கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

800 கோடி... என்ன ஆகும் உலகம்?

மக்கள்தொகை
பிரீமியம் ஸ்டோரி
News
மக்கள்தொகை

ஏழை நாடுகளில் மக்கள்தொகை பெருகிக்கொண்டே போகிறது. உலகின் மிகவும் ஏழ்மையான 46 நாடுகளில்தான் மக்கள்தொகை வேகமாக அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலைப்படுகிறது

நவம்பர் 15-ம் தேதி அதிகாலையில் உலகின் மக்கள்தொகை 800 கோடியை அதிகாரபூர்வமாகத் தொட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஒரு மருத்துவமனையில் பிறந்த வினிஸ் மபன்சாக் என்ற பெண் குழந்தையை 800 கோடியாவது உலகப்பிரஜையாகக் கருதி வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த ‘800 கோடி தின'த்தில் இந்தியாவின் மக்கள்தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. அடுத்த ஆண்டு சீனாவை முந்திக்கொண்டு ‘உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு' என்ற பெருமையை இந்தியா பிடிக்கும். அதன்பின் நீண்ட காலம் அந்த இடத்தில் இந்தியா நிரந்தரமாக இருக்கும்.

மக்கள்தொகைப் பெருக்கத்தை நினைத்து இந்தியர்கள் கவலைப்படும் இந்த நேரத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ‘மதர் ஹீரோயின்' என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்றுக்கொள்ளும் ரஷ்யப் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்' விருது வழங்குவது சோவியத் கால வழக்கம். 30 ஆண்டுகளுக்குப் பின் அந்த வழக்கத்தை மீண்டும் கொண்டுவந்துள்ள புடின், ‘‘நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று ரஷ்யர்களை வலியுறுத்துகிறார். இந்த விருதுடன் 13 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது. ரஷ்யாவில் பெரிய குடும்பங்களுக்கு வரிச்சலுகைகள் உண்டு.

800 கோடி... என்ன ஆகும் உலகம்?

இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்கு பிரான்ஸ் நாட்டில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தாலியில் குழந்தை பெற்றுக்கொண்டாலே அரசு நிதியுதவி கிடைக்கும். ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைதான்' என்ற சட்டத்தை 1979-ம் ஆண்டு கொண்டுவந்த சீனா, 2015-ம் ஆண்டு அதை ரத்து செய்துவிட்டது. இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என சலுகை தந்திருக்கிறது.

இப்படிப் பிறப்பு விகிதம் குறைந்துவிட்ட பல நாடுகளில் மக்கள்தொகையை அதிகரிப்பது பற்றி யோசிக்கிறார்கள். காரணம் எளிமையானது. இந்த நாடுகளில் உழைக்கும் வயதில் இருப்பவர்கள் கணிசமாகக் குறைந்துகொண்டே வருகிறார்கள். இதனால் பொருளாதார வளர்ச்சி குறைகிறது. ஓய்வுபெற்ற முதியோர்கள் அதிகரித்துவிட்டனர். அவர்களைப் பராமரிப்பது அரசுக்கும் குடும்பங்களுக்கும் பெரும் சுமையாகிறது.

அதேசமயத்தில் ஏழை நாடுகளில் மக்கள்தொகை பெருகிக்கொண்டே போகிறது. உலகின் மிகவும் ஏழ்மையான 46 நாடுகளில்தான் மக்கள்தொகை வேகமாக அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலைப்படுகிறது. இந்தியா அந்தக் கவலைப் பட்டியலில் இல்லை. ஆனால், மக்கள்தொகை என்பது இங்கு தொடர்ச்சியாக விவாதப்பொருளாகவே இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ‘‘குடும்பக் கட்டுப்பாடு என்பதை எல்லாச் சமூகங்களுக்கும் ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டும்'' என்று சமீபத்தில்கூடப் பேசினார். இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை பெருகி வருவதாகத் தொடர்ந்து பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. மத்திய சுகாதாரத் துறையின் தேசிய குடும்பநல ஆய்வுப் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டிப் பல நிபுணர்கள் இதை நிராகரித்தாலும், இந்தப் பிரசாரம் நிற்கவில்லை.

இன்னொரு பக்கம் பல மாநிலங்கள் தனியாக குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சட்டங்களை இயற்றுகின்றன. அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது. உத்தரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு நல உதவிகளை நிறுத்திவிடும் ஒரு மசோதா பரிசீலனையில் இருக்கிறது.

‘இந்தியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் பலமுறை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றத்திலும் இதுவரை 35 முறை மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கடைசியாக 2019-ல் பா.ஜ.க-வைச் சேர்ந்த ராகேஷ் சின்ஹா என்ற எம்.பி ஒரு தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தபோது சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஓர் உண்மையைச் சொன்னார். ‘கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு வழிமுறைகளைவிட விழிப்புணர்வுப் பிரசாரமே நல்ல விளைவுகளைக் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது' என்றார் அவர்.

கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு என்ற கொடுமையை இந்தியா ஏற்கெனவே அனுபவித்தது. அவசரநிலைக் காலத்தில் இந்திரா காந்தி ஆட்சியில் இருக்க, சர்வ அதிகாரங்களுடன் வலம்வந்த அவர் மகன் சஞ்சய் காந்தி தன் கனவுத் திட்டமாக இதைக் கருதினார். ‘ஒரே ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையைக் குறைத்துவிட வேண்டும்' என்று பேசிய சஞ்சய், அதற்கான வழியாக வாசக்டமி எனப்படும் ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையை அறிமுகம் செய்தார்.

1976 ஏப்ரலில் இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. உ.பி., பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஹரியானா, பஞ்சாப், இமாசலப்பிரதேசம் என வட இந்தியாவே அப்போது ‘வாசக்டமி பெல்ட்' என அடையாளம் காட்டப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அறுவை சிகிச்சைகளைச் செய்தன. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ரயில்வே ஸ்டேஷன்கள் போன்றவை தற்காலிக அறுவை சிகிச்சை முகாம்களாக மாறின. ரயிலில் வந்து இறங்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் கட்டாயமாக முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஆளாகினர். வாசக்டமி செய்துகொண்டால்தான் பதவி உயர்வு கிடைக்கும் என அரசு ஊழியர்களுக்குச் சொல்லப்பட்டது. டிரைவிங் லைசென்ஸ், வணிகர்களுக்கான விற்பனை வரி லைசென்ஸ் போன்றவற்றுக்கும் வாசக்டமி கட்டாயம் ஆக்கப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 83 லட்சம் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இலக்கை எட்டுவதற்காக பெரும்பாலும் ஏழைகளே கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டனர். பல இடங்களில் இதனால் கலவரங்கள் நடந்தன.

அவசரநிலைக் காலத்துக்குப் பிறகு இதுமாறி, சுகாதார ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது இலக்குகள் அகற்றப்பட்டு, விழிப்புணர்வுப் பிரசாரங்கள் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

மக்கள்தொகையை அளவிடும் காரணியாக, Total Fertility Rate (TFR) எனப்படும் அளவீட்டை வைத்திருக்கிறார்கள். கருவுறும் வயதில் இருக்கும் ஒரு பெண், எத்தனை குழந்தைகளைப் பெறுகிறார் என்பதை இது குறிக்கிறது. இந்த TFR 2.1 என்ற அளவில் இருந்தால், அந்த நாட்டில் மக்கள்தொகை பெருகாமல் சமநிலையில் இருப்பதாக அர்த்தம். அதாவது, கணவனும் மனைவியும் இணைந்து 2.1 குழந்தைகள் பெறுவதாகக் கணக்கு. பிரசவ மற்றும் குழந்தைப் பருவ இறப்புகள் போக, இரண்டு பேர் இணைந்து இரண்டு பேரை மட்டும் உருவாக்குவதால் மக்கள்தொகை சமநிலையில் இருக்கும்.

800 கோடி... என்ன ஆகும் உலகம்?

"2015-16-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய குடும்பநல ஆய்வின்படி இந்தியாவின் TFR 2.2. இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 2.1 என்ற சமநிலை இலக்கை எட்டிவிட்டன. குறிப்பாக தமிழ்நாடு 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலையை அடைந்துவிட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள்தொகை குறையப்போகிறது. எனினும், உ.பி., பீகார், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள்தான் தேசத்தின் மக்கள்தொகைச் சுமையை அதிகரித்து வருகின்றன.

மக்கள்தொகை பெருகும்போது இரண்டுவிதமான விளைவுகள் ஏற்படக்கூடும். சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகள் மக்கள்தொகை அதிகரித்தபோது, அதைப் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தின. அதனால் முன்னேறின. நைஜீரியா, காங்கோ, தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் பிரச்னையில் தவிக்கின்றன. அடித்தட்டு மக்களுக்கு எதுவும் கிடைக்காதபோது வறுமை, பஞ்சம், வேலைவாய்ப்பின்மை, நோய்கள் போன்றவை அதிகரிக்க வாய்ப்புண்டு. இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் துனிஷியா, எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் கலகங்களே ஏற்பட்டன.

‘மக்கள்தொகையில் உலகின் நம்பர் 1 நாடு' என்ற அடையாளம் முக்கியமானது. சீனாவுக்கு இது கிடைத்தபோது, அது தன் மனிதவளத்தைப் பயன்படுத்தி உலகின் உற்பத்தி கேந்திரமாக உருவெடுத்தது. இன்றும் அந்த இடத்தில் அது இருக்கிறது. இவ்வளவு மக்கள்தொகை இருக்கும் ஒரு நாடு, உலகின் மிகப்பெரிய சந்தையாகவும் மாறும். எந்த ஒரு பொருளுக்கும் உலகிலேயே அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்கும் ஏரியா அது. சீனா இந்தச் சந்தையைப் பன்னாட்டு நிறுவனங்கள் தொடாமல் பார்த்துக்கொண்டு, உள்ளூர் நிறுவனங்களை உருவாக்கியது.

நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் கேள்வி. மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதே ஒரு நாட்டின் பொருளாதாரமும் சமூக வாழ்வும் மேன்மை பெறுகிறது. சந்தை நுகர்வு மற்றும் நகர்மயமாதல் ஆகிய இரண்டும் மிடில் கிளாஸ் மக்களால்தான் அதிகம் நிகழ்கின்றன. 1991-ம் ஆண்டு திறந்த பொருளாதாரக் கொள்கையை இந்தியா அறிமுகம் செய்தது. 30 ஆண்டுகள் கழித்து இப்போது இந்தியாவின் மக்கள்தொகையில் 30% பேர் மிடில் கிளாஸ் என்று PRICE நிறுவனத்தின் ஆய்வு சொல்கிறது. உண்மையில் இதைவிட அதிகம் பேர் மிடில் கிளாஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால், பெரும் பணக்காரர்களுக்குக் கிடைத்த வளர்ச்சி மிடில் கிளாஸுக்குக் கிடைக்கவில்லை.

உலகிலேயே உழைக்கும் வயதில் இருக்கும் மக்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்திய மக்கள்தொகையில் 68% பேர் 15 முதல் 64 வயதில் இருக்கிறார்கள். அதாவது, உழைக்கத் தயாரான வயதில் சுமார் 95 கோடிப் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன வாய்ப்புகளைத் தரப்போகிறோம் என்பதில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது.

நூறு கோடிகளின் உயர்வு!

மனித இனம் தோன்றியது முதல் மக்கள்தொகை பெருகி 1803-ம் ஆண்டு 100 கோடி எண்ணிக்கையைத் தொட்டது. அதன்பிறகு வேகமான வளர்ச்சி. 800 கோடியை எட்டிய வேகம் இதோ:

(மக்கள்தொகை கோடிகளில்)

800 கோடி... என்ன ஆகும் உலகம்?

வளங்களைச் சுரண்டுகிறோம்!

ஒருவர் வருமானத்தில் பட்ஜெட் போட்டுச் செலவு செய்தால், 25-ம் தேதி வரை தாங்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு மேல் செலவு வந்தால், கடன்தான் வாங்க வேண்டும். இந்த பூமியும் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட அளவு வளங்களைப் புதுப்பித்துத் தருகிறது. மீன்கள், தண்ணீர், தானியங்கள் இப்படி ஓராண்டில் பூமி தருகிற எல்லாவற்றையும் நாம் சீக்கிரமே தீர்த்துவிடுகிறோம். அதன்பிறகும் வளங்களைச் சுரண்டுகிறோம். அது மாபெரும் சூழலியல் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

இப்படி ஓராண்டில் பூமி தருகிற வளத்தை நாம் எவ்வளவு சீக்கிரம் காலி செய்கிறோம் என்பதை Earth Overshoot Day என்ற கணக்கீட்டால் அளக்கிறார்கள். 2020-ம் ஆண்டில் இது ஆகஸ்ட் 22-ம் தேதி வந்தது. அதற்குப்பின் டிசம்பர் 31 வரை பூமிக்கு நாம் மாபெரும் அழுத்தம் கொடுத்தோம். கடந்த ஆண்டு இது ஜூலை 29-ம் தேதியே வந்துவிட்டது. இந்த ஆண்டின் Earth Overshoot Day-வை ஜூலை 28 அன்று கடந்தோம். மக்கள்தொகைப் பெருக்கம் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

பெருக்கம் எப்போது நிற்கும்?

ஒவ்வோர் ஆண்டும் இறப்பு விகிதத்தைவிட பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. 2021-ம் ஆண்டில் 13 கோடியே 40 லட்சம் குழந்தைகள் பிறந்தன. 6 கோடியே 90 லட்சம் பேர் இறந்தார்கள். அந்த ஆண்டில் மக்கள்தொகை 6 கோடியே 90 லட்சம் உயர்ந்தது.

அடுத்த சுமார் 30 ஆண்டுகளுக்கு இப்படி 13 முதல் 14 கோடிக் குழந்தைகள் ஆண்டுதோறும் பிறக்கக்கூடும் என்கிறார்கள். 2050-க்குப் பிறகு பிறப்பு விகிதம் குறையும். அதேநேரத்தில் உலகின் மக்கள்தொகை முதுமையடைந்துகொண்டே வருவதால், இறப்பு விகிதம் அதிகரிக்கும். 2100-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கட்டத்தில் இரண்டு எண்ணிக்கையும் சமமாகும். அப்போது மக்கள்தொகை பெருகாமல் நின்றுவிடும்.

பறிபோகும் அரசியல் அதிகாரம்!

இந்தியாவின் வட மாநிலங்களைவிட தென் மாநிலங்களே மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்துகின்றன. வளர்ச்சிக்கு அது உதவினாலும், அதனால் இன்னொரு மோசமான விளைவும் ஏற்பட்டிருக்கிறது. அது, அரசியல் அதிகாரம் குறைவது.

மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ தொகுதிகள் அவ்வப்போது மறுவரையறை செய்யப்படும். இப்போது நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் உத்தேசத்துடன் மத்திய அரசு புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டிவருகிறது. ‘‘இங்கு மக்களவையில் 888 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. மாநிலங்களவை 384 இருக்கைகளைக் கொண்டிருக்கும்’' என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா சமீபத்தில் சொன்னார்.

தற்போது மக்களவையில் 543 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெறவில்லை. இதன்பின் 2031-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்தால், அதன் அடிப்படையில் தொகுதிகள் மறு வரையறை செய்யப்படலாம். உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் போன்ற மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்கு அப்போது அதிக எம்.பி-க்கள் கிடைப்பார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தின. இவற்றின் எம்.பி எண்ணிக்கை குறையும். ஏற்கெனவே 1962-ம் ஆண்டு தமிழகத்தில் 41 எம்.பி-க்கள் இருந்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்ததால் இந்த எண்ணிக்கை 39 என்று குறைந்தது. வருங்காலத்தில் இந்த விகிதம் இன்னும் குறையலாம். அப்போது தமிழகத்தின் குரலை டெல்லியில் எதிரொலிப்பவர்களின் எண்ணிக்கை குறையும்.

இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கும் சேர்த்து வெறும் 24 எம்.பி-க்களே இருக்கிறார்கள். இதனால்தான் அவர்களின் குரல் டெல்லியில் எடுபடுவதில்லை. அந்த மாநிலங்கள் புறக்கணிப்பைச் சந்திக்க இதுவும் ஒரு காரணம். இதுபோன்ற சூழல் தமிழகத்துக்கும் ஏற்படலாம். அதனால்தான், ‘மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் எம்.பி தொகுதிகளை வரையறுக்கக்கூடாது' எனத் தமிழகம் எதிர்ப்புக்குரல் கொடுக்கிறது.