Published:Updated:

நிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்... எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்?

Nirmala Sitharaman
பிரீமியம் ஸ்டோரி
News
Nirmala Sitharaman

மாற்றம்

டந்த சில வாரங்களில் எல்லாத் துறைகளிலிருந்தும் பொருளாதார மந்தநிலை குறித்த செய்திகள் வெளியாகி, கடுமையான அச்சத்துக்கு உள்ளானார்கள் மக்கள். இதன் காரணமாக, பங்குச் சந்தைகள் இறக்கம் காணத் தொடங்கின. பொருளாதார மந்த நிலையைப் போக்கி, வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டுமெனில், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுந்தது.

இந்த நிலையில், தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற மாதிரி பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதி அமைச்சரின் இந்த அறிவிப்புகளால் எந்தெந்தத் தொழில் துறைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்ப்போம்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

எம்.எஸ்.எம்.இ துறை ஏற்றம் பெறுமா?

இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகள் கடந்த சில ஆண்டுகளாகவே பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீடும் குறைந்துள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் தடுமாறி னாலும் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறிய நிதி அமைச்சர், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்திருக்கிறார். இதில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கானவை பல.

இந்த அறிவிப்புகளால் எம்.எஸ்.எம்.இ துறையில் நிகழவிருக்கும் மாற்றங்கள் என்ன என்பது குறித்து கார்ப்பரேட் கிளினிக் நிறுவனத்தின் சி.இ.ஓ-வும், பி.ஆர்.கே அகாடமியின் தலைவருமான பி.ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.

“மோடி தலைமையிலான அரசு, எம்.எஸ்.எம்.இ துறை வளர்வதற்காகப் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும், சலுகைகள் வழங்குவதிலும் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தற்போதைய அறிவிப்புகளும் அமைந்திருக்கின்றன.

தனது மத்திய பட்ஜெட் அறிவிப்பில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதியை ஒதுக்கியிருந்தார் நிதி அமைச்சர். இந்த நிதியில் அதிகம் பயன் பெறப்போவது, சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களாகவே இருப்பார்கள். ஏனெனில், வங்கிகளின் கவனம் தற்போது சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களின் மீதே இருக்கிறது. இவர்கள் உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்... எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்?

பட்ஜெட் தாக்கல் செய்து ஆறு மாதங்களுக்குப்பிறகு ஆர்.பி.ஐ கிரெடிட் பாலிசி அறிவிப்புகள் வெளியாவது வாடிக்கையானதுதான். அடுத்த மாதம் கடன் பாலிசிகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். அதில் எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்த நிறுவனங்களுக்குப் பெருமளவு திட்டங்கள்அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்து சில ஆண்டுகளே ஆன நிலையில், தொழில்முனைவோருக்கும் சரி, அரசு அலுவலர்களுக்கும் சரி, அதைக் கையாள்வதில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதனால் ஜி.எஸ்.டி வரியைத் திரும்ப வழங்குவதில் தொய்வு காணப்பட்டது. இந்தச் சிக்கலிலிருந்து சிறு மற்றும் குறுந் தொழில்முனைவோர்கள் வெளியே வருவதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறது நிதி அமைச்சரின் தற்போதைய அறிவிப்பு. இந்த அறிவிப்பின்படி, எம்.எஸ்.எம்.இ தொழில்முனைவோர்களுக்கு 30 நாள்களுக்குள் ஜி.எஸ்.டி ரீஃபண்ட் பணம் திரும்பக் கிடைக்கும். இதனால் தொழில்முனைவோர்கள் பயனடைவார்கள். பொருள் களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். வேலைவாய்ப்பும் பெருகும்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆட்டோமொபைல் துறை வேகம் எடுக்குமா?

கடந்த 19 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கார், பைக், டிரக், கமர்ஷியல் வாகனங்கள் என எல்லா மோட்டார் வாகனங்களின் உற்பத்தியும் விற்பனையும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இதனால் பல கார், பைக் மற்றும் உதிரிப்பாக உற்பத்தி நிறுவனங்கள், ‘உற்பத்தி இல்லா தினங்கள்’ என்று அறிவித்து தங்கள் தொழிற் சாலைகளை மாதத்துக்கு சில நாள்கள் மூடிவிடுகின்றனர். இது போன்ற காரணங்களால் லட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். இந்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் துறைக்குப் பல திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

பி.ராமகிருஷ்ணன், டி.முரளி, ஆர்.குமார்
பி.ராமகிருஷ்ணன், டி.முரளி, ஆர்.குமார்

ஆட்டோமொபைல் துறை நிபுணர் டி.முரளியிடம் இந்த முயற்சிகள் இந்திய வாகனச் சந்தையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘ஒரு சில பிரச்னைகளுக்கு மட்டுமே அரசு இப்போது தீர்வு அளித்துள்ளது. வங்கிக் கடன் களுக்கு வட்டி விகிதத்தைக் குறைத்தி ருப்பதாலும், வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கியிருப்பதாலும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங் களுக்குக் கடன் கிடைப்பது சுலப மாகும். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் பண இருப்பு அதிகரிக்கும்.

மார்ச் 31-க்குப்பிறகு பிஎஸ்-4 வாகனங்களைப் பதிவு செய்யலாம் என்பதால், பிஎஸ்-6 வாகனம் வாங்கக் காத்திருந்தவர்கள் இனி வாகனம் வாங்கத் தொடங்குவார்கள்.

31 மார்ச் 2020 வரை வாங்கப்படும் வாகனங்களுக்குத் தேய்மான அளவு 30% வரை அதிகரித்துள்ளதால், தொழில் நிறுவனங்கள் வாகனம் வாங்குவது அதிகரிக்கும். ஸ்க்ராப்பேஜ் பாலிசியையும் (scrappage policy) கொண்டுவருவதாகச் சொல்லியிருக் கிறார் நிதி அமைச்சர். இந்த பாலிசியும் 30% தேய்மான விலையும் ஒரே நேரத்தில் வருவது பெரிய பலம்.

இதன்மூலம் 30% தேய்மான மதிப்பைக் காட்டி நிறுவனங்கள் தங்களின் வரியைக் குறைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த வாகனங்கள் தேய்மான விலையைவிட அதிக விலைக்கு விற்கப்படும். இதில் கிடைக்கும் லாபத்துக்காகப் பல நிறுவனங்கள் வாகனங்களைத் தொடர்ந்து விற்பனை செய்யும். இதனால் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனையில் நவீன வாகனங்கள் வரும். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும்போது, புது வாகனங்கள் வாங்குவதும் அதிகரிக்கும். அதுமட்டுமன்றி, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களை கார் வைத்திருப்பவர்கள் பழைய வாகனங்களை ஸ்க்ராப்பில் போட்டு புதிதாக வாகனம் வாங்க உந்தப்படுவார்கள். இதனால் வாகனங்கள் வாங்குவது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்தத் திட்டம் பிரைவேட் டிரக் உரிமையாளர்களை அதிகம் ஈர்க்காது. ஆனால், இந்தத் திட்டத்தைத் பயன்படுத்திக் கொள்ள இவர்கள் வற்புறுத்தப்படுவார்கள்.

மின்சார வாகனம் வந்துவிட்டால், ஐசி இன்ஜின் வாகனங்களை நிறுத்திவிடு வார்களோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், அரசு இப்போது ஐசி இன்ஜின் களும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி விட்டதால் மக்களுக்கு இருந்த அச்சம் குறைந்திருக்கிறது.

வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனால், நிதி அமைச்சர் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றத்தையே அளிக்கிறது.’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரியஸ் எஸ்டேட் துறை உயரத் தொடங்குமா?

கடந்த பல ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் துறை கடும் இறக்கத்தில் இருக்கிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளால் ரியல் எஸ்டேட் துறை உயரத் தொடங்குமா என நவீன்ஸ் ஹவுஸிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.குமாரிடம் கேட்டோம்.

‘‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனின் அறிவிப்புகள் வரவேற்கத் தகுந்த நடவடிக்கை. பொருளாதார வீழ்ச்சி இருப்பதைத் தெரிந்துகொண்டு அதனைச் சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பது நல்ல செய்தி. ஆனால், ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளால் எந்தவித பெரிய பலனும் கிடைக்காது. இந்தத் துறைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வீட்டுக்கான ஜி.எஸ்.டி-யைக் குறைப்பது மட்டும் போதாது, வீடு வாங்கும் நுகர்வோரை ஊக்கப்படுத்துவதும் அவசியம். வீட்டுக் கடனுக்கான மாதத்தவணைக்கு வழங்கப்படும் வருமான வரிவிலக்கை ரூ.10 லட்சமாக உயர்த்துவது அவசியம்!

இந்த அரசால் சென்ற ஐந்தாண்டு ஆட்சியில் ரியல் எஸ்டேட் துறையில் கொண்டுவரப்பட்ட ரெரா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்றவை பாராட்டுக்குரியவை. ஆனால், அவற்றுக்கான நடைமுறைப்படுத்துதல் சரியாக இல்லை. எனவே, அவற்றுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, ஜி.எஸ்.டி-யில் கடந்த மார்ச் 29-ம் தேதி வெளியிட்ட அறிவிப்புகளில், உள்ளீட்டு வரிக்கழிப்பு (Input credit) முறையை நீக்கிய அறிவிப்பு மிகவும் தவறான ஒன்றாகும். உள்ளீட்டு வரிக்கழிப்புதான் ஜி.எஸ்.டி-யின் முதுகெலும்பு போன்றது. ரியல் எஸ்டேட் துறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஜி.எஸ்.டி முறை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, அடுத்து வரவுள்ள அறிவிப்பில், இந்த உள்ளீட்டு வரிக்கழிப்பு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். வீட்டுக் கட்டுமானத்துக்கு விதிக்கப்பட்டுள்ள 18% ஜி.எஸ்.டி-யை 10% அல்லது 12 சதவிகிதமாகக் குறைக்கவேண்டும்.

வீட்டுக்கான ஜி.எஸ்.டி-யைக் குறைப்பது மட்டும் போதாது, வீடு வாங்கும் நுகர்வோரை ஊக்கப்படுத்துவதும் அவசியம். வீட்டுக் கடனுக்கான மாதத்தவணைக்கு வழங்கப்படும் வருமான வரிவிலக்கை ரூ.10 லட்சமாக உயர்த்தினால் பலரும் வீடு வாங்க முன்வருவார்கள். இதனை மேலும் துரிதப்படுத்த விரும்பினால், ஓராண்டுக் காலத்துக்குள் வீடு வாங்கினால், ரூ.10 லட்சம் வரை வருமான வரிக்கழிவு என்றும், இரண்டு ஆண்டுகள் என்றால் ரூ.7 லட்சம், மூன்று ஆண்டுகள் என்றால் ரூ.5 லட்சம் என்றும் வரம்பு நிர்ணயித்தால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இன்னொரு முக்கியமான தேவை, வீடு கட்டுவதற்கு அனுமதி பெறுவதை எளிமையாக்க வேண்டும். ஆன்லைன் பயன்பாட்டை அதிகரித்த போது, ரியல் எஸ்டேட் துறையில் ‘சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ்’ வழங்கப்படும் என்று கூறப்பட்டதை இன்றுவரை செயல்படுத்தவில்லை. இது மிகப் பெரிய மனஉளைச்சலைத் தரக்கூடிய ஒன்றாக உள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையை நம்பி இந்தியா முழுவதும் ஐந்து கோடி பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை அவர்களின் வேலை வாய்ப்புகளை வெகுவாகப் பாதிக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு இந்தத் துறையை மீட்டெடுக்கும் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்’’ என்றார்.

நிதி அமைச்சர் ஏற்கெனவே அறிவித்த அறிவிப்புகள் சில துறைகளுக்குச் சாதகமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான புதிய திட்டங்களை அடுத்தடுத்து அறிவிக்கப்போவதாகச் சொல்லி யிருக்கிறார். எனவே, நிதி அமைச்சரின் அடுத்த அறிவிப்பில் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான இன்னும் பல திட்டங்கள் வரும் என்று எதிர்பார்ப்போம்!

வங்கித் துறை வேகம் காணுமா?

ஆர்.மோகனப் பிரபு, CFA

நிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்... எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்?

வாராக்கடன் சிக்கலில் தவித்துவரும் பொதுத் துறை வங்கிகளை மறுசீரமைப்பதற்காக, 2017-ல் அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்த வங்கி முதலீட்டுத் திட்டங் களின் தொடர்ச்சியாக, நடப்பு நிதியாண்டில் ரூ.70,000 கோடி முதலீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார். அந்தப் பணம் தற்போது வங்கிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்குவதன்மூலம், வங்கிகளால் ரூ.5 லட்சம் கோடி வரை புதிய கடன்களை வழங்க முடியும் என்றும், இது பொருளாதாரம் புத்துயிர் பெற உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தப் பணம் வழங்குவதற்கான காலவரையறை எதுவும் சொல்லப்படவில்லை. கடந்த இரு ஆண்டுகளில் சுமார் ரூ.1,94,000 கோடி அளவிற்கு மத்திய அரசு நிதி உதவி செய்த பின்னரும்கூட தொடர்ந்து வாராக் கடன்களில் சிக்கித் தவித்து வரும் பொதுத் துறை வங்கிகளின் மூலதன அளவை பேசல் விதிமுறை களுக்குள் கொண்டுவர இந்தப் புதிய முதலீடு உதவும் என்றும், துரிதமான வாராக்கடன் தீர்வுக்கான மத்திய அரசின் உதவிதான் நீண்ட கால நோக்கில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மேம்பட உதவியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கென மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் திட்டங்களும் முக்கிய மானவை. இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வதில் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. வங்கிகள் பெரும்பாலும் அமைப்பு சார்ந்த துறையினருக்கே கடன் வழங்குகின்றன. நிலையான வருமானம், வரி செலுத்திய ஆதாரங்கள் இல்லாத அமைப்புசாரா துறையே (Unorganised Sector)இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால், சமீபத்தில் நிகழ்ந்த சில அசம்பாவிதங்கள் வங்கிசாரா நிதித்துறையைப் புரட்டிப் போட்டுவிட்டதுடன், கடன் பெறுவதற்கு நிதி நிறுவனங்களைச் சார்ந்திருந்த அமைப்புசாரா துறையையும் பெருமளவில் பாதித்து விட்டது.

இந்த நிலையை மாற்றும் விதத்தில் வங்கிசாரா நிதித்துறைக்கு கிட்டத்தட்ட ரூ.50,000 கோடி நிதி உதவி செய்யப்படும் என்றும், சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவிற்குப் பிணை உதவி (Partial Credit Guarantee Scheme) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளன.

வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக் கான மின்னணு ரீதியிலான ஆதார் சரிபார்க்கும் முறையை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் இதற்கான சட்டத்திருத்தங்கள் விரைவில் அறிமுகப் படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களின் உடனடிச் சேவைக்கு உதவியாக இருக்கும்.

கடைக்கோடி மனிதர்களையும் அணுகவல்ல வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வீச்சு மற்றும் வங்கிகளிடம் உள்ள உபரிப் பணம் ஆகியவற்றை ஒருங்கே பயன்படுத்தும் வகையில், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் சிறுவணிகர்கள் ஆகியோருக்கு வங்கிசாரா நிதி நிறுவனங்களின் துணையுடன் வங்கிகள் கடன் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக அமைப்புசாரா துறை களுக்கும் வங்கிக் கடன் சென்று சேரும்.

நல்ல திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்ததில் பலருடைய பாராட்டையும் சம்பாதிக்கும் தற்போதைய அரசு, அந்தத் திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுவதாகக் குற்றச்சாட்டுகளும் கடந்த காலத்தில் எழுந்தன. இந்த முறை, அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காமல், அறிவிக்கப்பட்டுள்ள புதிய மீட்டெடுப்பு திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்தி பொருளாதார மந்தநிலைக்கு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என்பதே வங்கித் துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு!

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்களே)