Published:Updated:

புத்தம் புது காலை : தாஜ்மஹாலை விட தாராவியை சுற்றிப்பார்க்க வெளிநாட்டினர் விரும்புவது ஏன்?

தாராவி - ஸ்லம் டூரிஸம்
தாராவி - ஸ்லம் டூரிஸம்

இந்தக் கோவிட் பெருந்தொற்றில் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வெற்றிகொண்டு ‘தாராவி மாடல்’ என்று உலகளவில் பெயரைப் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 4-ம் தேதியன்று ஒரு புதிய கோவிட் தொற்று கூட இல்லாமல் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது தாராவி.

கொரோனா முடிந்து மறுபடியும் பயணங்கள் மேற்கொள்ளலாம் என்று சொன்னால் வெளிநாட்டவர் இந்தியாவில் வர விரும்பும் சுற்றுலா தளம் எதுவாக இருக்கும்? தாஜ்மஹால், லடாக், லோனாவாலா, ஊட்டி... இப்படி ஏதாவது ஒன்றாக இருக்கும் என்றுதானே நினைப்போம். ஆனால், பலரும் கற்பனை செய்யாத ஒரு இடத்தைத்தான் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் தேர்வு செய்கிறார்கள்.

ஆம்… ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவிதான், சுற்றுலாவாசிகளால் அதிகம் விரும்பப்படும் இந்தியாவின் முக்கிய சுற்றுலா பகுதியாக இருக்கிறது.

தாராவி!

முற்றிலும் வேறுபட்ட இருவேறு முகங்கள் கொண்ட நகரமாகவே எப்போதும் காணப்படுகிறது மும்பை மாநகரம். வானுயர் கட்டடங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அதிசயிக்கும் தொழில்நுட்பங்கள், பாலிவுட், பங்கு வர்த்தகம் என உச்சபட்ச வளர்ச்சியில் திளைக்கும் மும்பையின் தனித்த அடையாளம் தாராவி. இந்த மாநகரின் கழிவுகள் அனைத்தையும் தாங்கியபடி சேறும், சகதியும், சாக்கடையும் நிரம்பியோட, அதிலேயே வெறும் நூறு சதுரடியில் தகரக் கூரைகளுடன் கூடிய ஆயிரக்கணக்கான மிகச்சிறிய வீடுகளில் மக்கள் வசிக்கும் பகுதிதான் இந்த தாராவி.

தாராவி
தாராவி

மும்பையின் மையப்பகுதியில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த தாராவி என்பது வெறும் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய இடம் தான். ஆரம்பத்தில் மித்தி நதிக்கரையில் 'கோலிவாடா' என்ற பெயரில் ஒரு சிறிய சதுப்புநிலத் தீவாக, 'கோலி' என்ற மீனவ மக்கள் மட்டும் மீன்பிடித்து வாழ்ந்துவந்த இடமாகத்தான் தாராவி இருந்தது. பின்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் அங்கு ஆரம்பித்த நெசவுத்தொழிலில் தொடங்கி, தோல் பதனிடல், மண்பாண்டங்கள் தயாரிப்பு என விரிவடைந்து, நாடெங்கிலும் இருந்து ஏழை மக்கள் தங்களது பிழைப்பிற்காக தாராவிக்கு குடிபெயர்ந்து, சிறுசிறு டென்ட்டுகள் மற்றும் குடிசைகள் போட்டு அங்கு தங்க ஆரம்பித்தனர். நெரிசல் மிகுந்த அந்த சிறிய இடத்தில் ஏழ்மையும் விளையாட, உலகின் மூன்றாவது பெரிய குடிசைப்பகுதி(Slum) மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக இருக்கிறது தாராவி.

தாதாக்கள் நிறைந்த இடம், வன்முறைகள் நிறைந்த இடம் என பல திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் தாராவியில், உண்மையில் அப்பாவித் தமிழர்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள். மும்பை போனாலும் மாறாத தமது தமிழ் குணத்தால் இங்கும் சாதிகளாகப் பிரிந்து வாழும் இவர்கள், தங்களுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். ‘’எங்க அப்பாக்கள், தாத்தாக்கள் எல்லாம் இங்க வருஷம் முழுக்க கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கிற பணத்தை, திருவிழான்னு வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்குப் போய் செலவு பண்ணிடுவாங்க... கொரோனாவுல அது கொஞ்சம் குறைஞ்சிருக்கு’’ என்று புன்னகைக்கிறார்கள் தாராவியின் மில்லினியம் தலைமுறை இளைஞர்கள்.

தாராவி
தாராவி

தாராவியில் வாழும் தமிழர்களுடன் தெலுங்கர்களும், மண்ணின் மக்களாகிய மராட்டியர்களும் சேர்ந்து, தங்களது கடின உழைப்பால், தோல் பதனிடல், மண்பாண்ட வேலைப்பாடுகள் மட்டுமன்றி, உணவு தயாரிப்பு, தையல் மற்றும் எம்பிராய்டரி, பிளாஸ்டிக் ரீசைக்கிளிங் போன்ற நூற்றுக்கணக்கான தொழில்களை செய்துவருகிறார்கள். இச் சிறு குறு தொழில்கள் அனைத்தும் தாராவியில் உள்ள ஏழாயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மற்றும் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான ஒற்றை அறை ஃபேக்டரிகளில் மேற்கொள்ளப்படுகிறது என்பதுதான் தனிச்சிறப்பு.

இங்கு தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை மற்றும் ஏற்றுமதி மூலமாக வருடத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது ஐயாயிரம் கோடி ரூபாய் வருமானத்தை இந்த மிகச்சிறிய இடம் ஈட்டுகிறது என்கிறார்கள்.

இது இப்படியிருக்க 'தாராவி ஸ்லம் டூரிஸம்' என்பது எப்படி ஆரம்பித்தது, ஏன் அதை வெளிநாட்டவர்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்கிற கேள்விகளுக்கு ‘ரியாலிட்டி டூரிஸம்’ தான் காரணம் என்று சொல்லலாம். மேற்கத்திய நாடுகளில் விளிம்புநிலை மக்களிடம் நேரடியாகச் செல்லும் இந்த ரியாலிட்டி டூரிஸம் என்ற உண்மைநிலை சுற்றுலாக்கள், சமீப வருடங்களில் ஒரு கலாச்சாரமாகவே மாறி, தாராவி மட்டுமின்றி, உலகெங்கும் பரவியிருக்கிறது. ரியோ டி ஜெனிரோ, ஜோகானஸ்பர்க், மணிலா, தாராவி என ரியாலிட்டி டூரிஸம் இங்கெல்லாம் உச்சத்தில் இருக்கிறது.

தாராவி
தாராவி

பல வருடங்களுக்கு முன், கிருஷ்ண பூஜாரி என்ற பதிமூன்று வயது தாராவி பள்ளிச் சிறுவனை, ஆங்கிலத்தில் சில சந்தேகங்கள் கேட்பதற்காக ஒரு இரவுநேரத்தில் சந்தித்த கிறிஸ்-வே என்ற ஆங்கிலேயருக்கு தட்டிய பொறிதான் எல்லாவற்றுக்கும் விதை. சில வருடங்கள் கழித்து அவர்கள் பூஜாரி மற்றூம் கிறிஸ்-வே என்கிற இருவரின் கூட்டுமுயற்சியாக ரியாலிட்டி டூரிஸம் பகுதியாக உருவெடுத்தது தாராவி. இதனைத்தொடர்ந்து ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் ஆஸ்கார் விருதுகளைக் குவிக்க தாராவி உலக கவனம் பெற்றது.

இப்போது தாஜ்மஹாலைக் காட்டிலும் அதிக சுற்றுலா வருமானத்தை ஈட்டும் இடமாகிவிட்டது தாராவி. ஆனால், Poverty Porn என வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வதுடன் அதை ரசிப்பது, அதைப் பற்றி விமர்சித்து எழுதுவது, ஆவணப் படமாகத் தயாரிப்பது என ஆழ்மனது ஆசைகளைத் தீர்த்துக் கொள்ள உதவும் நெறிமுறையற்ற மனித இயல்பாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த ரியாலிட்டி டூரிஸத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி இல்லை என்றும், இந்த டூரிஸம் ஈட்டித்தரும் வருமானத்தில் பெரும்பங்கை (80%) தாராவி மக்களின் நலனுக்காக வழங்குகிறோம் என்றும் இந்த ஸ்லம் டூரிஸத்தை நியாயப்படுத்துகிறது ரியாலிட்டி டூரிஸம் அமைப்பு.

தாராவியில் உண்மையில் பெரும் பிரச்னைகளாக இருப்பது திறந்தவெளி கழிவறைகள், சுகாதாரமற்ற குடிநீர், நீர் மாசு மற்றும் காற்று மாசு, அத்துடன் மக்கள் தொகை நெரிசலால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஆகியவைதான். அதனாலேயே பிளேக் நோய் தொடங்கி, காலரா, டைஃபாய்ட், காசநோய் சமீபத்திய கோவிட் என அனைத்து நோய்களுக்கும் தாராவி வாழ்விடமாக இருக்கிறது. அரைக்கால் சட்டை போட்டுக்கொண்டு தினசரி வரும் ஆயிரம் டூரிஸ்ட்டுகளை விட வருடம் ஐந்தாறு அரசியல்வாதிகள் வந்து போனாலே தங்கள் வாழ்வு முன்னேறிவிடும் என்கிறார்கள் தாராவி மக்கள்.

ஆனால், இவ்வளவு பிரச்னைகளையும் எதிர்கொண்டு, அதிலும் இந்தக் கோவிட் பெருந்தொற்றில் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வெற்றிகொண்டு ‘தாராவி மாடல்’ என்று உலகளவில் பெயரைப் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 4-ம் தேதியன்று ஒரு புதிய கோவிட் தொற்று கூட இல்லாமல் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது தாராவி.

தாராவி
தாராவி

தங்களது வாழ்விடம் எவ்வளவு மோசமாக இருக்கும் போதிலும், தங்களது முயற்சியில் நன்கு படித்து பட்டம் பெற்ற அடுத்த தலைமுறை இளைஞர்கள், தாராவியை விட்டுப் போகாமல் அந்த மண்ணை முன்னேற்றப் பாடுபடுவோம் என்று அங்கேயே நிற்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தாஜ்மஹாலை டூரிஸத்தில் விஞ்சி இருப்பது பெருமையில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதுடன், மிக விரைவில் இந்த நிலைமையை அவர்கள் மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் நமக்களிக்கின்றனர்!

‘’மனித இனம் அதிகபட்ச யதார்த்தை எதிர்கொள்ள முடியாது’’ (Human kind cannot bear very much reality) என்ற எலியட்டின் வரிகளை உண்மையாக்கி, "இது வழக்கமான ஸ்லம் அல்ல" என்பதை விரைவில் அனைவருக்கும் புரிய வைத்துவிடும் தாராவி!

#ஸ்லம்_டூரிஸம்

அடுத்த கட்டுரைக்கு