Published:Updated:

பிரமிக்கவைக்கும் சீனாவின் வளர்ச்சி... இந்தியாவில் எப்போது நடக்கும்?

Narendra Modi, Xi Jinping
பிரீமியம் ஸ்டோரி
News
Narendra Modi, Xi Jinping

பொருளாதாரம்

எஸ்.விஸ்வநாதன், ஆசிரியர், இண்டஸ்ட்ரியல் எகானமிஸ்ட்

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கு பெறும் இரண்டாவது இந்தியா - சீனா உச்சி மாநாடு வரும் அக்டோபர் 11-13-ம் தேதியில் நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாடு நடைபெறுமிடம், பாறைச் சிற்பங்களால் அழியாத புகழ்பெற்ற பல்லவ மன்னர்களின் தலைநகரான மாமல்லபுரம். இந்த உச்சி மாநாடுமூலம் நமக்குக் கிடைக்கப்போகிற நன்மைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் சில நாள் பொறுப்போம்.

பிரமிக்கவைக்கும் சீனாவின் வளர்ச்சி... இந்தியாவில் 
எப்போது நடக்கும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கிடையே சமீபத்தில் நான் சீனா சென்றிருந்தேன். அங்கிருக்கும் தொழில், நிதி, உள்கட்டமைப்பு வசதிகள், புதுமை புகுத்துதல், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் அவர்களின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு அதிசயித்துப்போனேன். அதைப்போன்று நம் இந்தியா என்றைக்கு வளர்ச்சி காணப்போகிறது என்கிற கேள்விதான் எனக்குள் தோன்றியது. இத்தனைக்கும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமுன், சீனாவும் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் ஒரே நிலையில் இருந்தன. ஆனால், சீனா இன்று எங்கோ போய்விட்டது. சீனா எப்படியெல்லாம் வளர்ச்சி கண்டிருக்கிறது என்று பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உபரி வருமானத்தில் உருவான உள்கட்டமைப்பு

சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் சீனாவின் வர்த்தக உபரி ரூ.2.8 லட்சம் கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா உருவாக்கிய வர்த்தக உபரி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சமம். இந்த வர்த்தக உபரி வருமானம், உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் மிகப்பெரிய திட்டங்களில் முதலீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

பிரமிக்கவைக்கும் சீனாவின் வளர்ச்சி... இந்தியாவில் 
எப்போது நடக்கும்?

உதாரணத்திற்கு, ஆண்டொன்றுக்குச் சராசரியாக ஒரு கோடி பயணிகளைக் கையாளும் இரு மிகப் பெரிய விமான நிலையங்கள் பெய்ஜிங்கில் இருக்கின்றன. ஆனால், மேலும் ஒரு கோடி பயணி களைக் கையாளும் மற்றொரு மிகப் பெரிய மெகா விமான நிலையத்தைக் கட்டி வருகிறது சீனா. மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் செயல்படவிருக்கும் இந்தப் புதிய விமான நிலையம், அடுத்த பல ஆண்டுகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை விமான நிலையம் கடந்த ஆண்டில் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 2.25 கோடி. ஒரே ஒரு விமான நிலையத்தை வைத்துக் கொண்டு நாம் எப்படிச் சமாளிக்கிறோம் பாருங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரமிக்கவைக்கும் சீனாவின் வளர்ச்சி... இந்தியாவில் 
எப்போது நடக்கும்?
இந்திய - சீனாவுக்கு இடையேயான வர்த்தகத்தில், சீனாவுக்குத்தான் சாதகமான சூழல். இந்தியாவிற்குச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களின் அளவில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது!

மெகா மின் திட்டங்கள்

சீனாவின் பல திட்டங்கள் பிரமாண்டமானவை, மிகப் பெரிய கட்டமைப்பு வசதிகள் கொண்டவை. சீனா முதலில் கவனம் செலுத்தியது அடிப்படை தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில்தான். உதாரணத்திற்கு, சீனாவில் யாங்சீ (6,300 கி.மீ), மஞ்சளாறு (5,464 கி.மீ) போன்ற மிக நீளமான ஆறுகள் ஓடுகின்றன. (நமது நாட்டின் மிகவும் நீளமான நதியான கங்கையில் (நீளம் 2,523 கி.மீ). இந்த ஆறுகளின் குறுக்கே அணைக் கட்டி, மின்சாரம் உற்பத்தி செய்வதுடன், பாசனம் மற்றும் நிறைய பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கவும் இந்த நீராதாரங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறது சீனா.

யாங்சீ நதிக்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ள மூன்று மிகப் பெரிய அணைகள் 21,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. தற்போது கட்டப்பட்டுவரும் பெரிய நீர்மின் திட்டங்கள் 45,000 மெகாவாட் மின்சாரத்தைக் கூடுதலாக உற்பத்தி செய்யும். இவை மூலம் மலிவான, புதுப்பிக்கவல்ல நீர் மின்சக்தி, பாசனம் மற்றும் குடிநீர் தேவை ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நீளமான நதிகள் சரக்கு மற்றும் சுற்றுலாப் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

எஸ்.விஸ்வநாதன், ஆசிரியர், இண்டஸ்ட்ரியல் எகானமிஸ்ட்
எஸ்.விஸ்வநாதன், ஆசிரியர், இண்டஸ்ட்ரியல் எகானமிஸ்ட்

கடந்த பத்தாண்டுகளில், மற்றொரு புதுப்பிக்கத்தக்க ஆற்றலான, சூரிய ஆற்றலிலும் மிகப் பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது சீனா. இன்று சூரியசக்திமூலம் 1,76,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. சூரிய சக்தியைப் பயன்படுத்துவதில், மற்ற நாடுகளைவிட முன்னேறியிருக்கிறது சீனா (இந்தியாவின் உற்பத்தி 3,29,000 மெகாவாட்). இதுதவிர, உலகின் சோலார் பவர் பேனல்களின் மொத்த தேவையின் பெரும்பகுதியைச் சீனாதான் பூர்த்திசெய்கிறது.

ரயில் வளர்ச்சி

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவின் இருப்புப்பாதை அளவைவிடச் சீனாவின் மொத்த இருப்புப்பாதையின் அளவு பாதியாகத்தான் இருந்தது. கடந்த சில ஆண்டுகளில், அதிவேக ரயில் பாதைகளான மிகவும் சிக்கலான சுரங்கப்பாதைகளை வெற்றிகரமாகக் கட்டி முடித்துள்ளது சீனா. இந்தப் பாதைகளில் ஒரு மணிக்கு 250 கிமீ முதல் 400 கிமீ வேகத்தில் ரயில் களைச் செலுத்த முடியும். இதனால் பயண நேரம் நான்கில் ஒரு பங்காக குறைகிறது. நம் நாட்டில் இந்த வேகத்தில் பயணித்தால், சென்னையில் இருந்து பெங்களூரை ஒரு மணி நேரத்திலும், மும்பையை நான்கு மணி நேரத்திலும், கோவை மற்றும் மதுரையை 90 நிமிடங் களிலும் சென்றடைய முடியும்.

சாலை மேம்பாடு

சீனாவில் சாலை மேம்பாட்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. பலவழிச் சாலைகள் (Multi-lane) மக்கள்தொகை அதிகமுள்ள பெரு நகரங்களில் மட்டுமல்ல, நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கை சீனாவுடன் இணைக்கும் உலகின் மிக நீளமான கடல்மீது அமைத்துள்ள பாலம் 20 பில்லியன் டாலர் (ரூ.1.4 லட்சம் கோடி) செலவில் கட்டப்பட்டது. பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான போக்குவரத்துச் செலவு, நுகர்வோர் விலையில் கணிசமான அளவில் இருப்பதை மிகப் பெரிய வர்த்தக நாடான சீனா கண்டறிந்தது. இதன் வெளிப்பாடுதான் சீனாவின் சாலை, ரயில் மற்றும் கடல்மூலம் உலகளாவிய இணைப்பை உறுதி செய்யும் பிரமாண்டமான ஒரு சாலைத் திட்டம் (One Belt, One Road Project). பல கண்டங்களில் இருக்கும் 152 நாடுகளை உள்ளடக்கியது இந்தத் திட்டம். இந்தத் திட்டம் நிறைவடையும்போது, சீனா மட்டுமல்ல, பல்வேறு நாடுகள் பெருமளவில் பலனடையும். போக்குவரத்துச் செலவும் கணிசமாகக் குறையும்.

பிரமிக்கவைக்கும் சீனாவின் வளர்ச்சி... இந்தியாவில் 
எப்போது நடக்கும்?
சீனாவில் தகவல் மற்றும் இயக்கம் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அங்கு அனுமதி கிடையாது; பேச்சு சுதந்திரமும் கிடையாது!

அலைபேசியும் மின்சார வாகனங்களும்

சீனாவில் 117 கோடிபேர் அலைபேசி பயன் படுத்துகிறார்கள். அதில் 83 கோடிபேர் இணையம் உபயோகப்படுத்துபவர்கள். சீனா 5G தொழில் நுட்பத்துக்கு மாற, தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் அதிவேகம், அதிக திறன் மற்றும் பலதரப்பட்ட அன்றாடத் தேவைகளைத் தொலைபேசி இணையத்தின் வாயிலாகப் பூர்த்திசெய்வதை உறுதி செய்கிறது.

சீனாவில் பலர் மின்சார வாகனங்களுக்கு மாறி யிருப்பதை, நான் எனது பயணத்தின்போது கவனித்தேன். உலகில் மொத்தமுள்ள 250 மில்லியன் மின்சார இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலானவை சீனாவில்தான் இருக்கின்றன. பெய்ஜிங்கில் ஓடும் பெரும்பாலான பேருந்துகள் மின்சாரத்தால் இயங்குபவைதான். ஷென்சென் நகரில் இயங்கும் 100% பேருந்துகளுமே மின்சார பேருந்துகள். உலகில் விற்பனையாகும் மொத்த மின்சார கார்களில் 50% சீனாவில்தான் இருக் கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், சீனா முழுவதுமாக மின்சார கார்களுக்கு மாறிவிடும்.

இந்தியாவுக்கு வரும் சீனப் பொருள்கள்

இந்திய - சீனாவுக்கு இடையேயான வர்த்தகத் தில், சீனாவுக்குத்தான் மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. இந்தியாவிற்குச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களின் அளவில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருள்களில் பல, நம் நாட்டிலேயே எளிதாகத் தயார் செய்யக்கூடியவைதான். ஒரு சில உதாரணங்களைச் சொல்கிறேன். ஜெயலலிதா அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.9,000 கோடி. இந்தப் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய திறன் படைத்ததுதான் தமிழ்நாடு. ஆனால் இந்த ஒப்பந்தத்தை வென்ற வர்த்தகர்கள், சீனாவிலிருந்து தான் இவற்றை இறக்குமதி செய்தார்கள். இதே நிலைதான் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மடிக்கணினித் திட்டத்திலும் ஏற்பட்டது. சுமார் 850 கோடி ரூபாய் மதிப்பிலான அகர்பத்திகளைச் சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்ததாகத் தெரிவிக்கிறது.

எப்படி மாறியது சீனா?

கடந்த 2008-ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை வென்றெடுக்க வேண்டு மென்ற நோக்கம்தான், சீனாவில் 2000-லிருந்தே பெரும் மாற்றங்கள் ஏற்படுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததாகத் தெரிகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக தலைநகரின் ஒரு பரந்த பகுதி ஒதுக்கப்பட்டது. அங்கிருந்த கட்டடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; சாலைகள் அகலப்படுத்தப் பட்டன; உள்கட்டமைப்பு வசதி கள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டன.

பிரமிக்கவைக்கும் சீனாவின் வளர்ச்சி... இந்தியாவில் 
எப்போது நடக்கும்?

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடத்திலிருந்து வரும் தெளிவான வழிமுறைகள், அரசின் திட்டகொள்கைகள் தொய்வின்றி தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கின்றன. அடுத்தடுத்துப் பதவிக்குவந்த சக்தி வாய்ந்த தலைவர்களிடமும் வளர்ச்சிக் கான நீண்டகாலப் பார்வையும் சிந்தனையும் இருந்தது.

கட்சியும் அரசாங்கமும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாகச் செயல்படு கின்றன. சக்திவாய்ந்த தலைவர் களான மாவோ சேதுங், டெங் ஜியோபிங், ஜியாங் ஜெமின் முதல் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் வரை அதிவேகப் பொருளாதார வளர்ச்சியிலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் கவனம்செலுத்தினர். பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் கருத்து வேறுபாடுகள், எதிர்ப்புகளுக்கு வாய்ப்பளிக்காது வளர்ச்சிக்கான கவனம் மட்டுமே மேலோங்கியிருந்தது.

இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் 1989-லிருந்து 2014 வரை மாறுபட்ட கருத்துகள் கொண்ட கட்சி களின் நிலையற்றக் கூட்டணி அரசுகள் ஆட்சியில் இருந்தன. பெரும்பான்மை அரசுகளாக இல்லாததால், 1989-ல் வி.பி.சிங் முதல் 2009-14 வரை இருந்த இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வரை தீர்க்கமாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் ஏழு பிரதமர்கள் இந்தியாவை ஆண்டனர். கடந்த 2014-19-ல் ஆட்சிப் பொறுப்பிலிருந்த மோடி அரசு, மக்களவையில் பெரும்பான்மையாக இருந்தது. ஆனால், மாநிலங் களவையில் பெரும்பான்மை இல்லாததால், தேவையான சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. பொது உபயோகத்திற்கான நிலத்தைக் கூட அரசால் கையகப்படுத்த முடியவில்லை.

சீனாவில் தகவல் மற்றும் இயக்கம், அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. கண்காணிப்பும் முழுவீச்சில் உள்ளது. வெளி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அங்கு அனுமதி கிடையாது, ஜனநாயகத்தில் இருப்பதைப் போல, பேச்சு சுதந்திரமும் கிடையாது.

ஆனால், இவையெல்லாம் சாதாரண சீனர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றைச் சீன அரசு கவனித்துக்கொள்கிறது. வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாகச் சீனா வளர்ந்து வருகிறது என்ற பெருமை, ஜனநாயகம் இல்லை என்ற குறையை விஞ்சி நிற்கிறது!