அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

அவன்கூட வாழ்றதுக்கு ஜெயிலில் கிடப்பதே மேல்... கணவனுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்த மனைவி!?

வடிவேல் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவேல் முருகன்

‘மருந்தில் ஏதோவொரு விஷம் கலந்து எனக்குத் தருவதாக’ குறிப்பிட்டிருந்தாள். அதாவது, ‘இன்று உருளைக்கிழங்கு பொரியல் வைத்திருக்கிறேன்..

திருமணம் ஆன இரண்டு மாதங்களில் கணவனுக்கு மருந்தில் ‘ஸ்லோ பாய்சன்’ கலந்துகொடுத்ததாக மனைவி மீது புகார் பதிவாகியிருப்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த ஆழ்வார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன். இவருக்கும், இறச்சகுளத்தைச் சேர்ந்த சுஜா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம், 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில்தான் இப்படியோர் அசம்பாவிதம் நடந்திருக்கிறது. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வடிவேல் முருகனிடம் பேசினோம்.

அவன்கூட வாழ்றதுக்கு ஜெயிலில் கிடப்பதே மேல்... கணவனுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்த மனைவி!?

“நான் 10-ம் வகுப்பு படித்துவிட்டு கேரளாவில் கட்டட வேலை செய்துகொண்டிருந்தேன். பி.எஸ்சி படித்த சுஜாவைத் திருமணம் செய்த பிறகு, சொந்த ஊரிலேயே வேலை செய்துவருகிறேன். திருமணத்துக்கு முன்பு ராமன் என்பவரைக் காதலித்ததாகவும், அவர் தன்னைத் திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறியதால் அவரை மறந்துவிட்டதாகவும் என் மனைவி சொல்லியிருந்தாள். திருமணத்துக்குப் பிறகு மனைவியின் நடத்தையில் எனக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. எனக்கு வயிற்றில் வாயுத்தொல்லை இருந்ததால், அதற்காக அஜீரண டானிக் குடித்துவந்தேன். இந்த மாதத் தொடக்கத்தில் ஒருநாள் கழிவறையில் திடீரென மயங்கி விழுந்தேன். என்ன பிரச்னை என்று கண்டுபிடிக்க முடியாததால், மருத்துவமனையில் ஃபுல் பாடி செக்கப் செய்தார்கள். வயிற்றில் ஏதோ பிரச்னை இருப்பதாகச் சொன்னார்கள்.

இதற்கிடையே கடந்த 8-ம் தேதி காலையில் யதார்த்தமாக மனைவியின் செல்போனை எடுத்துப் பார்த்தேன். அதில் அவளுடைய முன்னாள் காதலனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியிருந்தாள். அதில், ‘மருந்தில் ஏதோவொரு விஷம் கலந்து எனக்குத் தருவதாக’ குறிப்பிட்டிருந்தாள். அதாவது, ‘இன்று உருளைக்கிழங்கு பொரியல் வைத்திருக்கிறேன்... இன்றும் மருந்தைக் குடிக்கவைக்க வேண்டும். மருந்து கலப்பதால் என்மீது சந்தேகம் வராதே... ஃபுல் பாடி செக்கப் பண்ணும்போது மருந்து கொடுத்ததைக் கண்டுபிடித்துவிடுவார்களா?’ என அவள் சாட் செய்திருப்பதைப் பார்த்தேன்.

அவன்கூட வாழ்றதுக்கு ஜெயிலில் கிடப்பதே மேல்... கணவனுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்த மனைவி!?

இது பற்றி அவளிடம் கேட்டதற்கு, ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்றதுடன், அஜீரண மருந்தில் ஏதோ கலந்ததாகவும் சொன்னாள். ஆனால், என்ன கலந்தாள் என்பதைச் சொல்லவில்லை. மனைவியையும் அழைத்துக்கொண்டு நியாயம் கேட்க, அவளின் அம்மா வீட்டுக்குப் போனபோது, அங்கு நான் மீண்டும் மயங்கி விழுந்தேன். அதில் என் கைவிரல் எலும்பு முறிந்தது. அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்திருக்கிறேன். மனைவியும், அவளுடைய முன்னாள் காதலனும் சேர்ந்து என்னைக் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ‘வாட்ஸ்அப்’ மெசேஜைப் பார்த்ததால்தான் நான் இப்போது உயிருடன் இருக்கிறேன். என் மனைவிக்கும், அவரின் காதலனுக்கும் தண்டனை வழங்க வேண்டும்” என்றார் விலகாத பீதியுடன்.

மருத்துவர்களிடம் கேட்டபோது, வடிவேல் முருகனுக்குக் கலந்து கொடுக்கப்பட்ட மருந்து எதுவென்று அறிய, அவரது ரத்த மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தனர்.

இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து போலீஸில் வழக்குப் பதிவான மறுநாளே, எறும்புப் பொடி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சுஜா, தற்போது மருத்துவமனை சிகிச்சையில் இருந்துவருகிறார்.

இந்த நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு சுஜாவிடம் பேசியபோது, “மருந்தில் நான் ஸ்லோ பாய்சன் கலக்கவில்லை. எனக்கு பிரஷர் பிரச்னை உண்டு. அதற்காகச் சாப்பிடும் மாத்திரையைத்தான் கலந்தேன். என் கணவர் இரவு என்னை நிம்மதியாகத் தூங்கவிட மாட்டார். ‘எப்போதும் நான் அவருக்கு வேண்டும்.’ பிரஷர் மாத்திரை கலந்தால், எனக்குத் தூக்கம் வரும். எனவே, அந்த மாத்திரையை மருந்தில் கலந்துகொடுத்தால் இரவில் கணவரும் தூங்கிவிடுவார், என்னைத் தொந்தரவு செய்ய மாட்டார் என நினைத்து மூன்று நாள்கள் ராத்திரி, நான் மாத்திரை போட்டுக் கொடுத்தேன். அந்த மூன்று நாள்கள் அவர் நன்றாகத் தூங்கினார். என்னை அவர் டிஸ்டர்ப் செய்யவே இல்லை. நான் கொடுத்த மருந்தால் அவர் ஒரு நாள் மயக்கம் போட்டார். அதன் பிறகு நான் மாத்திரை கலக்கவில்லை. கடந்த ஒன்றரை மாதமாக என் கணவரால் நான் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இந்த நிலையில், ஆறுதலுக்காகத்தான் முன்னாள் காதலனிடம் பேசினேன். மருந்து கலப்பது பற்றியும், விசாரணை வருமா எனவும் காமெடியாகத்தான் மெசேஜில் கேட்டிருந்தேன். இந்த வழக்கில் நான் ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை. அவர்கூட வாழ்வதற்கு ஜெயிலில் கிடப்பதே மேல்” என்றார் வெறுப்புடன்.

அவன்கூட வாழ்றதுக்கு ஜெயிலில் கிடப்பதே மேல்... கணவனுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்த மனைவி!?
அவன்கூட வாழ்றதுக்கு ஜெயிலில் கிடப்பதே மேல்... கணவனுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்த மனைவி!?

இந்த விவகாரம் பற்றி குளச்சல் டி.எஸ்.பி தங்கராமனிடம் பேசியபோது, “காதலனிடம் நட்பாகவே பேசியதாக சுஜா சொல்கிறார். கணவன், மனைவி தகராறால் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இரண்டு தரப்பிலும் மாறி மாறி குற்றம்சாட்டுகிறார்கள். 328-வது (விஷம் கொடுத்தல்) பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.

குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்து பள்ளி மாணவன் அஸ்வின் கொலை... கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜ் கொலை போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்திருக்கும் அடுத்த சம்பவம் இது!

அநியாயம்!