Published:Updated:

கண்டுகொள்ளப்படாத பெண் ஐ.பி.எஸ்-களின் பாலியல் புகார்கள்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?

கனிமொழி ஆர்ப்பாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி ஆர்ப்பாட்டம்

குட்கா வழக்கு தமிழக அரசியலில் சூறாவளியைக் கிளப்பிய நேரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்த முருகனின் ஆதரவு அப்போதிருந்த ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டது

கண்டுகொள்ளப்படாத பெண் ஐ.பி.எஸ்-களின் பாலியல் புகார்கள்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?

குட்கா வழக்கு தமிழக அரசியலில் சூறாவளியைக் கிளப்பிய நேரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்த முருகனின் ஆதரவு அப்போதிருந்த ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டது

Published:Updated:
கனிமொழி ஆர்ப்பாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கனிமொழி ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவிகளிடம் பாலியல்ரீதியாக அத்துமீறிய பல ஆசிரியர்களை அடுத்தடுத்து கைதுசெய்து, பெற்றோர்களிடம் நல்ல பெயரை எடுத்துக்கொண்டது தமிழக அரசு. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவசங்கர் பாபாவையும் டெல்லி வரை சென்று கைதுசெய்தது தமிழக காவல்துறை. ஆனால், பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருவர் அளித்த பாலியல் அத்துமீறல் புகார்கள் ஏனோ பல காலமாகத் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் ஆட்சியில் இல்லாதபோது கண்டித்து, குரலெழுப்பிய தி.மு.க., ஆட்சிக்கு வந்து 60 நாள்களைக் கடந்தும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் இப்போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளிடையே பேசுபொருளாகியிருக்கிறது!

2018, ஆகஸ்ட் மாதம், லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநராக இருந்த ஐ.ஜி முருகன்மீது அதே துறையில் பணியாற்றிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் பாலியல் அத்துமீறல் புகார் கொடுத்தார். இந்த விவரங்கள் மீடியாக்களில் வெளியானபோது, தமிழக காவல்துறையே கிடுகிடுத்துப்போனது. பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி, முருகனை அதே லஞ்ச ஒழிப்புத்துறையில் தொடர அனுமதித்தது அப்போதைய அரசு. ஆனால், புகாரளித்த பெண் அதிகாரி மட்டும் உடனடியாக மாற்றப்பட்டார். நீண்ட தாமதத்துக்குப் பிறகே, லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து முருகனை மாற்றினார்கள்.

கண்டுகொள்ளப்படாத பெண் ஐ.பி.எஸ்-களின் பாலியல் புகார்கள்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?

மூத்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், ‘‘குட்கா வழக்கு தமிழக அரசியலில் சூறாவளியைக் கிளப்பிய நேரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்த முருகனின் ஆதரவு அப்போதிருந்த ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டது. சி.பி.ஐ-யில் பணியாற்றிய அனுபவம் முருகனுக்கு இருந்ததால், அவரின் டெல்லி தொடர்புகளைப் பயன்படுத்தி குட்கா வழக்கிலிருந்து தப்பிக்க சிலர் முயன்றனர். முதல் குற்றப்பத்திரிகையில் ஓர் அமைச்சர், ஒரு காவல்துறை அதிகாரியின் பெயர் இடம்பெறாமல் போனதன் பின்னணி இதுதான். இதற்குப் பிரதிபலனாகத்தான் முருகன்மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்திருந்த புகார் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

முருகன் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து விசாரித்த கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையிலான குழுவினரின் பரிந்துரைப்படி, முருகன் மீது 2018, செப்டம்பரில் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவுசெய்தது. தமிழகத்தில் வழக்கை விசாரித்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று சொல்லி, தமிழகத்துக்கு வெளியே நீதிமன்றக் கண்காணிப்புடன் விசாரணை ஏஜென்சி விசாரிக்க வேண்டும் என்று பெண் அதிகாரி கோரினார். சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை தெலங்கானா மாநில காவல்துறைக்கு மாற்றியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முருகன் தரப்பு தடை வாங்கியது. அதேநிலை இன்றுவரை நீடிக்கிறது. இவ்வளவு நடந்தும், ஐ.ஜி முருகன்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ஐ.ஜி முருகனை ஈரோடு சிறப்பு அதிரடிப் படைக்கு மாற்றியதோடு தன் கடமையை தி.மு.க அரசு முடித்துக்கொண்டது. தமிழக அரசு நினைத்தால், உச்ச நீதிமன்றத்திலுள்ள தடையை உடைத்து, விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தொடரச் செய்ய முடியும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை உடனே கையிலெடுத்து, ஐ.ஜி முருகன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையாவது எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு’’ என்றார்.

2021, பிப்ரவரி மாதம் தமிழக போலீஸின் சிறப்பு டி.ஜி.பி ஒருவர்மீது மற்றொரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிமீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்போது தி.மு.க-வும் குரல் கொடுத்தது. சிறப்பு டி.ஜி.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழிகூட ஆர்ப்பாட்டம் நடத்தினார். பெண்கள் அமைப்புகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த பிறகுதான், புகாருக்குள்ளான சிறப்பு டி.ஜி.பி-யை சஸ்பெண்ட் செய்தது தமிழக அரசு. தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும்கூட, இந்தப் புகாரும் கிடப்பில்தான் கிடக்கிறது.

கண்டுகொள்ளப்படாத பெண் ஐ.பி.எஸ்-களின் பாலியல் புகார்கள்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?

சம்பந்தப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நெருக்கமான சில அதிகாரிகளிடம் பேசினோம். “சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் புகாரை விசாரித்த முத்தரசி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீஸார் இறுதி அறிக்கையைத் தயார்செய்துவிட்டனர். குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையைப் பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தச் சிறப்பு அதிகாரி, தன் உறவினர் மூலமாக தி.மு.க மேலிடத்தை சாந்தப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். ‘இன்னும் இரண்டொரு மாதங்களில் என்மீதான சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வைத்துவிடுவேன்’ என்று தன் நட்பு வட்டத்தில் பேசிவருகிறார். அரசு மெத்தனமாகச் செயல்படுவதுதான், அவரைப் போன்ற அதிகாரிகளுக்குத் தைரியத்தைத் தருகிறது” என்று கொதித்தார்கள்.

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் கே.சாந்தகுமாரியிடம் பேசினோம். ‘‘பாலியல் கொடுமை வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தும், அவருக்கே நியாயம் இதுவரை கிடைக்கவில்லை. மற்ற வழக்குகளை டீல் செய்வதுபோல் இல்லாமல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணையைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஸ்பெஷல் கோர்ட், அரசுத் தரப்பில் சிறப்பு வக்கீல் என்று ஜுடிஷியல் சிஸ்டத்தை மாற்றினால்தான், பாலியல் குற்றவாளிகள் பயப்படுவார்கள். குற்றங்களும் நடக்காது’’ என்றார்.

சாந்தகுமாரி
சாந்தகுமாரி

ஐ.ஜி முருகன் மீது உரிய விசாரணையை நடத்தி, அப்போதே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், பெண் அதிகாரியிடம் அத்துமீறும் துணிச்சல் சிறப்பு டி.ஜி.பி-க்கு வந்திருக்காது. அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் குற்றங்களுக்கு உடனடியாக உரிய தண்டனை கிடைக்கும்போதுதான், சாமானியர்களுக்கு அரசின்மீது நம்பிக்கை வரும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ‘உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று முழங்கியவர், தமிழகத்தின் முதல்வராகிவிட்ட பின்பும் இந்த விவகாரத்தில் தாமதம் செய்வது ஏன் என்பதுதான் பெண் காவலர்களிடையே ஒலிக்கும் கேள்வி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism