Published:Updated:

நைட்டு ஃபுல்லா நீ என்கூட இருக்கணும்... அதுக்குத்தான் உன் புருஷனுக்கு நைட் டூட்டி போட்டிருக்கேன்!

பெண் எஸ்.ஐ...
பிரீமியம் ஸ்டோரி
பெண் எஸ்.ஐ...

- உயரதிகாரியின் டார்ச்சரால் விஷம் குடித்த பெண் எஸ்.ஐ...

நைட்டு ஃபுல்லா நீ என்கூட இருக்கணும்... அதுக்குத்தான் உன் புருஷனுக்கு நைட் டூட்டி போட்டிருக்கேன்!

- உயரதிகாரியின் டார்ச்சரால் விஷம் குடித்த பெண் எஸ்.ஐ...

Published:Updated:
பெண் எஸ்.ஐ...
பிரீமியம் ஸ்டோரி
பெண் எஸ்.ஐ...

தமிழகத்தில் சிறப்பு டி.ஜி.பி ஒருவர்மீதான பாலியல் வழக்கு மற்றும் ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணைகளே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ ஒருவர், உயரதிகாரியின் பாலியல் டார்ச்சரால், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது காவல்துறையில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டத்தின் காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றிவருகிறார் அந்தப் பெண் எஸ்.ஐ. இவரின் கணவரும் வேறொரு பிரிவில் காவலராகப் பணியாற்றுகிறார். கடந்த மார்ச் 9-ம் தேதி பெண் எஸ்.ஐ., ‘எனது மேலதிகாரி டி.எஸ்.பி ராஜன் தொடர்ந்து பாலியல் தொல்லை செய்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பணியில் பல்வேறு தொந்தரவுகளைத் தருகிறார்’ என்று மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி, விசாகா கமிட்டியினர், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஆகியோருக்குப் புகார் அனுப்பிவிட்டு, வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, திருச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்தப் பெண் எஸ்.ஐ.

நைட்டு ஃபுல்லா நீ என்கூட இருக்கணும்... அதுக்குத்தான் உன் புருஷனுக்கு நைட் டூட்டி போட்டிருக்கேன்!

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அறிய சம்பந்தப்பட்ட ஸ்டேஷனின் பெண் காவலர்கள் சிலரிடம் விசாரித்தோம்... “அவங்க சுறுசுறுப்பா வேலை செய்வாங்க. ராத்திரி பகலா டூட்டி பார்க்குறதுக்குக் கொஞ்சம்கூட தயங்க மாட்டாங்க. ஏற்கெனவே இங்க டி.எஸ்.பி-யாக இருந்த மதன் டிரான்ஸ்ஃபர்ல போன பிறகு, ராஜன் பொறுப்பு டி.எஸ்.பி-யாக இங்க பணிக்கு வந்தாரு. அவர் வந்ததுல இருந்தே அந்தப் பெண் எஸ்.ஐ-க்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துருக்காரு. மார்ச் 8-ம் தேதி ஸ்டேஷனுக்கு வந்த டி.எஸ்.பி ராஜன், அந்தப் பெண் எஸ்.ஐ-யோட சேர்ல உட்கார்ந்துக்கிட்டு, அவங்களை ஒரு மணி நேரத்துக்கும் மேல நிக்கவெச்சு டார்ச்சர் செஞ்சுருக்காரு. ஒருகட்டத்துல பொறுக்க முடியாம வெளியே வந்த அந்த அக்கா, ‘ச்சீய்... பர்சனல் விஷயத்தையெல்லாம் விசாரிக்கிறாரு’னு கண்கலங்கிட்டாங்க.

அவங்ககிட்ட என்ன, ஏதுன்னு விசாரிச்சப்பதான் அழுதுக்கிட்டே, ‘டி.எஸ்.பி தப்பு தப்பா பேசுறாரு. என்ன உன்னோட டேபிள் மட்டும் இவ்வளவு பெருசா இருக்கு? இதுல என்ன வேணும்னாலும் செய்யலாம்போலன்னு டபுள் மீனிங்குல பேசுறாரு. உடம்பே கூசுற அளவுக்கு என் மேல இல்லாத பொல்லாத பழியையெல்லாம் போட்டு, உன்னோட பழைய ஹிஸ்டரியெல்லாம் எனக்குத் தெரியும்... என்னை ஏன் அவாய்ட் பண்றேன்னு டார்ச்சர் பண்றாரு. இது பத்தாதுன்னு இன்ஸ்பெக்டர் அலாவுதீன் எதுக்கெடுத்தாலும், ‘நீ டி.எஸ்.பி-யை பார்த்துட்டு, ஸ்டேஷனுக்கு வா’ன்னு டார்ச்சர் கொடுக்குறாரு...’னு சொல்லி அழுதாங்க. நாங்கதான், ‘கவலைப்படாதீங்க அக்கா, நீங்க மேலிடத்துல புகார் கொடுங்க’னு ஆறுதல் சொல்லி அனுப்பினோம். ஆனால், வீட்டுக்குப் போனவங்க இப்படியொரு முடிவை எடுப்பாங்கன்னு எதிர்பார்க்கலை...” என்று கலங்கினார்கள்.

பெண் எஸ்.ஐ-யின் கணவரிடம் பேசினோம். “நானும் இதே மாவட்டத்துல காவலரா வேலை பார்க்குறேன். நாங்க ரெண்டு பேரும் காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நான் மனசு கஷ்டப்படுவேன்னு என்கிட்ட பல விஷயங்களை அவங்க சொல்லலை. ஆனா, அடிக்கடி மூட்அவுட்டாகி அழுதுக்கிட்டே வீட்டுக்கு வருவாங்க. கடந்த சிவராத்திரி அன்னைக்கு டூட்டி முடிச்சுட்டு வந்தப்பவும் அப்படித்தான் அழுதாங்க... நான் தீவிரமா விசாரிக்கவும், ‘அந்த டி.எஸ்.பி என்னைத் தப்பா பார்க்குறாரு... இன்னைக்கு நைட்டு ஃபுல்லா நீ என்கூடதான் இருக்கணும். அதுக்காகத்தான் உன் புருஷனுக்கு நைட் டூட்டி போடச் சொல்லியிருக்கேன்னு சொல்லி டபுள் மீனிங்குல பேசி டார்ச்சர் பண்ணாரு’னு கதறி அழுதாங்க. அப்புறம் நான் இல்லாத நேரம் பார்த்து இந்த முடிவு எடுத்துட்டாங்க... இன்னும் அவ அபாயகட்டத்தைத் தாண்டலைனு டாக்டருங்க சொல்றாங்க. எப்படியாவது அவ பொழச்சு வந்தா போதும். நானெல்லாம் சாதாரண போலீஸுங்க... நியாயம் கிடைக்குமா?” என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் விம்மி அழுதார்.

நைட்டு ஃபுல்லா நீ என்கூட இருக்கணும்... அதுக்குத்தான் உன் புருஷனுக்கு நைட் டூட்டி போட்டிருக்கேன்!

இந்தக் குற்றச்சாட்டு குறித்து டி.எஸ்.பி ராஜனிடம் கேட்டோம். ``நான் அரியலூர் பொறுப்பு டி.எஸ்.பி-யாக வந்து 15 நாள்கூட ஆகலை. அந்த லேடி எஸ்.ஐ-யை ரெண்டு தடவைதான் நேர்ல பார்த்துப் பேசியிருக்கேன். அப்படி இருக்கும்போது நான் எப்படி அவங்ககிட்ட தப்பா பேசியிருக்க முடியும்? அப்படிப் பேசியிருந்தா ஆதாரத்தைக் காட்டச் சொல்லுங்க. விசாகா கமிட்டி விசாரிக்கட்டும், தப்பு யார் மேல இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும்” என்றார்.

மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “கரூர் சைபர் க்ரைம் பெண் டி.எஸ்.பி தலைமையிலான டீம் இந்தப் புகார் பற்றி விசாரிக்கிறது. இன்னொரு பக்கம், விசாகா கமிட்டியும் விசாரிக்கிறது. இரு தரப்பிலும் வரும் ரிப்போர்ட்டை வைத்து நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி-க்கு பரிந்துரை செய்வோம். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் கண்டிப்புடன்!

பொதுமக்களில் யாரேனும் இது போன்ற குற்றம் இழைத்தால் உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைக்கும் காவல்துறை, தனது அதிகாரிகள்மீது மட்டும் விசாரணை, பணியிட மாற்றம், வழக்கு இழுத்தடிப்பு என்று மெத்தனம் காட்டுவது ஏன்... கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மானம், மரியாதையும் போய்விடும் என்பதாலா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism