Published:Updated:

உலகம் என் வீடு

புவனி தரன்
பிரீமியம் ஸ்டோரி
புவனி தரன்

முதல் வெளிநாட்டுப் பயணமா பாகிஸ்தான் போனேன். அடுத்தடுத்து கடந்த மூணு வருஷங்கள்ல எட்டு நாடுகளுக்குப் போயிருக்கேன்.

உலகம் என் வீடு

முதல் வெளிநாட்டுப் பயணமா பாகிஸ்தான் போனேன். அடுத்தடுத்து கடந்த மூணு வருஷங்கள்ல எட்டு நாடுகளுக்குப் போயிருக்கேன்.

Published:Updated:
புவனி தரன்
பிரீமியம் ஸ்டோரி
புவனி தரன்

கனவுப் பயணம் ஒன்றுக்கு எப்படித் திட்டமிடுவீர்கள்? சேமிப்புத் தொகையுடன் பயணத்தைத் தொடங்குவீர்கள் அல்லது அந்தப் பயணத்திற்காகச் சேமிப்பைத் தொடங்குவீர்கள். ஆம்தானே? இதற்கு நேர்மாறாக, நாடு நாடாகச் சுற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் புவனி தரன், பயணம் செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் தேசாந்திரி. லிப்ட் கேட்டுப் பயணிப்பது, சந்திக்கும் மக்களின் வீடுகளில் தங்குவது, மக்களின் வித்தியாசமான வாழ்வியலை வீடியோ எடுத்து யூடியூப்பில் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது என இவரின் பயண அனுபவங்கள் முழுவதுமே வித்தியாசமானவை. உஸ்பெகிஸ்தானில் இருக்கும் புவனி தரனிடம் வீடியோகாலில் பேசிய நமக்கும், தேசம் கடந்து சுற்றுலா சென்று வந்த பரவச உணர்வு.

உலகம் என் வீடு

‘‘படிப்புல நாட்டமில்லாத எனக்கு, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, வெப் டிசைன்லதான் அதிக ஆர்வம். பத்தாவதுல ஃபெயிலாகிட்டேன். அப்புறம், லோக்கல் டிவி சேனல்ல பல வருஷங்கள் வேலை செஞ்சேன். சின்ன வயசுலேருந்து டிராவல்னா ரொம்ப இஷ்டம். சிறுக சிறுகப் பணம் சேர்த்து புல்லட் வாங்கி, தமிழ்நாட்டுக்குள் பல இடங்களுக்கும் டிராவல் போனேன். ஒருமுறை பைக் காணாமப்போகவே, பயணம் போக முடியல. தினசரி ஆபீஸ் வேலையிலும் வழக்கமான வாழ்க்கைமுறையிலும் எனக்கு நாட்டமில்ல. பட்ஜெட் டிராவல் பத்தித் தெரிஞ்சுகிட்டு, 2018-ல் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள மணாலிக்குப் போனேன். பின்னர், ஜெய்ப்பூர் போனப்போ கைவசம் நூறு ரூபாய்தான் இருந்துச்சு. சவாலா எடுத்துக்கிட்டு, ரெண்டு வார காலத்துல ஒரு ரூபாய்கூடச் செலவழிக்காம லிப்ட் கேட்டே தமிழ்நாட்டுக்கு வந்தேன்.’’ - புவனிக்கு முதல் தொலைதூரப் பயணமே சுவாரஸ்யமாக அமைந்ததால், அதன் பின்னர் தனியாகப் பயணம் செய்வதையே தனது வாழ்க்கைமுறையாக மாற்றிக்கொண்டார்.

‘‘முதல் வெளிநாட்டுப் பயணமா பாகிஸ்தான் போனேன். அடுத்தடுத்து கடந்த மூணு வருஷங்கள்ல எட்டு நாடுகளுக்குப் போயிருக்கேன். விசா நடைமுறை எளிதா இருக்குற நாடுகளைத் தேர்வு செஞ்சு, அதுக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செஞ்சுடுவேன். சுற்றுலாப் பயணிகள் அதிகம் போகாத பகுதிகளைத் தேர்வு செஞ்சு, அங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்களைத் தெரிஞ்சுக்கிறதுதான் என் பயணத்தின் நோக்கம். இதைச் சரியா புரிஞ்சுக்கும் சிலர், அவங்க வீட்டிலேயே தங்க அனுமதிச்சு, உணவு கொடுத்து வாஞ்சையுடன் உபசரிப்பாங்க. கோயில், சத்திரம்னு எங்கேயுமே உணவு கிடைக்காத பட்சத்துலதான் உணவகங்கள்ல சாப்பிடுவேன்.

இலவசத் தங்குமிடம், மாட்டுக்கொட்டகை, மெக்கானிக் ஷெட், பெட்ரோல் பங்க், பஸ் ஸ்டாண்டு உட்பட அனுமதி கிடைக்குற இடங்கள்ல கூச்சம் பார்க்காம தங்குவேன். வெளியூர்வாசிகள் அதிகம் நுழையாத சில பகுதிகள்ல, ஊர் மக்கள் ஒண்ணுகூடி சந்தேகப் பார்வையில என்னை விரட்டியிருக்காங்க. சில நேரம் போலீஸை வர வெச்சும் என்னை விசாரிச்சிருக்காங்க. இங்கிலீஷ்ல பேசி சமாளிக்குறதோடு, போகுற இடங்கள்ல வட்டார மொழிகளைக் கத்துக்கவும் ஆர்வம் செலுத்துவேன். இந்தியாவுல பயணம் செய்றப்போ மட்டும் பெரும்பாலான நேரங்கள்ல நானே சமைச்சுப்பேன். அஞ்சு செட் டிரஸ் மட்டும்தான் வெச்சிருப்பேன். 13 கிலோ எடை கொண்ட லக்கேஜ் பேக்கைச் சுமந்துகிட்டு, ஒவ்வோர் இடத்துலயும் லிப்ட் கேட்டே பயணிக்குறது சுமையான சுகம்’’ - ஒரு மாதம் வீட்டில் இருப்பது, மற்ற காலம் முழுக்கவே பயணம் எனச் சுற்றிக்கொண்டிருக்கும் புவனி, பாகிஸ்தான், கென்யா, உகாண்டா, தாய்லாந்து, எத்தியோப்பியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கும், இந்தியாவில் 21 மாநிலங்களுக்கும் பயணம் செய்து, அலாதியான அனுபவங்களை நிறையவே பெற்றிருக்கிறார்.

உலகம் என் வீடு

‘‘எத்தியோபியாவுல இறைச்சியைப் பெரும்பாலானோர் பச்சையாவேதான் சாப்பிடுவாங்க. நானும் முதன்முறையா பச்சையா சாப்பிட்டேன். உஸ்பெகிஸ்தான்ல மக்கள் இறைச்சிக்காக, குதிரைகளை அதிகம் வளர்ப்பாங்க. கென்யாவுல துர்கானா பகுதியில கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் இருக்கும். குடிநீருக்காக மக்கள் குடும்பமா நடுரோட்டுல வாட்டர் பாட்டிலுடன், சாலையில போறவங்ககிட்ட கெஞ்சிக் கேட்குறது சோகமா இருக்கும்.

உகாண்டாவுல ‘காரமோஜாங்’ பழங்குடியின மக்களின் குடியிருப்பு வித்தியாசமானது. சாராயம் காய்ச்சுறது, அரட்டையடிப்பது, சாப்பிடுறதுன்னு குழுவா இணைஞ்சுதான் வேலைகளைச் செய்வாங்க. கல்யாணம் ஆகாத ஆண்களும் பெண்களும், தினமும் சாயந்திரத்துல மரத்தடியில குழுவா இணைஞ்சு மரபுப் பாடல்களைப் பாடி, நடனம் ஆடுவாங்க. தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத்துணையை அங்கேயே தேர்வு செய்துக்குவாங்க. அவங்களோட வாழ்வாதாரத்துக்கு, தங்கம் சேகரிக்கும் உரிமையை அரசு கொடுத்திருக்கு. மண்ணுல இருந்து தங்கத்துகள்களைச் சலிச்சுப் பிரிப்பாங்க. மில்லிகிராம் அளவுலே கிடைக்கும் தங்கத்துக்காக, நாள்கணக்கில் மெனக்கெடுவாங்க.

உலகம் என் வீடு

கென்யாவிலுள்ள மசாய் பழங்குடி மக்கள், சிங்கத்துடன் தைரியமா சண்டையிடுவாங்க. நாகாலாந்துல தவளை, நாய், பட்டுப்பூச்சி இறைச்சியை மக்கள் விரும்பிச் சாப்பிடுவாங்க. அசாம் போடோலாந்து பகுதி இயற்கையின் சொர்க்கம். இதுபோல ஒவ்வொரு பகுதி மக்களின் வாழ்வியலும் கலாசாரமும் வியப்பாவும் திகைப்பாவும் இருக்கும்.’’

- பயண அனுபவங்களைச் சிலாகித்துக் கூறும் புவனியின் `தமிழ் ட்ரக்கர்' யூடியூப் சேனல் விரைவிலேயே ஐந்து லட்சம் சப்ஸ்கிரைபர்களைத் தொடவிருக்கிறது.

உலகம் என் வீடு
உலகம் என் வீடு

‘‘பட்ஜெட் டிராவல் பத்தின யூடியூப் சேனல் தமிழ்ல இல்ல. வெளிநாட்டு, வெளிமாநில மக்களின் வித்தியாசமான வாழ்க்கைமுறையைத் தமிழர்களுக்கும் தெரியப்படுத்தலாம்னுதான் இந்த சேனலைத் தொடங்கினேன். மெதுவா வரவேற்பு கிடைச்சு, `அடுத்து எந்த ஊருக்குப் போறீங்க?'ன்னு பார்வையாளர்கள் கேட்குற அளவுக்கு என்னோட சேனல் பிரபலமாகியிருக்கு. என் தேவைக்குப் போக, கடனை அடைக்கவும், தஞ்சாவூர்ல இருக்கும் அம்மாவின் செலவுக்கும் பணம் அனுப்புறேன். `படிச்சவங்க, வசதியானவங்கதான் வெளிநாடுகளுக்கெல்லாம் போக முடியும்ங்கிற நிலையை நீ மாத்திக் காட்டிட்டே'ன்னு என் அம்மா பெருமிதமா சொல்லுவாங்க. நிறைய நாடுகளுக்குப் போகணும்; புதுப்புது அனுபவங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன். இதுக்காக, சாப்பாடு, தூக்கம், வாழ்க்கைமுறையில நிறைய மாற்றங்களும் மெனக்கெடல்களும் இருந்தாலும், இதையெல்லாம் சந்தோஷமா ஏத்துக்கிறேன்’’ என்று மகிழ்ச்சியுடன் விடைபெறும் புவனி, அடுத்து தான்சானியா செல்ல ஆயத்தமாகியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism