Published:Updated:

“வயித்துல வெடிகுண்டைக் கட்டிக்கிட்டு வேலைக்குப் போற மாதிரி இருக்கு!”

கலங்கும் பெண் காவலர்கள்

பிரீமியம் ஸ்டோரி
கொரோனாவுக்கு எதிரான களத்தில் பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதில் முக்கியமானவர்கள் பெண் போலீஸார்.

குடும்பச் சூழல், உடல்ரீதியான இடையூறுகளுக்கு மத்தியிலும் அவர்கள் மக்கள் பணியாற்றிக்கொண்டிருக் கின்றனர். பெண் போலீஸாரின் பணிச்சூழல் குறித்து சிலரிடம் பேசினோம்...

மதுரையில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் கவுசல்யா, ‘‘சட்டவிரோதமா மது விற்பனை செய்றவங்களைத் தடுக்கிறதுதான் என் பணி. அதனால, தினமும் மக்களைச் சந்திக்கிறதைத் தவிர்க்க முடியாது. சட்டவிரோதமா மது விற்பனை செய்ற இடங்களுக்குப் போய் சோதனை நடத்துறப்ப, கூட்டம் கூடிடுறாங்க. அப்போ சமூக விலகலைக் கடைப்பிடிக்கிறதுல சிரமம் ஏற்படுது. வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குத் திரும்புறப்ப, ‘நமக்கு தொற்று பரவியிருக்குமோ!’னு அச்சம் வருது. என் மக 12-ம் வகுப்பு படிக்கிறா. அதனால. அவளுக்கு விவரம் தெரியும். ஆனா, சிறு வயசுக் குழந்தைகளை வெச்சிருக்கிற பெண் காவலர்களுக்கு இது ரொம்பவும் சிரமமான நேரம். அதனால, பயத்தோடுதான் இந்த நாள்களைக் கடக்க வேண்டியிருக்கு’’ என்றார்.

பெண் காவலர்
பெண் காவலர்

சென்னையைச் சேர்ந்த பெண் காவலர் அந்தோணியம்மாள், “என் கணவரும் போலீஸ்தான். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. அக்கா குழந்தைங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுல இருக்காங்க. மூணு குழந்தைகளையும் பார்த்துக்கணும். அதனால, நானும் என் வீட்டுக்காரரும் வெவ்வேறு ஷிஃப்ட்டுல டியூட்டிக்குப் போறோம். சென்னையில கொரோனா பாதிப்பு அதிகமா இருக்கிறதால, குழந்தைங்களை எங்க அம்மா வீட்டுக்குக் கொண்டுபோய் விடலாம்னு நினைச்சாலும், எங்க ரெண்டு பேருக்குமே லீவு போட முடியாத நிலைமை. வேலை முடிஞ்சு வீட்டுக்குத் திரும்பிப் போனதும் ‘அம்மா’னு கட்டிப்பிடிக்க ஓடி வர்றா என் மகள். அந்த நேரத்துல அவளைத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பும்போது நெஞ்சை அடைக்கிற மாதிரி இருக்கும்’’ என்றார் உருக்கமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெயர் வெளியிட விரும்பாத பெண் காவலர் ஒருவர், ‘‘கொரோனா தொற்று பரவியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில நான் வேலைசெய்றேன். ஷிஃப்ட் அடிப்படையில எட்டு மணி நேர வேலைதான். இருந்தாலும், நிறைய கஷ்டங்கள் இருக்கு. நைட் ஷிஃப்ட்டில், சிறுநீர் கழிக்கக்கூடப் போக முடியல. இதுல பீரியட்ஸ் டைமா இருந்தா அவ்வளவுதான். பொதுக்கழிவறைகளையும் பயன்படுத்த முடியாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிங்கிறதால அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கும் போக முடியாது. வீட்டுக்குப் போற வரைக்கும் நரக வேதனையா இருக்கும்’’ என்றார் கலங்கியவாறு.

நைட் ஷிஃப்ட்டில் பணிபுரியும் பெண் காவலர்கள் பலரும், அதிக சிரமத்துக்கு ஆளாவதாகப் புலம்புகின்றனர். ‘‘ஒவ்வொரு நாளும் வயித்துல வெடிகுண்டைக் கட்டிக்கிட்டு வேலைக்குப் போற மாதிரிதான் இருக்கு’’ என்பதே அவர்களின் குரலாக உள்ளது.

கவுசல்யா -  ஜெயலட்சுமி
கவுசல்யா - ஜெயலட்சுமி

பெண் காவலர்களுக்கான சிக்கல்கள் குறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் பேசினோம். ‘‘தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழிகாட்டுதல்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வோடு பெண் காவலர்கள் இருக்கிறார் களா என்பது குறித்து களத்துக்கும் சென்று அவ்வப்போது ஆய்வு நடத்துகி றோம். குறிப்பாக, எங்களுடைய பிரிவில் உள்ள பெண் காவலர்கள் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்களை தொலைபேசி வாயிலாக எதிர்கொண்டாலும், அவர்கள் களத்துக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

அவர்கள் அவ்வாறு செல்லும்போது, தகுந்த பாதுகாப்பு உடைகள், கையுறைகள் போன்றவற்றை அணிந்துகொண்டுதான் செல்கின்றனர். பெரும்பாலும் பெண் காவலர்களுக்கு இரவு நேரப் பணி வழங்கப்படுவதில்லை. சில இடங்களில் தவிர்க்க முடியாமல் அவசரம் கருதி செக்போஸ்ட் போன்ற இடங்களில் சூழலைப் பொறுத்து பெண் காவலர்கள் இரவு நேரத்தில் பணியாற்றி வருகின்றனர். 75 சதவிகிதப் பெண் காவலர்களுக்கு இரவு நேரப் பணி ஒதுக்குவதில்லை. மீதியுள்ள 25 சதவிகிதப் பெண் காவலர்களுக்குத்தான் இரவு நேரப் பணி ஒதுக்கப்படுகிறது. இது பேரிடர் காலம் என்பதால், பெண் காவலர்கள் பாதிக்காத வகையில் சில சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பெண் காவலர்களுக்கு பிரச்னைகள் இருந்தால், அவர்கள் தயங்காமல் தெரிவிக்கலாம். அவை உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்’’ என்றார்.

பெண் காவலர்கள்
பெண் காவலர்கள்

இந்தப் பேரிடர் காலத்தில் பெண் காவலர்களின் பணியும் மிகவும் முக்கியமானது. பெண் காவலர்களுக்கு இருக்கும் பிரச்னை களையும் உயர் அதிகாரிகள் காதுகொடுத்து கேட்டு, அவற்றை உடனுக்குடன் களைவது அதைவிட முக்கியமானது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு