Published:Updated:

வேட்புமனு தாக்கல், பிரசாரத்துக்கு வரவில்லை! ஆனாலும் வெற்றி பெற்று கவுன்சிலரான திமுக வேட்பாளர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண் கவுன்சிலர் சௌமியா ஜெகதீஷ்
பெண் கவுன்சிலர் சௌமியா ஜெகதீஷ்

ராதாபுரம் யூனியன் தேர்தலில் போட்டியிட்ட பெண் கவுன்சிலர் வேட்பாளர் மக்களைச் சந்திக்க வரவே இல்லை. நோட்டீஸில் அவரது படம்கூட அச்சிடப்படவில்லை. ஆனாலும் வெற்றிபெற்ற அவர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தேர்தல் என்றாலே சூறாவளியாகப் பிரசாரம் செய்து, மக்களைச் சந்திக்கவேண்டியது அவசியம். தேர்தல் பிரசாரம் செய்தால் மட்டுமே வாக்காளர்களின் மனதில் இடம்பெற்று வெற்றியைக் கைப்பற்ற முடியும் என்பதால் வேட்பாளர்கள் பலரும் தீவிரமாகக் களப்பணியாற்றுவார்கள்.

’பெருமாத்தாள் எனும் நான்..’ - ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்ற 90 வயது பாட்டி!

ஆனால், ராதாபுரம் யூனியனுக்கு உள்பட்ட 17-வது வார்டில் பெண் கவுன்சிலர் வேட்பாளராகக் களமிறங்கிய சௌமியா ஜெகதீஷ் அதற்கு விதிவிலக்காகச் செயல்பட்டார். தி.மு.க சார்பாக போட்டியிட்ட அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேரில் வராமல், அவரது சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் வெளியில் எங்குமே வரவில்லை.

வேட்பாளர் சௌமியா ஜெகதீஷ் சார்பாக அச்சிடப்பட்ட தேர்தல் விளம்பர பிட் நோட்டீஸ்களில்கூட அவரது புகைப்படம் அச்சிடப்படவில்லை. அதனால் அவர் யார் என்பதுகூட வாக்காளர்களில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. நாளிதழ் உள்ளிட்ட எந்த ஊடகத்திலும் வேட்பாளர் சௌமியா படம் வரவே இல்லை.

ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் கவுன்சிலராகப் பொறுப்பேற்றபோது...
ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் கவுன்சிலராகப் பொறுப்பேற்றபோது...

தேர்தல் களத்துக்கே வராத சௌமியா யூனியன் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ராதாபுரம் யூனியன் சேர்மன் பொறுப்புக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள். 18 வார்டுகள் கொண்ட ராதாபுரம் யூனியன் கவுன்சிலர்களில் 12 தி.மு.க-வினர் வெற்றிபெற்று பெரும்பான்மை இருப்பதால் பெண் கவுன்சிலர் சௌமியா, யூனியன் தலைவராகத் தேர்வாகும் வாய்ப்பு இருப்பதாகக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல், வாக்குச் சேகரிப்புக்குக்கூட வராத நிலையிலும் சௌமியா ஜெகதீஷை கவுன்சிலராகத் தேர்ந்தெடுத்த ராதாபுரம் யூனியன் 17-வது வார்டு வாக்காளர்களுக்குப் பிரதிபலனாக அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு