Election bannerElection banner
Published:Updated:

நரேந்திர மோடி Vs பிரதாப் பானு மேத்தா: யார் இந்த மேத்தா? அரசுக்கும் அவருக்கும் என்ன பிரச்னை?

மேத்தா -  மோடி
மேத்தா - மோடி ( World Economic Forum )

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர் பிரதாப் பானு மேத்தா.

- ஆர்.எஸ்.ஜெ

சர்வதேச கல்வியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் அறிஞர் பிரதாப் பானு மேத்தாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

யார் இந்த பிரதாப் பானு மேத்தா?

ஹரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் பிரதாப் பானு மேத்தா. கடந்த மார்ச் 15-ம் தேதி திடீரென அவர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததிலிருந்து பலவித கருத்துகள் கல்வித்துறை சார்ந்த வட்டங்களிலிருந்தும் பிற தரப்புகளிடமிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் தற்போது உலகளாவிய அறிஞர்களின் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘அரசியல் அழுத்தம்’

பல்கலைக்கழகத்தின் அறங்காவலர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில், `அரசியல் அழுத்தத்தால் மேத்தா வெளியேற்றப்பட்டிருப்பது தங்களுக்கு வேதனை அளித்திருப்பதாக’ குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிரதாப் பானு மேத்தா
பிரதாப் பானு மேத்தா
World Economic Forum

``நாங்கள் பிரதாப் பானு மேத்தாவுக்கு ஆதரவு தெரிவித்து இக்கடிதத்தை எழுதுகிறோம். அவர் கடைப்பிடித்த பண்புகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும் எழுதுகிறோம். அரசியல் வாழ்வில் இந்த பண்புகள், சம குடியுரிமை வலியுறுத்தும் சகிப்புதன்மை, பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உணர்வு என்பனவாக இருக்கின்றன. பல்கலைக்கழக வாழ்வில் இவை விசாரணைக்கான உரிமை, வெளிப்படை பேச்சு மற்றும் அறிவுநேர்மையாக இருக்கின்றன. ஓர் அறிஞர் பொதுவெளியில் பேசிய பேச்சுக்காக தண்டிக்கப்படுகையில் இந்த பண்புகள் தாக்கப்படுகின்றன. குறிப்பாக அந்த பேச்சு இந்த பண்புகளையே காப்பதற்கான பேச்சாக இருக்கும்போது, தாக்குதல் அருவருப்பாகி விடுகிறது.’

நரேந்திர மோடி Vs மேத்தா:

மேத்தா பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். முன்னணி பத்திரிகைகளில் சிறப்பு கட்டுரையாளர்களாக இருக்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நரேந்திர மோடி அரசின் மீதும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்திருக்கிறார் மேத்தா. குறிப்பாக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை கடந்தும் நடந்து கொண்டிருக்கும்நிலையில் அச்சட்டங்களை விமர்சித்து கட்டுரை எழுதியிருக்கிறார் மேத்தா. மேலும் கடந்த வருடம் The Wire இணைய இதழுக்கு பேட்டி கொடுக்கையில் பாஜக அரசை, ‘பாசிச அரசு’ என விமர்சித்திருக்கிறார். பல கட்டுரைகளில் பாஜக அரசு, நெருக்கடியை கொண்டு வந்த இந்திரா காந்தி அரசை காட்டிலும் பயங்கரமானது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர் மேத்தா. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வு படிப்பு முடித்தவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நியூயார்க் சட்டப்பள்ளி முதலிய கல்வி நிலையங்களில் பேராசிரியராக பணியாற்றியவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் பத்தி ஆசிரியராகவும் இருக்கிறார் மேத்தா.

கடந்த 15ம் தேதி கொடுத்த ராஜினாமா கடிதத்தில், ‘பல்கலைக்கழக நிறுவனர்களை சந்தித்த பிறகு, பல்கலைக்கழகத்துடனான என் தொடர்பு அவர்களுக்கு ஓர் அரசியல் சுமையாக மாறியிருப்பது தெளிவாக தெரிகிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி
மோடி

அரசியல் சாசன விழுமியங்கள்

‘அரசியல் சாசன விழுமியங்களான சுதந்திரம், எல்லா குடிமக்களுக்கும் சமமான மரியாதை முதலியவற்றை மதிக்கும் அரசியலை ஆதரித்து பொதுவெளியில் நான் எழுதியது பல்கலைக்கழகத்துக்கு பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடும் என உணரப்பட்டிருக்கிறது’ எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு பத்தியில் ‘ஒரு பரந்த கொள்கையுடைய பல்கலைக்கழகத்துக்கு பரந்த அரசியல் பார்வையும் சமூகச்சூழலும் தேவை என கருதுகிறேன். அத்தகைய சூழலை காப்பதில் பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நம்புகிறேன். நீட்சே ஒருமுறை ‘பல்கலைக்கழகத்தில் உண்மை வாழ முடியாது’ எனக் கூறியிருந்தார். அந்த தீர்க்கதரிசனம் உண்மையாகிவிடக் கூடாது’ என்ற வரிகளையும் குறிப்பிட்டிருப்பது மேத்தாவின் ராஜினாமாவுக்கு பின் அரசியல் அழுத்தங்களின் பங்கு இருப்பதை உறுதிபடுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அசோகா பல்கலைக்கழகத்துக்குள் நடத்தப்படும் TheEdict என்கிற மாணவப் பத்திரிகை, `மேத்தா வெளியேற்றப்பட்டதற்கு, அசோகா பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு நிலம் வாங்க நிர்வாகம் எடுத்த முயற்சி தடுக்கப்படுவது காரணமாக இருக்கலாம்’ என குறிப்பிட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு