Published:Updated:

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு...

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு

ஏன்... எதற்கு... எப்படி?

வருமான வரிச் சட்டப்படி பான் கார்டு இல்லாமல் 18 விதமான நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது!

தார் கார்டு எண்ணை (Aadhaar Card Number) பான் கார்டு எண்ணுடன் (PAN Card Number) இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதார் கார்டை பான் கார்டுடன் ஏன் இணைக்க வேண்டும், அப்படி இணைக்காவிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்.

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏன் இணைக்க வேண்டும்?

2020 ஜனவரி 27 நிலவரப்படி, 30.75 கோடி பான் கார்டுகள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் 17.58 கோடி பான் கார்டுகள் ஆதார் கார்டுடன் இணைக்கப்படாமல் உள்ளன.பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைப்பதன் மூலம் ஒரு நபரின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை (வருமானம், செலவுகள் மற்றும் முதலீடுகள்) அரசாங்கம் கண்காணிக்க முடியும்; அதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் முடியும். அதேபோல், ஒருவர் பல பான் கார்டுகளை வைத்திருந்தால் அதைக் கண்டுபிடிக்கவும் இந்த இணைப்பு உதவும். சில மோசடிப் பேர்வழிகள் ஒரே பெயரில் பல பான் கார்டுகளை வைத்திருந்து, அவற்றின் மூலம் நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரி ஏய்ப்பு செய்கின்றனர்.

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு...

தவிர, சிலர் ஒரு வங்கியில் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவதுடன், வேறு பான் கார்டுகளைத் தந்து வேறு சில வங்கிகளில் கடன் வாங்கி அதையும் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். வருமான வரிச் சட்டத்தின்படி ஒருவர் ஒரே ஒரு பான் கார்டு எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை மீறினால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு, வருமானவரித் துறையினரால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஒருவர் தவறுதலாக இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தாலும், அவற்றில் ஒன்றை வருமான வரித் துறையிடம் சமர்ப்பித்து, அதைச் செயலற்றதாக ஆக்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுவரை இணைக்காதவர்கள்..?

சிலர் இதுவரை ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்காமலிருந்தாலும், வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணைக் குறிப்பிட்டி ருப்பார் கள். ஆனால், இனிமேல் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைக்காமல் ஒருவ ரால் வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்ய இயலாது.

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு
ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு

பின்வரும் நான்கு இனங்களுக்கு மட்டும் ஆதார் எண்ணைக் குறிப்பிடாமல், வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய விலக்கு அளிக்கப் பட்டிருக் கிறது.

1. வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) 2. அஸ்ஸாம், மேகாலயா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் குடியிருப்பவர்கள் 3. இந்தியக் குடிமகன் அல்லாதோர் 4. 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்கள்.

பான் கார்டிலுள்ள உங்கள் பெயரும், ஆதார் கார்டிலுள்ள பெயரும் வேறு வேறாக இருந்தால், ஆதார் கார்டிலுள்ள பெயரைச் சரிசெய்த பிறகுதான் பான் கார்டுடன் இணைக்க முடியும்!
ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு
ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு

எவ்வாறு இணைப்பது?

பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பது எளிது. இதற்கு, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng என்ற வலைதள முகவரிக்குச் செல்லுங்கள்.

அதில் கேட்கப்பட்டுள்ள பான் எண், ஆதார் எண் ஆகியவற்றுடன், ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பெயரைக் குறிப்பிடவும். ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் குறிப்பிட்டிருந்தால் சதுர வடிவக் கட்டத்தில் ‘டிக்’ அடித்துக்கொள்ளவும். பிறகு ‘கேப்ட்சா’ (Captcha) எண்ணைக் குறிப்பிட்டு சப்மிட் செய்தால் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்வதற்குத் ஒருவர் வருமான வரித் துறை வலைதள முகவரியில் எந்தவித மெயில் கணக்கையும் புதிதாக உருவாக்கிக்கொள்ளத் தேவையில்லை. ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் குறிப்பிட்டால் போதும். வேறு எந்த ஆவணத்தையும் இணைக்க வேண்டியதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படித் தெரிந்துகொள்வது?

ஆதார் எண், பான் எண்ணுடன் இணைந்துவிட்டதா என்பதை https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற வலைதள முகவரிக்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். `எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கும் வசதி இருக்கிறது’ என்று கூறப்பட்டாலும், அதைப் பற்றிய விவரம் எதுவும் வருமான வரித்துறை வலைதளத்தில் குறிப்பிடப்படவில்லை.

யாரெல்லாம் இணைக்க வேண்டும்?

1. ஒருவர் பான் எண்ணும், ஆதார் எண்ணும் வைத்திருந்து இதுவரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தாலும் இணைக்க வேண்டும் 2. ஒருவரின் வருமானம், வருமான வரி விலக்குக்கு உட்பட்டிருந்து, அவர் எந்தவித வருமான வரியும் செலுத்தத் தேவையில்லை என்றாலும் இணைக்க வேண்டும் 3. ஒருவர் பான் எண்ணும், ஆதார் எண்ணும் வைத்திருந்து, கடந்த சில வருடங்களாக வருமான வரித் தாக்கல் செய்யாமலிருந்தாலும் இணைக்க வேண்டும் 4. ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துவிட்டு, இப்போது தாக்கல் செய்யாமலிருந்தாலும் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைக்க வேண்டும்

5. ஒருவரின் வரி அனைத்தும் மாதச் சம்பளத்திலேயே பிடித்தம் செய்யப்பட்டு விட்டாலும், அவரும் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைக்க வேண்டும்.

பான் கார்டில் பெயரைச் சரிசெய்ய...

ஒரு முறை பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டால், அதை மீண்டும் மாற்றும் வசதி இல்லை. பான் கார்டிலுள்ள உங்கள் பெயரும், ஆதார் கார்டிலுள்ள உங்கள் பெயரும் வேறு வேறாக மாறியிருந்தால், ஆதார் கார்டிலுள்ள பெயரைச் சரிசெய்த பிறகுதான் பான் கார்டுடன் இணைக்க முடியும். இதற்கு https://www.incometaxindiaefiling.gov.in/updatePanAadhaar?lang=eng என்ற வலைதள முகவரிக்குச் சென்று ஆதார் கார்டில் பெயர் மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

இணைக்காமல்விட்டால் என்ன ஆகும்?

ஒருவர் ஆதார் கார்டையும், பான் கார்டையும் 2020 மார்ச் 31-க்குள் இணைக்காமல் விட்டுவிட்டால், அவரின் பான் எண்ணை வருமான வரித்துறை செயலிழக்கச் செய்துவிடும் (Deactivate). எப்போது அவர் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கிறாரோ அப்போதுதான் அவரின் பான் எண் செயல்படுத்தப்படும் (Activate). இதற்கான வழிமுறைகள் வருமான வரிச் சட்டத்தில் விதி எண் 113AAA-ல் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

இணைக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்காமல்விட்டால், பான் எண் செயலிழக்கும் அபாயமுண்டு. அதாவது, இணைக்கப்படாத பான் எண் இனி இயங்காமல் போய்விடும். அந்த நிலை ஏற்பட்டால், ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் வரிப் பிடித்தம் செய்யும்போது (TDS), அதிக சதவிகிதத்துக்கு வரிப் பிடித்தம் செய்யப்படும். உதாரணமாக, வங்கியில் வைத்திருக்கும் வைப்பு நிதிக்கு இந்த 2019-20-ம் நிதியாண்டில் ஒருவருக்கு ரூ.40,000-க்கும் அதிகமான வட்டி வருமானம் இருந்தால், அவரிடம் செயல்பாட்டிலுள்ள பான் எண் இருந்தால் 10% வரிப் பிடித்தம் செய்யப்படும்; பான் எண் இல்லாமலிருந்தால் 20% வரிப் பிடித்தம் செய்யப்படும். மேலும், வருமான வரிச் சட்டப்படி பான் கார்டு இல்லாமல் 18 விதமான நிதி சார்ந்த நடவடிக்கைகளையும் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. அவற்றில் குறிப்பிடத்தகுந்த சில அம்சங்கள்...

1. மோட்டார் வாகனம் வாங்க, விற்க

2. வங்கியில் புதிய கணக்கு தொடங்க

3. வங்கியில் கிரெடிட் கார்டு வாங்க 4. டீமேட் கணக்கு தொடங்க 5. ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் பில் தொகை ரூ.50,000-க்கு மேல் பணமாகச் (Cash Payment) செலுத்த

6. வங்கியில் ரூ.50,000-க்கு மேல் பணம் டெபாசிட் செய்ய 7. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.50,000-க்குமேல் முதலீடு செய்ய 8. ஆயுள் காப்பீடு பிரீமியம் தொகை ஒரு நிதியாண்டில் ரூ.50,000-க்கு மேல் செலுத்த 9. அசையாச் சொத்துகள் பத்திரப்பதிவு அடிப்படையில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வாங்க, விற்க 10. எந்தவிதமான சரக்கு வாங்கும்போதும், விற்கும்போதும், சேவை பெறும்போதும், தரும்போதும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனை செய்ய. இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள https://www.incometaxindia.gov.in/Pages/rules/income-tax-rules-1962.aspx என்ற வலைதள முகவரிக்குச் செல்லவும்.

`மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு செயலிழக்கப்படும் பான் எண் விவரங்களைச் சரிபார்க்கும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்’ என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். ஆனாலும் நாம் தரும் பான் எண் செயல்பாட்டில் இருக்கிறதா, இல்லையா என்பதை வங்கி அதிகாரிகளும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகிப்பவர்களும் ஆன்லைனில் பார்க்க முடியும். ஆகவே, வருமான வரித்துறை பான் எண்ணைச் செயலிழக்கச் செய்தால், அந்த எண்ணைப் பயன்படுத்தி நாம் நிதிப் பரிவர்த்தனை செய்ய முடியாது.

பான் எண்ணுக்கு மாற்றாக ஃபார்ம் 60 தரலாம் என்றாலும், அதை ஒவ்வொரு நிதிப் பரிவர்த்தனையின்போதும் பூர்த்திசெய்து தர வேண்டியிருக்கும். ஆகவே, நம்மிடமுள்ள பான் எண்ணைச் செயலாக்கத்தில் வைத்துக்கொள்வது அவசியம். சுருக்கமாக, யார் யாரெல்லாம் பான் கார்டும் ஆதார் கார்டும் வைத்திருக்கிறார்களோ, அவர்களெல்லாம் இந்த இரண்டையும் இணைக்க வேண்டும். அதுவும் வரும் 31-ம் தேதிக்குள். சிக்கலில் மாட்டாமலிருக்க, இதைச் செய்துவிடுவது நல்லது!