Published:Updated:

`நம் அன்புக்குரிய பலரை கொரோனா பலி கொண்டுவிட்டது' - உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி!

மோடி
மோடி

`கோவிட் இரண்டாவது அலைக்கு எதிராக நாம் பல வழிகளில் ஒன்றிணைந்து போராட வேண்டும். நாட்டின் சுகாதார அமைப்பு பெரும் சிக்கலில் உள்ளது’ எனப் பிரதமர் மோடி பேச்சு.

கொரோனா தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கொரோனா தடுப்பில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், இன்று தனது சொந்தத் தொகுதியான வாரணாசியிலிருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய மோடி மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களைப் பாராட்டினார். தொடர்ந்து பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட மோடி, கொரோனா இரண்டாவது அலை எனும் போரில் மிகப்பெரிய பங்காற்றும் அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்தார்.

மோடி
மோடி

கொரோனா தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படும் பணியாளர்கள் குறித்துப் பேசிய மோடி, ``மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இடைவிடாமல் முயன்றபோதும் நம் குடும்ப உறுப்பினர்கள் சிலரைக் காப்பாற்ற முடியாமல் போனது. இந்த வைரஸ் நம் அன்புக்குரியவர்களைக் கொன்றிருக்கிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த அஞ்சலி. கோவிட் இரண்டாவது அலைக்கு எதிராக நாம் பல வழிகளில் ஒன்றிணைந்து போராட வேண்டும். நாட்டின் சுகாதார அமைப்பு பெரும் சிக்கலில் உள்ளது" எனப் பேசியவர் திடீரென உணர்ச்சிவயப்பட்டார்.

தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்த பிரதமர் ``Where sick, there treatment" என்ற புதிய முழக்கத்தைக் கூறினார். அதாவது ``நோயாளி எங்கோ சிகிச்சை அங்கு" என்ற முழக்கத்தை அறிவித்தார். இதற்கு முன் கடந்த மாதம் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களிடம் பேசியபோது தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும், அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு