Published:Updated:

"மதியம்வரை ஒன்னா சாப்பிட்டு, வேலை பார்த்த 11 பேர்ல 4 பேரு செத்துட்டாங்கன்னு..."- விபத்தின் பின்னணி

உயிரிழந்தவர்களை மீட்கும் பணி

விருதுநகரில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் விருதுநகரில் நேற்று இடி மின்னலுடன் பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் பெண் உட்பட 4 பேர் பலியானார்கள். இது நகர மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"மதியம்வரை ஒன்னா சாப்பிட்டு, வேலை பார்த்த 11 பேர்ல 4 பேரு செத்துட்டாங்கன்னு..."- விபத்தின் பின்னணி

விருதுநகரில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் விருதுநகரில் நேற்று இடி மின்னலுடன் பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் பெண் உட்பட 4 பேர் பலியானார்கள். இது நகர மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
உயிரிழந்தவர்களை மீட்கும் பணி

விருதுநகர் மல்லிக்கிட்டங்கி தெருவைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜென்ட் சதீஷ்குமார் (40) என்பவர், ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கருப்பசாமி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் பணியை மொத்தக் காண்டிராக்ட் அடிப்படையில் விருதுநகர் என்.ஜி.ஓ.காலனி தாமரைத்தெருவைச் சேர்ந்த சிவில் இன்ஜினீயர் மனோகரன் (50) என்பவர் எடுத்துச்செய்கிறார்‌. விருதுநகரில் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்துவரும் நிலையில், நேற்றும் இடியுடன் கனமழை தொடர்ந்தது. காலை 11 மணி முதலே விட்டு விட்டுப் பெய்த மழை, மாலை 4 மணிக்குத் தீவிரமடைந்து வெளுத்துவாங்கியது. அப்போது வெளிப்பட்ட பயங்கர மின்னல் தாக்கி, கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட 4 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை அறிய உடன் வேலைபார்த்தவர்களிடம் பேசினோம்.

"நாங்க மொத்தம் 11 பேரு நேற்று வேலை பார்த்தோம். கீழ்த் தளத்தில் 5 பேரும், மேல்தளத்தில் 6 பேரும் வேலை பார்த்திட்டிருந்தோம். மொட்டை மாடில தண்ணீர்த்தொட்டி கட்டும் வேலையில ரோசல்பட்டி அரண்மனைத் தெருவைச் சேர்ந்த மகேந்திரன்(42), சிவஞானபுரத்தைச் சேர்ந்த சங்கிலி (36)ன்னு 2 கொத்தனார், ரோசல்பட்டி அரண்மனைத் தெருவைச் சேர்ந்த கார்த்திக்ராஜா(26), முருகன்(26), கொப்பிலியம்பட்டியைச் சேர்ந்த ஜெயசூர்யா(21)-ன்னு 3 நிமிர்ந்தாள், பெண் சித்தாள் ஜக்கம்மாள் (45) ஆகிய 6 பேரும்தான் வேலை செஞ்சுட்டு இருந்தாங்க.

உயிரிழந்தவா்கள்
உயிரிழந்தவா்கள்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுல மகேந்திரன், சங்கிலி இரண்டுபேரும் தொட்டிக்குள்ள வேலை செஞ்சாங்க. கார்த்திக் ராஜாவும், முருகனும் தண்ணித்தொட்டிக்கு வெளியில பூச்சுபூசுவதற்குப் போடப்பட்டிருந்த சாரத்தில் நின்னு வேலை பார்த்துட்டிருந்தாங்க. அவங்களுக்குக் கீழே சித்தாளு ஜக்கம்மா, ஜெயசூர்யா ரெண்டு பேரும் வேலை பார்த்துட்டிருந்தாங்க. நேற்று 11 மணியிலிருந்து விட்டு விட்டு நல்லமழை பெஞ்சிட்டிருந்துச்சு. அதனால நாங்களும் அப்பப்போதான் வேலை பார்த்தோம். மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு மழை கொஞ்சம் வெறிச்சமாதிரி இருந்துச்சு. அதனால வேலையை சீக்கிரமா முடிக்கணும்னு எல்லாருமே வேகவேகமா வேலை பார்க்க ஆரம்பிச்சோம். மேல தண்ணீர்த் தொட்டி கட்டுற வேலையில இவங்க ஆறு பேரும் ரொம்ப மும்முரமா வேலை பார்த்துட்டிருந்தாங்க.

அப்போதான் திடீர்னு மேகம் கறுத்து நல்ல அடைமழை பெய்யப்போற மாதிரி சீதோஷ்ண நிலை மாறுச்சு. மழை வெளுத்து வாங்குறதுக்குள்ள இருக்கிற வேலையை முடிச்சிட்டு கீழே இறங்கி வீட்டுக்குப் போயிறணும்னு முடிவுசெஞ்சி எல்லாம் வேலை பார்த்தாக. ஆனா சடசடன்னு மழை பெய்ய ஆரம்பிச்சது. கூடவே இடி மின்னலும் வந்துட்டு‌. மணி 4.15 இருக்கும்போது வேல பாக்குற வீட்டுக்குள்ள டியூப்லைட் போட்டமாதிரி ஒரு மின்னலு வெட்டுச்சு. அதைத்தொடர்ந்து 'டமார்னு' பயங்கர சத்தத்துடன் இடி வேற. அந்த நொடி எங்க எல்லாத்துக்கும் ஈரக்கொலையெல்லாம் ஆடிப்போச்சு. இந்த பயம் வயித்துக்குள்ள அடங்குறதுக்குள்ள, மேல சங்கிலியும், மகேந்திரனும் அலறிக்கிட்டு கத்துன சத்தம் கேட்டுச்சு. விழுந்தடிச்சு ஓடிப்போயி பார்த்தப்போ மகேந்திரனும் சங்கிலியும் கையில காயத்தோட கைகாலெல்லாம் ஆடிப்போய் நின்னாங்க.

உயிரிழந்தவா்களை மீட்கும் பணி
உயிரிழந்தவா்களை மீட்கும் பணி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப்பக்கம் சிமென்ட் பூச்சுக்குப் போட்டிறந்த சாரக்கட்டைகளெல்லாம் நூல்நூலா பிரிஞ்சி தொங்கிட்டு கிடந்துச்சு. அதுக்குக் கீழே கார்த்திக் ராஜா, முருகன், ஜெயசூர்யா, ஜக்கம்மாள் 4 பேரும் மூச்சுப்பேச்சில்லாமக் கிடந்தாங்க. அத பார்த்ததுமே எனக்கு ஒரே அழுகையா வந்துட்டு. ஒவ்வொருத்தரையும் மாறி, மாறி உசுப்பிப் பார்த்தோம். ம்ஹூம்... மூச்சுப் பேச்சே இல்ல" என்றவர் கண்ணில் கண்ணீர் தேங்கியது. சற்று ஆற்றுதலுக்குப் பிறகு பேசத்தொடங்கினார்.

"பதட்டத்துல என்ன பன்றதுன்னே எங்களுக்குத் தெரியல. உடனே, ஃபயர் சர்வீசுக்கும், போலீசுக்கும் போன்போட்டு தகவல் தெரிவிச்சோம். கூடவே, வீட்டு ஓனர், இன்ஜினீயருக்கும் சொன்னோம். அதுக்குப்பிறகு ஃபயர் சர்வீஸ்காரங்க வந்து 4 பேரையும் கயிறு கட்டி மீட்டாங்க. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போனாங்க. அங்க டாக்டர் செக் பண்ணி, 4 பேருமே இறந்துட்டாங்கன்னு சொன்னப்போ எங்களுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் உடைஞ்சி பயமெல்லாம் கண்ணீரா வெளியவந்துடுச்சு. மதியம்வரைக்கும் ஒன்னா சாப்பிட்டு, சிரிச்சு வேலை பார்த்த 11 பேர்ல 4 பேரு செத்துட்டாங்கன்னு நினைக்கும்போது எங்களால அதை ஏத்துக்கவே முடியல.

கார்த்திக்ராஜா
கார்த்திக்ராஜா
முருகன்
முருகன்

இறந்த நாலு பேர்ல‌, ஜக்கம்மாவைத் தவிர்த்து மத்த மூணு பேரும் கொஞ்ச வயசுக்காரங்க. அதுல கார்த்திக் ராஜாவும், முருகனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்க. கார்த்திக்ராஜாக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தை இருக்கு. அதுல ஒரு குழந்தை இப்ப சமீபத்துலதான் பொறந்துச்சு. ஜெயசூர்யா, வீட்டை எதிர்த்து காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவன். 'என்னைய நம்பி வந்தவள நல்லபடியா வச்சுக் காப்பாத்துறதுக்கு, எவ்ளோ கஷ்டமான வேலையா இருந்தாலும் நான் செய்வேன் அண்ணா’ன்னு சொல்லிக்கிட்டுருப்பான். அவனோட மனைவி இப்ப கர்ப்பமா இருக்குற இந்தச் சமயத்துல ஜெயசூர்யாக்கு இப்படி ஆனதுதான் கொடுமை.

எங்க இன்ஜினீயருக்கு பல இடத்துல வேல நடக்குது. அதுல ஒரு இடம் இது. நாங்க எல்லாரும் ஒரே இன்ஜினீயர் கீழ வேலைசெய்றதால, வேலைய பொறுத்து எங்கள வேற, வேற சைட்டுக்கு மாத்திவிடுவாங்க. அப்படி, வேற சைட்ல இருந்து புதுசா இங்க வேலைக்கு வந்த ரெண்டு பேர், மின்னல்தாக்கி இறந்துட்டாங்க.

ஜெயசூா்யா
ஜெயசூா்யா

ஒருவேளை அவங்க எங்க சைட்டுக்கு வராம இருந்திருந்தாகூட அந்த ரெண்டு உசுரு பொழச்சிருக்கும்" என்று பெருமூச்சு விட்டபடியே பேசிமுடித்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, விருதுநகரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism