Published:Updated:

கேரளாவை அதிரவைத்த ‘வொய்ஃப் ஸ்வாப்பிங்’!

‘வொய்ஃப் ஸ்வாப்பிங்’!
பிரீமியம் ஸ்டோரி
News
‘வொய்ஃப் ஸ்வாப்பிங்’!

அன்று கீ செயினில் தேர்வு... இன்று ஆன்லைனில் சீக்ரெட் குரூப்!

‘‘என் கணவர், ‘வொய்ஃப் ஸ்வாப்பிங்’ என்கிற பெயரில் மனைவியைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் கேடுகெட்ட கலாசாரத்துக்கு அடிமையாகிவிட்டார். என்னை குரூப் செக்ஸில் ஈடுபட வலியுறுத்துகிறார்’’ - கேரள மாநிலம், கோட்டயம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கருகச்சால் காவல் நிலையத்தில் இப்படியொரு புகாரை அளிக்க... கேரளமே பரபரத்துப் போயிருக்கிறது!

அதிரவைக்கும் இந்தக் குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்திய போலீஸார், அந்தப் பெண்ணின் கணவர் உட்பட கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார்; மற்றொருவர் தலைமறைவாக இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட ஏழு பேரும் ஜனவரி 10-ம் தேதி சங்கனாச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கேரளாவை அதிரவைத்த ‘வொய்ஃப் ஸ்வாப்பிங்’!

வொய்ஃப் ஸ்வாப்பிங் கும்பல்கள் குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் கிறுகிறுக்க வைக்கின்றன... ‘‘மனைவிகளை மாற்றிக்கொள்வதற்கென்றே சிலர் ஃபேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ்அப் குரூப்களை வைத்திருக்கிறார்கள். இளம்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து தொடர்ந்து சைபர் செல் மூலம் விசாரணை நடத்தினோம். அத்துடன், கைது செய்யப்பட்டவர்களின் லேப்டாப், மொபைல் ஆகியவற்றை ஆய்வுசெய்தோம். அதில் குக் ஓல்டு கேரளா, குக் ஓல்டு கம்பெனி, மீட்-அப் கேரளா, கப்புள் மீட்-அப் கேரளா, குக் ஓல்டு ஹப், மல்லு குக் ஓல்டு, கப்புள் ஷேரிங், கப்புள் மீட்டிங் என்று பல்வேறு பெயர்களில் சமூக வலைதளங்களில் ரகசிய குரூப்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.

இப்படி 14 குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குழுக்களில் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் வி.ஐ.பி-க்களும் இருக்கிறார்கள். இதில் ஈடுபடும் பலரும் போலி ஃபேஸ்புக் கணக்கை வைத்திருப்பதால், அவர்களின் உண்மையான பெயரை வெளியுலகத்தினர் அறிய முடியாது. மனைவியைப் பரஸ்பரம் மாற்றிக்கொண்டு நெருக்கமாக இருக்க விரும்புபவர்கள், சீக்ரெட் சாட் மூலம் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அதில் தங்களின் மனைவியின் போட்டோ, வயது உள்ளிட்ட தகவல்களைப் பதிவேற்றம் செய்பவர்கள், மனைவியைப் பற்றிய கவர்ச்சிகரமான கருத்துகளையும் பகிர்கிறார்கள்.

கேரளாவை அதிரவைத்த ‘வொய்ஃப் ஸ்வாப்பிங்’!

பின்னர் இவர்கள் ‘நைட் டின்னர்’ என்ற பெயரில் யாராவது ஒருவரின் வீட்டில் ஒன்றுகூடுகிறார்கள். சில சமயங்களில் ரிசார்ட் புக் செய்து ‘குடும்ப சங்கமம்’ என்ற பெயரில் இது போன்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். மற்றவர்களுக்குச் சந்தேகம் வராமலிருக்க, ஒன்றுகூடும் இடத்துக்குக் குழந்தைகளுடன் வருபவர்களும் உண்டு. மனைவி மட்டுமல்லாமல் காதலி மற்றும் தோழிகளை பரிமாறிக்கொள்பவர்களும் உண்டு. ஜோடி இல்லாத ஆண்களும்கூட இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். அவர்களை ‘ஸ்டட்டுகள்’ என்றழைக்கிறார்கள். அவர்கள் இதில் இணைவதற்கு 14,000 ரூபாய் பணம் செலுத்த வேண்டும்’’ என்று விவரித்தார்கள் போலீஸார். தற்போது புகார் கொடுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பற்றியும் போலீஸார் நம்மிடம் விவரித்தார்கள்... ‘‘புகார் அளித்த இளம்பெண்ணை, சில ஆண்டுகளுக்கு முன்பே அவரின் கணவன் ‘வொய்ஃப் ஸ்வாப்’ ஸ்கீமில் சேர்த்திருக்கிறான். கணவனின் வற்புறுத்தலால் ‘நைட் டின்னர்’ நிகழ்ச்சிகளில் அந்தப் பெண்ணும் பங்கெடுத்துள்ளார். இது வெளியே தெரிந்தால், தன் குடும்ப மானம் பறிபோகுமே என்று இத்தனை ஆண்டுகளாக அவர் வாய் திறக்கவில்லை. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கணவனின் செயல்பாடுகள் மூர்க்கத்தனமாக மாறியுள்ளன. பிற ஆண்களின் முன்னிலையில் வக்கிரமான முறையில் அவமானப்படுத்தியுள்ளான். ஒரு கட்டத்தில் மன உளைச்சல் பொறுக்க முடியாமல், தன் சகோதரனிடம் இது பற்றிச் சொல்லிக் கதறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த அவரின் சகோதரர், ‘எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தைரியம் கொடுத்த பிறகே காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்தப் பெண்.

கேரளாவை அதிரவைத்த ‘வொய்ஃப் ஸ்வாப்பிங்’!

அந்தப் பெண்ணை அவரின் கணவன் உட்பட ஒன்பது பேர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அவர்களில் ஐந்து பேர் மனைவிகளுடன் வந்திருக்கிறார்கள். மற்ற நான்கு பேரும் தனியாக வந்த ஸ்டட்டுகள். அவர்களிடமிருந்து தலா 14,000 ரூபாயை அந்தப் பெண்ணின் கணவன் வாங்கியிருக்கிறான். ஒரு கட்டத்தில் ‘இதற்கு ஒத்துழைக்க மாட்டேன்’ என்று அந்த இளம்பெண் கூறியபோது, ‘ஒத்துழைக்கவில்லையென்றால், உன்னைக் கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டியிருக்கிறான். அதனால்தான் இத்தனை ஆண்டுகள் அந்த இளம்பெண் இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், ஒரே சமயம் பலருடன் சேர்ந்து குரூப் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி, இயற்கைக்கு மாறாக உறவுகொண்டு அந்தப் பெண்ணை துன்புறுத்தியிருக்கிறார்கள். எனவேதான், கைதுசெய்யப்பட்டவர்கள் மீது ‘கேங் ரேப்’ வழக்கு பதிவுசெய்துள்ளோம்’’ என்று அவர்கள் சொன்னபோது விக்கித்துப்போனோம்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், ‘‘அவள் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் கணவனும் உடன் வருவான். அவள் எங்களுடன் பேசும்போதெல்லாம் கூடவே இருப்பான். ‘ஏதாவது பிரச்னை செய்தால், குழந்தையையும் உன்னையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டியிருக்கிறான். இது போன்று பாதிக்கப்பட்ட பல பெண்கள் வெளியே சொல்ல பயந்து, வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்.

கேரளாவில் வொய்ஃப் ஸ்வாப்பிங் புகார்கள் ஒன்றும் புதிதல்ல... 2013-ல் கொச்சி கப்பற்படை அதிகாரியின் மனைவி ‘வொய்ஃப் ஸ்வாப்பிங்’ குறித்துப் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘என் கணவனின் சம்மதத்தோடு மற்ற அதிகாரிகள் என்னைக் கூட்டு பலாத்காரம் செய்தார்கள். என் கணவன் மற்றொரு கமாண்டரின் மனைவியுடன் நெருக்கமாக இருந்தார். பின்னர் அது போன்று என்னை ஈடுபடுத்த முயன்றபோது நான் சம்மதிக்காததால், என்னைக் கூட்டு பலாத்காரம் செய்ததுடன், மனநோயாளியாகவும் சித்திரிக்க முயன்றார்’ என்று புகாரில் கூறியிருந்தார்.

கேரளாவை அதிரவைத்த ‘வொய்ஃப் ஸ்வாப்பிங்’!

2019-ம் ஆண்டு ஆலப்புழா மாவட்டம், காயாங்குளத்தில் ‘வொய்ஃப் ஸ்வாப்பிங்’ புகார் வந்ததை அடுத்து, கணவன் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டார்கள்.

‘‘முன்பு பெருநகரங்களில் சில கிளப்களில் கீ செயின் தேர்ந்தெடுக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. சில கிளப்களுக்கு கார்களில் வரும் நபர்கள், மேஜையில் காரின் சாவிக்கொத்தைக் குவியலாகப் போடுவார்கள். பின்னர் ஆளுக்கொரு சாவியை எடுப்பார்கள். சாவிக்குரிய நபரின் மனைவியுடன், சாவி கிடைத்த நபர் நெருக்கமாக இருக்கலாம் என்பதுதான் இதன் கான்செப்ட். இப்போது அதுதான் ஆன்லைனில் `சீக்ரெட் குரூப்’ என்றாகிவிட்டது’’ என்று சொல்லும் போலீஸார், ‘‘வொய்ஃப் ஸ்வாப்பிங் பெரும்பாலும் இரு தரப்பு சம்மதத்துடன் நடப்பதால், எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்’’ என்கிறார்கள்.

நம் சமூகம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது?