`குணமாகி திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு?!- தொடர் பீதியில் சீன மக்கள்

``மீட்கப்பட்டதாக வெளியேறிய நபர்களுக்கு வைரஸ் இருப்பது கொரோனா இன்னும் வேகமாகப் பரவ காரணமாக அமையும் என அச்சத்தில் உள்ளனர். இதனால், சில நபர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.”
உலகளவில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மக்களிடையே கடுமையான அச்சம் நிலவி வருகிறது. எனினும், சீனாவில் கடந்த வாரங்களைவிட பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ஐந்து நாள்களுக்குப் பிறகு இறந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் வைரஸால் முடக்கப்பட்டுள்ள வுகான் பகுதியைச் சேர்ந்தவர், 36 வயதான லி லியாங். கொரோனாவால் பாதிக்கப்பட்ட லி லியாங், வுகானின் ஹன்யாங் மாவட்டத்திலுள்ள ஃபாங்காய் எனும் மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். 13 நாள்கள் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்ததாகக் கூறி மருத்துவமனை நிர்வாகம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி வீட்டிற்கு அனுப்பியுள்ளது. டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு சுமார் மூன்று நாள்கள் அவரது உடலின் வெப்பநிலை சாதாரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவ நிபுணர் குழு நடத்திய பரிசோதனையின் பின்னர் அவர் வெளியேற அனுமதிக்கப்படுவதாகக் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்ட நபர்களை தனி ஹோட்டலில் வைத்து அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர். அதில் லி லியாங்கும் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் 2-ம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் லியாங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அவரது மனைவி மெய்யிடம் அதிகாரிகள் வழங்கிய இறப்புச் சான்றிதழில், லி லியாங்கின் மரணத்திற்கு முக்கியக் காரணம் கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியா என்றும், சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறல் காரணமாக இறந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சீன ஊடகமான குவாங்சோ டெய்லி செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதையடுத்து வெய்க்ஸின் என்ற சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, மீட்கப்பட்டதாகக் கருதப்படும் நோயாளிகளை வெளியேற்றுவது குறித்த முடிவை தாமதப்படுத்த வேண்டுமென அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில், பாதிப்பிலிருந்து மீண்டதாகக் கருதப்பட்ட மற்ற சில நோயாளிகளும் இதுமாதிரியான செய்திகளை அறிந்து மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் பரிசோதனை செய்யும்போது வைரஸ் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்டதாக வெளியேறிய நபர்களுக்கு வைரஸ் இருப்பது கொரோனா இன்னும் வேகமாகப் பரவ காரணமாக அமையும் என மக்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலரும் அச்சத்தில் உள்ளனர். இதனால், சில நபர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவின் தாக்கம் முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே மருத்துவர்கள் துல்லியமாக பரிசோதனை செய்யாமல் நோயாளிகளை விடுவிக்கின்றனர் என வல்லுநர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் இதை விமர்சித்து வருகின்றனர்.
இதுவரை உலகளவில் 96,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். 3,300-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியா, இரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த கொரோனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
Source : Daily Mail