கொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்? #DoubtofCommonMan

அடிப்படை உதவிகள் தேவைப்படும் மக்கள் யாரை அணுக வேண்டும்?
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகி கார்த்தியாயினி காயத்ரி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். ``கொரோனா தொற்று தீவிரமாகப் பரவிவரும் நேரத்தில், அடிப்படை உதவிகள் தேவைப்படும் மக்கள் யாரை அணுக வேண்டும்? அரசு சார்ந்த உதவிகள் மக்களை சரியாகச் சென்றடைகின்றனவா... உதவி கிடைக்கப் பெறாதவர்களின் நிலை என்ன?" என்பதே அவருடைய கேள்வி. அந்தக் கேள்வியை அடிப்படையாகக்கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
மாதக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் இந்த ஊரடங்கின் காரணமாக, சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கால், கூலித் தொழிலுக்குச் சென்று வயிற்றைக் கழுவும் அன்றாடங்காய்ச்சிகளின் நிலைமை பரிதவிப்பில் உள்ளது. பிழைக்க வந்த இடத்தில், போதிய வருமானமின்றி பசியால் தவிக்கின்றனர் தொழிலாளர்கள். மூட்டை முடிச்சுகளைச் சுமந்துகொண்டு குழந்தைகளோடு சொந்த ஊருக்கு நெடும் பயணம் மேற்கொள்ளும் அவர்களின் சித்திரம், காலத்தின் துயர சாட்சியமாக நினைவில் நிற்பவை.
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை நடைமுறைப் படுத்திவந்தாலும், அந்தத் திட்டங்கள் மட்டுமே போதுமா என்றால் கேள்விக்குறிதான். சென்னை மழை வெள்ளம், கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போதும் இதுபோல வாழ்வாதார சிக்கல் தலைவிரித்தாடியது. அப்போது, அரசு மட்டுமின்றி பல தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி மக்கள் துயர் துடைத்தனர். கொரோனா காலத்திலும் இப்படியான தன்னார்வலர்கள் பலர் மக்களுக்கு உதவ முன்வந்தனர். ஆனால், தொற்று நோய் பரவ வாய்ப்புள்ள காரணத்தாலும், ஊரடங்கு உத்தரவாலும் உதவ முன்வரும் தன்னார்வலர்கள், அரசிடம் அனுமதி பெற்றபின்பே உதவ வேண்டும் என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வாசகியின் கேள்விக்கு பதில் காண, திருவள்ளூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ரசூலிடம் பேசினோம்.
``கொரோனா வைரஸ் தொற்று என்பது, எல்லோருக்கும் புதிது. அதன் போக்கைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டியிருக்கிறது. ஒரே தீர்வு ஊரடங்குதான் என்றான சூழலில், மக்கள் சிரமப்படாமல் இருக்க நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். என்ன சிக்கல் என்றால், தேவை அனைவருக்கும் பொதுவானது. அப்படியிருக்க, தேவை உள்ளோர் உண்மையிலேயே யார் என்பதை இங்கு நாம் அடையாளம் காண்பது கடினம். இந்த கடினமான வேலையைத்தான் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு, அடையாளம் கண்டு உதவிவருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், அரசாங்கம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர்களை அடையாளம் கண்டு, தனியாக பட்டியலிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து உதவிகளையும் சலுகைகளையும் வழங்கிவருகிறது. அதேபோல் தமிழ்நாடு, உலக அளவில் பொது விநியோகத் திட்டத்தின் முன்னோடியாக இருந்துவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்கள், பின்தங்கியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் குடும்ப அட்டைகளின் மூலம் அனைத்து சலுகைகளையும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக, பேரிடர் காலங்களில் அரசு அறிவிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் தகுதியானவர்களே. அதேபோல், தமிழ்நாட்டில் குடும்ப அட்டை இல்லாதவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. பெரும்பாலும் நாடோடிகள் மற்றும் பழங்குடிகள் போன்றவர்களுக்குத்தான் குடும்ப அட்டைகள் இல்லாமல் இருந்தது. தற்போது, அவர்களுக்கும் மாவட்ட அதிகாரிகள் மூலமாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
ரேஷன் கார்டு இல்லாமல் மிகவும் வறுமையில் தவிப்பவர்கள், யாரிடம் சென்று உதவி கோருவது எனக் குழம்ப வேண்டாம். நேரடியாக அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்களை அணுகி உதவி கோரலாம்.ரசூல், திருவள்ளூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்
இப்படி இருக்க, தேவை உள்ளோர் யார் என்பதை இங்கு அடையாளம் காண்பதுதான் கடினம். ரேஷன் கார்டு இல்லாமல் மிகவும் வறுமையில் தவிப்பவர்கள், யாரிடம் சென்று உதவி கோருவது எனக் குழம்ப வேண்டாம். நேரடியாக அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்களை அணுகி உதவி கோரலாம். அவர்கள் தேவையான உதவிகளை உடனே செய்து தருவார்கள். உதவிகள் பெறுவதற்கு விதிமுறைகள் ஏதும் கிடையாது. வட்டாட்சியர்களிடம் பேசினாலே போதுமானது. அங்கு நடக்காத பட்சத்தில் ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். வட்டாட்சியரை அணுக முடியாதவர்கள், அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகலாம்.

நாட்டில் நோய் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தன்னார்வலர்கள் பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிவருகின்றனர். அவர்களின் பணி பாராட்டத்தக்கதே என்றாலும், அவர்களின் பாதுகாப்பையும் நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதனால்தான், மாவட்ட ஆட்சியர்களின் மூலமாக உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஏழை எளியோருக்கு இந்த நேரத்தில் உதவிட நினைக்கும் தன்னார்வலர்கள், மாவட்ட ஆட்சியர்களிடத்தில் முறையாகக் கூறி அனுமதிபெற்று, உதவி பெறலாம்.

பல தன்னார்வலர்கள், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கிவிட்டுச் செல்கின்றனர். பின்னர், தேவையுள்ள மக்களை அடையாளம் கண்டு, மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தின் வட்டாட்சியர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களைக் கொண்டு மக்களுக்கு உதவி செய்துவருகின்றனர். தன்னார்வலர்களால் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள், முறையாக மக்களைச் சென்றடைந்துகொண்டுதான் இருக்கின்றன'' என்றார்.
