Published:Updated:

“கிணத்தை வெட்டலை... பணத்தை வெட்டிட்டானுங்க!”

- திருப்பூர் விவசாயிகளிடம் தில்லாலங்கடி மோசடி...

பிரீமியம் ஸ்டோரி
நாள்பட்ட தாடியுடன் கறையேறிய வேட்டி, கிழிசலான சட்டை, நைந்துபோன சேலையென பார்த்தாலே பரிதாபப்படவைக்கும் தோற்றத்தில் விவசாயிகளின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள் தம்பதியர். கைகளில் குழந்தையொன்று கதறியழுகிறது. “ஐயா... சாமி, சாப்பிட்டு நாளாச்சுங்க... பச்சைக்குழந்தைக்கு பால் கொடுக்கக்கூட வழியில்லை. கொரோனாவால வேலையில்லாம கஷ்டப்படுறோம். கெணத்தைத் தூர்வாரி, வெட்டி ஆழப்படுத்தி தர்றோம். நீங்க விருப்பப்பட்டு, கொடுக்குறதைக் கொடுங்க...” என்று கேட்கும்போதே விவசாயிகள் சிலர் மனமிரங்கிவிடுகிறார்கள்.

‘சரி’, என்று சம்மதித்துவிட்டால் போதும்... மறுநாள் அதிகாலை இருள் பிரிவதற்குள்ளாகவே இருபது முப்பது பேர் குழந்தை குட்டிகள், கிரேன் செட்டப்புடன் விவசாய நிலத்தில் வந்திறங்கி, கூடாரம் போட்டிருப்பதைப் பார்த்து ஆடிப்போய்விடுகிறார்கள் விவசாயிகள். அப்புறமென்ன... அதகளம்தான்!

திருப்பூர் அருகேயுள்ள விவசாயி ஒருவர், “என் பெயரெல்லாம் வேணாங்க... வெளியே தெரிஞ்சா வெட்கக்கேடு” என்றபடி நம்மிடம் பேசினார். “இருபது ஏக்கர், முப்பது ஏக்கர் வெச்சிருக்கிற ஓரளவு வசதியான விவசாயிங்களைத்தான் இவங்க குறிவெக்குறாங்க. ஒருநாள் மத்தியானம் தோட்டத்து கிணத்தடியில உட்கார்ந்து கஞ்சி குடிச்சிட்டிருந்தேன்... வறுமையான தோற்றத்துல புருஷனும் பொஞ்சாதியுமா வந்து, ‘கொடுக்குறதைக் கொடுங்க... உங்க கிணத்தை தூர்வாரித் தர்றோம்’னு கேட்டாங்க. ரெண்டாயிரம்... மூவாயிரம், அதிகமாப் போனா பத்தாயிரம் ரூவாதானே செலவாகும்னுட்டு சரின்னுட்டேன்.

“கிணத்தை வெட்டலை... பணத்தை வெட்டிட்டானுங்க!”

மறுநாள் விடியக்காலை 6 மணிக்கு பல்லை விளக்கலாம்னு புறவாசலைத் திறந்தா, தோட்டத்துல வாட்ட சாட்டமா பதினைஞ்சு இருபது பேரு நாலைஞ்சு கூடாரம் போட்டு, கிரேன் செட்டிங்கோட திமுதிமுனு குவிஞ்சிருக்காங்க. புள்ளை குட்டிகளையெல்லாம் மரத்துல தூளியைக் கட்டி தொங்கவிட்டிருந்தாங்க. இன்னொரு பக்கம் தோட்டத்துல பள்ளம் பறிச்சு, பெரிய பெரிய அண்டா குண்டாவெல்லாம் வெச்சு சமைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த இடமே ஒரே களேபரமா இருந்துச்சு.

எனக்கு பகீர்னு போயிடுச்சு... ஓடிப்போய் விசாரிச்சா, ‘நீங்கதானே சரின்னீங்க... அதான் வேலையை ஆரம்பிச்சிட்டோம்’னவங்க, நான் என்னதான் மல்லுக்கட்டியும் விடலை. ஒரு வாரம் டேரா போட்டு, நாலரை லட்சம் ரூபாய்க்கு செலவுச் சீட்டை நீட்டினாங்க. என்கிட்ட அவ்வளவு காசெல்லாம் இல்லைன்னதுக்கு, ‘பரவாயில்லைங்க சார், நீங்க கொடுக்குறப்ப கொடுங்க’னு அடுத்த மூணு நாளு அங்கேயே தங்கிட்டாங்க. தினமும் விடியக்காலையில கதவைத் தொறந்தா, ‘ஐயா... காசைக் கொடுங்க’னு வாசல்ல பத்து பேரு படுத்துக் கிடக்கறானுங்க. அவங்களை அனுப்புறதுக்கு வேறவழி தெரியாம பேச்சுவார்த்தை நடத்தி, ரெண்டரை லட்சம் ரூபாயை கொடுத்தனுப்பினேன். கிணத்தைப் பார்த்தா, அதையும் ஒழுங்கா வெட்டலை... உண்மையில, அவங்க கிணத்தை வெட்டலை... என்கிட்ட பணத்தை வெட்டிட்டானுங்க” என்றார் நொந்துபோனவராக!

குண்டடம் அருகே சந்திராபுரத்தைச் சேர்ந்த விவசாயி பாலுவுக்கும் கிட்டத்தட்ட இதே அனுபவம்தான்... ‘‘ரெண்டு மாசம் முன்னாடி கணவன் - மனைவி ரெண்டு பேர் வந்தாங்க. ‘தருமபுரி பக்கத்துல இருந்து வாரோம். கிணத்துல சேத்தை அள்ளிட்டு, 10 அடி வெட்டித் தாரோம். ஒரு சதுர அடிக்கு 45 ரூவான்னு, மொத்தம் மூணு லட்ச ரூவால முடிச்சிடலாம்’னு சொன்னாங்க. என்னோடது ஐம்பது அடி பெரிய கிணறு. கணக்கு சரியா இருக்கவும், ‘சரி’ன்னுட்டேன். கிணத்துல ஒன்றரை அடிதான் சேறு இருந்துச்சு. ஆனா, பத்தடிக்கு சேறு எடுத்தோமுன்னு சொன்னாங்க. நாலு அடிகூட கிணறு வெட்டலை, அதுக்குள்ள ‘இதுவரை செஞ்ச வேலைக்கே மூணு லட்சம் ரூவா சரியாப் போச்சு. இன்னும் மூணு லட்சம் வேணும்னு கறாரா பேசினாங்க.

பாலு , முத்துசாமி
பாலு , முத்துசாமி

‘ஏன் இப்படி பிரச்னை செய்றீங்க?’னு கேட்டதுக்குத் தகாத வார்த்தையில திட்டுனாங்க. தெனமும் காலையில எந்திரிச்சதும் அடியாளுங்க மாதிரி 20 பேர் வீட்டு முன்னாடி உட்கார்ந்திருந்தா, என்னங்க பண்ண முடியும்... கடைசியில, 50,000 ரூபா வேலைக்கு மூணு லட்சத்தைப் பிடுங் கிட்டானுங்க” என்றார் வேதனையுடன்.

பல்லடம் அருகே புத்தரச்சல் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, “ஒரு மாசத்துக்கு முன்னாடி பாண்டினு ஒருத்தன், ‘கிணத்துல இருக்குற சேத்தை வழிச்சிட்டு, 10 அடி ஆழம் வெட்டி அளந்து காட்டுறேன்... அதுக்கப்புறம் பணம் கொடுத்தா போதும்’னு வந்து நின்னான். சரின்னு சொல்லிட்டேன். அந்தச் சமயத்துல எனக்கு கொரோனா வந்து ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன். போறப்பக்கூட ரெண்டு சிப்பம் அரிசி, மளிகைச் சாமானை வாங்கிக் கொடுத்து, கையில அஞ்சாயிரம் ரூவா பணத்தையும் கொடுத்துட்டுப் போனேன். அஞ்சு அடிக்கு மட்டும் சேத்தை எடுத்தவனுங்க, மூணு லட்சம் வேணும்னு என் பொண்டாட்டிகிட்ட பிரச்னை செஞ்சிருக்கானுங்க. தோட்டத்துல இருந்த ரெண்டு ஆட்டுக்குட்டி களையும் வெட்டி, சமைச்சு சாப்பிட்டிருக்கானுங்க. போலீஸ் ஸ்டேஷன்லவெச்சு பஞ்சாயத்து பேசியும், ஒன்றரை லட்சத்தை அழ வேண்டியதாப் போச்சு’’ என்றார் பரிதாபமாக.

விவசாயிகளிடம் மோசடி செய்த நபர்களின் மொபைல் எண்களை வாங்கி டயல் செய்தோம். அனைத்து எண்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தன. திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் பலரும் இந்தக் கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்திருக்கிறார்கள். விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி வாயைத் திறக்கத் தயங்குகின்றனர். அதுவே அந்த மோசடிக் கும்பலுக்கு வசதியாகப் போய்விடுகிறது.

கிணறு வெட்ட ‘திருடர்’கள் கிளம்பிட்டாங்க. உஷார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு