Published:Updated:

`சண்டையே போடமாட்டேங்குறார்; அன்புத்தொல்லை தாங்கல...!' - விவாகரத்துகேட்டு நீதிமன்றம் சென்ற பெண்

ராம் பிரசாத்

புஜைரா நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் அன்புத்தொல்லை தாங்க முடியவில்லை; விவாகரத்து கொடுங்கள் என நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Love
Love

இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்துள்ளது.... இது தமிழ் சினிமாக்களில் ரிப்பீட்டடாக வரக்கூடிய ஒரு டயலாக். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நீதிமன்றம் உண்மையில் ஒரு விசித்திரமான வழக்கைச் சந்தித்துள்ளது. புஜைரா நகரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. `எனக்கோ சண்டைபோட வேண்டும்.. கணவரோ எப்போதும் அன்பாக நடந்துகொள்கிறார். எனவே, விவாகரத்து வழங்குங்கள்' என நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Love
Love

விவாகரத்து கேட்டு அந்தப்பெண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ``என் கணவர் என் மீது அன்பையும், காதலையும் பொழிகிறார். திருமணம் ஆன ஓராண்டில் இதுவரை என்னிடம் அவர் சண்டையிட்டதே இல்லை. எங்களுக்குள் இதுவரை எந்த விவாதமும் நடக்கவில்லை. வீடுகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தால் நான் கேட்காமலே எனக்கு உதவி செய்கிறார். நீங்கள் உடல் பருமனாக உள்ளீர்கள் என்றேன். உடனே அதனை சீரியஸாக எடுத்துக்கொண்டு கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை உடைந்த கால்களுடன் செய்யத் தொடங்கிவிட்டார்.

ஒருநாளாவது என்னுடன் சண்டைபோடுவார் என நினைக்கிறேன் அது நடப்பதாகத் தெரியவில்லை. பணி காரணமாக வெளியில் சென்று வந்தால் நான் கேட்காமலே பரிசுகளை வாங்கி வந்து குவிக்கிறார். உண்மையான விவாதம் சண்டை போன்றவற்றை விரும்புகிறேன். எனக்கு கட்டுப்பட்டு நடக்கும் கணவரை விரும்பவில்லை'' என மனுவில் கூறியுள்ளார்.

love
love

ஆனால், அவரது கணவரோ `எனது மனைவியிடம் இருந்து என்னை பிரித்து விடாதீர்கள்' என நீதிமன்றத்தில் மன்றாடியுள்ளார். `திருமணமான ஒரு வருடத்தில் ஒருவரை பற்றிப் புரிந்துகொள்வது என்பது கடினம். தவறுகளில் இருந்துதான் பாடம் கற்றுக்கொள்ள முடியும். நான் எப்போதும் எனது மனைவிக்கு நல்ல கணவனாக இருக்க விரும்புகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் இருவரும் மனம் விட்டுப் பேச சிறிது கால அவகாசத்தை வழங்கியுள்ளது.