அலசல்
Published:Updated:

காற்று மாசு... உலகில் முதலிடத்தில் டெல்லி! - சென்னை கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

டெல்லி
பிரீமியம் ஸ்டோரி
News
டெல்லி

வாகனப் புகை, அனல் மின் நிலையப் புகை, தொழிற்சாலைப் புகைகளுடன் பட்டாசுப் புகையையும் சேர்ந்து கடந்த நவம்பர் 4 அன்று சென்னையின் காற்றுத் தரம் 895 AQI வரை சென்றது

உலக அளவில் காற்று மாசால் பாதிப்படைந்திருக்கும் 30 நகரங்களில், 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக IQAir அமைப்பின் 2020-ம் ஆண்டின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் டெல்லி தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே, ஆண்டுக்கு 17,500 பேர் காற்று மாசால் உயிரிழக்கும் டெல்லியில், கடந்த வாரம் காற்றின் தரம் அபாயகரமான அளவான 471 AQI-ஆகப் (Air Quality Index) பதிவாகியுள்ளது. குறிப்பாக, காற்றில் ‘PM 2.5’ நுண்துகள் இருக்கவேண்டிய அளவு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அளவைவிட 20 மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. 2019, அக்டோபரில் டெல்லியில் பதிவாகியிருந்த 495 AQI அளவுகளுக்குப் பிறகு இது அதிகபட்சமாகும். அதைவிட அதிகமாக 2017-18-ம் ஆண்டுகளில் பதிவாகியிருந்தது.

கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

2019-ம் ஆண்டு டெல்லி காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “காற்றின் தரம் மிகவும் மோசமடையும் ஒவ்வொரு முறையும் அதைக் கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கைகள்தான் எடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண நீண்டகால அளவிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், தற்போது டெல்லி காற்று மாசு பற்றி விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “தற்காலிக நடவடிக்கைகளையாவது உடனடியாக எடுத்து இரண்டு நாள்களுக்குள் காற்று மாசைக் கட்டுக்குள் கொண்டுவாருங்கள்; நீண்டகாலச் செயல் திட்டங்கள் பற்றி பின்னர் யோசிக்கலாம்” என்று டெல்லி அரசை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், “காற்றின் தரம் இவ்வளவு மோசமாக இருக்கும்போது மக்கள் எப்படி வாழ முடியும்? காற்றின் தரத்தை 500 AQI-லிருந்து 200 AQI-க்கு இரண்டு நாள்களில் எப்படி கொண்டுவரப் போகிறீர்கள்... இரண்டு நால்கள் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்துவது பலனளிக்குமா?” என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் கேட்கும் அளவுக்கு டெல்லியில் காற்றின் தரம் தற்போது அபாயகரமாக மாறியுள்ளது.

நவம்பர் 18-ம் தேதி வரை டெல்லியின் ஈரப்பதமும், காற்றின் வேகமும் காற்று மாசுக்கு ஏதுவாக இருப்பதால் இன்னும் ஒரு வாரத்துக்கு டெல்லியில் காற்றின் தரம் சீராக வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, குழந்தைகள் பாதிப்படைவதைத் தடுக்கும் வகையில் டெல்லியிலுள்ள பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நுண்துகள் அளவைக் குறைப்பதற்காக, கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே இயங்குவதற்கும், தனியார் நிறுவனங்கள் 30 சதவிகித ஊழியர்களுடன் அலுவலகத்தில் இயங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கல்குவாரிகளும், செங்கல் சூளைகள் இயங்குவதற்கும் ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு... உலகில் முதலிடத்தில் டெல்லி! - சென்னை கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

விவசாயிகள் மட்டுமே காரணமல்ல!

இந்தச் செயல்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும்... டெல்லியின் காற்று மாசுக்குக் காரணமாக மீண்டும் மீண்டும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளேயே குறைகூறிவருகிறது டெல்லி அரசு. டெல்லி காற்று மாசு என்பது ஏதோ குறிப்பிட்டகாலப் பிரச்னை மட்டுமல்ல... ஆண்டு முழுவதுமே டெல்லியில் காற்றின் தரம் மோசமாகத்தான் உள்ளது. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தீபாவளிப் பட்டாசுப் புகை, வாகனப் புகை, கட்டுமானப் புகை, தொழிற்சாலைப் புகை, அனல் மின் நிலையங்களிலிருந்து வெளிவரும் புகை, விவசாயப் பொருள்களை எரிப்பதால் வரும் புகை... இவற்றுடன் காற்றின் ஈரப்பதமும் சேர்ந்துதான் டெல்லியின் காற்றை இவ்வளவு அபாயகரமானதாக மாற்றுகின்றன. இதற்கு விவசாயிகளை மட்டுமே குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சாடியுள்ளனர். காற்று மாசின் அடிப்படைக் காரணங்களை ஆராயாமல், அதைச் சரிசெய்வதற்கான நிரந்தரத் தீர்வைப் பற்றி யோசிக்காமல் விவசாயிகள்மீதும், மக்களின்மீதும் பழிபோடுவதோ, தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்வதோ எந்த வகையிலும் பயனளிக்காது என்பதை அரசாங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். காற்று மாசைக் குறைக்க வேண்டுமென்றால் வாகனப் பெருக்கத்தையும், அனல் மின் நிலையங்களையும்தான் முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.

காற்று மாசு... உலகில் முதலிடத்தில் டெல்லி! - சென்னை கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

என்ன செய்ய வேண்டும் சென்னை?

இது 37 அனல் மின் நிலைய அலகுகளை வைத்திருக்கும் டெல்லிக்கு மட்டுமல்ல... தனது சுற்றுவட்டாரத்தில் 33 அனல் மின் நிலைய அலகுகளையும், 10 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் அருகில் வைத்திருக்கும் சென்னைக்கும் பொருந்தும். `மும்பை, டெல்லி, பெங்களூரு நகரங்களைவிட அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகள் சென்னையில்தான் அதிகமாக இருக்கின்றன’ என்று சமீபத்தில் வெளிவந்த காலநிலை மாற்றம் தொடர்பான ‘C 40’ அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சமீபகாலமாக சென்னையில் காற்றின் தரம் மோசமாக மாறிவருவது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, நுண்துகள் பெருக்கத்தால் சென்னைவாசிகள் கடுமையாக அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சராசரியாக, சென்னையில் நுண்துகளின் அளவு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இதுவே வடசென்னையின் பிரதான இடங்களான மீஞ்சூர், எண்ணூர், மணலி, கொடுங்கையூர், வல்லூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் நுண்துகளின் அளவு எட்டு மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது.

வாகனப் புகை, அனல் மின் நிலையப் புகை, தொழிற்சாலைப் புகைகளுடன் பட்டாசுப் புகையையும் சேர்ந்து கடந்த நவம்பர் 4 அன்று சென்னையின் காற்றுத் தரம் 895 AQI வரை சென்றது. இந்த நிலையில் இந்திய நகரங்களில் காற்றின் தரத்தை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள, ‘மாசற்ற காற்றுக்கான தேசிய செயல் திட்ட’த்தில் சென்னை இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது.

காற்று மாசு... உலகில் முதலிடத்தில் டெல்லி! - சென்னை கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

குறையும் மனிதர்கள் ஆயுள்!

காற்று மாசால் வடஇந்தியர்களின் வாழ்வுக்காலம் ஒன்பது ஆண்டுகள் வரை குறைவதாகவும், தென்னிந்தியர்களின் வாழ்வு இரண்டரை ஆண்டுகள் வரை குறைவதாகவும் AQLI அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சென்னையில் பிரபலமாக இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றும், குழந்தைகள்நல மருத்துவரும் இணைந்து மூன்றாண்டுகளுக்கு முன்னர், சென்னைவாசிகளின் நுரையீரல் தரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அதில், ‘2006-12 காலகட்டத்தில் சென்னையில் 5.5 லட்சமாக இருந்த நுரையீரல் நோயாளிகளின் எண்ணிக்கை, 2018-19 ஆண்டுகளில் 12 லட்சமாக உயர்ந்துள்ளது’ என்று குறிப்பிட்டனர். இப்போது குறைந்தபட்சம் 15 லட்சம் நுரையீரல் நோயாளிகள் சென்னையில் இருப்பார்கள்.

முறையாகத் திட்டமிடப்படாத அதீத வளர்ச்சியின் காரணமாக, சென்னையின் வாகனப் புகையும் தொழிற்சாலைப் புகையும் சென்னையில் காற்றின் தரத்தை டெல்லி அளவுக்கு மோசமடையச் செய்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில் சென்னை நகரத்தின் காற்றின் தரத்தை உயர்த்துவதற்கென பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்த பிரத்யேகத் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். இதன் முதல்படியாக சென்னையைச் சுற்றியுள்ள அனல் மின் நிலையங்களைக் கைவிட்டு, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை நோக்கிப் பயணப்பட வேண்டும். மின்சாரத்தில் இயங்கக்கூடிய பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து, வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையைக் கட்டுப்படுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, கட்டடக் கழிவுகள் போன்றவற்றை முறையாகக் கையாளுதல் என காற்று மாசை குறைப்பதற்கான ஒருங்கிணைந்த செயல்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

உயிர் வாழ்வதற்கு சுவாசிக்க வேண்டும்... அந்தக் காற்றே உயிர்க்கொல்லியாக இருந்தால்?