கட்டுரைகள்
Published:Updated:

ஏப்ரல் 14க்குப் பிறகு... என்ன நடக்கும்? - என்ன செய்ய வேண்டும்?

ஊரடங்கு
பிரீமியம் ஸ்டோரி
News
ஊரடங்கு

உண்மையில் ஏப்ரல் 15-ல் ஊரடங்கு காலம் முடிந்த பிறகு இந்தியாவில் என்னதான் நடக்கும்?

21 நாள் ஊரடங்கு முடிவுக்கு வர, இன்னும் சில தினங்கள்தான் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், ஊரடங்கின் முக்கியத்துவம் குறித்தும், சமூக இடைவெளி குறித்தும் அனைவரும் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்க அறிவுறுத்தப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், அரசு சார்பில் நோய்த்தடுப்புக்காகப் பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சாந்தி, அருண்குமார்
சாந்தி, அருண்குமார்

அரசு சார்பில், நோயாளிகள் மற்றும் நோய்த்தொற்றுக்கான வாய்ப்பிருப்பவர்கள்மீதான கண்காணிப்புகளும், நோய்த்தடுப்பு முறைகளும் தீவிரமாக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை ஒரே வாரத்தில் பன்மடங்காக அதிகரித்துள்ளது கவனிக்கப்பட வேண்டியது. அடுத்தடுத்த நாள்களில், எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கக்கூடும் என்ற கணிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் தற்போது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்திருக்கின்றன. மக்கள் மத்தியில் பயத்தோடு சேர்த்து, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகமும் உருவாகியிருக்கிறது.

உண்மையில் ஏப்ரல் 15-ல் ஊரடங்கு காலம் முடிந்த பிறகு இந்தியாவில் என்னதான் நடக்கும்? ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா? நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமா அல்லது குறையுமா?

குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார், ``மிக வேகமாகப் பரவும் இந்த நோயை, முழுமையாகத் தடுப்பதென்பது நடக்காத விஷயம். நாம் என்னதான் செய்தாலும், நோய் பரவத்தான் செய்யும். இது தெரிந்திருந்தும், அரசு ஊரடங்கை அமல்படுத்தக் காரணம், நோய்பரவும் விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான். அந்தவகையில், இந்த 21 நாள் ஊரடங்கு, நோய் பரவுதலை நிச்சயமாக, பெரும்பான்மையாகத் தடுத்திருக்கும், குறைத்தும் இருக்கும் என நம்பலாம்.

ஊரடங்கு
ஊரடங்கு

இருந்தாலும், `நமது நாட்டின் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கத்தானே செய்கிறது...

குறைந்ததுபோலத் தெரியவில்லையே’ என மக்கள் நினைக்கலாம். இப்படிச் சொல்பவர்கள், இந்த நோயின் நோயரும்புகாலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நோயரும்பு காலம் என்பது, ஒரு வைரஸ் தொற்று உடலுக்குள் சென்று அது பாதிப்பாக மாற எடுத்துக்கொள்ளும் இடைப்பட்ட காலகட்டம். அப்படியான நோயரும்பு காலம் கோவிட் - 19 கொரோனாவுக்கு 14 நாள்கள். அதாவது வைரஸ் ஒருவரின் உடலுக்குள் சென்றபின் 14 நாள் கழித்துதான் தனது அறிகுறிகளைத் தீவிரமாக்கி வெளிப்படுத்தத் தொடங்கும்.

இதன்படி பார்த்தால் இப்போது நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் அனைவரும், ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பான 14 நாள் இடைவெளியில் தொற்றைப் பெற்றவர்கள். இவர்களெல்லாம்தான் இப்போது கண்டறியப்பட்டு வருகிறார்கள். இப்போது தொற்றைப் பெறுபவர்கள் அனைவரும் அடுத்தடுத்த வாரங்களில்தான் தெரியவருவார்கள். அப்படி அடுத்தடுத்த வாரங்களில் தெரியவரும் நோயாளிகளின் எண்ணிக்கை, இப்போதைவிடவும் குறைவாக இருக்கும் என நம்பலாம். அப்படிக் குறைவாக இருந்தால், அதற்கு இந்த ஊரடங்கு உதவியுள்ளதாகப் பொருள்.

ஏப்ரல் 14க்குப் பிறகு... என்ன நடக்கும்? - என்ன செய்ய வேண்டும்?

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்ற கேள்விக்கு நம்மிடையே உறுதியான பதில் இல்லை. காரணம், ஊரடங்கின் இறுதி நாள்களில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையையும், அப்போது வரும் நோயாளிகள் அதிகரிப்பு விகிதத்தையும் பொறுத்துதான் நீட்டிக்கலாமா குறைக்கலாமா என முடிவு செய்ய முடியும். அந்த இறுதி நாள்களில் வெளியாகப்போகும் எண்ணிக்கையை நாம் கணித்துக் கூறுவதென்பது, இந்தச் சூழலில் சரியாக இருக்காது. அந்த எண்ணிக்கை குறைவாக இருக்குமென நல்லதே நினைப்போம்.

நம் ஊரடங்கு சட்டத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு நாடுமே எடுக்கத் தயங்கும் ஒரு முயற்சியை, இந்தியா தனது முதற்கட்டத்திலேயே எடுத்திருப்பது பாராட்டத்தக்க விஷயம்.

இந்தியா போன்றதொரு அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஊரடங்கு நீட்டிப்பானது பொருளாதாரரீதியில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் அதைக் கருத்தில்கொண்டு நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தக்கூடும். அப்படித் தளர்த்தினால், பாதிப்பு அதிகமிருக்கும் மாநிலங்களில் அம்மாநில அரசு சார்பில் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம்” என்றார்.

சமூக சமத்துவ சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தியிடம் பேசினோம்.

ஊரடங்கு
ஊரடங்கு

``நோய்க் கட்டுப்பாட்டில், இரண்டு விதங்களை நம் அரசு கையாள்கிறது.

1) Delay Strategy - நோய் பரவுதலைத் தடுக்க முடியாதென்பதால், அந்தப் பரவுதலைத் தாமதப்படுத்த முயல்வதுதான் இது. இதற்காக விதிக்கப்பட்டதுதான் ஊரடங்கு.

2) Containment Strategy - நோய் ஏற்கெனவே பரவிவிட்ட பகுதிகளில், பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ளப்படும் கட்டுப் படுத்தும் முறைகள். இதற்காக விதிக்கப்பட்டது தான், குறிப்பிட்ட நபர்களுக்கான வீட்டுக் கண்காணிப்பு.

இதில் முதல் வகை சமூக விலகல். இரண்டாவது, நோய் உறுதிசெய்யப்பட்டவர்களிடமிருந்து, பிறரைக் காப்பதற்கான வழிமுறைகள். இதில், மூன்றாவதாக ஒன்றும் சேர்க்க வேண்டும். அது, நோய் உறுதிசெயப்படாத, ஆனால் வைரஸ் தொற்றோடு இருப்பவர் களிடமிருந்து மற்றோரைக் காப்பது. அதற்கு, அறிகுறிகள் அற்ற தொற்று பாதிப்புள்ள நோயாளிகளை அரசு கண்டறிய வேண்டும். `அதான் அறிகுறிகள் தெரியாதே... பின் எப்படி அவர்களைக் கண்டறிவது’ என மக்கள் குழம்பலாம். அந்த நோயாளிகளை முதல் நிலையிலேயே கண்டறிய ரேபிட் டெஸ்ட் உதவும். இந்த ரேபிட் டெஸ்ட் தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டால் அறிகுறிகள் இல்லாதவர் களைக் கண்டுபிடிக்க முடியும்.

ரேபிட் டெஸ்ட் மூலம், அறிகுறிகளே தெரியவராத பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் (Mass Corona Testing) செய்யப்பட வேண்டியது அவசியம். அப்படிப் பரிசோதனைகளைச் செய்துகொண்டே இருந்தால் மட்டுமே, நம்மால் நோயாளிகள் அனைவரையும் கண்டறிய முடியும். நோயாளிகளைக் கண்டறிந்தால்தான், அவர்களைத் தனிமைப்படுத்தவும் முடியும். அவர்களைத் தனிமைப்படுத்தினால்தான், நோயைக் கட்டுப்படுத்த முடியும். இவையாவும், 21 நாள் ஊரடங்கின் பிறகு வரும் நாள்களில் தீவிரமாக நிகழக்கூடும் என்பது நம் நம்பிக்கை!

ஊரடங்கு
ஊரடங்கு

இந்த ரேபிட் டெஸ்ட்டை நடைமுறைப் படுத்தும்போது, `ஃப்ரன்ட் லைன் வொர்க்கர்ஸ்’ எனப்படும் பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கும் நபர்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும். குறிப்பாக சுகாதாரத் துறைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் - உதவியாளர்கள், செவிலியர்கள், ஊரடங்கின்போதும் பணிக்குச் சென்ற அரசு மருத்துவர்கள், சர்வதேசப் பயணிகள் - அவர்களோடு தொடர்பிலிருப்பவர்கள், அப்பகுதியில் அருகிலிருக்கும் மருத்துவர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ரேபிட் டெஸ்ட்டில் நெகட்டிவ் என முடிவு வந்தாலும்கூட, பின்னாள்களில் அவர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்பதால், ஒவ்வொரு ஆறு நாளுக்கும் ஒருமுறை அரசு இவர்களைப் பரிசோதித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

ரேபிட் டெஸ்ட்டின் முடிவுகள், நூறு சதவிகிதம் இறுதியான முடிவுகளாக இருக்காது என்பதால், இதில் நெகட்டிவ் என வரும் நபர்கள், அடுத்த ஒரு வார இடைவெளியில் மீண்டுமொரு முறை பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் அரசு வசதிகள் செய்துதர வேண்டும்.

ஊரடங்கு
ஊரடங்கு

ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டை வாங்கப்போவதாகத் தமிழக அரசு சொல்லியிருக்கிறது. ஆனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் தமிழகத்தில், இதன்தேவை இன்னும் அதிகம். அரசு இதை உணர்ந்து செயல்படும் என நம்புவோமாக” என்கிறார் அவர்.