
அறிக்கை சொல்லும் அதிர்ச்சி உண்மை
ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர். காலம் காலமாக தொடரும் இந்தப் பொருளாதாரச் சமத்துவமின்மை, கொரோனா நாள்களில் இன்னும் அதிகமானதாகக் கூக்குரல் எழுந்தது. ‘உலகிலேயே இந்த சமத்துவமின்மை அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று’ என்பதைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துவைத்திருக்கிறது சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘உலக சமத்துவமின்மை அறிக்கை 2022.’
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்கள் லூகாஸ் சான்செல், தாமஸ் பிக்கெட்டி, இம்மானுவல் சயிஸ் உள்ளிட்ட குழுவினர் தயாரித்த இந்த ஆய்வறிக்கையை, உலக சமத்துவமின்மை ஆய்வகம் தற்போது வெளியிட்டிருக்கிறது. பல நாடுகளில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே நிலவும் இடைவெளி குறித்து அதிர்ச்சி தரும் விஷயங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. கூடவே, மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
கொரோனாவின் இரண்டாம் அலை உக்கிரமாகத் தாக்கிய இந்த ஆண்டில் இந்தியாவின் ஒரு சதவிகித டாப் பணக்காரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 21.7 சதவிகிதப் பங்கைச் சம்பாதித்தனர். நாட்டின் பத்து சதவிகித டாப் பணக்காரர்களின் வருமானத்தைக் கணக்கிட்டால், அது 57 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால், அடித்தட்டில் இருக்கும் 50 சதவிகித மக்களின் மொத்த வருமானம் வெறும் 13.1 சதவிகிதம்தான்.
அதாவது, ஒரு சதவிகித பெரும் பணக்காரர்களின் வருமானத்துடன், 50 சதவிகித ஏழைகளின் வருமானத்தை ஒப்பிட்டால், இரு வர்க்கத்துக்குமான வருமான இடைவெளி 80 மடங்கு அதிகம். இதன் மூலம், இந்தியா ஏழைகள் நிரம்பிய, சமத்துவமற்ற நாடாக இருப்பதாகப் பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
சொத்துரிமையிலும் இதேபோல பாரபட்சம் நீடிக்கிறது. ‘இந்தியாவின் மொத்த வளத்தில், வெறும் 10 சதவிகித பணக்காரர்களே, 64.6 சதவிகித வளங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு சதவிகிதப் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே 33 சதவிகித வளம் இருக்கிறது. அடித்தட்டில் இருக்கும் 50 சதவிகித ஏழைகளிடம் வெறும் 5.9 சதவிகித சொத்துகள் மட்டுமே உள்ளன.
“இந்திய அரசின் வரி விதிப்பு முறையே இந்த ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம்” என்று சொல்லும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், ``மத்திய அரசாங்கம், பணக்காரர்களிடம் வசூலிக்கும் கார்ப்பரேட் வரி, வருமான வரி போன்ற நேரடி வரிகளைக் குறைத்துவிட்டு, சாமானியர்கள் உபயோகிக்கும் அத்தியாவசியப் பொருள்கள் மீதான மறைமுக வரியைப் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. உதாரணமாக, கடந்த ஆண்டில் 50,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் நிறுவனம், 1,500 கோடி ரூபாய் (3%) மட்டுமே கார்ப்பரேட் வருமான வரி கட்டியிருக்கிறது. ஆனால், ஒரு நாளைக்குச் சராசரியாக 300 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு சாமானியன், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுக்காக ஒரு நாளைக்கு சுமார் 100 ரூபாய்க்கும் அதிகம் செலவழிக்கிறான். பெட்ரோல், டீசலுக்கு வரி அதிகம்; சொகுசு விமானங்களுக்கான எரிபொருளுக்கு வரி குறைவு. இப்படிப் பணம் அதிகமாக வைத்திருப்பவர்களுக்கு வரிச்சுமை குறைவாகவும், பணம் குறைவாக வைத்திருப்பவர்களுக்கு வரிச்சுமை அதிகமாகவும் இருப்பதே இந்த மலையளவு பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கியக் காரணம்” என்கிறார். “கிராமப்புற ஏழைகளின் பொருளாதாரத்தை உயர்த்த எப்படி நூறு நாள் வேலைத் திட்டம் உதவுகிறதோ, அதேபோல நகர்ப்புற ஏழைகளுக்கும் வேலைவாய்ப்புத் திட்டத்தை கொண்டுவர வேண்டும். மறைமுக வரியைக் குறைத்து, வருமான வரியை அதிகரித்து, அதைப் பணக்காரர்களிடம் முறையாக வசூலிப்பதே இதற்கான தீர்வாக இருக்கும்” என்றும் அவர் சொல்கிறார்.

மேற்கண்ட கூற்றை மறுக்கும் பொருளாதார நிபுணர் பத்ரி சேஷாத்ரியோ, ``வரிகளை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. மறைமுக வரியே இல்லை என்றாலும்கூட, ஏழைகளிடம் இந்தப் பிரச்னை இருக்கும். ஏனென்றால், முதலில் மக்கள் கையில் பணம் இருந்தால்தான் பொருள்கள் வாங்குவதைப் பற்றியும், அதன்மீதான வரியைப் பற்றியும் கவலைப்படுவார்கள். இன்றைய சூழலில், ஏழைகளிடம் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்குப் பணம் இல்லை. மாதாந்தர உதவித்தொகை, பொது விநியோகம், மருத்துவக் காப்பீடு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய அரசுத் திட்டங்களும் போதுமானதாக இல்லை. கொரோனா காலத்தில் வேலை, வருமானம் இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழலே ஏழைகளிடம் இருந்தது. அதேசமயம், வீட்டைவிட்டு நகராமல், இழப்பே இல்லாமல் பணக்காரர்களால் அதிக வருவாயும் ஈட்ட முடிந்தது. ஏழைகள் கடன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டிருக்க, பணக்காரர்களோ தங்களின் லாபத்தைச் சரியாக முதலீடு செய்து வருமானத்தைப் பல மடங்கு பெருக்கிக்கொண்டார்கள்” என்றார்.
பொருளாதார நிபுணரான நாகப்பனோ, ``எதற்கெடுத்தாலும் பணக்காரர்களையே குறிவைத்து விமர்சனம் செய்யக் கூடாது. அவர்கள் இல்லையென்றால் நம் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல், ஏழ்மை மேலும் அதிகரிக்கும். ஏழைகள் மீதான மறைமுக வரிவிதிப்பு பொருளாதார இடைவெளிக்கான காரணம் என்பது உண்மைதான். அதேசமயம், ஜி.எஸ்.டி-யால் மறைமுக வரிவிதிப்பு குறைந்திருக்கிறது. வரிகள் மட்டுமல்லாமல், அரசு ஊழியர்களுக்கான அதிகப்படியான சம்பளம், பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் மானியங்கள், விவசாயிகளுக்கான உர மானியம், நகைக்கடன் தள்ளுபடி போன்றவற்றில் நடக்கக்கூடிய முறைகேடுகளும் ஊழல்களும்கூட ஒருவகையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணங்களாக அமைகின்றன” என்றார்.
``இது போன்ற அறிக்கைகளே நம்பகத்தன்மையற்றவை’’ என்று மறுக்கிறார் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. ``இந்தியாவில்தான் சமத்துவமின்மை நிலவுகிறது என்று சொல்வதெல்லாம் வடிகட்டிய பொய். சர்வதேச நிறுவனங்கள் நடத்தும் ஆய்வுகளும், அதன் தரவுகளும் நம்பத்தகுந்தவையே அல்ல. இங்கிருக்கும் தனிநபர் சேமிப்பு உலகில் வேறு எங்குமே கிடையாது. பன்முகக் கலாசாரம்கொண்ட இந்தியாவில் மக்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக வாழ்கிறார்கள், மற்ற நாடுகளில் இல்லாத அமைதி இந்தியாவில் மட்டும் எப்படி நிலவுகிறது என்று உலக நாடுகள் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றன. அதன் வெளிப்பாடே இது போன்ற அறிக்கைகள்” என்றார்.
சமத்துவம் இல்லாத சமூகங்களில் பிரச்னைகள் அதிகரிக்கும் என்பதே உலக நாடுகள் உணர்த்தும் உண்மை. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பது போன்ற முழக்கங்களைவிட, ஏழைகளைக் கைதூக்கிவிடும் முயற்சிகள் முக்கியம்.