ஓர் அறுவை சிகிச்சைக்கு, அந்தப் பெரியவர் அனுமதியான சமயத்திலிருந்தே மருத்துவமனையில் அனைவரும் பரபரப்பாகத்தான் இருந்தனர். ஊரில் செல்வாக்கு மிக்கவர், பெரிய பிசினஸ்மேன், அதிலும் அந்தக் காலத்திலேயே இன்ஜினீயரிங் படித்து, பிறகு தானே தொழில் தொடங்கி அதில் வெற்றிபெற்றவர். ஆனாலும் எளிமையாக எல்லோருடனும் பழகக்கூடியவர் என்பதால், அனைவருக்கும் பிடித்தமான ஒருவர். அவருக்கு அறுவைசிகிச்சை என்பதால் ஒரு பிரபலத்தின் அருகில் நிற்கும் இயல்பான பரவசம் எல்லோரிடமும் கண்கூடாகத் தெரிந்தது.
அறுவைசிகிச்சை ஆரம்பிக்கும் முன், அவரை உடைகளை மாற்றச் சொன்னபோது, "வாட்ச், மோதிரம் எல்லாம் கழட்டணும் சார்..." என்று செவிலியர் சொல்ல, உடனடியாக தனது உதவியாளரிடம் வாட்ச்சைக் கழற்றித் தந்துவிட்டு, "தம்பி... பத்திரம்... இந்த வாட்ச் விலை இரண்டே முக்கால் லட்சம்!" என்று சிரித்தபடி கூறிவிட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு ஆயத்தமானார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசிக்கல் எதுவுமின்றி ஆபரேஷன் நல்லவிதமாக முடிய, உடை மாற்றி கைகளைக் கழுவிக் கொண்டிருக்கும் போது ஆபரேஷன் தியேட்டர் சிஸ்டர், "மேடம்... எனக்கொரு டவுட். எல்லா வாட்ச்சும் ஒரே டைம் தானே காட்டும்... அதென்ன இந்த வாட்ச் மட்டும் இவ்வளவு விலை... அதையும் இவங்க எப்படி மனசு வந்து வாங்குறாங்க... பணம் இருக்குதுன்னா இப்படியெல்லாமா செலவு பண்ணுவாங்க?” என்று கேட்டாள்.

"ஒரு காஸ்ட்லி பிராண்ட்ங்கறது நம்ம தகுதிக்கு ஒரு அடையாளம்னு சிலர் நினைப்பாங்க... அதுபோல இவரும் நினைச்சிருக்கலாம். விடும்மா... இன்னும் ரெண்டு நாள், இங்கதானே இருக்கப் போறாரு. அவர்கிட்டயே கேட்டுடலாம்!" என்று சிரித்தபடி பதிலளித்து நகர்ந்தேன்.
டிஸ்சார்ஜ் அன்று அவருடைய அறை விசிட்டின் போது, பேசிக்கொண்டிருந்த ஒரு சகஜமான சூழ்நிலையில், அந்தக் கேள்வியை அவரிடம் நேரடியாகக் கேட்டே விட்டோம்.
"சார்... எதற்கு இவ்வளவு விலையில் வாட்ச் வாங்குகிறீர்கள்... இது வேஸ்ட் ஆஃப் money இல்லையா?" என்ற என் கேள்விக்கு அவர் சிரித்தபடி பதில் சொன்னார். "அது வேஸ்ட் இல்லை டாக்டர்... உண்மையில் அது ஓர் இன்ட்டலிஜென்ட் இன்வெஸ்ட்மென்ட்!" என்றவர் தொடர்ந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
"நான் படித்து முடித்து ஒரு வெளிநாட்டு வேலைக்காக இன்டர்வியூவுக்குச் சென்றபோது, நானும் எல்லோரும் போல மிகச் சாதாரணமாகத்தான் சென்றோம். ஆனால், என்னுடன் வந்து உட்கார்ந்த இன்னொருவன் பிராண்டட் வாட்ச், பிளேசர், உயரிய ஷூ என ஜம்மென வந்து உட்கார்ந்தான். இருவருமே தேர்வாகி, வேலையில் சேர்ந்துவிட்டோம். ஆனால், வேலையில் சேர்ந்தபின்தான் தெரிந்தது, என்னைவிட அவனுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு சம்பளம் அதிகமாக ஃபிக்ஸ் செய்திருந்தார்கள் என்று.
அவனிடமே அதைப்பற்றி கேட்டபோது, "ஆக்சுவலா சொந்த நாடு தாண்டிட்டா, இந்த மாதிரி கம்பெனிகள்ல நம்ம லெவல் இன்ஜினீயர்ஸுக்கு ஃபிக்ஸ் பண்ணறது சம்பளம் இல்ல. மெய்ன்டனன்ஸ் காஸ்ட். இது என்னோட மெய்ன்டனன்ஸ் காஸ்ட். அது உன்னோட மெய்ன்டனன்ஸ் காஸ்ட்!" என்றான்.

பின்னாளில் நான் தொழில் துவங்கியபோது, அதையே முன்னுதாரணமாக வைத்து, என்னை நானே மாற்றிக் கொண்டதுதான் இந்த ஆடம்பரங்கள். அந்த சமயங்களில் நான் பெரிய கம்பெனிகளில் சப்-கான்ட்ராக்ட் டீல் பேசப் போகும்போது Rolex வாட்ச், Gucci சட்டை, Montegrappa பேனா போன்றவற்றை பயன்படுத்தியதோடு, லக்சுரி காரில்தான் பிசினஸ் பேசுவதற்குச் செல்வேன்.
கான்ட்ராக்ட் தருபவனுக்கு, சாதாரண காரில் வரும் ஒருவர் குறைந்த ரேட்டில் முடித்துத் தருவதாகக் கூறினாலும், அதிக ரேட் கேட்கும் எனக்கு கான்ட்ராக்ட்டை கொடுக்கத்தான் விரும்புவான். அங்கே பணம் மட்டும் பேசாது. இவ்வளவு வசதிகளை மெய்ன்டெய்ன் செய்பவன், நமக்கும் அதிகம் தொல்லை தராமல் தனது பிசினஸை மெய்ன்டெய்ன் செய்வான் என்று, என்மேல் அவன் வைக்கும் நம்பிக்கையும் சேர்ந்து பேசும். ஆரம்பத்தில் நான் மாதா மாதம் சம்பாதிப்பதற்காக ஒருமுறை செலவு செய்தேன். மற்றவர்கள் ஒருமுறை செலவு செய்ய யோசித்து மாதா மாதம் அதை இழந்து கொண்டிருந்தார்கள். இப்போது அதுவே பழகிவிட்டது!" என்று சிரித்தார்.
ஆம், நாம் ஆடம்பரம் என்று மலைத்து ஒதுக்கும் சில விஷயங்கள் கூட, சிலருக்கு அவசியமான ஒன்றாகத்தான் இருக்கிறது.
எல்லாம் சரி...
"ஏன் சில பிராண்ட்கள் மட்டும் இவ்வளவு விலை கூடுதலாக இருக்கின்றன?" என்ற செவிலியரின் கேள்விக்கான எனது பதில் இதுதான்.
"தங்களுடைய தரத்தை அரும்பாடுபட்டு உயர்த்தி, அதற்கு கடுமையான உழைப்பை செலுத்தி, அதைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலைநிறுத்தி, ஒரு பிராண்டாக உயர்தியப்பிறகு அதற்கு அவர்கள் நிர்ணயிக்கும் விலைதான் அது!" என்றேன்.
சரிதானே?!