Published:Updated:

எப்போது நாம் சீனப் பொருள்களைப் புறக்கணிக்கலாம்?

ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, மடிக்கணினி போன்ற சீனப் பொருள்கள் கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.1.4 லட்சம் கோடிக்கு விற்பனையாகின.

பிரீமியம் ஸ்டோரி

மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்

‘சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும்’ என்கிற கோஷம் திரளாக எழுந்துள்ளது. ஒன்றிய அரசுமே இந்த கோஷத்தை முன்வைக்கிறது. அதன் விளைவே 59 சீனச் செயலிகளைத் தடை செய்தது.

இதற்கெல்லாம் இன்னொரு எதிர்வினையையும் கேட்க முடிகிறது. ‘சீனாவை நாம் அவ்வளவு சுலபமாகப் புறக்கணித்துவிட முடியுமா?’ என்பதே அது. அது சாத்தியமா? ஏற்கெனவே இதே தலைப்பில் சிலர் சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள். இங்கே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான உற்பத்தித்துறை - சேவைத்துறை - கல்வி, ஆரோக்கியம் - மனிதவளம் - உளவியல் சார்ந்த சில சமூக காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளுடன் சில விஷயங்களைப் பார்ப்போம்.

மின்னணுச் சந்தையில் எங்கே இருக்கிறோம்?

மின்னணுச் சந்தை ஓர் உதாரணம். ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, மடிக்கணினி போன்ற சீனப் பொருள்கள் கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.1.4 லட்சம் கோடிக்கு விற்பனையாகின. 2019-ல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் விற்பனை மட்டுமே 71 சதவிகிதம். அடுத்த இடத்தில் சாம்சங், எல்ஜி ஆகிய கொரிய நிறுவனங்களும், சோனி முதலான ஜப்பானிய நிறுவனங்களும் இருக்கின்றன. 2019-ல் சீனா நீங்கலாக, இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய விற்பனை 27.4 சதவிகிதம். இந்திய நிறுவனங்களின் விற்பனை 1.6 சதவிகிதம் மட்டுமே. இந்த இடத்தில் இருந்துகொண்டுதான் நாம் புறக்கணிப்புக்கான வியூகத்தை வகுக்க வேண்டியிருக்கிறது.

ஓராண்டுக்கு முன்னர் சீன-அமெரிக்க வர்த்தகப் போர் உச்சத்தில் இருந்தது. அப்போது பல அயல் நிறுவனங்கள் சீனாவிலிருந்து புலம்பெயர்ந்தன. வங்காள தேசம், வியட்நாம், மலேசியா என்று அவை போய்ச் சேர்ந்தன. அவர்கள் தேர்வுப் பட்டியலில் இந்தியாவுக்கான இடம் மேற்கண்ட நாடுகளுக்குக் கீழேதான் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை முன்னெடுத்தபோதும் சர்வதேசத் தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு ஈர்ப்பது குறித்துப் பலரும் பேசினார்கள்.

எப்போது நாம் சீனப் பொருள்களைப் புறக்கணிக்கலாம்?

ஆடை வணிகத்தில் எங்கே இருக்கிறோம் நாம்?

இன்னோர் உதாரணம் ஆடை வணிகம். 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு ஆடை வணிகத்தில் ஒரு வாய்ப்பு வந்தது. ஆடைச் சந்தையில் எந்தெந்தத் துணி ரகங்களை, எந்த அளவுக்குத் தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை வளர்ந்த நாடுகள்தான் தீர்மானித்தன. சர்வதேச வணிகத்தில் இதை ‘ஒதுக்கீட்டு முறை’ என்பார்கள். ‘உலக நாடுகளுக்கு இடையிலான கட்டற்ற வணிகம்’ என்பது உலக வணிக அமைப்பின் (WTO) கொள்கை. ஆனால், ஒதுக்கீட்டு முறை இந்தக் கொள்கைக்கு முரணானது. அதனால், `ஆடை வணிகத்தில் ஒதுக்கீட்டு முறை 2004-ம் ஆண்டுடன் முடிவுக்கு வரும்’ என்று உலக வணிக அமைப்பு அறிவித்திருந்தது.

2005-ம் ஆண்டு சீன ஆடைகள் மேற்கு நோக்கி வெள்ளமாகப் பாய்ந்தன. அப்போது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சீன ஆடைகளுக்குத் தடைவிதித்தன. இது, உலக வணிக அமைப்பின் விதிகளுக்கு முரணானது. இந்தியாவுக்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்க வேண்டும். கைக்குக் கிட்டிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை இந்தியா.

இத்தனைக்கும் பருத்திச் சாகுபடியில் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது இந்தியா. இங்கு 90 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகிறது. இது மட்டுமல்ல... செயற்கை இழை உற்பத்தியிலும் முன்னணியில் இருக்கிறது இந்தியா. ஆனாலும், 2005-ம் ஆண்டில் நிலவிய மேற்குலகின் சீன எதிர்ப்பைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள இந்திய ஆடைச் சந்தையால் முடியவில்லை. கடந்த 15 ஆண்டுகள் கழித்தும் நிலைமை பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை.

எங்கே சறுக்குகிறது இந்தியா?

இந்தியாவும் சீனாவைப்போல மனித வளம் மிக்க நாடுதான். சீனாவைப்போலவே அந்நிய முதலீடுகளை வரவேற்கிறது. சீனாவைப் போலவே தொழிற்சாலைகளுக்கு இடமும் அனுமதியும் வழங்குவதில் தாராளப் போக்கைக் கடைப்பிடிக்கிறது. பிறகு ஏன் பல சர்வதேச நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவுவதில்லை?

இதற்குப் பொருளாதார வல்லுநர்கள் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். முதலாவது, இந்தியாவின் உள்கட்டமைப்பு. ‘நமது துறைமுகங்களும், சாலைகளும், ரயில் தடங்களும், மின்சார உற்பத்தியும், நீர் வழங்கலும் சர்வதேசத் தரத்தில் இல்லை’ என்கிறார்கள். சீனா, கடந்த 40 ஆண்டுகளில் உற்பத்தியில் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியபோது தனது உள்கட்டமைப்பையும் உலகத்தரத்துக்கு உயர்த்திக்கொண்டது.

இரண்டாவது, ‘நமது தொழிற்சங்கங்கள் கடும்போக்கானவை; அவை முதலீட்டாளர்களை அச்சப்படவைக்கின்றன’ என்பதாகும். இந்தக் கூற்று உள்ளீடற்றது என்பதைத்தான் கொரோனா காலம் நமக்கு உணர்த்தியுள்ளது. முறைசாரா தொழிலாளர்கள் மட்டுமல்ல, அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை, தொழில் இல்லாமல் போனது. ஆகவே, இரண்டாவது கூற்றில் உண்மை இல்லை. அப்படியானால் உண்மைக் காரணம் என்ன? இதற்கான விடையை மெட்ரோ ரயில் சுரங்கத்திலும் தேடலாம்.

எப்போது நாம் சீனப் பொருள்களைப் புறக்கணிக்கலாம்?

மெட்ரோவில் விடை தேடுவோம்!

அன்றைய கல்கத்தாவில், 1984-ல் மெட்ரோ சேவை தொடங்கிவிட்டாலும் நவீன தொழில்நுட்பத்திலான மெட்ரோ சேவை 2002-ம் ஆண்டுதான் டெல்லியில் தொடங்கியது. தொடங்கப்பட்டபோது டெல்லியில் ஆறு நிலையங்களே இருந்தன. இப்போது டெல்லியில் மட்டுமே 230 நிலையங்கள் உள்ளன. இந்த 18 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவை பல இந்திய நகரங்களில் தனது தடங்களைப் பதித்துவருகிறது. முதற்கட்டமாக மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களிலும், அடுத்தகட்டமாக கொச்சி, லக்னோ, கான்பூர், பாட்னா, ஜெய்ப்பூர், சூரத், இந்தூர், நாக்பூர் முதலான இரண்டாம்நிலை நகரங்களிலும் உருவாகிவருகிறது.

இதுவரை பதிக்கப்பட்ட தடங்களில் மேம்பாலப் பாதைகளே அதிகம். சமீப வருடங்களில் கணிசமான அளவில் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. அவை அதிநவீனச் சுரங்கம் குடையும் இயந்திரங்களால் உருவாக்கப்படுபவை. அந்த இயந்திரங்கள் 60 அடிகளுக்குக் கீழே சுரங்கம் குடையும் வல்லமை கொண்டவை. 20 அடி விட்டமும், சுமார் 400 அடி நீளமும்கொண்ட இந்த இயந்திரங்களின் விலை மிகவும் அதிகம்.

இவைதான் சென்னையிலும், பிற இந்திய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சுரங்கங்களை உருவாக்கின. இப்போதும் மும்பையில் 17, பூனேவில் 3, கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் தலா 4, ஜெய்ப்பூர் மற்றும் லக்னோவில் தலா 2, பெங்களூருவில் 15 என மொத்தம் 47 இயந்திரங்கள் இயங்கிவருகின்றன. இந்த இயந்திரங்களில் சில சீன நிறுவனத்தையும், சில `ராபின்ஸ்’ என்ற அமெரிக்க நிறுவனத்தையும், பெரும்பாலானவை இந்தத் தொழில் நுட்பத்தில் முன்னோடியும் விற்பன்னருமான `ஹெரிக்னெட்’ என்ற ஜெர்மானிய நிறுவனத்தையும் சேர்ந்தவை.

இவை வெவ்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளாக இருந்தபோதும் அவற்றுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இந்த 47 இயந்திரங்களும் சீனாவில் தயாரிக்கப் பட்டவை. மேற்கண்ட அமெரிக்க நிறுவனமும், ஜெர்மானிய நிறுவனமும் தங்கள் ஆலைகளைச் சீனாவில் நிர்மாணித்திருக்கின்றன.

எப்போது நாம் சீனப் பொருள்களைப் புறக்கணிக்கலாம்?

`லட்சுமண ரேகை’ எனும் இந்திய உளவியல்!

இப்போது நம் முன் எழும் கேள்வி: இந்தியாவிலேயே சந்தை வாய்ப்புகள் உள்ளபோதும் அமெரிக்க நிறுவனமும், ஜெர்மானிய நிறுவனமும் ஏன் தங்களது இயந்திரங்களை இந்தியாவில் தயாரிக்க முற்படவில்லை?

இந்தியாவால் ஏன் இந்த கனரக-மின்னணுத் தொழிலில் காலூன்ற முடிய வில்லை? ஏனென்றால், உற்பத்தி சார்ந்த இந்தத் துறையைவிட இந்தியா சேவைத் துறையில், அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் காலூன்றி நிற்கிறது. இந்த இடத்தில் பணிரீதியாக இந்தியச் சமூகத்தின் உளவியலை உற்றுநோக்க வேண்டியிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் அறிந்த பணியாளர்கள் இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், இயந்திரத்தை உருவாக்கும் திறனுள்ள தொழிலாளர்கள் இந்தியாவில் கணிசமான அளவில் இல்லை; ஆனால், இந்தியாவிலும் மனிதவளம் நிறைய இருக்கிறதே, மேலதிகமாக வேலையின்மையும் நிலவுகிறதே... பிறகு என்ன பிரச்னை?

இப்படியான தொழிற்சாலைகளில் பணி புரிவோர் கல்வியறிவு உள்ளவர்களாகவும், தொழிற்பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் படித்தவர்கள் வெள்ளைக்காலர் உத்தியோகம்தான் பார்ப்பார்கள். படிக்காதவர்கள்தான் உடல் உழைப்பைக் கோரும் உத்தியோகத்துக்குப் போவார்கள். இந்த `லட்சுமணன் கோடு’ தீர்க்கமாக வரையப்பட்டிருக்கிறது. இந்த வேறுபாடு உருவாக்கும் மனத்தடைக்குப் பல்வேறு சமூகக் காரணிகள் இருக்கலாம். ஆனால், நாம் இந்தத் தடையைக் களைந்தாக வேண்டும். கூடவே, நம் மக்கள் திரளின் கல்வியறிவையும் உடல்நலத்தையும் மேம்படுத்த வேண்டும். சீனா அதைத்தான் செய்தது.

கல்வி, ஆரோக்கியம்...இந்தியா-சீனா ஒப்பீடு

`எந்த ஒரு நாடும் தொழில்மயமாக வேண்டுமானால், அடிப்படையான இரண்டு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்’ என்கிறார் நோபல் விருது பெற்ற அமர்த்தியா சென். அவை, கல்வி மற்றும் ஆரோக்கியம். சீனாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்

97 சதவிகிதம் பேர். இந்தியாவில் இது 74 சதவிகிதம். உலக சராசரி 86 சதவிகிதம். இந்தியாவில் சுமார் 29 கோடிப் பேருக்குக் கல்வியறிவு இல்லை. உலகில் கல்வியறிவு இல்லாதவர்களில் 37 சதவிகிதம் பேர் இந்தியர்கள்.

பொதுச் சுகாதாரத்திலும் இந்தியா பலவீனமாக இருக்கிறது. இந்தியர்களின் தற்போதைய சராசரி ஆயுட்காலம் 69 ஆண்டுகள். இது சீனர்களைவிட ஏழு ஆண்டுகள் குறைவு. 1990-களிலேயே கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியாவின் நிலையை எட்டிவிட்டது சீனா.

கொரோனா காலத்தில் சுகாதாரத்துறைக்கு அரசு செலவிடும் தொகை குறித்து விவாதங்கள் நடக்கின்றன. 2018-ம் ஆண்டில் நபர் ஒருவருக்கு சுகாதாரம் சார்ந்து இந்தியா செலவிட்ட தொகை 15,600 ரூபாய். அதே ஆண்டு சீனா செலவிட்டது 51,400 ரூபாய். சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவிகிதத்தை சுகாதாரத்துக்காகச் செலவிடுகிறது. இந்தியாவில் இது 3.5 சதவிகிதம் மட்டுமே.

தீர்வு என்ன?

இந்தியாவில் அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் வக்கற்றவர்களின் புகலிடமாகிவிட்டன. பொதுப்பள்ளிகளும் மருத்துவமனைகளும் எல்லோருக்கு மானவையாக, தரம் மிக்கவையாக இருக்க வேண்டும். அதற்கு மக்களின் மனநிலையிலும் மாற்றம் வர வேண்டும்.

திறமையும் பயிற்சியுமே ஒரு நல்ல தொழிலாளியை உருவாக்கும். இதற்கு அடிப்படைக் கல்வியும், நல்ல ஆரோக்கியமும் அவசியம். கழிவு அப்புறப்படுத்தும் தொழிலாளி தொடங்கி கணினி மென்பொருள் சேவைத்துறையில் பணிபுரியும் தொழிலாளி வரை எல்லாத் தொழிலிலும் இருப்பவர்களையும் கண்ணியத்துடன் பார்க்கும் மனநிலை மிகவும் முக்கியம். தேசத்தின் உள்கட்டமைப்பைச் சீரமைக்கும்போதே, கல்வியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் நீண்டகாலத் திட்டங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் மனிதவளத்தின் மதிப்பு உயரும்; இந்தியா உலகின் தொழிற்சாலையாகவும் மாறும். அப்போது நாம் சீனப் பொருள்களைப் புறக்கணிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு