Published:Updated:

தம்பி டீ இன்னும் வரல! - தாமிரபரணி உபரிநீர்... உபயோகப்படப்போவது எப்போது?

தாமிரபரணி
பிரீமியம் ஸ்டோரி
தாமிரபரணி

குடிநீருக்குக்கூட மக்கள் திண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு பெய்த கனமழையில்கூட நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் நிறைய குளங்கள் நிரம்பவில்லை.

தம்பி டீ இன்னும் வரல! - தாமிரபரணி உபரிநீர்... உபயோகப்படப்போவது எப்போது?

குடிநீருக்குக்கூட மக்கள் திண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு பெய்த கனமழையில்கூட நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் நிறைய குளங்கள் நிரம்பவில்லை.

Published:Updated:
தாமிரபரணி
பிரீமியம் ஸ்டோரி
தாமிரபரணி

தண்ணீருக்காகப் பக்கத்து மாநிலங்களுடன் சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில், `தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் முடிவடையாததால், தாமிரபரணி ஆற்றின் உபரிநீர் விவசாயிகளுக்குப் பயன்படாமல் கடலில் கலக்கிறது’ என்று கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் மழைக்குக் குறையேதும் இல்லை. சொல்லப்போனால் கனமழை வெளுத்து வாங்கியது. அணைகள் நிரம்பி வழிந்ததால், தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில்தான், ‘‘நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் வறண்ட தேரிக்காடு பகுதிகளை வளமாக்கும் வகையில், தாமிரபரணி நதியிலிருந்து உபரியாகக் கடலில் கலக்கும் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம், 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்தப் பணிகள் இன்னும் முடிவடைவில்லை. இந்தப் பணிகள் நிறைவடைந்திருந்தால், இப்போது கடலுக்குச் சென்ற ஒரு லட்சம் கனஅடி நீரும் விவசாயத்துக்குப் பயன்பட்டிருக்கும்’’ என்பதே விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது.

 ஆட்சியர் அலுவலகத்தில் கே.பி.கே.ஜெயகுமார்
ஆட்சியர் அலுவலகத்தில் கே.பி.கே.ஜெயகுமார்

இது குறித்து நம்மிடம் பேசிய ராதாபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு, ‘‘2009-ம் ஆண்டு தமிழகத்திலேயே முதல் நதிநீர் இணைப்புத் திட்டமாக தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தை 369 கோடி மதிப்பீட்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் அறிவித்தார். தி.மு.க ஆட்சியில் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, திட்டத்தைக் கிடப்பில் போட்டது. தி.மு.க தரப்பில் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக, இந்தத் திட்டத்துக்கு அ.தி.மு.க அரசு நிதி ஒதுக்கி மீண்டும் பணிகளைத் தொடங்கியது. ஆனால், புதிதாகக் கால்வாய் வெட்டாமல், ஏற்கெனவே கால்வாய் வெட்டப்பட்ட இடத்தில் மண் மூடியிருப்பதை அகற்றுவதாகச் சொல்லி பணத்தைச் சுருட்டினார்கள். நாங்கள் நீதிமன்றம் சென்றதால், புதிதாகக் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும், பணிகளில் சுணக்கம் காட்டுகிறார்கள். திட்டம் முடிக்கப்பட்டிருந்தால், இந்த ஆண்டு பெய்த கனமழையில் 40 முதல் 50 டி.எம்.சி வரை தண்ணீரைச் சேகரித்திருக்கலாம்’’ என்று படபடத்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளரான ரூபி மனோகரன், ‘‘நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகா ஆகியவை வறட்சிப் பிரதேசங்கள். புயல் காலங்களில் மட்டுமே இந்தப் பகுதிகளில் மழை பெய்யும். குடிநீருக்குக்கூட மக்கள் திண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு பெய்த கனமழையில்கூட நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் நிறைய குளங்கள் நிரம்பவில்லை. நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றினால்தான், இந்தப் பகுதிகள் பலனடையும்’’ என்றார்.

தம்பி டீ இன்னும் வரல! - தாமிரபரணி உபரிநீர்... உபயோகப்படப்போவது எப்போது?

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கே.பி.கே.ஜெயகுமார், ‘‘இந்தத் திட்டத்துக்காக நான்குவழிச் சாலை மற்றும் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிகளில் பாலம்கட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை’’ என்றவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரையிடம் கேட்டோம். ‘‘கடந்த 2003-ம் ஆண்டு சாத்தான்குளம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, இங்கு வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் எண்ணத்தில் உதயமான திட்டம்தான் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம். அதனால், தேர்தல் பிரசாரத்தின்போது நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார். அ.தி.மு.க ஆட்சி முடிந்து தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், தாங்களே இதைச் செயல்படுத்துவதுபோல 100 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கினார்கள்.

அப்பாவு - ரூபி மனோகரன் - இன்பதுரை
அப்பாவு - ரூபி மனோகரன் - இன்பதுரை

இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மத்தியில் கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்தபோதிலும், உரிய அனுமதி பெறாமலேயே 2009-ல் திட்டத்தைத் தொடங்கியதாலும் சில சிக்கல்கள் ஏற்பட்டன. மீண்டும் அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு, அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் துறையின் அமைச்சராக இருந்த உமாபாரதி 2013-ல் திட்ட அனுமதி கொடுத்தார்.

அதன் பிறகு மறுமதிப்பீடு செய்யப்பட்டு திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 598 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் முடிவடைந் திருக்கின்றன. இறுதிக்கட்டப் பணிகளையும் தொடங்கி விட்டோம். இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் எதிர்க்கட்சியினர் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது’’ என்றார்.

‘‘இந்தத் திட்டத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் சுமார் 55,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், இரு மாவட்டங்களிலும் 252 குளங்களில் தண்ணீர் நிறையும். அதனால், திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும்’’ என்று ஏக்கத்தோடு பேசுகிறார்கள் விவசாயிகள்.

தம்பி டீ இன்னும் வரல! - தாமிரபரணி உபரிநீர்... உபயோகப்படப்போவது எப்போது?

‘கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் மத்திய ஜல்சக்திதுறை மேற்கொள்ள வேண்டும்’ என்று டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியிடம் மனு கொடுக்கிறார் முதல்வர் பழனிசாமி. ஆனால், தனது கட்டுப்பாட்டிலிருக்கும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை இழுத்தடிக்கிறார். உங்கள் அரசியலைக் குப்பையில் தூக்கியெறியுங்கள்... விவசாயிகளின் நலன் காக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுங்கள் ஆட்சியாளர்களே!