அரசியல்
அலசல்
Published:Updated:

வீட்டை எழுதிக்கொடு... இல்லாட்டி செத்துத்தொலை...

அரசம்மாள் வீடு
பிரீமியம் ஸ்டோரி
News
அரசம்மாள் வீடு

தீக்குளித்திருந்தால் தீயின் கொடுமை தாங்க முடியாமல் சத்தமிட்டபடி அங்குமிங்கும் ஓடியிருப்பார். அதற்கான அறிகுறி எதுவும் இல்லை.

‘பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு’ என்பது கிராமத்து சொல்வழக்கு. அதை நிரூபிப்பதுபோல நெல்லையில் சொத்துக்காக மகனே பெற்ற தாயை உயிருடன் தீவைத்துக் கொளுத்திய கொடூரம் நடந்திருக்கிறது.

திருநெல்வேலி அருகேயுள்ள மணப்படைவீடு கிராமத்தைச் சேர்ந்தவர், அரசம்மாள். 70 வயது மூதாட்டியான அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி தனிக்குடித்தனம் இருக்கிறார்கள். அரசம்மாளின் கணவர் சிவசுப்பு, நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சில வருடங்களுக்கு முன்பு அவர் இறந்துவிடவே, தன் மூத்த மகன் அண்ணாமலையுடன் கே.டி.சி.நகர்ப் பகுதியில் வசித்துவந்தார் அரசம்மாள்.

அரசம்மாள்
அரசம்மாள்

இந்த நிலையில், அரசம்மாள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்த நிலையில், அவரைச் சொந்த மகனும், மருமகளும் சேர்ந்து கொன்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் பற்றிப் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசியபோது, “அரசம்மாளுக்கும், அவரின் மருமகள் அனிதாவுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். வயதுக்குக்கூட மரியாதை கொடுக்காமல் மாமியாரை அனிதா வாய்க்கு வந்தபடி பேசுவார். ஆனால், அவர் எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பார். சில நேரங்களில் மனைவியோடு சேர்ந்து மகன் அண்ணாமலையும் தாயைக் கடுமையாகத் திட்டுவார்.

வீட்டை எழுதிக்கொடு... இல்லாட்டி செத்துத்தொலை...

அரசம்மாளுக்குக் கணவரின் பென்ஷன் வருகிறது. அதோடு, மணப்படைவீடு கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலமும், வீடும் இருக்கின்றன. தற்போது அவர்கள் வசிக்கும் வீடுகூட மூதாட்டி அரசம்மாள் பெயரிலேயே இருக்கிறது. அதை அண்ணாமலை தன் பெயருக்கு எழுதிக்கொடுக்குமாறு வற்புறுத்திவந்தார். ‘இப்பவே என்னை மதிக்கலை. சொத்தையும் எழுதிக்கொடுத்துட்டா என் நிலைமை?’ என்று தாய் மறுத்ததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடக்கும்.

மகனும் மருமகளும் அடிக்கடி சண்டையிட்டதால் ஒரு கட்டத்தில் அரசம்மாள் வீட்டின் பின்புறம் இருக்கும் அறையில் தனியாகத் தங்கி, தானாகவே சமைத்துச் சாப்பிட்டுவந்தார். ஆனாலும்கூட அவரிடம் அனிதாவும் அண்ணாமலையும் அடிக்கடி சண்டையிடுவார்கள். அதுபோல கடந்த 29-ம் தேதி அண்ணாமலை வேலைக்குப் போவதற்கு முன்பாகத் தாயுடன் சண்டையிட்டார்.

அப்போது ‘ஊர்ல இருக்குற நிலத்தையும் வீட்டையும் தம்பிக்கு எழுதிவெச்சுட்ட... மரியாதையா இந்த வீட்டையாவது என் பேருக்கு எழுதிக்கொடு... இல்லேன்னா செத்துத்தொலை’ என்று சத்தமாகக் கத்திவிட்டுப் போனார். ஆனால், அந்தம்மாவிடமிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. `வழக்கமாக நடக்கிற சண்டைதானே...’ என்று நாங்கள் இருந்துவிட்டோம். ஆனால், மகனும் மருமகளும் சேர்ந்து அவரை எரித்துக் கொல்வார்கள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று வருத்தப்பட்டார்கள்.

அண்ணாமலை, அனிதா
அண்ணாமலை, அனிதா

29-ம் தேதி அரசம்மாள் வீட்டிலிருந்து கரும்புகை வந்திருக்கிறது. வீட்டின் பின்பகுதியில் வசிக்கும் அரசம்மாள், மரக்கட்டைகளைப் பயன்படுத்தியே சமையல் செய்வது வழக்கம் என்பதால் அங்கு குவித்துவைக்கப்பட்டிருக்கும் விறகில் தீப்பற்றியிருக்கக்கூடும் என நினைத்த அருகிலுள்ள வீடுகளைச் சேர்ந்தவர்கள், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புத்துறையினர் கட்டைகளில் பற்றியிருந்த தீயை அணைத்தபோதுதான் மரக்கட்டைகளின் உள்ளே எரிந்துபோன நிலையில் மூதாட்டியின் உடல் கிடப்பதைப் பார்த்திருக்கின்றனர். இது பற்றி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எழிலரசி சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தார்.

மூதாட்டியின் மரணம் தொடர்பாக முதலில், ‘சந்தேக மரணம்’ என வழக்கு பதிந்த போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார்கள். தாங்கள் செய்த கொலையை போலீஸார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நினைத்த அண்ணாமலையும் அனிதாவும் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தனர்.

சரவணன்
சரவணன்

இது குறித்து நெல்லை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் பேசுகையில், “மூதாட்டி அரசம்மாள் சொந்த ஊரில் இருந்த விவசாய நிலம் மற்றும் வீட்டை மற்றொரு மகனுக்கு எழுதிக்கொடுத்தது தொடர்பாக, அண்ணாமலை அடிக்கடி சண்டையிட்டிருக்கிறார். அந்த உயிலை ரத்து செய்துவிட்டு தன் பெயருக்கு எழுதிக்கொடுக்க வற்புறுத்தியிருக்கிறார். அதோடு, தற்போது குடியிருக்கும் வீட்டையும் தன் பெயருக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அதை மறுத்த அரசம்மாள், ‘நான் உயிரோடு இருக்கும்வரை இந்த வீடு என் பெயரில்தான் இருக்கும். எனக்குப் பிறகு இதை நீ எடுத்துக்கொள்...’ என்று சொல்லிவிட்டதால் குடும்பத்தில் பிரச்னை இருந்திருக்கிறது.

சம்பவத்தன்று நடந்த சண்டையில் மருமகள் அனிதா, அரசம்மாளைப் பிடித்துத் தள்ளியிருக்கிறார். அதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மூதாட்டி மயக்கமாகிவிட்டார். அவர்மீது கோபத்தில் இருந்த மகனும் மருமகளும் சேர்ந்து அவரை அங்கு கிடந்த விறகுக்கட்டையின் மீது வைத்து, எரித்துவிட்டு அவர் தீக்குளித்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார்கள்.

தீப்பற்றி எரிந்தபோது அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களே தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். தீக்குளித்திருந்தால் தீயின் கொடுமை தாங்க முடியாமல் சத்தமிட்டபடி அங்குமிங்கும் ஓடியிருப்பார். அதற்கான அறிகுறி எதுவும் இல்லை. அந்தக் கோணத்தில் விசாரித்தபோது, இருவரும் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்து உண்மையையெல்லாம் சொல்லிவிட்டார்கள்” என்றார்.