அரசியல்
அலசல்
Published:Updated:

திருப்பூருக்கு எப்போது வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனை?

திருப்பூர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்பூர்

கொட்டிக்கொடுக்கும் தொழிலாளர்கள்... தட்டிக்கழிக்கும் நிர்வாகம்...

தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவு தொழிலாளர்களைக்கொண்டது திருப்பூர் மாவட்டம். இங்கு தொழிலாளர்களுக்குப் பெருமளவு பயன்படக்கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், இன்னும் பணிகள் தொடங்கப்படாதது திருப்பூர் மக்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது!

திருப்பூரில் பனியன் தொழிலை நம்பி சுமார் 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். உள்நாட்டுக்கான உற்பத்தி, வெளிநாட்டு ஏற்றுமதி என ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய்க்கு இங்கு வர்த்தகம் நடக்கிறது. சென்னைக்கு அடுத்து இ.எஸ்.ஐ-க்கு அதிக பங்களிப்பு செய்யும் மாவட்டமும் திருப்பூர்தான். சுமார் நான்கரை லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ-க்குப் பணம் கட்டுவதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகிறது. இதனால், திருப்பூரில் தொழிலாளர்களின் நலனுக்கென இ.எஸ்.ஐ மருத்துவமனை கொண்டுவர வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கை.

இந்தநிலையில்தான் 2019, பிப்ரவரி 10 அன்று திருப்பூருக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த பிரதமர் மோடி, திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், காம்பவுண்ட் சுவரைத் தாண்டி எந்த வேலையும் தொடங்கப்படவில்லை.

திருப்பூருக்கு எப்போது வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனை?

இ.எஸ்.ஐ நிர்வாகம், 2011-ல் இந்து அறநிலையத் துறையிடமிருந்து திருப்பூர் - பூண்டி ரிங் ரோட்டில் மருத்துவமனை கட்டுவதற்கு 7.5 ஏக்கர் நிலத்தை வாங்கியது. ‘இந்த நிலம் செல்லாண்டியம்மன் கோயிலுக்கும், அதைச் சேர்ந்த பூசாரிகள் ஐந்து பேருக்கும் சொந்தமானது. எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் அறநிலையத் துறை எப்படி இ.எஸ்.ஐ கார்ப்பரேஷனுக்கு நிலத்தை விற்கலாம்?’ என்று சம்பந்தப்பட்ட பூசாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததுதான் மருத்துவமனை கட்டுவதற்குத் தடையாக இருக்கிறது.

இதற்கு என்னதான் தீர்வு என்று பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ) பொதுச்செயலாளர் சம்பத்திடம் கேட்டோம். ‘‘இன்றைக்கு தெலங்கானா முதல்வராக இருக்கும் சந்திரசேகர ராவ், மத்தியத் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தபோது, திருப்பூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அப்போது ‘திருப்பூரில் விரைவில் 100 படுக்கைகளுடன் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டப்படும்’ என்றார். அவர் சொல்லி 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிச் சென்றும், ஒரு செங்கல்கூட நகர்த்தி வைக்கப்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக்கூட மத்திய அரசுதான் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி தேவையில்லை. தொழிலாளர்களின் பணமே பல நூறு கோடி ரூபாய் இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க, நிலத்தில் சட்டச் சிக்கல் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கி றார்கள். இதற்கு ஒரே தீர்வு, உடனடியாக வேறு நிலம் வாங்கி மருத்துவமனையைக் கட்டுவதுதான்” என்றார்.

வானதி சீனிவாசன், முத்து ரத்தினம்
வானதி சீனிவாசன், முத்து ரத்தினம்

இந்தப் பிரச்னைக்காக நீண்டகாலம் குரல் கொடுத்துவருகிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி.முத்து ரத்தினம். அவர் நம்மிடம், “திருப்பூரில் இ.எஸ்.ஐ மூலம் 1,600 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாக 2010-லேயே சொன்னார்கள். இன்றைக்கு அந்தத் தொகை 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இப்படி கொட்டிக் கொடுக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மருத்துவமனையைக்கூட கட்ட அரசுக்கு அக்கறையில்லை. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் திருப்பூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை இருந்திருந்தால், எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்’’ என்றார் ஆதங்கத்துடன்.

நிலத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் கண்ணையா குமாரிடம் பேசினோம். ‘‘மைசூர் மகாராஜா காலத்திலிருந்தே நாங்கள் இந்தக் கோயில் நிலத்தைப் பராமரித்து வருகிறோம். 22.5.1968-ல் ‘செல்லாண்டியம்மன் கோயில் பூசாரிகள் ஐந்து பேருக்கு இந்தக் கோயிலை அனுபவிக்க உரிமையுண்டு’ என செட்டில்மென்ட் தாசில்தார் பட்டா கொடுத்திருக்கிறார். 2005 வரை சம்பந்தப்பட்ட நிலத்துக்கு வரி கட்டியிருக்கிறோம். அப்படியிருக்க எங்களுக்கே தெரியாமல் நிலத்தை இ.எஸ்.ஐ நிர்வாகத்திடம் அறநிலையத்துறை விற்றுவிட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். நிலத்துக்கு உரிய மதிப்பீட்டைக் கொடுத்தாலோ அல்லது மாற்று நிலத்தைக் கொடுத்தாலோ அதை ஏற்கத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

இ.எஸ்.ஐ கார்ப்பரேஷன் ஊழியர்கள் சிலரோ, “2011-12 ஆண்டிலேயே 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கான இடமும் வாங்கப்பட்டுவிட்டது. அந்த இடத்தில் மண் பரிசோதனையில் ஆரம்பித்து எல்லா ஆய்வுகளும் செய்தாயிற்று. இந்த நிலத்திலுள்ள சட்டச் சிக்கலால் முதலில் அனுப்பிய மருத்துவமனைக்கான பிளானை, இ.எஸ்.ஐ கார்ப்பரேஷன் நிராகரித்துவிட்டது. சட்டச் சிக்கலைத் தீர்க்க அக்கறையான ஆட்கள் இல்லாததே இந்தப் பிரச்னை நீடிக்கக் காரணம்’’ என்றார்கள்.

அரசுத் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய இ.எஸ்.ஐ கழகத்தின் கோவை மண்டல துணை இயக்குநர் ரகுராமனிடம் பேசினோம். ‘‘இ.எஸ்.ஐ கார்ப்பரேஷனின் டெல்லி தலைமையகத் திலிருந்துதான் திருப்பூர் மருத்துவமனைக்கான திட்டம் கொண்டுவரப்பட்டது. அது தொடர்பான எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியாது’’ என்றார்.

திருப்பூருக்கு எப்போது வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனை?

இது தொடர்பான பணிகளை முன்னெடுத்துவருகிறார் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன். அவரிடம் பேசியபோது, ‘‘நிலம் தொடர்பான சட்டப் பிரச்னைதான் தாமதத்துக்குக் காரணம். சமீபத்தில்கூட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரைச் சந்தித்து இது பற்றிப் பேசினேன். ‘உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்’ என உறுதி கொடுத்திருக்கிறார். விரைவில் இங்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை அமையும்” என்றார்.

திருப்பூர் தொழிலாளர்களுக்கு எப்போது விடிவு பிறக்குமோ?