Published:Updated:

கொரோனா எச்சரிக்கை... - அச்சுறுத்தும் இரண்டாவது அலை!

கொரோனா எச்சரிக்கை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா எச்சரிக்கை

‘கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கியிருக்கிறது. முன்பைவிட மோசமான ஒரு சூழலை நாம் எதிர்கொள்ளப்போகிறோம்’ என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா எச்சரிக்கை... - அச்சுறுத்தும் இரண்டாவது அலை!

‘கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கியிருக்கிறது. முன்பைவிட மோசமான ஒரு சூழலை நாம் எதிர்கொள்ளப்போகிறோம்’ என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

Published:Updated:
கொரோனா எச்சரிக்கை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா எச்சரிக்கை
சிறையில் ஐந்து மாதங்கள் அடைந்துகிடந்த ஒரு கைதி, விடுதலை கிடைத்ததும் என்ன செய்வார்? பீச், கோயில், ஷாப்பிங் மால், உறவினர் வீடுகள், விதவிதமான விருந்துகள் என அதகளம் செய்வார். மூடிய கதவுகளுக்குப் பின்னால் வீட்டுக்குள் இருக்கவே அவருக்குப் பிடிக்காது. நம் மக்களில் பலரும் இந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனாவுக்காக அமலான ஊரடங்கில், ஐந்து மாதங்களுக்குப் பின்னர் இப்போது அனைத்துத் தளர்வுகளும் தரப்பட்டுவிட்டன. தியேட்டர்களையும் தீம் பார்க்குகளையும் தவிர எல்லாமே திறந்திருக்கின்றன. காசிமேடு மீன் மார்க்கெட் முதல், ஒன்பது ரூபாய் தள்ளுபடி விலையில் டி-ஷர்ட் விற்ற சென்னைக் கடை வரை எல்லா இடங்களிலும் தள்ளுமுள்ளு... கூட்டம். பெருநகர சிக்னல்கள் அனைத்தும் டிராஃபிக் ஜாமில் தத்தளிக்கின்றன. ஒடிசாவின் மகாநதியில் முதல் வெள்ளத்தைப் பார்க்க பாமரர்கள் கூடினார்களென்றால், மும்பையில் நடிகை ரியா சக்கரவர்த்தியைக் கைது செய்தபோது பத்திரிகையாளர்கள் நெருக்கியடித்து செய்தி சேகரித்தார்கள். ‘கொரோனா என்பது முடிந்துபோன விவகாரம்’ என்பதாகவே எல்லோரது நினைப்பும் இருக்கிறது.

உண்மை என்ன? ‘கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கியிருக்கிறது. முன்பைவிட மோசமான ஒரு சூழலை நாம் எதிர்கொள்ளப்போகிறோம்’ என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால், வெடிக்கக் காத்திருக்கும் ஓர் அணுகுண்டின்மீது நாம் அமர்ந்திருக்கிறோம் என்பது புரியும்.

* மார்ச் 24 நள்ளிரவு முதல் 21 நாள்கள் முழு ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபோது இந்தியாவில் கொரோனா நோயாளிகள் வெறும் 500 பேர் மட்டுமே. 10 பேர் மட்டுமே இறந்திருந்தனர். அப்போது எல்லோருமே வீடுகளுக்குள் அடைந்திருந்தோம். இன்று, கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. 45,00,000-ஐ தாண்டிவிட்டோம். அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். 75,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். ஆனால், இப்போதுதான் எல்லோருமே வீதிகளில் இருக்கிறோம்.

* கொரோனாவில் சில உலக சாதனைகளை இந்தியா செய்துள்ளது. ஒரே நாளில் புதிய நோயாளிகள் அதிகம் வருவதில் இந்தியாவுக்கே முதலிடம். தினசரி 90,000-ஐ தாண்டுகிறது. ஆரம்பநாள்களில் கொரோனா அச்சுறுத்திய சீனா, பெல்ஜியம், ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகளில் இதுவரை பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை விட, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிக புதிய நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.

* ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் நிகழ்வதிலும் இப்போது இந்தியாவே முதலிடம் பிடித்துள்ளது. சராசரியாக தினமும் ஆயிரத்தைத் தாண்டுகின்றன உயிரிழப்புகள்.

* இந்தியாவில் வெறும் 50 நாள்களில் 10,00,000 நோயாளிகள் என்ற எண்ணிக்கை, 40,00,000 நோயாளிகளாக உயர்ந்தது. உலகிலேயே மிக வேகமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை இது உணர்த்துகிறது. பிரேசிலில் 75 நாள்களிலும், அமெரிக்காவில் 86 நாள்களிலும் இப்படி உயர்ந்தது.

சரி, இவ்வளவு மோசமான பாதிப்புகள் இருக்கும்போது ஏன் எல்லாப் பூட்டுகளையும் திறக்கிறோம்? அதற்கும் இன்னொரு மோசமான ‘சாதனை’தான் காரணம். உலகிலேயே கொரோனாவாலும் ஊரடங்காலும் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியாவின் பொருளாதாரம்தான். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதைவிட, பொருளாதாரத்தை மீட்பதில்தான் இப்போது அரசின் கவனம் இருக்கிறது. ‘கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்’ என்ற அட்வைஸ்கள் எல்லா திசைகளிலிருந்தும் வருவதற்குக் காரணம் இதுதான்.

நம்மைப் பொறுத்தவரை, கொரோனா பரவலில் இது மிக முக்கியமான காலம். இப்போதே உச்சத்திலிருக்கும் நாம், இன்னும் பெரிய உச்சத்துக்குப் போவோமா அல்லது நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்குமா? யாராலும், எந்த யூகமும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில், ‘‘மக்கள் அலட்சியமாக இருந்தால், அக்டோபர் மாதம் கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் வருவதைத் தடுக்க முடியாது’’ என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருக்கிறார். ஆனால், ‘‘இந்தியா ஏற்கெனவே கொரோனாவின் இரண்டாவது அலையில்தான் இருக்கிறது’’ என்று அடித்துச் சொல்கிறார், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா.

‘‘வெளிநாட்டிலிருந்து முதலில் மெட்ரோ நகரங்களுக்குத்தான் கொரோனா வந்தது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற சில மாநிலங்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகின. ஆனால், இப்போது எல்லா மாநிலங்களிலும் பாதிப்பு தெரிகிறது. சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் கொரோனா பரவுகிறது. ஒடிசா, தெலங்கானா என முன்பு அதிக பாதிப்புக்கு ஆளாகாத மாநிலங்களில் இன்று புதிய நோயாளிகள் ஏராளமாக வருகின்றனர். ஆந்திரா திடீரென தமிழகத்தைவிட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிக நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இவையெல்லாமே இரண்டாவது அலையின் விளைவுகள்தான். அடுத்த ஆண்டின் ஆரம்பம் வரையில் இப்படித்தான் இருக்கும்’’ என்கிறார் ரந்தீப் குலேரியா.

இரண்டாவது அலைக்குக் கேரளாவே மிகச் சிறந்த உதாரணம். ஏப்ரல் மாதத்தில் சுமார் 500 நோயாளிகள் இருந்தபோது, அங்கு கிட்டத்தட்ட கொரோனாவே ஒழிந்துபோனதாகக் கருதப்பட்டது. கேரளாவின் வெற்றிக்கதையை இந்தியாவே பேசியது. எல்லோரையும் முந்திக்கொண்டு அங்கு பேருந்துகளையே அனுமதித்தனர். அலட்சியம் காட்டியதன் விளைவு, இப்போது அங்கு 95,000 நோயாளிகள்!

கொரோனாவை வென்றதாக போஸ்டர் ஒட்டிய கோவையிலும் இதே நிலைமைதான். இன்று தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக அதிக நோயாளிகள் அங்கு கண்டறியப்படுகின்றனர்.

கொரோனா எதிர்ப்பணு எத்தனை பேர் உடலில் உருவாகியுள்ளது? டெல்லியில் செய்யப்பட்ட பரிசோதனையில் நான்கில் ஒருவருக்கும், சென்னையில் ஐந்தில் ஒருவருக்கும் இந்த எதிர்ப்பணு இருப்பது உறுதியானது. இதன் நேரடி அர்த்தம், ‘இத்தனை பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.’ மறைமுக அர்த்தம், ‘இந்த எதிர்ப்பணு இல்லாத மற்றவர்களுக்கு கொரோனா தொற்ற வாய்ப்புள்ளது’ என்பதுதான். நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் வி.கே.பால் இதைச் சொல்லியே எச்சரிக்கிறார். ‘‘இந்திய மக்கள்தொகையில் 70 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்றும் ஆபத்து இருக்கிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டதால், நோய் பரவும் வேகம் இன்னும் அதிகமாகும். புது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்கிறார் அவர்.

கொரோனா எச்சரிக்கை... - அச்சுறுத்தும் இரண்டாவது அலை!

இந்த இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்படுவது கிராமங்களும் சிறு நகரங்களுமே! அங்கெல்லாம் முறையான மருத்துவ வசதிகள் கிடையாது. இந்தியாவில் 70 சதவிகித மக்கள், தனியார் மருத்துவ சேவையையே சார்ந்துள்ளனர். ஆனால், கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு மிகக் குறைவு. இதனால் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் திணறுகின்றன. குறிப்பாக, மதுரைக்குத் தெற்கே இருக்கும் அத்தனை மாவட்டங்களும் தவிக்கின்றன. போதாக்குறைக்கு, ‘கொரோனா முடிந்துவிட்டது‘ என்ற நினைப்பில் தற்காலிக சிகிச்சை முகாம்களாகச் செயல்பட்ட பல கட்டடங்கள் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.

‘ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் நோய்த்தொற்று தாறுமாறாக அதிகரிக்கும். தீவிர ஆட்டம் காட்டிய பிறகே குறையும்’ என்பது கொரோனா நமக்குக் கற்றுத் தந்த பாடம். எனவே, அரசு உடனே செய்ய வேண்டியவை...

l எங்கெல்லாம் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

l ஒரு கிராமமோ, சிறுநகரமோ, பெருநகரத்தின் ஒரு பகுதியோ, எங்கு நோயாளிகள் அதிகம் கண்டறியப்படுகிறார்களோ, அந்தப் பகுதியிலிருந்து அது மேலும் பரவாமல் தடுக்க வேண்டும்.

l ‘தமிழகம் முழுக்க 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும்’ என அரசு அறிவித்துள்ளது. உடனே இவற்றைத் திறக்க வேண்டும். கொரோனாவை ஆரம்பத்திலேயே கண்டறியும் மையங்களாக இவை செயல்பட்டால், உயிரிழப்புகளையும், நோய் பரவுவதையும் கணிசமாகக் குறைக்க முடியும்.

l ‘‘நான் திருவள்ளூர் போனபோது பார்த்தேன். 40 சதவிகித மக்கள்தான் முகக்கவசம் அணிகிறார்கள்’’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமியே சொல்கிறார். இதை 100 சதவிகிதமாக அதிகரிக்கச் செய்ய வேண்டியதும் அவர் வேலைதான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகம் என்ன ஆகும்?

தமிழகத்தில் கடந்த மாதம் தினமும் 60,000 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இப்போது 80,000-ஐ தாண்டினாலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதே அளவிலேயே உள்ளது. இதைக் குறிப்பிட்டு, `கொரோனாவின் தீவிரம் குறைகிறது’ என்கிறார்கள் பலர். ஆனால், இது உண்மையல்ல!

ஓர் ஒப்பீடு இதை உணர்த்தும். தமிழகத்தின் மக்கள்தொகை 7.7 கோடி. நோயாளிகள் எண்ணிக்கை 4,90,000-ஐ தாண்டியுள்ளது. சுமார் 8,000 உயிரிழப்புகள். தினமும் 5,000-க்குக் குறையாமல் புதிய நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.

இத்தாலியின் மக்கள்தொகை ஆறு கோடி. நோயாளிகள் எண்ணிக்கை 2,80,000. 35,000 உயிரிழப்புகள். மார்ச் மாதவாக்கில் தினமும் 6,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இப்போது இது 2,000-க்கும் கீழே குறைந்துள்ளது.

ஈரான் மக்கள்தொகை 8.4 கோடி. 3,93,000 நோயாளிகள். 22,000 உயிரிழப்புகள். முன்பு தினமும் 3,500 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இப்போது இது சராசரியாக 2,000.

உயிரிழப்புகள் குறைவு என்றாலும், தமிழகத்தில் நோயின் தீவிரம் குறையவில்லை. ஆரம்பத்தில் அதிக நோயாளிகள் வந்த மாவட்டங்களில் இப்போது எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. ஆனால், வேறு மாவட்டங்களில் அதிகமாகிறது. புதுப்புது பகுதிகளில் கொரோனா பரவத் தொடங்கியிருப்பதை இது உணர்த்துகிறது. பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கொரோனா தாறுமாறாக அதிகரிப்பதால், தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism