Published:Updated:

இவ்வருடம் சித்திரையில் அதிக திருமணங்கள்... வழக்கமாக சித்திரையில் ஏன் திருமணங்கள் நடத்தப்படுவதில்லை?

Marriage
Marriage

சாஸ்திர சம்பிரதாயங்களில் பெரிதாக நம்பிக்கை இல்லாதவர்கள் சித்திரையில் திருமணம் நடத்துவது வழக்கம். இம்முறை, கொரோனா சூழல் காரணமாக சித்திரையில் திருமணம் நடத்துபவர்கள் அதிகரித்துள்ளனர்.

பொதுவாக, தமிழ் மக்களில் பெரும்பாலானோர் சித்திரை மாதத்தில் திருமணங்கள் நடத்த மாட்டார்கள். ஆனால், இந்த வருடம் சித்திரையின் அனைத்து முகூர்த்தங்களிலும் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடந்தபடி உள்ளன. காரணம், கொரோனா.

கடந்த ஆண்டு எற்பாடு செய்யப்பட்டிருந்த பல திருமணங்கள், கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டன. பொருளாதார நெருக்கடிகளாலும், மணமகன்கள் மற்றும் முக்கிய உறவுகள் சிலர் வெளிநாடுகளில் இருந்து இங்கு வர முடியாத காரணங்களாலும் பல திருமணங்கள், குறித்த தேதியில் நடத்த முடியாத சூழலால் தள்ளிப்போயின.

கொரோனா பரவலும் பொருளாதார ஆட்டமும் கொஞ்சம் சீரான பின்னர், அப்படித் தள்ளிப்போன திருமணங்களை எல்லாம் கடகடவென வரிசையாக நடத்த ஆரம்பித்தனர் பெற்றோர்கள். அந்த வகையில், சித்திரை மாத முகூர்த்தத்திலும் அதிக திருமணங்கள் நடந்துவருகின்றன.

Marriage
Marriage

இது ஒருபுறமிருக்க, இந்த மார்ச்சில் இருந்து மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கியதால், ஏற்கெனவே சித்திரையில் குறிக்கப்பட்டிருந்த முகூர்த்தங்களுடன், `சித்திரை மாசமா இருந்தாலும் பரவாயில்ல... கல்யாணத்தை உடனே வெச்சிடலாம். கொரோனா மேலும் தீவிரமாகி, ஊரடங்கு போட்டுட்டா அப்புறம் நிலைமை சரியாக இன்னும் மூணு மாசம், ஆறு மாசம் ஆகலாம்' என்ற எண்ணத்தில், அவசர அவசரமாக, சித்திரை மாதத்தில் திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்னொரு பக்கம், விடுமுறை நாளாக இருந்தால் வசதியாக இருக்கும் என நினைத்து இந்த மாத ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணங்களுக்கு நாள் குறித்த பல குடும்பங்கள், பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் லாக்டௌன் அறிவிக்கப்பட்டுள்ளதால், எப்படித் திருமணத்தை நடத்துவது என்ற தவிப்பில் உள்ளார்கள்.

சாஸ்திர சம்பிரதாயங்களில் பெரிதாக நம்பிக்கை இல்லாதவர்கள் சித்திரையில் திருமணம் நடத்துவது வழக்கம். இம்முறை, கொரோனா சூழல் காரணமாக சித்திரையில் திருமணம் நடத்துபவர்கள் அதிகரித்துள்ளனர்.

நம் முன்னோர்கள் சித்திரை மாதம் திருமணம், காதுக்குது போன்ற விஷேசங்கள் நடத்துவதை ஏன் தவிர்த்து வந்தார்கள். இதற்கு என்னதான் காரணம்?

கேள்விக்கு விடை காண கிராமங்களில் உள்ள பெரியவர்களிடம் பேசினோம்.

தஞ்சை மாவட்டம் மேல உளூரைச் சேர்ந்த ஜெகதீசன், ``மற்ற மாசங்கள ஒப்பிடும்போது சித்திரையிலதான் கடுமையான வெயில் இருக்கும், அதிகமா வாட்டியெடுக்கும். உஷ்ணகால நோய்கள் உருவாகும். சித்திரையில திருமணம், காதுகுத்து போன்ற விஷேசங்கள வெச்சா, வெயில்ல அலைஞ்சு அந்த ஏற்பாடுகளைச் செய்றது பல விதங்களிலும் உடலுக்கு தொந்தரவுகளைக் கொடுக்கும்.

ஜெகதீசன்
ஜெகதீசன்

அந்தக் காலத்துல வாகன வசதிகள் கிடையாது. வெளியூர்கள்ல உள்ள உறவினர்கள், நண்பர்கள் பெரும்பாலும் நீண்ட தூரம், நாள் முழுக்க நடந்துதான் விசேஷங்களுக்கு வந்தாகணும். சித்திரை வெயில்ல பகல் நேர நடைப்பயணம்ங்கிறது எளிதான காரியமில்ல.

அதுமட்டுமல்லாம, சித்திரை மாசத்துல அம்மை போன்ற தொற்று நோய்கள் அப்போவெல்லாம் அதிகமாகப் பரவின. விசேஷங்கள்ல மக்கள் ஒன்று கூடினா, அம்மை பாதிப்புகள் உருவாகும். இதையெல்லாம் தவிர்க்கத்தான், சித்திரையில திருமணங்கள் நடத்துவதைத் தவிர்த்தாங்க. ஆனால் அதே நேரம், கோயில் திருவிழா என்ற பெயர்ல, உடல் உஷ்ணத்தைத் தவிர்க்க, பாசிப்பருப்பு கலந்த அரிசிக்கஞ்சி, நீர் மோர், பானகம்னு அருந்தினாங்க. கிருமிநாசினியான வேப்பிலை, மஞ்சள் பயன்படுத்தினாங்க.

சித்திரை மாசம் திருமணங்கள் தவிர்க்கப்பட்டதுக்கு இதையெல்லாம்விட, மிகவும் முக்கியமான பொருளாதார காரணமும் இருந்தது. சித்திரை மாதம், ஆற்றுநீர் மற்றும் மழைக்கு வாய்ப்பில்லாததால, விவசாயம் நடக்காது. வருமானம் இருக்காது. தை அறுவடையில கிடைச்ச வருமானத்தை சேமிச்சுவெச்சு, அன்றாட குடும்பச் செலவுகளைச் சமாளிப்பாங்க. ஆடி மாசம் சாகுபடியைத் தொடங்கத் தயாராகணும். இதை அடிப்படையா வெச்சுதான், `ஆணி கருநிலத்தில் கடன் தீர்த்துக் கொள்வேனாக'னு பணம் கொடுக்கல் - வாங்கலில் உறுதி அளிப்பது வழக்கமா இருந்தது.

சித்திரையில திருமணம் தவிர்க்கப்பட்டதுக்கு மருத்துவ ரீரியான காரணமும் சொல்லப்பட்டது. சித்திரையில திருமணம் செய்தா, உஷ்ண தாக்கத்துல அந்தப் புதுமணப் பெண்ணுக்கு கரு தழைக்காதுனு சொல்லுவாங்க’’ என்றார்.

ஜோதிடர் சுப்ரமணியன்
ஜோதிடர் சுப்ரமணியன்

சித்திரையில் திருமணம் பற்றி சாஸ்திர சம்பிரதாயம் என்ன சொல்கிறது? தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஜோதிடர் சுப்ரமணியன், ``அக்னி தெய்வமான சூரியன் உச்சம் பெறும் மாதம் சித்திரை. சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெறுவார். அந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகம் நெருப்புக்கு உரியவர். அக்னியில் உருவாகிய சூரியன் பகவான், நெருப்பு ராசியான மேஷ ராசியில் சித்திரையில் உச்சமாகிறார். இதனால் சித்திரை மாதத்தில் சுபகாரியங்கள் தவிர்க்கப்பட்டன'' என்றார்.

காலப்போக்கில், சித்திரையில் திருமணத்தை நடத்துவதில் உள்ள போக்குவரத்து மற்றும் பொருளாதார சிரமங்கள் நீங்கியுள்ளன. ஆனால், 2021-ஐ பொறுத்தவரை, சித்திரை, ஆனி, ஆவணி, வைகாசி எனத் தொடரும் எல்லா முகூர்த்த மாதங்களிலும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளுடன் திருமணத்தை நடத்துவது மிக முக்கியமாகியுள்ளது. குறிப்பாக, `சித்திரையில் அம்மை நோய் தீவிரத்தாலும், பரவலைத் தடுக்க சுபவிசேஷங்கள் தவிர்க்கப்பட்டன' என்று சொல்லியிருக்கும் ஜெகதீசனின் வார்த்தைகள், அந்தக் காலத்திலேயே நம் மக்கள் அம்மை வைரஸ் பரவலைத் தடுக்கக் கட்டுக்கோப்புடன் கடைப்பிடித்த சமூக இடைவெளியை அழுத்தமாக உணர்த்துகிறது. பின்பற்றுவோம் நாமும்!

அடுத்த கட்டுரைக்கு