Published:Updated:

இ.ஐ.ஏ 2020 எதிர்க்கப்படுவது ஏன்?

“இ.ஐ.ஏ 2020 பற்றி விவாதிப்பதற்கு முன்பாக, போபால் விஷவாயுக் கசிவு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பாதிப்புகள், பொருளாதார வீழ்ச்சி, புலம்பெயர் தொழிலாளர் பிரச்னைகள்... என ஏராளமான பிரச்னைகளில் இந்திய தேசம் சிக்கிக்கிடக்கிறது.

இந்தநிலையில், ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA - Environment Impact Assessment) 2020’ விவகாரம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

“இ.ஐ.ஏ 2020 பற்றி விவாதிப்பதற்கு முன்பாக, போபால் விஷவாயுக் கசிவு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். போபாலில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்துவந்த ‘யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்’ தொழிற் சாலையிலிருந்து 1984-ம் ஆண்டு விஷவாயு கசிந்து, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அந்தப் பகுதி மக்கள் சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு போன்ற கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். உரிய பாதுகாப்பு விதிமுறைகளின்றி தொழிற் சாலையைச் செயல்பட அனுமதித்தது தான் அத்தனைக்கும் காரணம். போபால் விபத்துக்குப் பிறகுதான், `அபாயகரமான தொழிற்சாலைகளிட மிருந்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்’ என்று சட்டரீதியான சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

இ.ஐ.ஏ
இ.ஐ.ஏ

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 1986 உருவாக்கப்பட்டது. அதன் ஓர் அம்சமாக, ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு’ என்கிற சட்ட நடைமுறையை 1994-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. வளர்ச்சித் திட்டங் களால் ஒரு நாட்டின் சுற்றுச்சூழலும் வளங்களும் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம். தற்போது, சூழலியல் தாக்க மதிப்பீடு – 2006 நடைமுறையில் உள்ளது. சுற்றுச்சூழலில் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, அவற்றைத் தடுப்பது, குறைப்பது, ஒழுங்குபடுத்துவது என்பதுதான் இதன் நோக்கம். இது மக்கள் கருத்து, வல்லுநர்கள் அறிக்கை, ஆய்வுகள் எனப் பல வழிமுறைகளை உள்ளடக்கியது. இதைக் காலிசெய்யத்தான் இ.ஐ.ஏ 2020-ஐ மத்திய அரசு கொண்டுவருகிறது என்பது இப்போதைய குற்றச்சாட்டு.

மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் கடந்த மார்ச் 23-ம் தேதி இ.ஐ.ஏ 2020 சட்ட வரைவு வெளியிடப்பட்டது. இதில் பொதுமக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகளிலிருந்து பல திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்குதல், உள்நாட்டு நீர்த்தடங்கள், நீர்ப்பாசன நவீனமயமாக்கல், அனைத்துவிதமான கட்டுமான திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் போன்ற நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் தொடர்பான திட்டங்களை ‘ஸ்ட்ராட்டஜிக்’ (Strategic) திட்டங்கள் என்று குறிப்பிடுவார்கள். அப்படியான திட்டங்கள் பற்றிய விவரங்களை எந்தப் பொதுத்தளத்திலும் வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது. மருந்து நிறுவனங்களை அனுமதிப்பதற்காக இப்படி ‘ஸ்ட்ராட்டஜிக்’ திட்டங்களை வகுப்பதற்கான முகாந்திரங்களும் இ.ஐ.ஏ 2020-ல் இடம்பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இ.ஐ.ஏ 2020 எதிர்க்கப்படுவது ஏன்?

‘ஒவ்வொரு நிறுவனமும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தனது செயல்பாடுகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்’ என்பதுதான் தற்போதுள்ள விதிமுறை. ஆனால், இ.ஐ.ஏ 2020-ல் ‘ஆண்டுக்கு ஒரு முறை சமர்ப்பித்தால் போதும்’ என்று திருத்தப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நிறுவனங்களால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகளை இனிமேல் மக்களால் புகார் அளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆகியோரால் மட்டுமே புகார் அளிக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிதாக வரும் திட்டம் அல்லது தொழிற்சாலை தொடர்பாக பொது மக்களின் கருத்துகளைக் கேட்பதற்கு 60 நாள்களாக இருந்த அவகாசம், 40 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு இருந்த அவகாசம் 30 நாள்களிலிருந்து 20 நாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளன” என்கிறார்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்.

`இ.ஐ.ஏ 2020 குறித்து ஆகஸ்ட் 11-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக் கலாம்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இது கொரோனா பெருந்தொற்று காலமாக இருக்கிறது; அதோடு இந்த வரைவானது மாநில மொழிகளில் வெளியிடப்படவில்லை. அதனால், பெரும்பாலான மக்களை இது சென்றடையாது. இ.ஐ.ஏ 2020 வரைவு குறித்து விமர்சனபூர்வமாகக் கேள்வி எழுப்பிய மூன்று சுற்றுச்சூழல் அமைப்புகளின் (There is No Earth B, Let India Breathe, Fridays for future) இணையதளங்கள் முடக்கப்பட்டன. `சட்ட வரைவு குறித்துக் கருத்து தெரிவித்ததற்காக இணையதளங்களை முடக்குவது ஏன்?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இன்னொருபுறம், இந்தியாவில் தொழில் வாய்ப்புகளைப் பெருக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அதன் ஒரு பகுதியாகத்தான் இ.ஐ.ஏ 2020 கொண்டுவரப்படுகிறது என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இ.ஐ.ஏ 2006-ல் இடம்பெற்றுள்ள அம்சங்களிலிருந்து சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும், அவையும்கூட பாசிட்டிவ்வான மாற்றங்கள்தான் என்றும் ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் கூறிவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு