்த்தகம் 2021 மே மாதத்துக்குமேல் அதிகரிக்கலாம். அவ்வாறு அதிகரித்தால், அதற்குப் பிறகுதான் ஊதிய உயர்வைப் பற்றி அந்தந்த நிறுவனங்கள் முடிவெடுக்கும்” என்றார்.

அடுத்த ஆண்டாவது ஊதிய உயர்வு கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கும் ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறட்டும்!

50 லட்சம் புதிய வேலை...

நாட்டின் பல்வேறு துறைகளுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் மானியத்தால் அடுத்த ஜூன் மாதத்துக்குள் முறைப்படுத்தப் பட்ட துறைகளில் 50 லட்சம் முதல் 60 லட்சம் எண்ணிக்கையிலான புதிய வேலைகள் உருவாக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசு தரும் இந்த மானியத்தைப் பெற வேண்டுமெனில், 50 பணியாளர்களுக்குக் கீழ் இருக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் இரண்டு ஊழியர்களையும் 100 பணியாளர்கள் இருக்கும் நிறுவனங்கள் ஐந்து ஊழியர்களையும் புதிதாக வேலைக்கு எடுக்க வேண்டும் என்று நிபந்தனை பிறப்பித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு