Published:Updated:

வனத்துறை அமைச்சர் மாவட்டத்திலேயே வனவிலங்கு வேட்டை! - அதிரவைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

வனவிலங்கு வேட்டை
பிரீமியம் ஸ்டோரி
வனவிலங்கு வேட்டை

கேரள வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு போடப்பட்டிருக்கு.

வனத்துறை அமைச்சர் மாவட்டத்திலேயே வனவிலங்கு வேட்டை! - அதிரவைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

கேரள வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு போடப்பட்டிருக்கு.

Published:Updated:
வனவிலங்கு வேட்டை
பிரீமியம் ஸ்டோரி
வனவிலங்கு வேட்டை

வனத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான நீலகிரியில், அடுத்தடுத்து அரங்கேறிவரும் ‘வனவிலங்கு வேட்டை’ சம்பவங்கள் அதிர்வலைகளை உருவாக்கிவருகின்றன. இங்கு வேட்டையாடப்படும் விலங்குகளின் இறைச்சிக்கென கேரளாவில் கள்ளச் சந்தையே இருக்கிறது என்பது கூடுதல் அதிர்ச்சி!

``கூடலூரில் வனவிலங்கு வேட்டை அன்றாட நிகழ்வாகிவிட்டது. அவ்வப்போது வனத்துறை ரெய்டு நடக்கிறது என்றாலும், அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருக்கிறது’’ என்கிறார்கள் அப்பகுதி மக்கள். “சமீபத்தில், கூடலூர் ஓவேலி காட்டில் முதுமலை வேட்டை தடுப்புக் காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில், காட்டுமாட்டின் கால்கள், கொம்பு, தோல் உள்ளிட்டவை புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் இருக்கும் வனவிலங்குகள் டி.என்.ஏ பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு விவகாரம் வெளியில் கசியாமல் பார்த்துக்கொண்டார்கள்.

தேடுதல் வேட்டையில் பிடிபட்ட பொருள்கள்
தேடுதல் வேட்டையில் பிடிபட்ட பொருள்கள்

அடுத்த சில நாள்களில் அதே ஓவேலி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் நகர் கிராமத்திலும் வேட்டை தடுப்புக் காவலர்கள் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பூட்டிக்கிடந்த ஒரு வீட்டுக்குள் மான் இறைச்சியும், மான் கொம்புகளும் சிக்கின. கூடவே நாட்டுத் துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள், 92 காலி தோட்டாக்கள், வெடிபொருள்கள், டார்ச் லைட்டுகள், கத்திகள், இறைச்சியை எடைபோட எலெக்ட்ரானிக் தராசு என வனவிலங்கு வேட்டைக்கான எல்லாப் பொருள்களும் இருந்தன. அவற்றையெல்லாம் கூடலூரிலுள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு அள்ளிச் சென்றதோடு சரி, அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லை” என்கிறார்கள் மக்கள்.

கூடலூர் வனப்பகுதியில், உள்ளூரைச் சேர்ந்த வேட்டைக்காரர்களுடன் கேரள வேட்டை கும்பலும் சேர்ந்து கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றன. இதற்கு வனத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் உடந்தை என்ற தகவல் நமக்குக் கிடைத்ததையடுத்து, வனத்துறையின் நேர்மையான இளம் அதிகாரி ஒருவரிடம் இது குறித்து விசாரித்தோம்.

சுப்ரியா சாஹூ
சுப்ரியா சாஹூ

“கேரள வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு போடப்பட்டிருக்கு. எல்லா இடங்களிலும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் அங்குள்ள வேட்டை கும்பல் கூடலூர் பக்கம் வந்துட்டாங்க. ஒரு கிலோ காட்டுமாட்டுக் கறி கேரள கள்ளச் சந்தைகளில், 800 ரூபாயில் ஆரம்பித்து 1,000 ரூபாய் வரை விலை போகிறது. காட்டுமாட்டுக் கறியை விரும்புகிற வசதியான நபர்கள் மற்றும் பெரிய ஹோட்டல்களில் முதலில் ஆர்டர் எடுத்துக்கொண்டு, அப்புறமாகத்தான் கூடலூருக்கே இந்தக் கும்பல்கள் வருகின்றன. உள்ளூர் வேட்டை கும்பலையும் சேர்த்துக்கொண்டு நைட் 12 மணிக்கு மேல காட்டுக்குள்ள போவாங்க.

நெத்தியில டார்ச் லைட்டைக் கட்டிக்கிட்டு, கையில துப்பாக்கியோட காட்டுமாட்டுக் கூட்டத்தைத் தேடுவாங்க. உள்ளூர் ஆட்கள் ஏற்கெனவே காட்டுமாட்டுக் கூட்டம் இருக்கும் ஏரியாவை நோட்டம்விட்டு வெச்சுருக்கறதால, மிகச்சரியா அந்த இடத்துக்குப் போய் மாடுகளைச் சுத்தி வளைப்பாங்க. அங்கே இருக்குறதுலயே பெரிய மாட்டை நெற்றியில் குறிபார்த்து சுட்டு வீழ்த்துவாங்க. இரட்டைக்குழல் துப்பாக்கியால காட்டுமாடுகளின் நெற்றியில் குறிபார்த்துச் சுட்டால் மட்டும்தான் அவை சாகும்.

வனத்துறை அமைச்சர் மாவட்டத்திலேயே வனவிலங்கு வேட்டை! - அதிரவைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஒரு காட்டுமாட்டை அடிச்சா குறைஞ்சது 700 முதல் 1,300 கிலோ வரை கறி கிடைக்கும். தோல், கால், தலை மாதிரி தேவையில்லாததையெல்லாம் அங்கேயே புதைச்சுட்டு, கறியை மட்டும் ரோடு வரைக்கும் தூக்கிட்டு வந்து ஜீப்பில் ஏத்தி, விடியறதுக்குள்ள கேரளாவுக்குள் கடத்திக் கொண்டுபோயிடுவாங்க. இதுல வனத்துறை அதிகாரிகள் சிலருக்கும் கணிசமா மாமூல் போகுது” என்றார் வேதனையுடன்.

இந்த அதிர்ச்சிப் புகார்கள் குறித்து கூடலூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரத்திடம் கேட்டோம். “கூடலூரில் நடைபெற்ற வேட்டை தொடர்பாக உதவி வனப் பாதுகாவலர் (பயிற்சி) மற்றும் ரேஞ்சர் அடங்கிய குழுவினரிடம் தீவிர விசாரணை நடத்திவருகிறோம். எனவே, இது விஷயமாக இப்போது வெளிப்படையாக எதையும் பேச முடியாது” என்று முடித்துக் கொண்டார்.

வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஊட்டி சாதிக், ‘‘காவல்துறையிலுள்ள குற்றத் தடுப்புப் பிரிவைப் போன்று வனத்துறையிலும் வனக் குற்றங்களைத் தடுக்க சிறப்புப் பிரிவு தேவை. வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளர்களுக்கு உரிய பயிற்சி கொடுத்து ஆயுதங்களும் வழங்க வேண்டும். நவீன கட்டமைப்பை உருவாக்கினால் மட்டுமே விலங்குகள் வேட்டையை முற்றிலுமாக ஒழிக்க முடியும்” என்றார்.

கொம்மு ஓம்கார், ஊட்டி சாதிக், சுப்ரியா சாஹூ, ராமச்சந்திரன்
கொம்மு ஓம்கார், ஊட்டி சாதிக், சுப்ரியா சாஹூ, ராமச்சந்திரன்

தமிழ்நாடு வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹூவிடம் இது குறித்துக் கேட்டபோது, “வனவிலங்குகள் வேட்டையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மாவட்ட வன அலுவலர்களுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்கிவருகிறோம். வேட்டை கும்பலை கண்காணிக்க நவீன தொழில்நுட்ப உத்திகளை விரைவில் தமிழக வனத்துறை அமல்படுத்தவிருக்கிறது” என்றார்.

இந்த விவகாரத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். “முன்பிருந்ததை விட கடந்த ஓராண்டில் வனவிலங்குகள் வேட்டை வெகுவாகக் குறைந்திருக்கிறது. வேட்டையை முழுமையாகக் குறைக்க, கூடுதலாக வேட்டை தடுப்புக் காவலர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை முதல்வர் உத்தரவின்பேரில் செய்துவருகிறோம்” என்றார்.

சுற்றுச்சூழல் அணி அமைத்தால் மட்டும் போதாது... சுற்றுச்சூழலைக் காப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism