Published:Updated:

புத்தம் புது காலை : குழந்தைகளிடம் பேசுவதைத் தவிர வேறு முக்கிய வேலை ஏதும் இருக்கிறதா?!

ஜவகர்லால் நேரு
ஜவகர்லால் நேரு

வரலாறும், அறிவியலும் முக்கியம் என்பதுபோல, நீ ஒரு நல்ல ஓவியராக வேண்டுமென்றால், கணிதம் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மலை, பூ, மனிதர்கள் என அனைத்தையும் கச்சிதமாக வரைய முடியும்.

சொல்லும், செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்!
ஜவகர்லால் நேரு

சாம்பல் நிற கோட்...

நல்ல உயரம். சட்டையில் ஒரு ரோஜா. இன்முகத்தோடு ஒரு வணக்கம்!

இவையனைத்தும் நிறைந்த நேருவை, அவரது அழைப்பின் பேரில், அவரது இல்லத்திலேயே தனது பெற்றோருடன் நேரில் போய் சந்தித்ததில் அந்தச்சிறுமிக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. பேச்சற்று நின்றிருந்தாள் சுதந்திரா!

"சுதந்திரா... மாணவர்களுக்கான ஓவியப்போட்டியில் நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. எனக்கும் இது மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகமா?'' என்ற நேருவின் கேள்வியில் முகம் மலர்ந்து பேசத் துவங்கினாள் சுதந்திரா.

அம்மாவும், அப்பாவும் அவளை அதட்டுவதைக் கேட்காதது போல் ஒரு முகபாவனையுடன், நேருவின் முகத்தை நேராகப் பார்த்து...

''ஆமாம் நேரு மாமா... எனக்குப் பள்ளிக்கூடமே பிடிக்காது. பாடப்புத்தகங்கள் என்றால் அறவே பிடிக்காது. எனக்கு வரைய மட்டுமே பிடிக்கும். ஆனால் வீட்டில் அம்மாவும், அப்பாவும் எப்போதும் 'படி, படி' என்று அதட்டிக் கொண்டே இருப்பார்கள். பள்ளிக்கூடத்தில் இருந்து என்னை நிறுத்திவிடுங்கள் என்றுகூட இவர்களிடம் சொல்லியிருக்கிறேன்" என்று படபடத்தாள்.

ஜவகர்லால் நேரு
ஜவகர்லால் நேரு

சத்தமாக சிரித்த நேரு, "அட... நீயும் என்னைப் போலவே தானா? எனக்கும் சிறுவயதில் பாடம், வகுப்புகள், பள்ளி, எதுவுமே பிடிக்காது. நிம்மதியாக கதைப்புத்தகங்கள் வாசித்துக் கொண்டும், ஓவியங்கள் வரைந்து கொண்டும், எப்போதும் விளையாடிக் கொண்டும் இருப்பதில்தான் அதிக விருப்பம் இருந்தது" என்றார்.

"உண்மையாகவா..?" என்று வியப்புடன் கேட்ட சுதந்திராவிடம்,

"ஆமாம்... ஆனால், அது தவறு என்று இப்போது புரிகிறது. ஓவியம் கற்றுக் கொள்வதற்கு, வரையத் தெரிந்தால் மட்டும் போதாது. வரலாறு, அறிவியல், ஆங்கிலம், கணிதம் என அனைத்தும் தெரிந்தால்தான், ஓவியத்தை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும்" என்று பதிலளித்த நேரு தொடர்ந்து சுதந்திராவிடம் பேசினார்.

"பென்சில், தூரிகை, வண்ணங்கள் என காகிதத்தில் நீ ஓவியங்கள் வரைகிறாய். ஆனால், இவை எதுவுமின்றி குகைகளில் மனிதர்கள் முந்தைய காலத்தில் ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். இன்று வரை, அவை அழியாமல் இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"அப்படியா... நம்பவே முடியவில்லையே?" என கண்களை விரித்த சுதந்திராவிற்கு பதிலளித்த நேரு,

"ஆமாம்... எப்போது வேண்டுமானாலும் அந்த குகை ஓவியங்களை நீ பார்க்கலாம். அங்கு மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி வரைந்தார்கள், என்று இன்றும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இதைத்தான் வரலாறு என்கிறோம். இவற்றையெல்லாம் ஆராய்ச்சியின் மூலமாக, இந்த உலகிற்கு உணர்த்தியது அறிவியல். வரலாறும், அறிவியலும் முக்கியம் என்பதுபோல, நீ ஒரு நல்ல ஓவியராக வேண்டுமென்றால், கணிதம் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மலை, பூ, மனிதர்கள் என அனைத்தையும் கச்சிதமாக வரைய முடியும். உனது எல்லாவற்றையும் தாண்டி, ஓவியத்தை உலகிற்கு உணர்த்த மொழிக்கல்வியும் நீ பயில வேண்டும். இவையனைத்தும் பாடங்கள் அல்ல... நம்மைச் சுற்றி இருக்கும் அழகான உண்மைகள். இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டால் நீ இன்னும் நிறைய வரையலாம். நிறையப் பரிசுகளையும் வாங்கலாம்!" என்று கூறி சுதந்திராவிற்கு நிறைய வரலாறு மற்றும் அறிவியல் புத்தகங்களைப் பரிசாக வழங்கினார் நேரு.

ஜவகர்லால் நேரு
ஜவகர்லால் நேரு

பிறகு அவளது பெற்றோரிடம், "சுதந்திரா இனிமேல் நன்றாகப் படிப்பாள். ஆனால், படிப்பு மட்டுமே முக்கியமல்ல. அவளது ஓவியத் திறமையை நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்" என்று கூறி விடைபெற்றார்.

சிறிதுநேரம் கழித்து, தனது அலுவலக அறைக்குத் திரும்பிய நேருவிடம், அவரது உதவியாளர், "நீங்கள் இந்த நாட்டின் பிரதமர்... உங்களுக்கு இருக்கும் ஏராளமான பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி, குழந்தைகளிடம் பேசுவது சிரமமாக இல்லையா?'' என்று கேட்க... நேரு புன்னகையுடன் அமைதியாக பதிலளித்தார்.

"சுதந்திரா போன்ற குழந்தைகள் தான், நாளைய இந்தியாவை உருவாக்க உள்ளனர்... அவர்களுக்கு உதவியாக இருப்பதை விட, எனக்கு வேறு முக்கிய வேலை என்ன இருக்கிறது?"

- மருதனின் 'எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும்' கதைத்தொகுப்பில் ஒன்றான, #அதிசய_அழைப்பு கதையின் சுருக்கம் இது.

ஆம்...

சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.!

ஜவகர்லால் நேருவைப் போல!

#நேரு நினைவுநாள்

அடுத்த கட்டுரைக்கு