Election bannerElection banner
Published:Updated:

`நடிகைக்கு நீதி... எனக்கு அநீதியா?' - எஸ்.எஸ்.ஐ மீது பகீர் புகார் சொல்லும் பெண்... நடந்தது என்ன?

பெங்களூரில் நடந்த திருமணம்
பெங்களூரில் நடந்த திருமணம்

``காவல்துறை என் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்… நடிகைக்கு நீதி எனக்கு அநீதியா?' என்றும் கேட்டு சமூக வலைதளங்களில் பானுரேகா வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரியைச் சேர்ந்த் பானுரேகா என்ற பெண், `சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் பிரபாகரன், திருமணம் என்ற பெயரில் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் இதுகுறித்து காவல்துறையில் பலமுறை புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், என்னைப் போலவே, வேறொரு எஸ்.ஐ மீது சமீபத்தில் நடிகை ஒருவர் புகார் கொடுத்தார். அதில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை என் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்… நடிகைக்கு நீதி எனக்கு அநீதியா?' என்றும் கேட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமிஷனர் அலுவலகத்தில் பானுரேகா
கமிஷனர் அலுவலகத்தில் பானுரேகா

என்ன பிரச்னை? பானுரேகாவிடம் பேசினோம், ``எனக்குச் சொந்த ஊரு… சென்னையை அடுத்த எண்ணூர். காசிமேட்டில் இப்போ எஸ்.எஸ்.ஐ-யாக இருக்கிற பிரபாகரனும் எங்க ஏரியாதான். நான் காலேஜ் படிச்சிட்டிருந்தபோதே நாங்க ரெண்டுபேரும் காதலிச்சோம். நான் பட்டியலினம்… அவர் வேற்று பிரிவைச் சேர்ந்தவருங்கிறதால ரெண்டுபேர் வீட்டுக்கும் தெரியாம 1994-ல் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம். பிறகு, என் வீட்ல ஏத்துகிட்டாங்க. ஆனா, அவர் அவங்க வீட்ல கல்யாணம் நடந்ததையே சொல்லலை.­­

`எங்க வீட்ல இப்போ சொன்னா பிரச்னை ஆகும். அப்புறமா சொல்லிக்கலாம்’னு எங்க வீட்டுக்கு வரப் போக இருந்தார். ஒரு வாரம் என்கூட குடும்பம் நடத்திட்டு அடுத்த ரெண்டு நாள் அவர் வீட்டுக்குப் போயிட்டு வருவார். ஆறு மாசம் ஓடிருச்சு. இப்ப சொல்லுவார்… அப்போ சொல்லுவார்னு காத்திருந்து பார்த்துட்டு, `மொதல்ல உங்க வீட்ல சொல்லுங்க… இதுக்கு மேல இப்படியே ஓட்ட முடியாது’ன்னு என் அப்பா அம்மா அவர்கிட்ட சொல்லிட்டாங்க.

`நடிகைக்கு நீதி... எனக்கு அநீதியா?' - எஸ்.எஸ்.ஐ மீது பகீர் புகார் சொல்லும் பெண்... நடந்தது என்ன?

இதுக்கு இடையில, கல்யாணமான விஷயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சுருச்சு. சாதி வெறி பிடிச்ச அவங்க எங்களை வீடு புகுந்து அடிச்சு அந்த ஊரை விட்டே துரத்திட்டாங்க. ஆரம்பத்துல சப்போர்ட்டா இருந்த பிரபாகரன் போகப்போக மோசமா நடந்துகிட்டார். அவரும் என் சாதியைச் சொல்லித் திட்ட ஆரம்பிச்சார். நான், தம்பி, அப்பா, அம்மான்னு நாலு பேரும் சொந்த வீட்டை அப்படியே போட்டுட்டு சென்னையில வந்து வாழ்ந்தோம்… இதுக்கு மேல அவன்கூட வாழ முடியாது’ன்னு சொல்லி எனக்கு எங்க வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்தாங்க. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் என்னால எப்படித் தடுக்க முடியும்? கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். 1995-ல் வீட்ல பார்த்து சீனிவாசன் என்பவரை கல்யாணம் பண்ணி வெச்சாங்க. நடந்ததையெல்லாம் மறந்துட்டு புது வாழ்க்கையைத் தொடங்குனேன்… ஒரு குழந்தை பொறந்துச்சு. இதுக்கு இடையில அவருக்கும் கல்யாணம் ஆகிட்டதா கேள்விப்பட்டோம்.

இதுக்கு அப்புறமும் ஏன் சொந்த ஊரை விட்டு மறைஞ்சு வாழணும்… நாம என்ன தப்பு செஞ்சோம்னு குழந்தையைத் தூக்கிகிட்டு ஊருக்குப் போனோம். குழந்தை பொறந்து இருபது நாள்கூட ஆகலை. திரும்ப வீட்டுக்கு வந்து பிரச்னை பண்ண ஆரம்பிச்சுட்டார். இவ என் பொண்டாட்டி நான்தான் இவளைக் கல்யாணம் பண்ணேன்… இந்தக் குழந்தைகூட எனக்குப் பொறந்ததுதான்… நீ இல்லாத நேரத்துல நான் எப்ப கூப்பிட்டாலும் வருவா’ன்னு சொல்லி அந்தக் கல்யாணத்தைப் பிரிச்சுட்டார். இரண்டாவதா என்னை கல்யாணம் பண்ணிகிட்டவர் எனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் குழந்தைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டுப் போயிட்டார். என் குழந்தைக்கு யார் அப்பான்னு சொல்ல முடியாத கொடுமையான சூழல்…

குழந்தையை வெச்சுகிட்டு நான் தனியா கஷ்டப்பட்டுகிட்டிருந்த சூழல்ல, என் அப்பாவோட நண்பரோட பையனான முருகானந்தம் என்னை கல்யாணம் பண்ணிக்க முன்வந்தார். என் கடந்தகால வாழ்க்கையைப் பத்தி எல்லாம் முருகானந்தத்துக்கு தெரிஞ்சிருந்ததால நானும் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். 1999-ல எனக்கும் முருகானந்தத்துக்கும் கல்யாணம் நடந்துச்சு. அடுத்த வருஷமே எனக்கும் முருகானந்தத்துக்கும் ஆண் குழந்தை பிறந்துச்சு. அந்த வாழ்க்கையாவது எந்தப் பிரச்னையும் இல்லாம நீடிக்கும்னு பார்த்தா அதுலயும் பிரச்னை பண்ணினார் பிரபாகரன். முருகானந்தத்துக்கு எல்லாமே தெரியும்ங்கிறதால பழையபடி என் மேல பழி சொல்லி பிரிக்க முடியலை. அதனால் உன் மேல கேஸ் போட்ருவேன்னு அவரை மிரட்டி என்னைவிட்டு விலக வெச்சுட்டார். அந்த வாழ்க்கையும் அதோட போச்சு.

இனிமேல் இந்தக் கல்யாண வாழ்க்கையே வேணாம்னு கொஞ்ச வருஷம் சென்னையிலயே என் குழந்தைகளோட தலைமறைவா வாழ்ந்தேன். 2007-ல் எனக்கு பெங்களூரில் வேலை கிடைக்க என் பிள்ளைகளோடு அங்கு போய் செட்டில் ஆகிட்டேன். எந்தப் பிரச்னையும் இல்லாம நான் நிம்மதியா இருந்துகிட்டிருந்த சூழல்ல 2017-வது வருஷம் சென்னைக்கு உறவினர் கல்யாணத்துக்காக வந்திருந்தப்போ பிரபாகரனும் அங்கே வந்திருந்தார். என்னைப் பார்த்துட்டு என்னை மன்னிச்சிடுன்னு கால்ல விழுந்து கெஞ்சினார். ஆனா, நான் ஒத்துக்கலை.

பானுரேகா-பிரபாகரன்
பானுரேகா-பிரபாகரன்

பெங்களூரு வந்து, நான் செஞ்சது தப்புதான் இனிமேல் அதுமாதிரியெல்லாம் நடக்காதுன்னு என்கிட்டயும் என் பொண்ணுகிட்டயும் என் அம்மாகிட்டயும் கதறினார். அவரும் அவர் மனைவியும் பிரிஞ்சிட்டதா சொல்லி அவங்க ரெண்டுபேரும் கையெழுத்திட்ட பத்திரத்தையும் காட்டினார். காலம் அவரை திருத்தியிருக்கும்னு நம்பி, மனசு இறங்கிட்டேன். பெங்களூரு வீட்லயே வெச்சு என்னை மறுபடியும் கல்யாணம் பண்ணி சென்னை அழைச்சுட்டு வந்தார்.

இங்க வந்து ஒரு வருஷம் நார்மலா போச்சு. கொஞ்ச நாளுக்கு அப்புறமாதான் அவர் இன்னொரு பொண்ணுகூடவும் குடும்பம் நடத்திகிட்டிருக்கார்னு தெரிஞ்சது. ஒருமுறை பெண் டிரைவை வெச்சுட்டுப் போயிட்டார். அதை எடுத்துப் போட்டுப் பார்த்தா ஏகப்பட்ட பொண்ணுங்களோட போட்டோ... ஆடியோ... எவிடன்ஸ் ஒண்ணு எவிடன்ஸ் ரெண்டுன்னு நம்பர் போட்டு வெச்சிருந்தார். அது என்ன எவிடென்ஸுன்னு பார்த்தா அந்தப் பொண்ணுங்க இவரைத் திட்டினது, இவர்கிட்ட கொஞ்சுறதுனு ஆடியோ இருக்கு. அந்த ஆடியோல இவர் பேசறது எதுவுமே இல்லை. இதெல்லாம் தெரிய வர்றதுக்கு இடையில என்கிட்ட பேங்க்ல லோன் போடச் சொல்லி, என் பி.எஃப் பணத்தை எடுக்கச் சொல்லினு 16 லட்சம் ரூபாய்க்கு மேல சுருட்டிட்டார். நான் சேர்த்து வெச்சிருந்த எல்லாம் போச்சு. பத்தாததுக்கு என் ஆபீஸுக்குப் போன் பண்ணி என்னைப் பத்தி தப்புத்தப்பா சொல்லி என் வேலையைப் போக வெச்சுட்டார்.

என்னை கடுமையா டார்ச்சர் பண்ணார். சூடு வைக்கிறது, அடிக்கிறது… மாடியில இருந்து ஏறி இறங்கிட்டே இருக்கச் சொல்றதுன்னு அவர் பண்ணின கொடுமைகளுக்கு அளவே இல்லை. அப்புறம் ஒருநாள் திடீர்னு சொல்லாம கொள்ளாம வீட்டைவிட்டுப் போயிட்டார். வீட்டுக்கே வர்றதில்லை. வேற ஒரு பொண்ணுகூட வாழ்ந்துகிட்டிருக்கார். கமிஷனர் ஆபீஸ் வரை புகார் கொடுத்துப் பார்த்துட்டேன் எந்த நடவடிக்கையும் இல்லை அதனாலதான் வீடியோ போட்டேன். அந்த ஆளுக்கு ஒரு பாடம் புகட்டாம சாகக்கூடாதுன்னு இருக்கேன்” என்றார் கண்ணீருடன்.

பானு ரேகாவுடன் போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்
பானு ரேகாவுடன் போலீஸ் எஸ்.எஸ்.ஐ பிரபாகரன்

இதுதொடர்பாக விளக்கம்பெற காசிமேடு காவல்நிலையத்தின் எஸ்.எஸ்.ஐ பிரபாகரனிடம் பேசினோம், ``அவங்க சொல்றது எல்லாமே சுத்தப் பொய். அவங்கதான் என்கிட்ட காதலை முதல்ல சொன்னாங்க. ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டதும் உண்மைதான். ஆனா, சேர்ந்து வாழலை. அவங்கவங்க வீட்ல வாழ்ந்தோம். அப்போ பானுரேகா வேலை பார்த்த இடத்துல சீனிவாசனிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கு. அது எனக்குத் தெரிஞ்சதுமே கண்டிச்சேன். அதுக்கு அப்புறம்தான் அவங்க என்னைவிட்டு பிரிஞ்சு போனாங்க. அவங்க என்னை விட்டுட்டுப் போனதால நான் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாகி மதுவுக்கெல்லாம் அடிமையாகிருந்தேன். அப்புறம் மனச மாத்திகிட்டு 1997-லதான் நான் கல்யாணம் பண்ணிகிட்டேன். அதுக்கு அப்புறம் நான் என் வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சேன். பானுரேகா கல்யாணம் பண்ணிகிட்ட சீனிவாசன் ஏற்கெனவே கல்யாணம் ஆனவர். அவரோட முதல் மனைவி தகராறு பண்ணதாலதான் அவங்களைவிட்டுட்டுப் போயிட்டார்.

அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அதேபோல மூணாவதா கல்யாணம் பண்ணிகிட்ட முருகானந்தம் கடுமையான குடிகாரர். அதனால இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிஞ்சுட்டார். அதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 2017 காலகட்டத்துல எல்லாத்தையும் மறந்துட்டு நாம ஃபிரெண்ட்ஸா இருக்கலாம்னு என்கிட்ட போன்ல பேசிகிட்டிருந்தாங்க பானுரேகா. நானும் பேசிகிட்டிருந்தேன். ஒரு கேஸ் விஷயமா பெங்களூரு போக வேண்டி இருந்துச்சு. அப்போ வீட்டுக்கு வரவெச்சு. என்னை வீட்டுல பூட்டி வெச்சு இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னா என்னை ரேப் பண்ணிட்டன்னு போலீஸ்ல கேஸ் கொடுத்திருவேன்னு மிரட்டினாங்க. எனக்கு வேற வழி தெரியாம அந்த நேரத்துல மாலை மாத்திகிட்டோம். இந்தத் தகவல்களையெல்லாம் விசாரணையில தெளிவா சொல்லிட்டேன். நீங்க இப்போகூட என் வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்துல உள்ளவங்களை விசாரிக்கலாம். என்மேல எந்தத் தவறும் இல்லை. என்கிட்ட இருந்து பணம் பறிக்கறதுக்காக இப்படி நாடகமாடுறாங்க” என்றார் குமுறலோடு.

மிரட்டப்பட்டு நடந்தது என பிரபாகரன் சொல்லும் பெங்களூரு திருமணத்தின் படம்
மிரட்டப்பட்டு நடந்தது என பிரபாகரன் சொல்லும் பெங்களூரு திருமணத்தின் படம்

இருவரின் வாதங்களையும் கேட்டு நமக்கு தலைசுற்ற… இவர்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தாரணியிடம் பேசினோம், ``பிரபாகரனுக்குப் பிறகு பானு ரேகாவை திருமணம் செய்துகொண்ட சீனிவாசன் நாங்கள் கருத்துவேறுபாடு காரணமாகத்தான் பிரிந்தோம் என்று கூறியிருக்கிறார். மூன்றாவதாகத் திருமணம் செய்த முருகானந்தத்தை எங்களால் ட்ரேஸ் செய்ய முடியவில்லை. இப்படி இந்த வழக்கில் ஏகப்பட்ட குழப்பங்கள். பானுரேகா மாற்றி மாற்றிப் பேசுகிறார். அடிப்படையில் இவர்கள் இருவரும் முதலில் செய்த பதிவுத் திருமணத்தை விவாகரத்து செய்யவில்லை. அந்தக் குற்றத்துக்காக பிரபாகரன் மீது புகார் பதிவு செய்யப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்காதபட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை என்னவென்பது தெரியவரும். மற்றபடி இதில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு எந்த விஷயமும் இல்லை” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு