Published:Updated:

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?

பாலியல் குற்றங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் குற்றங்கள்

பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு செய்யவேண்டியது என்ன என்பது குறித்து அரசியல் கட்சிகளின் தமிழகப் பெண் நிர்வாகிகளிடம் பேசினோம்.

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?

பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு செய்யவேண்டியது என்ன என்பது குறித்து அரசியல் கட்சிகளின் தமிழகப் பெண் நிர்வாகிகளிடம் பேசினோம்.

Published:Updated:
பாலியல் குற்றங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் குற்றங்கள்

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, மூக்கையூர் கடற்கரையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். வேலூரில் பெண் மருத்துவர் கத்திமுனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதேபோல, கோவையில் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு நடத்துநரால் பாலியல் தொல்லை, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிகளுக்குப் பாலியல் தொல்லை, விருதுநகரில் இளம்பெண்ணை தி.மு.க-வினர் கூட்டுப் பாலியல் கொடுமை செய்த குற்றச்சாட்டு, சென்னை செங்குன்றத்தில் 13 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை, திருப்பூர் மாவட்டம் சின்னக்கரையில் 3 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர் கைது... எனக் கடந்த ஆறு மாதங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 442 பாலியல் பலாத்கார வழக்குகளும், 1,077 மானபங்க வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதன் உச்சமாக சமீபத்தில் நெல்லை பழவூரில் பெண் போலீஸ் எஸ்.ஐ மார்கரெட் தெரசா கழுத்தறுக்கப்பட்டார். இன்னொருபுறம் குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனையும் கிடைப்பதில்லை. புதுக்கோட்டையில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சரணுக்கு ஐந்து ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இப்படி தாமதமாகக் கிடைக்கும் நீதியும் குற்றவாளிகளுக்கு வசதியாகப் போய்விடுகிறது.

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?

தமிழகத்தில் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, கல்லூரி மாணவிகளுக்குத் தற்காப்பு உபகரணங்களை அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமி வழங்கியது பொதுவெளியில் பரபரப்பானது. பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு செய்யவேண்டியது என்ன என்பது குறித்து அரசியல் கட்சிகளின் தமிழகப் பெண் நிர்வாகிகளிடம் பேசினோம். அவற்றின் தொகுப்பு இங்கே...

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?

அ.தி.மு.க மகளிரணிச் செயலாளர் பா.வளர்மதி: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் வக்கிர எண்ணம்கொண்டவர்கள் மீது கருணை காட்டுவது முட்டாள்தனம். அவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்தல் உள்ளிட்ட 13 விதமான தண்டனைகளை அம்மா முதல்வராக இருக்கும்போது அறிவித்தார். அந்தக் கருத்துகளைப் பின்பற்றினாலே பாலியல் குற்றங்கள் குறைந்துவிடும். பாலியல் புகார்களை விசாரிக்க மண்டலவாரியாக பெண் அதிகாரிகளைக்கொண்டு காவல் நிலையங்கள் அமைத்து, அவற்றுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே வருவார்கள்; நியாயமும் கிடைக்கும்.

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?

காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி: பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம்கொண்டு அடக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தீர்ப்பு மிகத் தாமதமாகவே கிடைக்கிறது. வழக்கு நடைபெறும் கால அளவு அதிகரிப்பதால், பிறழ் சாட்சிகள் அதிகமாகிவிடுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களின் ஏழ்மையைச் சாதகமாக்கி, குற்றவாளிகள் பணம் கொடுத்து வழக்கைத் திரும்பப் பெற வைத்துவிடுகிறார்கள். எனவே, இவ்வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ: பெண்களுக்கு எதிரான குற்றங்களை, தனிப்பட்ட பெண்ணின் உடல்மீதான தாக்குதலாக மட்டும் அணுகக் கூடாது. இது ஒட்டுமொத்த சமூகம் சார்ந்த பிரச்னை. முதலில் பெண்கள் மீதான சமூகக் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். அதற்கான விதையை குடும்பத்திலிருந்துதான் விதைக்க முடியும். பெண்கள் அதிகாரத்துக்கு வந்தாலும், தங்களுக்கான உரிமையை ஆண்களிடம் கேட்டுப்பெறும் இடத்தில்தான் இன்னும் வைக்கப்பட்டுள்ளனர். அரசைப் பார்த்துத்தான் சமூகமும் வளர்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தீர்வுகாண, அவர்களின் பிரச்னைகளை முழுப் பார்வைக்கு உட்படுத்திய செயல்திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும். அதேநேரத்தில், சட்டப் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?

பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா: சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள உளவியல் திசை மாற்றத்துக்குப் பள்ளிக்கல்விதான் காரணம். ஆசிரியர்கள் பல லட்சம் லஞ்சம் கொடுத்துப் பணியில் சேரும் நாட்டில், மாணவர்களுக்கு எவ்வாறு அறநெறிகள் போதிக்கப்படும்... அதன் விளைவைத்தான் நாம் இப்போது சந்திக்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு அஸ்திவாரம் பள்ளிகள்தான். 18 வயது நிரம்பாத சிறுவன் குற்றவாளி ஆகிறான். மாறுகிற உலகத்துக்கு ஏற்றவாறு ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் 90% ஆண்கள் உளவியல் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறார்கள். உணர்வுகளை அடக்க முடியாதவர்கள் குற்றவாளியாகின்றனர். இதைச் சரிசெய்ய முழுமையான செயல் திட்டம் தேவை.

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள்: சட்டங்கள் மீதான பயம் குறைந்ததே பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம். மகிளா, சிறார், பொது நீதிமன்றங்கள் இருந்தும் தீர்ப்புகள் தாமதமாகின்றன. பாலியல் குற்ற வழக்குகளின் போக்கை கவனித்தாலே சட்டத்தில் உள்ள ஓட்டைகள் தெரிந்துவிடும். அதை முதலில் வலுப்படுத்த வேண்டும். இந்தக் குற்றவாளிகளுக்கு விரைவாக, பொதுவெளியில் தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் பயம் உண்டாகும்.

பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள்... என்ன செய்ய வேண்டும் தமிழக அரசு?

மக்கள் நீதி மய்யத்தின் மாதர் படைச் செயலாளர் சினேகா மோகன்தாஸ்: பெண்களின் பாதுகாப்பை அரசு மட்டுமே உறுதி செய்ய முடியாது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, குற்றங்கள் குறித்து அவர்கள் தைரியமாகப் புகார் கொடுக்க வழிவகுக்கும். கெட்ட எண்ணம் உள்ளவர்களுக்கு குற்றச் செயலில் ஈடுபட தைரியம் வராமல் தடுக்கும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, இந்தப் பெண் தலைவர்களின் கருத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். செய்யுமா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism