கோத்தகிரி: காட்டுப்பன்றி தாக்கி பெண் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்! - நீலகிரியில் தொடரும் சோகம்

ஜோனை தாக்கிய காட்டுப்பன்றி திடீரென சரோஜாவையும் தாக்கியது. இதில் சரோஜாவும் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோன். 60 வயதான இவர், நேற்று தனது வீட்டின் முன்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அங்கு வந்த காட்டுப்பன்றி ஒன்று ஜோனை கடுமையாகத் தாக்கியது. வலியில் கதறிய அவரது சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஜோனைக் காப்பாற்ற முயன்றனர்.
ஜோன் வீட்டுக்கு அருகில் வசித்துவரும் சுப்பிரமணி என்பவரின் மனைவி சரோஜா கதவைத் திறந்து வெளியில் வந்திருக்கிறார். ஜோனைத் தாக்கிய காட்டுப்பன்றி, திடீரென சரோஜாவையும் தாக்கியது. இதில் சரோஜாவும் படுகாயமடைந்தார்.

அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சரோஜா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும்,ஜோன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்தச் சோக நிகழ்வு குறித்து கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த தினேஷ், ``இந்தப் பகுதியில், இரண்டு மாதத்தில் நான்கு பேர் காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்திருக்கிறார்கள். இந்தநிலையில், சரோஜா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். பெரும்பாலும், வீடுகளில் மீதமாகும் உணவுக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாததால் அவற்றை உண்பதற்காக கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன.

இது போன்ற சமயங்களில் பெரும்பாலும் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. உணவுக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினால் காட்டுப்பன்றிகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க முடியும்" என்றார்.
இது குறித்து வனத்துறையினர், ``காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்த சரோஜா குடும்பத்துக்கு முதற்கட்டமாக ரூ.50,000 வழங்கியிருக்கிறோம். இது குறித்து சோலூர்மட்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் ஏற்படாமலிருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.