Published:Updated:

தென்காசி: `5,000 கூடங்கள்; 25,000 தொழிலாளர்கள்’ - மீண்டும் இயங்கும் விசைத்தறிகளால் உற்சாகம்

விசைத்தறி
விசைத்தறி

கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் வாய்ப்பு இல்லாமல் விசைத்தறித் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருந்தார்கள். அன்றாட உணவுக்குக் கூட கடன் வாங்கும் நிலைக்கு விசைத்தறித் தொழிலாளர்கள் தள்ளப்பட்டிருந்தனர். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 5,000-க்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சுமார் 25,000 தொழிலாளர்கள் நேரடியாகவும் ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புப் பெற்று வருகிறார்கள். 

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சங்கரன்கோவில் பகுதியில் கடந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்தது. அதனால் விசைத்தறிக் கூடங்களில் பணியாற்றுவோருக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்கிற அச்சத்தில் அவற்றை மூடுவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

Vikatan

விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டதால் அவற்றில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்பு இல்லாமல் திணறினார்கள். சிலர் தங்களின் குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்குவதற்குக் கூட கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

இயங்காத விசைத்தறிக் கூடம்
இயங்காத விசைத்தறிக் கூடம்

விசைத்தறிக் கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு தொழிலாளர்களிடம் ஏற்பட்டிருந்தது. தற்போது சங்கரன்கோவில் பகுதியில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் மீண்டும் விசைத்தறிக் கூடங்களைத் திறக்க உரிமையாளர்கள் முடிவு செய்தார்கள்.

கடந்த 11 நாள்கள் மூடப்பட்டுக் கிடந்த விசைத்தறிக் கூடங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்கிற அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வேலையைத் தொடங்கும் ஆர்வத்தில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

விசைத்தறிக் கூடம்
விசைத்தறிக் கூடம்

இது குறித்து விசைத்தறி உரிமையாளர்களிடம் பேசியபோது, ``கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறித் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களைப் பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. இருப்பினும், தொழிலாளர்களின் நலன் கருதி விசைத்தறிக் கூடங்களைத் திறந்து, அரை நாள் மட்டுமே இயக்க முடிவெடுத்துள்ளோம்” என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு