Published:Updated:

வீடே அலுவலகம்... என்ன செய்கிறது தமிழகம்?

வொர்க் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
வொர்க் ஃப்ரம் ஹோம்

‘வொர்க் ஃப்ரம் ஹோம்’

வீடே அலுவலகம்... என்ன செய்கிறது தமிழகம்?

‘வொர்க் ஃப்ரம் ஹோம்’

Published:Updated:
வொர்க் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
வொர்க் ஃப்ரம் ஹோம்
பெரும்பாலான இந்தியர்களுக்குப் பழக்கமில்லாதது, ஆனால் இப்போது தவிர்க்க முடியாதது ‘வொர்க் ஃப்ரம் ஹோம்.’

மேலைநாடுகளில் ஓரளவு வழக்கத்தில் இருக்கும் இந்த வேலைமுறையை ‘ரிமோட் வொர்க்கிங்’ என்று அழைப்பர். அதாவது அலுவலகத்திற்கு வராமலேயே அங்கு செய்யவேண்டிய வேலையைச் செய்து தருவது. இதுதான் வேலைகளின் எதிர்காலம் எனப் பல நிறுவனங்கள் கருதுகின்றன. இப்போது சில முன்னணி நிறுவனங்கள் ‘Plug and Play’ வகை ஃப்ரீலான்ஸ் பணியாளர்களையே அதிகம் விரும்புகின்றன. இந்த மாதிரியான பணியாளர்களைத் தேவை உள்ளபோது மட்டும் பணியமர்த்தி அதற்கான ஊதியத்தை வழங்கினால் போதும். எந்த உத்தரவாதமும் இல்லாத இந்த வேலைமுறையைத்தான் இன்றைய ஜென்-Z தலைமுறையினர் விரும்புகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃப்ரீலான்ஸ் பணியாளர்களுக்குத் தனி அலுவலகம் அமைத்து அதைப் பராமரிக்கும் சுமை நிறுவனங்களுக்குக் கிடையாது. முழு நேர ஊழியர்களையும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வைத்துவிட்டால் நிறுவனங்களுக்குச் சுமை இன்னும்கூடக் குறையும். இதனால் இனி வரும்காலங்களில் உலகமெங்கும் ஃபிரீலான்ஸ் மற்றும் ரிமோட் வொர்க்கிங் வகையிலான வேலைகள் அதிக அளவில் பெருகும் என எதிர்பார்க்கலாம். இதில் சாதகபாதகங்கள் உண்டு. நடைமுறைச் சிக்கல்களும் உண்டு. ஆனால், கொரோனா எதைப்பற்றியும் நம்மை யோசிக்க விடவில்லை. ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ விஷயத்தில் பல நிறுவனங்களையும் நேராக முதல் கியரிலிருந்து ஐந்தாவது கியருக்கு மாற வைத்திருக்கிறது. இந்த மாற்றம் கொரோனா பிரச்னை முடியும் வரைதான் என்றாலும், மொத்தமாக இந்த ‘ரிமோட் வொர்க்கிங்’ கலாசாரத்துக்கு இந்தியர்கள் நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்பது எளிதானதும் இல்லை. வெகுசில வேலைகளை மட்டுமே வீட்டிலிருந்து செய்ய முடியும். அப்படிச் செய்வதற்குச் சில முக்கியத் தேவைகள் உண்டு. ஐ.டி நிறுவனங்களுக்குப் பெரிதாக எந்தச் சிக்கலும் இருக்காது.

ஆனால் மற்ற துறைகள்..? எந்தத் துறையாக இருந்தாலும் ஐ.டி உதவி இல்லாமல் வொர்க் ஃப்ரம் ஹோமைச் செயல்படுத்த முடியாது. எந்தத் துறையிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வேலைகள், டிஜிட்டலில் அவுட்புட் கொடுக்கக்கூடிய வேலைகள் மட்டுமே வொர்க் ஃப்ரம் ஹோம் வேலைகளாக மாறமுடியும். அதற்கான ஏற்பாடுகள் முன்பே நடந்திருக்க வேண்டும். கொரோனா வந்த வேகத்தில் எல்லாம் திடீரென வேலைகளை டிஜிட்டலுக்கு மாற்றிவிட முடியாது. அதற்கான கட்டமைப்பு ஏற்கெனவே இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அரைகுறையாகத்தான் வீட்டிலிருந்து பணிசெய்ய முடியும். ஐ.டி அல்லாத நிறுவனங்களில் இந்த நிலைதான் தற்போது அதிகம் இருக்கிறதாம்.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

மேலும் பலரும் முதல்முறையாக இந்த வேலைமுறைக்கு வருவதால் சில தடுமாற்றங்களை உணரமுடிவதாக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மனதளவிலேயே மக்கள் இதற்கு இன்னும் முழுவதுமாகத் தயாராகவில்லை. ‘ரிமோட் வொர்க்கிங்’ சிறப்பாக நடக்க ஒரு நிறுவனத்திற்கு ஊழியர்கள்மீது நம்பிக்கை இருப்பது அவசியம். இந்த நம்பிக்கை வெறும் குணத்தால் மட்டும் வராது, இதனுடன் திறனும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் கொடுத்த வேலையை மேற்பார்வையின்றி சரியான நேரத்தில் முடித்துத் தருவார்கள் என்ற நம்பிக்கை நிறுவனங்களுக்கு வரும். அந்த நம்பிக்கைதான் ரிமோட் வொர்க்கிங் வேலைமுறையின் ஆணிவேர்.

அப்படியான நம்பிக்கை இங்கு இருக்கும் பெரும்பாலான நிறுவனங்களிடம் இல்லை. வேறு வழியில்லாமல் வீட்டிற்கு அனுப்பிவிட்டோம். அவர்களை எந்நேரமும் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற பதற்றத்துடன்தான் அவை செயல்படுகின்றன. இந்த நம்பிக்கையின் மையில் தொழிலாளர்களின் பங்கும் இருக்கிறது. இந்தச் சூழலில் வேலையை அளவிட எந்தத் தெளிவான அளவுகோலும் நிறுவனங்களிடம் இல்லாதது பெரும் சிக்கலாக இருக்கிறது. முன்பு அலுவலகத்தில் இருக்கும் நேரத்தை வைத்து ஒருவரின் வேலையை அளவிட்டு வந்தன நிறுவனங்கள். சில முன்னணி ஐ.டி நிறுவனங்களில் கணினியின் லாகின் டைம் வைத்து வேலை அளவிடப்படுகிறது. இது இல்லாமல் அவுட்புட் அடிப்படையில் வேலையை அளக்கும் நிறுவனங்கள் மிகவும் சொற்பம். இதனால் வீடுகளிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் நேரம்தான் வேலைக்கான அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதில்தான் பிரச்னை வருகிறது.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

எட்டு மணிநேர வேலை என்றாலும் அலுவலகத்தில் இருக்கும்போது உணவு இடைவெளி, பக்கத்துக் கடையில் டீ குடிக்கச் செல்வது என அதில் சில நேரம் செலவிடுவார்கள் பணியாளர்கள். இப்போது வொர்க் ஃப்ரம் ஹோம்மில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. வேலைபார்க்கும் எட்டு மணிநேரமும் கண்டிப்பாக ஆன்லைனில் இருக்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்கின்றன நிறுவனங்கள். சில ஐ.டி துறை நண்பர்களிடம் விசாரித்தால், ‘வீட்டில்தானே இருக்கிறீர்கள், எப்போதும் ஆன்லைனிலேயே இருங்கள்’ என்ற தொனி பல நிறுவனங்களிடம் வெளிப்படுவதாகக் கூறுகின்றனர். அதாவது கிட்டத்தட்ட ஒரே நாளில் இரண்டு மடங்கு வேலையைப் பார்க்கச் சொல்கின்றனராம். வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை அழுத்தம் நிறைந்ததாக உணர்கின்றனர்.

இதெல்லாமே அவசர மாற்றத்தின் வெளிப்பாடுதான். உண்மையில் சரியான முறையில் செயல்படுத்தினால் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் குறைந்த நேரத்திலேயே அதிக அவுட்புட் கிடைக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். பணியாளர்களிடத்திலும் சில சிக்கல்கள் இருக்கின்றன.

முதல்முறையாக வீட்டிலிருந்து வேலைபார்ப்பதால் சில தடுமாற்றங்களை அவர்கள் சந்திக்கவே செய்கின்றனர். வீடியோ மீட்டிங்கிற்குக் குறுக்கே வரும் குழந்தை, அதிக நேரம் ஒரே இடத்திலேயே உட்கார்ந்து வேலைபார்ப்பது, டி.வி பார்த்துக்கொண்டே வேலைபார்ப்பது, அதிக அளவில் தின்பண்டங்கள் கொறிப்பது என ஸ்டார்ட்டிங் ட்ரபிள் படலத்தில் இருக்கின்றனர் பணியாளர்கள். நாள் போக்கில் இந்தச் தவறுகளைக் களைந்து வொர்க் ஃப்ரம் ஹோம் வேலைமுறைக்குப் பழக்கப்பட்டுவிடுவார்கள் என நம்பலாம்.

இப்படி மக்கள் பெருமளவில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு இன்னொரு முக்கியத் தேவை இருக்கிறது. அது இணையம். இந்த ரிமோட் வொர்க்கிங்கின் முதுகெலும்பே அதுதான். ஆனால் இப்படி திடீரென மாறியுள்ளதால் அதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். அலுவலகங்களில் இருக்கும் Enterprise இணையத் தொடர்புகளுக்கும் வீடுகளுக்குக் கொடுக்கப்படும் பிராட்பேண்டு இணையத் தொடர்புகளுக்கும் வித்தியாசம் உண்டு. என்னதான் அதிவேக ஃபைபர்நெட் இணைப்பாக இருந்தாலும் கணவன்-மனைவி இருவருமே வேலைபார்க்கும் ஒரு வீட்டில் அனைவருக்கும் போதிய வேகத்தில் இணையம் கிடைப்பது சந்தேகம்தான். குழந்தைகளும் வீட்டில்தான் இருப்பார்கள் என்பதால் அவர்களின் பொழுதுபோக்கு மற்றும் படிப்பிற்கு இணையத்தில் ஒரு பங்கு போய்விடும். சாதாரண நாள்களில் ஒரு வீட்டிற்கு இவ்வளவு இணையத் தேவை இருக்காது.

இந்த இணைய விஷயத்தில் மற்ற நாடுகளுக்கு இல்லாத ஒரு அனுகூலம் இந்தியாவிற்கு உண்டு. அதுதான் மொபைல் டேட்டா. இத்தனை குறைவான விலையில் எந்த நாட்டிலும் உங்களால் இணையம் பயன்படுத்திவிட முடியாது. இதனால் பிராட்பேண்டு இணைப்பு இல்லாதவர்கள்கூட மொபைலில் ஹாட்ஸ்பாட் போட்டுக்கொண்டு சிக்கலில்லாமல் வீட்டிலிருந்து வேலைசெய்ய முடிகிறது. மேலும் இதுதான் வாய்ப்பு என டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு புதுப்புது ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டங்களை அளித்துவருகின்றன.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

இப்படியான திடீர் அதிக இணையப் பயன்பாடு நெட்வொர்க் கட்டமைப்புகளுக்கு அழுத்தத்தைத் தரலாம். ஐரோப்பா இந்த அழுத்தத்தை உணர்ந்துவருகிறது. அங்கும் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் அலுவலக வேலைகளுக்காக மட்டுமல்லாமல் வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங் என முன்பைவிடப் பல மடங்கு இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விரைவில் அனைவருக்கும் போதுமான இணையத் தேவையைக் கொண்டுசேர்ப்பதே சவாலான விஷயமாக மாறலாம் என்பதை உணர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், தீர்வுகளைத் தேடிவருகிறது. ஆனால், இந்தியாவில் பெரும்பாலானவர்கள் வயர்லெஸ் மொபைல் டேட்டாவையே அதிகம் பயன்படுத்துவதால் இதில் பெரிய சிக்கல் இருக்காது.

பல முன்னணி நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பணியிடச் சேவையை (Digital Workplace) வழங்கும் ‘கிஸ்ஃப்ளோ’(KissFlow) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தமிடம் இந்தியாவில் ரிமோட் வொர்க்கிங்கிற்கான சாத்தியக்கூறுகள் பற்றிக் கேட்டோம்.

அதற்கு அவர், “இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் இந்தியாவின் சிறிய அளவிலான பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவின் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 60 கோடி. இதில் வேளாண்மை சார்ந்த வேலைகளில் 45% பேர் ஈடுபட்டுள்ளனர். 25% பேர் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கின்றனர். 30% சதவிகிதம் பேர் சேவைத்துறைகளில் பணிபுரிகின்றனர். இந்த சேவைத்துறையின் ஒரு பகுதிதான் இந்த அறிவுசார் வேலைகள். தற்போதைக்கு இவர்களை மட்டுமே ரிமோட் வொர்க்கிங் கலாசாரத்திற்குள் இழுத்துவர முடியும். ஆனால், இந்த வேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. விரைவில் உலகம் முழுவதும் 100 கோடி அறிவுசார் தொழிலாளர்கள் உருவாகிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

போர் போன்ற இக்கட்டான சூழலில்தான் பல புதிய வாய்ப்புகள் உருவாகும், புதிய ஆராய்ச்சிகள் நிகழும் என்பர். அப்படியான போர் போன்ற சூழலைத்தான் கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ‘ரிமோட் வொர்க்கிங்’ வேலைமுறை அப்படியான புதிய அனுபவம்தான். இதுபோன்று கொரோனாவிலிருந்து மீண்டு வரும்போதும் மனிதகுலம் இன்னும் பல விஷயங்களைக் கற்றிருக்கும், பல படிகள் முன்னே சென்றிருக்கும். அதுதானே வரலாறு!

‘வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்சன் இல்லாமல், இன்னும் பணிக்குச் செல்லும் நபர்கள், என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள்?’ - இந்தக் கேள்வியை நம் சமூகவலைத்தளங்களில் ஆனந்த விகடன் வாசகர்களிடம் முன்வைத்தோம். அவர்கள் அளித்த பதில்கள், பல புரிதல்களுக்கு வழிவகுத்தன.

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்சன் இல்லாமல், இன்னும் பணிக்குச் செல்லும் நபர்கள், என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள்?’ - இந்தக் கேள்வியை நம் சமூகவலைத்தளங்களில் ஆனந்த விகடன் வாசகர்களிடம் முன்வைத்தோம். அவர்கள் அளித்த பதில்கள், பல புரிதல்களுக்கு வழிவகுத்தன.
 • Social Distance ஆபீஸ்ல Maintain செய்ய முடியல. Week Holiday முடிஞ்சு ஆபீஸுக்கு முதல் நாள் போகும்போது மத்தவங்ககிட்ட பேசவே பயமா இருக்கு. நேத்து எங்கெல்லாம் வெளிய போய்ட்டு வந்திருப்பாங்களோன்னு ஒரு பதற்றம் இருந்துட்டே இருக்கு, - கார்த்திகேயன்

 • வீட்டில் இருப்பவர்கள் போக வேண்டாம் என்று சொன்னபோதிலும் நமக்கே சற்று பயம் இருந்தாலும், வேலையைத் தக்க வைக்கணும், வருமானம் வேண்டும், அதற்காகப் போகத்தானே வேண்டும். ஒண்ணாம் தேதி ஆனா அனைத்துச் செலவுகளும் செய்து தானே ஆகவேண்டும். சட்டியில் (account) இருந்தால்தானே... - ஆந்தைக்கண்ணன்

வீடே அலுவலகம்... என்ன செய்கிறது தமிழகம்?
 • பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு இலவசமாக சானிட்டைசரும் காப்புக்கவசங்கங் களும் சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டிருக் கலாம். எல்லாருக்குமான பட்டிகளைச் சரிபார்த்து பணம் வழங்கும் அலுவலகத்துக்கே பட்ஜெட்டில் பணம் இல்லை! குவிந்த பட்டிகளை (Bills) ஆய்வு செய்து முடிக்க இன்றும் வந்தோம். - செ செந்தில்குமார்

 • நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். பள்ளிகள் இல்லை. ஆனால், அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது . காய்கறிகள் கிடைப்பதில்லை. வாழ்வின்மீது பயம் ஏற்படுகிறது. - revumasi

 • நான் பெங்களூரில் யஷ்வந்த்பூர் அருகே உள்ள பீன்யா என்ற இடத்தில் வேலை செய்கிறேன்... வேலைக்கு வந்தால்தான் சம்பளம் கிடைக்கும். அதனால் வேலைக்கு வர வேண்டிய கட்டாயம். ஆனாலும் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் பயத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது கொரோனா காரணமாக...அனைத்துச் சிறு உணவகங்களும் மூடப்பட்டுவிட்டதால் கடந்த 10 நாள்களாக உணவிற்கு மிகவும் கஷ்டப்படுகிறேன். - தமிழ்கவிதைகள்

 • பயந்துபோய் இருக்கோம். வாடிக்கை யாளர்கள் சந்திப்பு மிகுந்த மன உளைச்சல் அளிக்கிறது. வேறு வழியின்றி வேலைக்குச் செல்கிறேன். வீட்டிற்குச் சென்று குழந்தையைத் தொடவும் அச்சம் ஏற்படுகிறது. - யோஹன் அன்பரசு

 • சுகாதாரப்பணியாளராய் இருப்பவன் நான் விடுப்பு எடுக்க வாய்ப்பில்லையே. மேலும் அமைப்பு சாரா பணியாளர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் நினைச்சுப் பார்க்கவே முடியாது. வேலைக்குப் போனாதான் அன்றாடத் தேவைகளை நிவர்த்திசெய்ய முடியும். - மணிகண்டன்

 • வேலைக்குச் செல்ல தினமும் பேருந்துப் பயணம் அவசியம், பேருந்தில் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் விழிகள்.. பேருந்தில் இறங்கும்போது கைகள் கம்பிகளைப் பிடித்த மறுநொடியே அனிச்சையாக கைகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது மனதில் நெருடலைத் தருகிறது... - மைக்கேல்

 • கார் ஓட்டுநர்களுக்கு மிக மோசமான தருணமிது. எங்கள் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மிக மோசமாகிவருகிறது. இயல்பு நிலை என்று திரும்பும் என்று தெரியவில்லை - நாகு தேவி

 • நான் வங்கியில் வேலை செய்கிறேன். பணத்தைத் தொட வேண்டும். வாடிக்கையாளர்களின் நகை, கடிதங்கள் எல்லாவற்றையும் பெற வேண்டும். இவற்றை ஒதுக்கவும் முடியாது. - நந்திதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism