பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயருமா? #DoubtOfCommonMan
கொரோனா பாதிப்பால் பொருளாதாரமே மந்த நிலையைச் சந்தித்துவரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பலதரப்பட்ட மக்களையும் பெருமளவில் பாதித்துள்ளது.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், வாசகர் ஆனந்த் மோகன் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். ``தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே, இதனால் விலைவாசி ஏறுமா?" என்பதே அவரது கேள்வி. அந்தக் கேள்விக்கான பதிலை இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

தற்போது, சென்னையில் பெட்ரோல் விலை 81.82 ரூபாயாகவும், டீசல் விலை 74.77 ரூபாயாகவும் இருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைச் சந்தித்து வந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை இவற்றின் விலை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதற்குக் காரணம், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகள். கொரோனா பாதிப்பால் பொருளாதாரமே மந்த நிலையைச் சந்தித்துவரும் நிலையில், இந்த விலை உயர்வு பலதரப்பட்ட மக்களையும் பெருமளவில் பாதித்துள்ளது.

``ஏற்கெனவே ஊரடங்கு மற்றும் கொரோனா பீதியால் மக்கள் ஆட்டோவில் ஏறத் தயங்குகிறார்கள். அதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். இந்நிலையில் பெட்ரோல் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியவில்லை" என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு டெலிவரி சேவைப் பணியாளர்களும் இந்த விலையுயர்வால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ``அதிக ஊக்கத்தொகை மற்றும் குறைவான பெட்ரோல் விலைதான் எங்களது வருமானத்தை நிர்ணயிக்கின்றன. கொரோனாவால் ஊக்கத்தொகை குறைந்துவரும் நிலையில், பெட்ரோல் விலையும் உயர்ந்துகொண்டே இருந்தால், எங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்வதே கேள்விக்குறியாகும்’’ என்கின்றனர்.
மத்திய அரசு வருவாய் ஈட்ட, கடந்த மாதம் பெட்ரோல் மற்றும் டீசல்மீது பல்வேறு வரிகளை விதித்தது. பெட்ரோல்மீது லிட்டருக்கு கலால் வரியாக ரூ.10, சாலை மற்றும் உட்கட்டமைப்பு செஸ்ஸாக ரூ.8, கூடுதல் கலால் வரியாக ரூ.2 விதிக்கப்பட்டது. அதேபோல் டீசல் மீதும் கலால் வரியாக ரூ.13, சாலை மற்றும் உட்கட்டமைப்பு செஸ்ஸாக ரூ. 8, கூடுதல் கலால் வரியாக ரூ.5 விதிக்கப்பட்டது. ஆனால், ஊரடங்கு காரணமாக பெட்ரோல் டீசலின் தேவை குறைவாக இருந்ததால், இந்த வரிச்சுமையை மக்கள் மீது திணிக்காமல் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாபத்திலிருந்து ஈடு செய்துகொண்டன. தற்போது, பல பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பெட்ரோல் டீசலுக்கான தேவை அதிகரித்துவருவதால், எண்ணெய் நிறுவனங்கள் வரிச் சுமையை எப்போதும் போல மக்கள்மீது விலையுயர்வாகத் திணித்துள்ளன.

ஏற்கெனவே, கொரோனா மற்றும் தொடர் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்திருக்கிறது. தற்போது பெட்ரோல், டீசல் விலையுயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உண்டா? என்று பொருளாதார வல்லுநர் ஷ்யாம் சேகரிடம் கேட்டோம்.
``மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பெருமளவிலான வருமானம் பெட்ரோல், டீசல் மீதான வரிகளிலிருந்துதான் கிடைக்கிறது. ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் பெட்ரோல், டீசலின் தேவை குறைந்து அரசுகளின் வருவாயும் குறைந்துகொண்டேபோனது. மேலும், கொரோனா பாதிப்பால் மத்திய , மாநில அரசுகள் பல எதிர்பாராத செலவுகளைச் சந்தித்துவருகின்றன. பரிசோதனைக் கிட்டுகள் வாங்குவது முதல் இழப்பீடு வழங்குவது வரை பல எதிர்பாரா செலவுகள். இச்செலவுகளைக் கையாள பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்துவதுதான் அவர்களுக்கிருக்கும் ஒரே வழி.
இன்னும் சில நாட்களுக்கு இந்த வரிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் இந்த வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிமீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கடந்த மே மாதத்திற்கான மொத்த விலைக் குறியீடு (wholesale price index) 3.21% குறைந்துள்ளது. அதையும் தாண்டி, பல இடங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றால், அதற்கு போக்குவரத்து சிக்கல்களும், சில முதலாளிகளின் லாபமீட்டும் எண்ணமும்தான் முக்கியக் காரணங்கள். இப்பிரச்னைகள் வெகு நாட்களுக்கு நிலைக்கப்போவதில்லை. விரைவில் விலைவாசியும் கட்டுக்குள் வந்துவிடும்” என்கிறார் அவர்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
