Published:Updated:

“கோவன் கொல்லப்படுவான்!” - பதற்றத்தை ஏற்படுத்திய வலைதளப் பதிவு

கோவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கோவன்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்த்து மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் பிரசாரம் செய்துவந்தார் கோவன்.

‘பாடகர் கோவன் இன்னும் ஐந்து வருடங்களில் கொல்லப்படுவான்’ என்ற சமூக வலைதளப் பதிவு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவின் பின்புலத்தில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினர் இருப்பதாகக் குற்றம்சாட்டி போலீஸில் புகார் அளித்திருக்கிறார் கோவன்.

பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்துத் தொடர்ந்து விமர்சனப் பாடல்களைப் பாடிவரும் கலைஞர் கோவன், டாஸ்மாக் தீமைகளைப் பாடியதன் மூலம் பெரிதும் கவனம்பெற்றார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் இவர் செயல்பட்டுவருகிறார். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில், இவர் எழுதிப் பாடிய ‘ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்...’ என்ற பாடல் பெரிய அளவில் வைரலானது. அந்தப் பாடல் வரிகளால் உச்சகட்ட கோபம் அடைந்தது அப்போதைய அ.தி.மு.க அரசு. ‘இவரது பாடல்கள் பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும், தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் இருப்பதாக’ வழக்கு பதிவுசெய்ததோடு, 2015 அக்டோபரில் அதிரடியாகக் கைதுசெய்து தேசத்துரோக வழக்கும் போட்டது. ‘‘இதற்கெல்லாம் எப்படி தேசத்துரோக வழக்கு போட முடியும்?’’ என போலீஸைக் கேள்விகளால் நீதிமன்றம் துளைத்தெடுத்தது. இன்றுவரையிலும் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்த்து மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் பிரசாரம் செய்துவந்தார் கோவன். இந்தநிலையில்தான் அவர் உயிரிழந்துவிட்டார் எனவும், ஐந்து வருடங்களில் கொல்லப்படுவார் எனவும் சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட, காவல் நிலையப் படியேறியிருக்கிறார் கோவன்.

கோவனைச் சந்தித்துப் பேசினோம். ‘‘மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் 35 ஆண்டுகளாகப் பணிசெய்து வருகிறேன். சாதி, தீண்டாமைக் கொடுமை, அரசின் திட்டங்களால் மக்கள் படும் அல்லல், மதவெறி அரசியலால் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவை குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன். இந்தநிலையில், ஜூன் 1-ம் தேதி, எங்கள் அமைப்பு தோழர் ஒருவர் போன் செய்து, ‘எப்படி இருக்கீங்க... உங்களுக்கு ஏதும் பிரச்னை இல்லையே?’ எனத் தழுதழுத்த குரலில் பேசினார். ‘என்ன ஆச்சு?’ எனக் கேட்டபோது, ‘நீங்க மாரடைப்பால இறந்துட்டதா சோஷியல் மீடியாக்கள்ல செய்திகள் பகிரப்பட்டுவருது’ என்று சொன்னார். அடுத்தடுத்து பல போன் கால்கள் வரத் தொடங்கின.

நான் ஃபேஸ்புக்கில் பார்த்தபோது, (கிட்கிட்) கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனியார் தொலைக்காட்சியின் லோகோவுடன், என்னுடைய புகைப்படத்தை வைத்து ‘சமூக ஆர்வலர் கோவன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்’ என்று பொய்யான தகவலைப் பதிவுசெய்திருக்கிறார். அதை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ராமநாதன் என்பவர் ஷேர் செய்திருக்கிறார். கமென்ட்ஸ் பகுதியில், ‘அவன் இன்னும் ஐந்து வருடங்களில் சாகடிக்கப்படுவான்’ என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். அந்த இருவரும் யார் என்று விசாரித்ததில், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களது ஃபேஸ்புக் பக்கத்தில், பா.ஜ.க-வில் முக்கியப் பதவியிலிருக்கும் சிலர் நண்பர்களாக இருக்கிறார்கள்.

“கோவன் கொல்லப்படுவான்!” - பதற்றத்தை ஏற்படுத்திய வலைதளப் பதிவு

`சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்துத்வ அமைப்பினர், சாதி வெறி, மத வெறி மற்றும் பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகச் செயல்பட்டுவந்த கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரைக் கொலைசெய்திருக்கிறார்கள். பா.ஜ.க ஆட்சியை விமர்சனம் செய்ததால், பத்திரிகையாளர்கள் விக்ரம் ஜோஷி, கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நானும் பா.ஜ.க அரசை விமர்சனம் செய்து வருவதால், என்னையும் கொலை செய்துவிடுவார்கள் என்று அச்சப்பட்ட எமது தோழர்களின் வற்புறுத்தலால் போலீஸில் புகார் கொடுத்தேன்’’ என்றார் கோவன்.

‘‘டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க-வை விமர்சனம் செய்ததுபோல், நீங்கள் ஏன் தி.மு.க-வை விமர்சனம் செய்வதில்லை?’’ என்று கேட்டதற்கு, ‘‘அ.தி.மு.க மூலமாகத் தமிழகத்தில் பா.ஜ.க கால் ஊன்றப் பார்க்கிறது. குடிமக்களை ‘குடி’மகனாக மாற்றியதே அ.தி.மு.க-தான். ‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ என்று கடந்த 2016 தேர்தலில் தி.மு.க வாக்குறுதி அளித்தது. அதைச் செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அப்படிச் செய்யாதபட்சத்தில், அவர்களைக் கண்டித்து நிச்சயம் பிரசாரம் மேற்கொள்வேன்” என்றார்.

பா.ஜ.க-வின் சமூக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல் குமாரிடம் பேசினோம். ‘‘தமிழகத்தில் பா.ஜ.க-வின் நன்மதிப்பு உயர்ந்துவிடக் கூடாது எனப் பல அமைப்புகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. அதில், ‘இந்துத்துவா அமைப்பு’ என்ற பெயரில், சமூக வலைதளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி ஐ.டி-க்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, காவல் நிலையத்தில் புகார் செய்து அவற்றை நீக்கியிருக்கிறோம். எது குறித்தும் யாரும் விமர்சனம் செய்து பேசலாம்; கருத்துரிமை எல்லோருக்கும் உண்டு. தரம் தாழ்ந்த வகையில் பேசினால், அவர்களைச் சட்டரீதியாகச் சந்திக்கலாமே தவிர, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல. ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றார்.

நிர்மல் குமார் - அருண்
நிர்மல் குமார் - அருண்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருணிடம் பேசினோம். ‘‘சமூக வலைதளத்தில் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்திருக்கிறார் என்பதாகச் சொல்லி, கோவன் உள்ளிட்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் சிலர் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரிக்க, சைபர் க்ரைம் டீமுக்குப் பரிந்துரை செய்துள்ளேன். வன்முறையைத் தூண்டும் வகையில் யார் நடந்துகொண்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்” என்றார் உறுதியாக.

கருத்தைக் கருத்தாலும், பாட்டைப் பாட்டாலும் எதிர்கொள்ளணும்!