Published:Updated:

அந்த மூன்று நாள்கள் வீட்டிலிருந்தும் தூரம்... விநோத கிராமம்!

ஏக்கல் நத்தம் கிராம பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஏக்கல் நத்தம் கிராம பெண்கள்

நான் நேத்துதான் இங்க வந்தேன். பெரிய பொண்ணு ஆனதிலிருந்து வயசாகி மாதவிடாய் எப்போ நிற்குதோ, அப்போவரை மாதா மாதம் இங்க வந்து தனிமைப்படுத்திக்கணும்.

அந்த மூன்று நாள்கள் வீட்டிலிருந்தும் தூரம்... விநோத கிராமம்!

நான் நேத்துதான் இங்க வந்தேன். பெரிய பொண்ணு ஆனதிலிருந்து வயசாகி மாதவிடாய் எப்போ நிற்குதோ, அப்போவரை மாதா மாதம் இங்க வந்து தனிமைப்படுத்திக்கணும்.

Published:Updated:
ஏக்கல் நத்தம் கிராம பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஏக்கல் நத்தம் கிராம பெண்கள்

`இந்த டெக்னாலஜி யுகத்திலும் இப்படியா' என்று அதிர்ச்சியூட்டுகிறது, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கடைப்பிடிக்கப்படும் விநோத வழக்கம். மாதவிடாய் நாள்களில் உடலை வாட்டும் வலியையும், மனதைப் பிசையும் மாற்றங்களையும் எதிர்கொள்ளும் பெண்களுக்கு அன்பு, அரவணைப்பு, ஊட்டச்சத்தான உணவு என ஆதரவுகாட்ட ஆரம்பித்துவிட்ட காலகட்டம் இது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல் நத்தம் கிராமத்தில் `வீட்டுக்கு தூரம்' என்று சொல்வதைப் போலவே, பெண்களை மூன்று நாள்கள் ஒதுக்கித் தனி இடத்தில் இருக்க வைக்கிறார்கள். என்ன காரணம்? ஏன் அப்படிச் செய்கிறார்கள்?

கிருஷ்ணகிரியிலிருந்து 18 கிலோ மீட்டர் பயணித்தால் ஒரு மலையடிவாரத்தை அடையலாம். அங்கிருந்த அடர்ந்த காடுகள் சூழ்ந்த மலைப்பாதையில் ஏறி 4 கி.மீ பயணம் செய்தால் வருகிறது, ஏக்கல் நத்தம் கிராமம். பாளம் பாளமாகப் பிளந்து கிடக்கும் சாலைகளில் ஆபத்தான வளைவுகள் நிறைய. சலசலத்துக் குறுக்கிடும் ஓடைகளில் மழைநாள்களில் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்தை நிறுத்திவிடும்.

அந்த மூன்று நாள்கள் வீட்டிலிருந்தும் தூரம்... விநோத கிராமம்!

ஊருக்குள் நுழைந்ததும் கைக்குழந்தையுடன் எதிர்ப்பட்ட இளம்பெண் சின்னம்மாவிடம் பேசினேன். “என் சொந்த ஊரு பர்கூர். என் மாமா மல்லப்பனுக்கே இந்த ஊருல எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. இங்க வந்தபிறகுதான் இப்படியொரு வழக்கம் இருக்குன்னே தெரிஞ்சது. பீரியட்ஸ் ஆகிடுச்சுன்னா, வீட்டுப்பக்கம் திரும்பிக்கூட பார்க்காம ஊருக்கு நடுவுல இருக்கிற கட்டடத்துக்குப் போயி தனிமைப்படுத்திக்கணும். ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு கிலோ மீட்டர் தொலைவில இருக்குற ஓடைக்குப் போயி குளிச்சுக்கணும். சாப்பாடு யாரும் கொண்டுவந்து கொடுக்கமாட்டாங்க. அதனால, வீட்டிலிருந்து எடுத்துட்டுப் போன பாத்திரங்கள், சமையல் பொருள்களை வைத்து, குளிக்கிற ஓடைக்குப் பக்கத்துலேயே சமைச்சுக்கணும். வெளியூர்லேருந்து வாழ வந்த எனக்கு இந்த வழக்கம் புதுசாவும் கஷ்டமாவும் இருந்துச்சு. இதை நினைச்சு வருத்தப்படாத நாளே இல்லை. மூணு நாளும் உள்ளேயே அடைஞ்சு கிடக்கணும். ஒரு டி.விகூடக் கிடையாது. இதனால, மாதவிடாய் நாள்கள்ல அம்மா வீட்டுக்குப் போயிடலாம்னு தோணும்” என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

பெண்களைத் தனிமைப்படுத்தும் அந்தக் கட்டடம் எங்கே இருக்கிறது என்று தேடிச் சென்றோம். ‘சுதா மகளிர் சுகாதார வளாகம்’ என்று எழுதப்பட்டு, பார்ப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையம்போல் பளபளவெனக் காட்சியளிக்கிறது. இரண்டு சாதியினருக்கும் தனித்தனி அறைகள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். இப்படி இல்லை என்றால்தானே ஆச்சர்யம்?

உள்ளே இருந்த 40 வயது ஜோதியைச் சந்திக்க கட்டடத்துக்குள் செல்ல முயன்றபோது, “உள்ளே போகக்கூடாது. அப்படிப் போனா குளிச்சுட்டுதான் ஊருக்குள்ள வரமுடியும்” என்று தடை போட்டார்கள். அதனால் ஜோதியை அந்தக் கட்டடத்திலிருந்து வெளியில் வரவழைத்துப் பேசினோம்.

அந்த மூன்று நாள்கள் வீட்டிலிருந்தும் தூரம்... விநோத கிராமம்!

“நான் நேத்துதான் இங்க வந்தேன். பெரிய பொண்ணு ஆனதிலிருந்து வயசாகி மாதவிடாய் எப்போ நிற்குதோ, அப்போவரை மாதா மாதம் இங்க வந்து தனிமைப்படுத்திக்கணும். இப்போவாவது பெரிய கட்டடம் இருக்கு. முன்னாடியெல்லாம் கொட்டகை மாதிரி சின்ன ரூம்தான் இருந்தது. எவ்ளோ மழை பெய்ஞ்சாலும் இங்கதான் தங்கணும். அப்புறம்தான் ஒரு தொண்டு நிறுவனத்துக்காரங்க இந்தக் கட்டடத்தைக் கட்டிக்கொடுத்தாங்க. எனக்கு நாலு பசங்க. நான், இங்க இருக்குறவரைக்கும் பசங்களே சமைச்சுக்குவாங்க. இந்தமாதிரி நாள்களில் குடும்பத்தைப் பிரிஞ்சு தனியா இருக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு. சிலநேரம் பயமாவும் இருக்கும். ஆனா, சாமிக்கு பயந்து இந்த வழக்கத்தைக் கடைப்பிடிச்சிக்கிட்டிருக்கோம். இதெல்லாம் மாறணும்னு ஆசையா இருக்கு” என்று சோகமாகக் கூறியவரிடம், “மற்ற பெண்கள் எல்லாம் எங்கே? நீங்க மட்டும் இருக்கீங்களே?'' என்று கேட்டபோது, “இது மத்தியான நேரமில்லையா? அதான், ஓடை ஓரமா சமைக்கப் போயிருக்காங்க” என்கிறார்.

அந்த மூன்று நாள்கள் வீட்டிலிருந்தும் தூரம்... விநோத கிராமம்!

அந்தப் பெண்களைச் சந்திக்கப் புறப்பட்டபோது எதிர்ப்பட்ட லட்சுமி, “காலங்காலமா நாங்க இப்படித்தாங்க. எங்க மல்லேஸ்வர சாமிக்கு பயந்து இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறோம். எல்லா ஊர்லயும் கொரோனா வந்துச்சு. எங்க ஊர்ல யாருக்கும் வரக் கிடையாது. இதுக்கெல்லாம் எங்க சாமியும் நாங்க கடைப்பிடிக்கிற வழக்கமும்தான் காரணம். கிராமமே நல்லா இருக்கணும்னுதான் இந்த வழக்கத்தை வச்சிருக்காங்க” என்கிறவர், மாதவிடாய் காலத்தில் தனியாக இருப்பது சந்தோஷம்தான் என்று மாறுபட்ட கருத்தையும் கூறுகிறார். “ஊர்ல இருக்கிற பெண்கள் எல்லாம் விவசாய வேலைக்குத்தான் போறோம். மாசம் முழுக்க உழைச்சுட்டு, அந்த நாள்கள்ல எந்த வேலையும் செய்யாம ரெஸ்ட் எடுக்குறோம். இது நல்ல விஷயம்தானே?” என்று கேள்வி எழுப்புகிறார்.

மாதவிடாய் காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பிறந்தாலும் 11 நாள்கள் இந்தக் கட்டடத்திற்குள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மற்றொரு தகவலையும் சொல்லி அதிர்ச்சியடைய வைக்கிறார் மல்லிகா என்ற பெண்மணி. “குழந்தை பொறந்து மூணு நாள்கள் ஹாஸ்பிட்டலில் இருந்தா, ஊருக்குள்ள வந்தபிறகு மீதி எட்டு நாள்கள் இந்தக் கட்டடத்தில் தனிமைப்படுத்திக்கணும். முதல் குழந்தை, ரெண்டாவது குழந்தைக்குத் தகுந்த மாதிரி நாள்கள் வேறுபடும். வீட்டுக்கு தூரம் ஆகும்போதும் சரி, குழந்தை பிறந்தாலும் சரி, குழந்தையை மட்டும் கூடவே வச்சிக்கலாம். இதுமட்டும்தான் எங்களுக்கு ஆறுதலான விஷயம்'' என்கிறார்.

ஜோதி
ஜோதி

“இந்த விஷயத்தை யாரு நினைச்சாலும் மாத்த முடியாது. ஏன்னா, அந்தக் காலத்திலிருந்தே தொடர்ந்துட்டு வர்ற விஷயம். நான் பிளஸ் 2 முடிச்சதும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. படிக்கணும்னு ஆசை இருந்துச்சுதான். ஆனால், பஸ் வசதி இல்லை'' என்கிறார் சாந்தம்மா என்கிற இளம்பெண்.

ஏக்கல் நத்தம் கிராமத்தின் வார்டு மெம்பர் ராமகிருஷ்ணனிடம் பேசினேன். “பத்துத் தலைமுறைக்குமேல இந்த மலையில்தான் வசிக்கிறோம். 200 குடும்பங்கள்கிட்ட இருக்கோம். ஆடு மேய்க்கிறதுதான் எங்க ஊர்க்காரங்களோட தொழில். இந்தச் சின்ன ஊர்ல 1,500 ஆடுகள் இருக்கு. ஒவ்வொரு வீட்டிலும் ஆட்டுக்கொட்டகை உண்டு. சிலருக்கு விவசாய நிலமும் இருக்கு. நிலம் இல்லாதவங்க கூலி வேலை பார்க்கிறாங்க. ரோடு வசதி இல்லாததால மலைக்குக் கீழ யாரும் அதிகமா வேலைக்குப் போறதில்லை. பலமுறை கோரிக்கைகள் வச்சபிறகு, ஒரு வருஷத்துக்கு முன்னாடி ரோடு போட்டாங்க. மழை வந்தா ரோடு முழுக்க வெள்ளம் போகும். அதனால, வேலைக்குப் போறது மட்டுமில்ல, எங்க ஊருல பெண் பிள்ளைகள் தொடர்ந்து படிக்கப் போறதும் தடைபடுது. ஓடைப் பிரச்னை ஒருபக்கம்னா சீசன் டைம்ல நிறைய யானைகள், கரடி உலாவுற காட்டுப்பகுதியாவும் இது இருக்கு.

இங்க எட்டாவது வரைக்கும்தான் ஸ்கூல் இருக்கு. மேல படிக்கணும்னா 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்க மகாராஜா கடை போகணும். பிளஸ் 2 வரை படிக்கணும்னா அங்கிருந்து இன்னும் அஞ்சு கிலோமீட்டர் தூரமா மேகலசின்னம்பள்ளி போகணும். இவ்வளவு கஷ்டத்தையும் கடந்து எங்க ஊர்ல முதன்முதலில் டிகிரி படிச்சது நானும் என் ஃப்ரெண்டு ஜெகனும்தான். சின்ன வயசுல எங்கப்பா என்னை மாடு மேய்க்கத்தான் விட்டாரு. ஆனா, பிடிவாதமா படிச்சு டிகிரி வாங்கினேன். பெண்களும் அப்படிப் பிடிவாதமா இருந்தா படிக்க வைப்பாங்க. ஆனா, சரியான சாலையும் பஸ் வசதியும் இல்லாததால பயந்துகிட்டு பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திடுறாங்க. சிலர் இப்ப பொண்ணுங்களை ஹாஸ்டல்ல தங்க வச்சு படிக்க வைக்கிறாங்க. ஆனா, அதிகபட்சமா படிக்க வைக்கிறதே பிளஸ் 2 வரைக்கும்தான். ஒரு பொண்ணுகூட டிகிரி முடிக்கலை'' என்றவரிடம், ''இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தனிமைப்படுத்தும் வழக்கத்தைத் தொடர்வது சரியா?'' என்று கேட்டேன்.

சமைக்கும் இடத்தில் சென்னம்மாள்
சமைக்கும் இடத்தில் சென்னம்மாள்

‘‘தனிமைப்படுத்துறது இந்த ஊரு ஆண்களோட விருப்பம் இல்லை. எல்லாம் கடவுளுக்குக் கட்டுப்பட்டு நடக்குது. பீரியட்ஸ் டைம்ல மூணு நாள்கள் நாங்க ரெஸ்ட்தான் கொடுக்கிறோம். டவுன்ல பாருங்க. அந்த நேரத்திலும் பெண்கள் வேலைக்குப் போவாங்க. ஆனா, இங்க அப்படிக் கிடையாது. அதேபோல, ஒரு கிலோமீட்டர் நடந்துபோய் சமைக்கிறது, குளிக்கப்போறதெல்லாம் அவங்களுக்குக் கஷ்டமே கிடையாது. காட்டுப்பகுதியில் எல்லாரும் நடந்துகிட்டேதான் இருப்பாங்க. இதெல்லாம் சகஜம்'' என்று நியாயப்படுத்துகிறார்.

தனிமைப்படுத்துதலால் ஓடையோரங்களில் சமைத்துச் சாப்பிடும் பெண்களைச் சந்திக்கச் சென்றோம். ஒற்றையடிப் பாதையில் காட்டுக்குள் சென்றால் அந்த இடம் வருகிறது. அங்கிருந்த சென்னம்மாள், “எவ்ளோ மழை வந்தாலும் வீட்டுக்கு தூரம் ஆச்சுன்னா, தனிமைப்படுத்திக்கிட்டு இங்க வந்துதான் சமைச்சு சாப்பிடணும். காலையில 9 மணிக்கு இங்க வந்து மதியத்துக்கும் சேர்த்து சமைச்சிடுவோம். அதுக்கப்புறம், சாயந்திரம் 4 மணிக்கு இரவுக்கான உணவையும் சமைச்சு எடுத்துட்டுப் போயிடுவோம். இந்தக் காட்டுல கரடி, பாம்பு, பூச்சின்னு நிறைய இருக்கு. ஆனா, இங்கேயே பொறந்து வளர்ந்ததால பழகிப்போச்சு. எங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் இதைக் கடைப்பிடிச்சுதானே ஆகணும்?” என்று கேட்கிறார்.

அந்த மூன்று நாள்கள் வீட்டிலிருந்தும் தூரம்... விநோத கிராமம்!

நாரலப்பள்ளி பஞ்சாயத்துத் தலைவி சாந்தினி உமாபதியிடம் இதுகுறித்துக் கேட்டேன். ‘‘எங்க பஞ்சாயத்தில் 16 கிராமங்கள் உள்ளன. இதில், ஏக்கல் நத்தம் ரொம்பக் கட்டுப்பாட்டோட கடவுள் நம்பிக்கையோட இருக்கும் கிராமம். அதனால, மாதவிடாய் காலங்களில் தனியாகச் சென்று கட்டடத்தில் வசிக்கிறார்கள். இப்படி இருக்கக்கூடாதுன்னு நாங்க சொல்லியிருக்கோம். ஆனா, இது எங்களோட வழக்கம் என்று மாற்றிக்கொள்ள மறுக்கிறார்கள்'' என்கிறார்.

மாதவிடாய் நாள்களில் இப்படித் தனிமைப்படுத்தும் வழக்கம் சரியா? ஓய்வு கொடுக்கவே இது என்று கூறுவதை ஏற்கமுடியுமா? இப்படிப் பல கேள்விகளை உளவியல் நிபுணர் டாக்டர் நப்பின்னை சேரனிடம் கேட்டோம்.

‘‘மாதவிடாயின்போது பெண்களுக்கு ஹார்மோனில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதால் படபடப்புடனும் எரிச்சலுடனும் காணப்படுவார்கள். அந்த நாள்களில் ஓய்வு கட்டாயம் தேவைதான். ஆனால், எல்லாப் பெண்களும் அப்படி இருக்கமாட்டார்கள். சிலர் அதீத சுறுசுறுப்புடன் அப்போதுதான் இயங்குவார்கள். அதனால், தனக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஓய்வு வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பெண்கள்தான் முடிவு செய்யவேண்டும். குடும்பத்தினரோ, சுற்றி இருப்பவர்களோ அல்ல. ‘நீ போய் தனியா இரு' என்று சொல்வதே மனித உரிமைக்கு எதிரானது.

அந்த மூன்று நாள்கள் வீட்டிலிருந்தும் தூரம்... விநோத கிராமம்!

இயற்கையிலேயே பதற்ற சுபாவம் கொண்ட பெண்கள், மாதவிடாயின்போது இன்னும் பதற்றம் கொள்வார்கள். அவர்களைத் தனித்து விடும்போது, நாம் ஒதுக்கி வைக்கப்படுகிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையும் மனரீதியான குழப்பங்களும் வந்துவிடும். ஒதுக்கி வைப்பதால் மனிதர்கள்மீதான நம்பிக்கைதான் குறையும். ‘என் பிரச்னையை நான்தான் பார்த்துக்கணும். நமக்குன்னு கஷ்டம் வந்தா இவங்க யாரும் வரமாட்டார்கள்' என்ற விரக்தி உணர்வு வந்துவிடும்.

இப்படித் தனிமைப்படுத்துவது, யார் யார் மாதவிடாய் அடைந்திருக்கிறார்கள் என்பதை ஊருக்கே தெரிவிப்பதாகும். அடுத்தவரின் பர்சனலை ஊருக்கே தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பெண் இப்போது மாதவிடாய் அடைந்திருக்கிறார் என்பது ஒரு வருகைப்பதிவேடு மாதிரியல்லவா இருக்கிறது! பெண்களுக்கு உடல்ரீதியான சில பிரச்னைகளால் சிலசமயம் மாதவிடாய் வராமலும் இருக்கும். அப்போதெல்லாம் ‘நீ உண்டாகியிருக்கியா' என்ற கேள்வியையும் எதிர்கொள்ளவேண்டி வரும்'' என்கிறார் அவர்.

ஏக்கல் நத்தம் கிராமத்துப் பெண்களின் மாதவிடாய் கால வலியையும் பிரசவ வலியையும்விட, அங்கு கடைப்பிடிக்கப்படும் வழக்கம் வலி மிகுந்தது என்பதை மட்டும் உணர முடிந்தது.