Published:Updated:

`கொரோனா வதந்தி; நாட்டுப் பசு கோமியம் லிட்டர் ரூ.500’ - மேற்குவங்கத்தில் கைதான பால் வியாபாரி

Representation image
Representation image

கோமியம் குடித்தால் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் எனக் கூறி கோமியத்தை விற்பனை செய்த பால் வியாபாரியை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

`கொரோனா வைரஸ்’ உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனா, இத்தாலி, இரான் போன்ற நாடுகளில் உயிரிழப்புகள் பெருமளவில் உள்ளன. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000-த்தை தாண்டியது. உலகளவில் கொரோனா வைரஸால் 1,99,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 82,812 பேர் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறது. பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறு மக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பசுவின் கோமியத்தைக் குடித்தால் கொரோனா தொற்று ஏற்படாது எனக் கூறி கோமியத்தை விற்பனை செய்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பால் வியாபாரியான மாபூத் அலி என்பவர் ஹூக்ளி பகுதியில் சாலை ஓரத்தில் தற்காலிக கடை அமைந்து பசுவின் கோமியத்தையும் சாணத்தையும் விற்பனை செய்து வந்துள்ளார். கோமியத்தைப் பருகினால் கொரோனா தொற்று ஏற்படாது என விளம்பரப் பலகை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். ஒரு லிட்டர் பசுவின் கோமியம் ரூ.500-க்கும், சாணம் 1 கிலோ ரூ.500-க்கும் விற்பனை செய்துவந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஹூக்ளி பகுதியைச் சேர்ந்த காவலர்கள் மாபூத் அலியைக் கைது செய்தனர். ஏமாற்றுதல் மற்றும் மத உணர்வுகளைக் காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்சி பசு
ஜெர்சி பசு

காவல்துறையின் விசாரணையில், ``மார்ச் 14-ம் தேதி ஹிந்து மகா சபா சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த பின்னரே தனக்கு இந்த யோசனை தோன்றியதாகக் கூறியுள்ளார். என்னிடம் 2 மாடுகள் உள்ளன. ஒன்று நாட்டுப் பசு மற்றொன்று ஜெர்சி பசு. பால் விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறேன். ஹிந்து மகா சபா நடத்திய நிகழ்ச்சியை டிவியில் பார்த்தேன். அப்போதுதான் கோமியத்தையும் சாணத்தையும் விற்றால் நன்றாகச் சம்பாதிக்கலாம் எனத் தோன்றியது. பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்தையும் காசாக மாற்ற முடியும் எனத் தெரிந்தது. அதனால் நான் சாலையில் கடை அமைத்து விற்பனை செய்ய முடிவு செய்தேன். ஜெர்சி பசுவின் கோமியத்துக்கும் சாணத்துக்கும் மக்களிடம் அதிக மவுசு இருக்காது. எனவே, அவற்றை ரூ.300-க்கு விற்பனை செய்தேன்” என அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அலி.

அடுத்த கட்டுரைக்கு