Published:Updated:

புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்!

சிரிக்கும் புத்தா
சிரிக்கும் புத்தா

சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தனர். எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லும் அவர்கள், ஒரு ஊருக்குச் சென்றால், அந்த ஊரின் மையப்பகுதியில் நின்று வயிறுகுலுங்கச் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

நம்ம ஊர் கணபதியைப் போலவே தொந்தியும் தொப்பையுமாக, அத்துடன் சிரித்தபடி இருக்கும் சீனர்களின் 'Laughing Buddha' சிலைகளை, நம் ஊர் கடைகளிலும், வீடுகளிலும், அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால், அவர்கள் ஏன் உம்முனு, கம்முனு இல்லாமல் எப்போதும் ஜம்முன்னு சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோமா?


"பூடேய்" (Budaei) என்று சீன மொழியிலும், ஹோட்டேய் (Hotei) என்று ஜப்பானிய மொழியிலும் அழைக்கப்படும் இந்த சிரிக்கும் புத்தர், பௌத்த மற்றும் டாவோ சமயங்களில் மிக முக்கியப் பங்கினை வகிக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்தரைப் போலவே ஒருவர் வாழ்ந்திருந்தார் என்பது சீனத்தில் நிலவும் நம்பிக்கை. கௌதம புத்தர் போலவே தங்களது மண்ணில் அவதரித்தவர் தான் பூடேய் என்று கூறும் சீன வரலாறு, புத்தரின் பத்து அவதாரங்களில் ஒன்றாக இந்த சிரிக்கும் புத்தரைக் குறிப்பிடுகிறது. புத்தரின் மற்றுமொரு பிறப்பு என்று சீன வரலாற்றில் கூறப்பட்டாலும், உண்மையில் இந்த சிரிக்கும் புத்தரை யாரும் வழிபடுவதில்லை.

ஆனால், பெரிய வயிறும், சிரித்த முகமும், மிகுந்த கருணையும், தயாள குணமும் கொண்ட இந்த பூடேய் என்ற சிரிக்கும் புத்தரின் தோளில் ஒரு பெரிய சாக்குப்பை இருக்கிறது. இதில் நிறைய உணவும், இனிப்புகளும் எடுத்துச்சென்று குழந்தைகளையும், வறுமையில் வாடியோர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியதால், அனைவருக்கும் மிகவும் பிரியமானவராகவும், அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியவராகவும் இவர் பார்க்கப்படுகிறார்.

சிரிக்கும் புத்தர்
சிரிக்கும் புத்தர்

அதனால்தான் இந்த சிரிக்கும் புத்தரை, அதிர்ஷ்டக் கடவுளர்கள் எழுவரில் முக்கியமான ஒருவராக டாவோ மற்றும் ஜப்பானிய ஷிண்ட்டோ மதங்கள் கருதுகின்றன. இந்த சிரிக்கும் புத்தர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதன் காரணத்தை உணர்த்தும் சீனப் பழங்கதை ஒன்றும் உள்ளது.


சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தனர். எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லும் அவர்கள், ஒரு ஊருக்குச் சென்றால், அந்த ஊரின் மையப்பகுதியில் நின்று வயிறுகுலுங்கச் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் இப்படி சிரிப்பதை வேடிக்கை பார்க்கக் கூடும் கூட்டம், சிறிதுநேரத்தில் அவர்களுடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கிவிடும்.


இந்த சிரிக்கும் புத்தர்கள் தங்கள் சிரிப்பைத் தவிர, எந்தவிதமான புத்திமதியோ ஆலோசனையோ வழங்குவதில்லை என்றும், தங்கள் சிரிப்பைத் தவிர அவர்கள் யாரிடமும், எதுவும் பேசியதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. எப்போதும் தாங்கள் இருக்குமிடத்தை மகிழ்ச்சியாகவும், உற்சாகம் நிறைந்தும் வைத்திருந்ததால் மக்கள் அவர்களை "சிரிக்கும் புத்தர்கள்" என்று அழைக்க ஆரம்பித்தனராம்.

ஒருமுறை இந்த சிரிக்கும் புத்தர்கள், ஒரு கிராமத்திற்கு சென்றபோது அவர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, அவரது இழப்பால் மற்ற இருவரும் பெரிதும் அழுது புலம்புவார்கள் என்றெண்ணி மக்கள் மற்ற இருவரையும் சமாதானப்படுத்த அங்கு சென்றபோது, "மறைந்தவன் மரணத்தில் எங்களை வென்றுவிட்டான். அவனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்" என்று மற்ற இருவரும் எப்போதும் போல சிரித்துக் கொண்டிருந்தனராம்.

அவர்களை வியப்புடன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இறந்த புத்தரை அவர்கள் எரித்தபோது, இறந்தவரது உடலிலிருந்து வாணவேடிக்கைகள் நிகழ, அதைக்கண்டு மற்ற இருவரும் மீண்டும் சிரிக்க, அப்போது மக்கள் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை என்கிறது சீனப் பழங்கதை.

சிரிப்பு
சிரிப்பு

வாழ்க்கைக்கு சிரிப்பையே போதனையாகத் தருகின்ற இந்த சிரிக்கும் புத்தர்களைப் பின்பற்றி நடக்கவும் வலியுறுத்துகின்றன சீன பழங்கதைகள். அதிர்ஷ்டமோ, அன்றாட வாழ்வின் இறுக்கத்தைப் போக்கும் சிரிப்போ இவற்றுள் எதைக் குறித்தாலும், இந்த சிரிக்கும் புத்தரை உண்மையில் அன்றும், இன்றும் மக்கள் மறவாதிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆம்... சிரிக்கும் புத்தர்களின் பொம்மைகளை வீட்டிலும், பணியிடத்திலும் வைத்தால் வளம்பெருகும், அவரது தொப்பையைத் தடவினால் அதிர்ஷ்டம் கிட்டும் என்ற நம்பிக்கை உலகெங்கும் உள்ளது.

சிரிக்கும் புத்தர்கள் கையிலிருக்கும் பெரிய துணிப்பையில், கொடுக்கக்கொடுக்க தீராத செல்வம் நிறைந்திருக்கிறது. அது, பசியுடன் இருப்பவர்களுக்கு உணவாகவும், துயரத்தில் இருப்பவர்களுக்கு இறையாகவும் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. சில சிரிக்கும் புத்தர் கையில் திருவோடு ஏந்தியிருப்பதையும் காணலாம். இது இரந்து உண்ணும் துறவுநிலையைக் குறிப்பதாகும் என்றும் கூறப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் செல்வங்கள் குழந்தைகள் தான். அந்தக் குழந்தைகளின் அனைத்து ஆசைகளையும் விருப்பங்களையும், இந்த சிரிக்கும் புத்தர்கள் நிறைவேற்றுவர் என்றும் நம்பப்படுகிறது.

காரணமின்றி எப்போதுமே சிரித்திருக்கும் இந்த ஹோட்டேய் புத்தர்களைப் போலவே கைகளைத் தட்டி சத்தமாக சிரிக்கும் யோகாப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வரும் ஜப்பானியர்கள், "உங்களது உடலை, ஒரு வைன் பாட்டிலுக்கு உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்... மெதுவாக பாட்டிலைத் திறப்பதுபோல, 'ஹோ... ஹோ...' என்றபடி, உங்களது கைகளை மெதுவாக உயர்த்துங்கள்.. கார்க் திறக்கப்பட்டு பொங்கிவரும் வைனைப் போல, அடக்கமுடியாத சிரிப்புடன் 'ii zou, ii zou... yay!' (மிக நன்று, மிக நன்று) என்று பாடுங்கள்'' என தங்களது பயிற்சியை விளக்கவதுடன் ஹோட்டேய் புத்தர்களைப் போல உற்சாகத்துடனும் வலம்வருகின்றனர்.

இவர்களைப் பின்பற்றி, இறுக்கம் நிறைந்த இந்த உலகத்தில், இனி யாராவது புன்னகைத்தால் நாமும் புன்னகைப்போம். யாராவது உரக்கச் சிரித்தால் நாமும் உரக்கச் சிரிப்போம். யாருமே சிரிக்காவிட்டாலும் நாம் உரக்கச் சிரித்து, நாளைத் துவக்கி வைப்போம். நாமே மகிழ்ச்சியை பரப்பும் சிரிக்கும் புத்தராய் மாறுவோம். ஆம்... இனி வாழ்க்கையில் உம்முனோ கம்முனோ இருக்காமல் சத்தமாக சிரித்து, ஜம்முனு சந்தோஷமாக இருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு