Published:Updated:

21 நாள்களுக்குப் பிறகு இந்தியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மதுரை மார்க்கெட் பகுதியில் கூடிய கூட்டம்
மதுரை மார்க்கெட் பகுதியில் கூடிய கூட்டம்

அடுத்தகட்டத்தை உணர்த்தும் மருத்துவர்கள்

பிரீமியம் ஸ்டோரி
ஐந்து லட்சம் நோயாளிகளைக் கடந்து உலகம் முழுவதும் தீவிரமான அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவையே முடக்கிப்போட்டிருக்கும் கொரோனா குறித்து இப்போதுதான் மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், நோயைவிடவும் நோய் பரவுதல்குறித்து மக்கள் தெரிந்துகொள்வதுதான் சரியாக இருக்கும். கோவிட் - 19 பரவுதலில் நான்கு நிலைகள் இருக்கின்றன. அவை: 1) பயண வழியில் பாதிப்பை நம் நாட்டுக்குள் கொண்டுவருபவர்கள் (Imported cases).

2) பாதிப்புடன் வரும் பயணிகள் பொதுவெளிகளில் நடமாடி நோயைப் பரப்புவது (Local Transmission). 3) உள்ளூரில் நோய்த்தொற்று பெற்றவர் அடுத்தடுத்த நபர்களுக்கு அதைப் பரப்புவது (Community Transmission). 4) குறிப்பிட்ட பகுதி முழுவதும் நோய் தீவிரமாகப் பரவுவது (Epidemic).

இங்கு முதல் நிலை பாதிப்பு ஏற்படும் முன்பே, (சீனாவில் நான்காம் நிலை) நோய் பரவும் விகிதத்தை உணர்ந்த நம் உள்ளூர் மருத்துவர்கள் சிலர் கடும் எச்சரிக்கைவிடுத்தனர். ‘விமான நிலையங்களுக்கு சீல் வைக்க வேண்டும். இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை மற்றும் மக்கள் அடர்த்திகொண்ட நாட்டில், முதல் நிலையிலேயே பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’ என்று எழுந்த அவர்களின் குரல்கள், கவனிக்கப்படாமலேயேபோயின. விளைவு, இன்றைக்கு இந்தியா இரண்டாம் நிலையில் இருக்கிறது.

சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் 
மதுரை மார்க்கெட் பகுதியில் கூடிய கூட்டம்
சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் மதுரை மார்க்கெட் பகுதியில் கூடிய கூட்டம்

இந்த நிலையை முன்பே கணித்த அந்த மருத்துவர்கள், இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த 21 நாள் முடக்கம் தீர்வுக்கு வழிவகுக்குமா... இல்லையெனில் அடுத்து என்னவாகும், பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர இப்போதாவது நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? அவர்களிடமே கேட்டோம்.

ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் அருண்குமார் பிப்ரவரி தொடக்கத்திலேயே, `கொரோனா தாக்கம், உயிரியல் போரோ அல்லது மருந்து நிறுவனங்களின் சதியோ அல்ல. பீதியடைய தேவையில்லை. ஆனாலும், இதை அலட்சியமாகக் கையாளக் கூடாது’ என்று கூறியிருந்தார். அவரிடம் பேசினோம்.

‘‘முதலில், 21 நாள்கள் முடக்குதலின் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டும். கொரோனா நோய் அரும்பும் காலம் சராசரியாக 14 நாள்கள். அதற்குள் நோயின் அறிகுறிகள் தெரிந்துவிடும். சில நேரம் நோயாளியின் நிலையைப் பொறுத்து, நாள் கணக்கு அதிகரிக்கலாம். இதை கருத்தில்கொண்டுதான் 21 நாள் முடங்குதல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 21 நாள்களும் இந்திய மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும்பட்சத்தில், நோயின் தாக்கத்தைப் பெற்றவர்கள் வெளியே சிகிச்சைக்கு வந்தேயாக வேண்டும். அப்போது யாரெல்லாம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் என்பது தெரிந்துவிடும். இப்படிச் செய்யும்போது, சமூக நோய் பரவல் தடுக்கப்படும்.

மக்களை எச்சரிக்கும் போலீஸார்
மக்களை எச்சரிக்கும் போலீஸார்

ஏற்கெனவே வெளிநாடு மற்றும் வெளிமாநிலங் களிலிருந்து வந்திருப்பவர்களைக் கண்காணிக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும். அத்துடன், தற்போதைய ஊரடங்குக்குப் பிறகு புதிதாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் வரும் மக்களையும் கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் நோயின் தாக்கத்தையும் பரவலையும் முழுமையாக தடுக்கமுடியும்.

ஆனால், சமூகத்தைவிட்டு கிருமி முழுவதுமாக ஒழியவும், பெரும்பாலான நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவும் ஒன்று முதல் ஒன்றரை வருடம் ஆகலாம். அதுவரை தொடர் கண்காணிப்பு அவசியம். இடைப்பட்ட காலத்தில் இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் நோயை முற்றிலுமாக ஒழித்துவிடலாம். எனவே, அனைவரும் பொறுப்புணர்வுடன் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டால் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

144 தடை அறிவிக்கப்படும் முன்பே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தியிருந்தார் மருத்துவர் ராதா. அவர் நம்மிடம், ``வைரஸ் பாதிப்பு இந்த உலகுக்குப் புதியதல்ல. ஸ்பானிஷ் ஃப்ளூ தொடங்கி எத்தனையோ உயிர்க்கொல்லி நோய்களைக் கடந்துவிட்டோம். அவை எல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சுயக்கட்டுப்பாடுதான். அது இருந்தால் மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த முடியும். கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலான நாள்களில் இந்தியாவின் நோயாளிகள் எண்ணிக்கை 3-லிருந்து 1,071-ஆக அதிகரித்துள்ளது. 500-யைத் தாண்டினாலே அபாயம்தான்.

அருண்குமார் - ராதா -  மயிலன் சின்னப்பன்
அருண்குமார் - ராதா - மயிலன் சின்னப்பன்

அமெரிக்காவில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை பாதிப்பு எண்ணிக்கை 541 பேர் மட்டுமே. அதற்குப் பிறகும், அவர்கள் அலட்சியம்காட்டினார்கள். விளைவு, அடுத்த 20 நாள்களில் அதாவது மார்ச் 23-ம் தேதியில் அமெரிக்காவில் நோயாளிகள் எண்ணிக்கை 44,000 என அதிகரித்துவிட்டது. இத்தாலியில் நிலைமை இதைவிட மோசம். பிப்ரவரி 19-ம் தேதி வரையில் நான்காக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை, அடுத்தடுத்த தலா நான்கு பத்து நாள்களில் 1,100 - 9,000 - 10,000 - 47,000 என்றானது. இந்த நாள்களில் தென்கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விழித்துக்கொண்டன. நோயைக் கட்டுப்படுத்தி நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஆகவே, இப்போதே நாம் விழிக்க வேண்டும். அடுத்துவரும் ஒவ்வொரு நாளும், நமக்கு முக்கியமானது. ஒருநாள் நாம் தவறிழைத் தாலும், அடுத்தடுத்த நாள்களில் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.

இதே ஊரடங்கை பிப்ரவரியிலேயே வலியுறுத்தியிருந்த திருச்சியைச் சேர்ந்த மருந்துவர் மயிலன் சின்னப்பன். ``இந்த முழு அடைப்பும் சோதனை முயற்சிதான். திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட விதிகள் எதுவும் கிடையாது. முழு அடைப்பை முழுமையாகச் செயல்படுத்திய நாடுகளின் சாதகமான முடிவுகளைக் கொண்டுதான் நாமும் அதைச் செய்யத் துணிந்துள்ளோம். சீனாகூட எடுத்த எடுப்பில் முழு நாட்டையும் முடக்கிவிடவில்லை. நோய் தீவிரமாக இருந்த வூஹானை மட்டும்தான் முடக்கியது. அதன் மக்கள்தொகை சுமார் ஒரு கோடி பேர். மேலும் சில கோடி மக்கள்தொகைகொண்ட ஹூபை மாகாணத்தையும் 72 நாள்களுக்கு முடக்கியது.

இந்தியாவில் மொத்த தேசத்தையும் முடக்கும் மிகக் கடினமான பலப் பரீட்சையில் நாம் இறங்கியுள்ளோம். ஆனால், மூன்று வாரங்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம்கொண்ட ஒரு நாடு இவ்வளவு பெரிய முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. நோய்த்தொற்று பரவலைப் பொறுத்து இதை நீட்டிக்கவும் நேரிடலாம். சொல்லப்போனால், எட்டு வாரங்கள் தன்னை முடக்கிக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்திய வூஹானே, இப்போது வெளியே வர பயப்படுகிறது. அப்படியிருக்க... நாம் கூடுதல் பொறுப்புடன் இந்த அடைப்பை அணுகவேண்டும்.

நமக்கிருக்கும் பெரும்பிரச்னை மக்களின் அலட்சியம். இப்போதும் பல இடங்களில் மக்கள் கூடுகிறார்கள். கார்களும் பைக்குகளும் சர்வ சாதாரணமாகப் போய்க்கொண்டே இருப்பது வேதனையான விஷயம். இப்படி அலட்சியமாக இருந்து கொத்துக்கொத்தாக உயிர்களை பலிகொடுத்துக்கொண்டிருக்கும் இத்தாலியைப் பார்த்த பிறகேனும் நம் மக்கள் விழிக்கத் தொடங்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்றார்.

நன்றும் தீதும் நம் கைகளில்தான் இருக்கின்றன. உறுதியுடன் கொரோனாவை வெல்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு