Published:Updated:

தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசாலும் சுரண்டப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்கள்; மாற்றம் எப்போது?

மே தினம்

2020 பிப்ரவரியில் மத்திய வேளாண் அமைச்சர், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தியாவில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை - 14.43 கோடி.

தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசாலும் சுரண்டப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்கள்; மாற்றம் எப்போது?

2020 பிப்ரவரியில் மத்திய வேளாண் அமைச்சர், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தியாவில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை - 14.43 கோடி.

Published:Updated:
மே தினம்

உலகெங்கும் உள்ள உழைப்பாளிகளுக்கு மே தின நல்வாழ்த்துகள்!

தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டிய, பாதுகாத்த பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுக் காலம், உண்மையில் ஒரு பொற்காலம். இதன் நீட்சியாக இருபத்தோராம் நூற்றாண்டு இருக்கிறதா..?

தொழிலாளர்களில் இரு வகை உண்டு. வலுவான தொழிற்சங்கக் கூட்டமைப்புக்குள் பணியாற்றுகிற ஓரளவுக்கு நிலையான வருமானம் கொண்டோர்; அமைப்பு சாராத் துறைகளில் ஆபத்தான பணிச்சூழலில் நிலையற்ற, மிகக் குறைந்த கூலிக்கு உழைத்துப் பிழைப்போர்.

முந்தைய பிரிவினரின் உரிமைகளுக்காகக் களத்தில் இறங்கிப் போராடி எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுத் தந்த இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்கள், இரண்டாம் வகைத் தொழிலாளர்களை இரண்டாம் பட்சமாகப் பாவித்து பாராமுகமாக நடந்து கொண்டது ஒரு வரலாற்றுச் சோகம்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது உலகம் எங்கும் உள்ள அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 200 கோடி!

மே தினம்
மே தினம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுரங்கங்களில், குவாரிகளில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஆபத்தான நிலையில் குறைந்த ஊதியத்தில் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் தொழிலாளர்களின் குரல் எந்த அரங்கிலும் ஒலிப்பதில்லை. ஆண்டு முழுவதும் ஆங்காங்கே விபத்துகள் நடைபெறுவதும் தொழிலாளர் உயிர் துறப்பதும் தொடர்கதையாகி விட்டது. 'இறந்தால் இரண்டு லட்சம்; உயிர் பிழைத்தால் அரை லட்சம்' என்கிற அளவில் 'உதவி' நல்கி, அரசு தனது கடமையை முடித்துக் கொள்கிறது.

முறையான பணிப் பாதுகாப்பு, சட்ட விதிமுறைகள் ஏதும் இல்லாது பணியாற்றுகிற தொழிலாளர்களை அதிகம் கொண்டது - வேளாண்துறை. சொந்தமாக விவசாய நிலம் இல்லாது, ஆனால் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தினக்கூலிகள் இவர்கள்.

2020 பிப்ரவரியில் மத்திய வேளாண் அமைச்சர், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தியாவில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை - 14.43 கோடி.

அவ்வப்போது விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணங்களை நாம் முழுமனதுடன் வரவேற்கிறோம். அதேசமயம், விவசாயத்தையே முழுதும் நம்பி இருக்கும் விவசாயக் கூலிகள் குறித்து யாரும் கவலைப் படுகிறார்களா..? சினிமாத் தனமாக மட்டுமே சிந்திக்க தெரிந்த தலைவர்கள் யாரும் விவசாயக் கூலிகள் பற்றிப் பேசுவதே இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவசாயத் தொழிலாளர் விசாரணைக் குழு 1956-57இல் வெளியிட்ட முதல் அறிக்கையிலேயே வேளாண் தொழிலாளர்களை இரண்டு வகையாகப் பிரித்துக் காட்டியது. நில உரிமையாளரிடம் நிரந்தர ஒப்பந்தத்தில் பணி செய்வோர்; அவ்வப்போது வந்து செல்லும் தற்செயல் தொழிலாளர்.

முதல் பிரிவினர் தமது எஜமானர்களால் மோசமாக நடத்தப்படும் நிலை பெரிய அளவில் மாறிவிட்டதாகத் தெரியவில்லை. 'தலைமுறை விசுவாசம்', கடன் சுமை உள்ளிட்ட பல காரணங்களால் கட்டுண்டு கிடக்கும் இவர்களின் பொறுமை உதாசீன படுத்தப் படுகிறது.

1993-94இல் இருந்து 1999 - 2000 வரையிலான 6 ஆண்டுகளில் விவசாயத் தொழிலாளர்களின் தினசரிக் கூலி, ஏறத்தாழ இரு மடங்கு அதிகரித்தது. ஆனாலும், தொழிற்சாலைகளில் தரப்படும் சராசரி தினக்கூலியில் இது, பாதிக்கும் குறைவு.

குறைந்த பட்சக் கூலிச் சட்டம் 1948 தொழிலாளருக்கு வரையறுத்த அளவு எவ்வளவு? (மாநிலத்துக்கு மாநிலம் சற்றே மாறுபடும்) தொழிலாளருக்குத் தரப்பட்ட ஊதியம் எவ்வளவு..? டிசம்பர் 1999-ல், தமிழ்நாட்டுக்கு வரையறுத்த குறைந்தபட்ச தினக்கூலி - ரூ 90. வழங்கப் பட்டதோ ரூ 52. விதிவிலக்கு இன்றி, எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

பணிச்சூழல், பணிநேரம், பணிப் பாதுகாப்பு, பணியின் போது உடல்/ உயிருக்குப் பாதுகாப்பு, பணிக்கான ஊதியம் என்று எந்த வகையிலும் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கவே இல்லை. ஆனால் நல்ல ஊதியத்தில், அளவுக்கு மீறிய அதிகாரத்துடன் வலம் வரும் அலுவலர், ஊழியர்களின் கோரிக்கைகள் உடனடியாக 'கவனிக்கப் படுகிறது'. இதே கவனிப்பு, முறைசாராத் தொழிலாளருக்கும் கிடைக்கட்டும். அப்போதுதான் மேதினக் கொண்டாட்டம் உண்மையில் அர்த்தமுள்ளதாக இருக்க முடியும்.

இந்தியாவில், அரசுத் துறைகளில் கூட, அமைப்பு சாராத் தொழிலாளர்களின் நிலை மெல்ல மெல்ல வேரூன்றி வருகிறது. ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கிற முறை வந்துவிட்டது. அரசுப் பணிகளுக்கு தொகுப்பூதியம் வழங்கும் முறையும் இயல்பாகி விட்டது. தொகுப்பூதியம் என்றால்..? நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் தவிர்த்து வேறு எதுவும் வழங்கப்பட மாட்டாது; வேறு எந்தப் படிகளும் சலுகைகளும் கிடையாது. இது மிகவும் ஆபத்தானது. தொழிலாளர் நலனுக்கு முற்றிலும் எதிரானது. ஆனாலும், கேள்வி கேட்பார் யாருமின்றி, தடையின்றித் தொடர்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் தமிழக அரசு, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.7500 தொகுப்பூதியம் வழங்குவதாக `மகிழ்ச்சியுடன்' அறிவித்தது. ஒருபுறம் ஆறு இலக்க மாத ஊதியம் பெறுவோருக்காகக் குரல் கொடுக்கிற அமைப்புகள், தமிழக அரசின் தொகுப்பூதிய அறிவிப்புக்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை!

அமைப்பு சாராத் தொழிலாளர்கள், நீடித்த, நீண்டகால நன்மை பெறுவதை உறுதி செய்கிற வகையில் நிரந்தர ஏற்பாட்டுக்கு வழி கோலுகிற திட்டங்களை முன் வைப்பதில், முன்னெடுப்பதில் தலைவர்கள் தவறி விட்டனர். இதுதான் உண்மையில் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சோகம்.

அமைப்பு சாராத் தொழிலாளர் விஷயத்தில், எல்லா அரசியல் கட்சிகளுமே அலட்சியம் காட்டுகின்றன. ஆனால் இடதுசாரிகளின் மெத்தனம்தான் மிகப் பெரிய பாதிப்பு. காரணம், தொழிலாளர்களின் நம்புதற்கு உரிய தோழனாக இருப்பது இடதுசாரிகள் தாம். அங்கிருந்தே போதிய ஆதரவு இல்லாத போது, அமைப்பு சாராத் தொழிலாளர்கள் பாவம் என்ன செய்வார்கள்..?

'உலகத் தொழிலாளர்களே.. ஒன்றுபடுங்கள்' என்கிற முழக்கம் கூறும் செய்தி என்ன? உலகம் முழுக்க உள்ள உழைப்பாளிகள் எல்லாரும் ஒரே வர்க்கம்.. இவர்களிடையே சாதி, மதம், மொழி, மண்டலம் சார்ந்த பேதங்கள் கூடாது என்கிற உலகளாவிய அணுகுமுறையை வலியுறுத்திய மானிடத் தத்துவம் அல்லவா அது..? ஆனால், 'வெளி மாநிலத் தொழிலாளி' என்று கூறி பேதங்கள் வளர்க்கப்படுகிறதே... 'உலகப்பார்வை' என்னானது..?

தொழிலாளர்கள்?
தொழிலாளர்கள்?

'உழைப்புக்கு இணை ஏதுமில்லை',

'உண்மையாய் உழைத்தால் உயரலாம்',

'இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் உழைப்புக்கான பயன் கட்டாயம் வந்து சேரும்' என்றெல்லாம் பேசக் கேட்கிறபோது இனிமையாகத் தான் இருக்கிறது. ஆனால்..?

சுட்டெரிக்கும் வெயிலில், வண்டி நிறைய சுமைகளை ஏற்றிக் கொண்டு, ஏதோ ஒரு பாலத்தின் மீது உடல் நரம்புகள் அனைத்தும் புடைக்க புடைக்கப் தள்ளிக் கொண்டு போகிறாரே... அந்த உழைப்பாளிக்கு எதிர்கால நம்பிக்கையாக நாம் அளிக்கும் உறுதிமொழி என்ன..?

இந்த கேள்விக்கான பதிலில் பொதிந்து கிடக்கிறது - மே தினத்தின் மேன்மை.

யாரிடம் என்ன பதில் இருக்கிறது..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism