Published:Updated:

``உங்களுக்குத்தான் அவர் கவிஞர்; எங்களுக்கு கேப்டன்" - நெகிழும் ஃபிரான்சிஸ் கிருபா நண்பர்கள்!

நவீன இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவரான ஃபிரான்சிஸ் கிருபா மறைவால் அவரது சொந்த கிராமமே துக்கத்தில் மூழ்கிக்கிடக்கிறது. உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் அவருடன் பழகிய நாள்களின் நினைவுகளைச் சுமக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பை அடுத்த பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர், கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபா. 48 வயதான கிருபா நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவராக அறியப்படுகிறார். சொற்களைத் தேர்வு செய்து இவர் படைத்த கவிதைகள், படிப்பவர்களைப் புதுவித அனுபவத்துக்கு அழைத்துச் செல்லும் தன்மைகொண்டவை.

துயரத்தில் உறவினர்கள்
துயரத்தில் உறவினர்கள்

கவிஞர், நாவலாசிரியர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிய ஃபிரான்சிஸ் கிருபா, சென்னையில் தங்கியிருந்து படைப்புலகுக்குப் பங்காற்றிவந்தார். அவர் எழுதிய `மல்லிகைக் கிழமைகள்’, `சம்மனசுக் காடு’, `ஏழுவால் நட்சத்திரம்’, `நிழலன்றி ஏதுமற்றவன்’, `மெசியாவின் காயங்கள்’, `வலியோடு முறியும் மின்னல்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் பலராலும் பாராட்டப்பெற்றவை.

ஃபிரான்சிஸ் கிருபா `கன்னி’ என்ற புதினத்தைப் படைத்திருக்கிறார். கவிதைக்காக சுந்தர ராமசாமி விருது, சுஜாதா விருது, மீரா விருது, நாவலுக்காக ஆனந்த விகடன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். திரைப்படத்துறையில் வளர்ந்துவரும் பாடலாசிரியராக இருந்தார். `வெண்ணிலா கபடிக்குழு’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 16-ம் தேதி இரவு சென்னையில் காலமானார். அவருடைய நண்பர்கள், உறவினர்களின் மூலம் அவரது உடல் சொந்த ஊரான பத்தினிப்பாறை கிராமத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகளைக்கொண்ட ஃபிரான்சிஸ் கிருபா உடலைப் பார்த்ததும் அவரின் உறவினர்கள் சோகத்தால் கதறி அழுதார்கள். கிராமத்தினரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சென்னையில் அவருடன் பழகிய தோழர்கள், திரைப்படத்துறையினர் நண்பர்கள் என ஏராளமானோர் பத்தினிப்பாறை கிராமத்துக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் அஞ்சலி
எழுத்தாளர் ஜெயமோகன் அஞ்சலி

எழுத்தாளர் ஜெயமோகன், கவிஞர் லட்சுமி மணிவண்ணன் உள்ளிட்ட எழுத்தாளர்களும் அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் குடும்பத்தினரின் அறிவுறுத்தலின்படி பத்தினிப்பாறை கிராமத்திலுள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தப்பட்டு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஃபிரான்சிஸ் கிருபாவின் மறைவு நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவருடன் நெருக்கமாக இருந்த இலியாஸ் என்பவரிடம் பேசியபோது, ``நாங்கள் இருவரும் குழந்தைப் பருவத்திலிருந்தே நண்பர்களாகப் பழகிவந்தோம். எனக்கு அவர் நெருங்கிய உறவினரும்கூட.

ஃபிரான்சிஸ் கிருபாவின் நண்பர் இலியாஸ்
ஃபிரான்சிஸ் கிருபாவின் நண்பர் இலியாஸ்

ஊருக்கு வரும்போதெல்லாம் இங்குள்ள மரத்தடியில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார். அவரிடம் திருமணம் செய்யுமாறு பலமுறை வற்புறுத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம், "என்னால் உங்கள் எல்லோரையும் மாதிரி ஒரு வரையறைக்குள் வாழ்க்கையை அடக்கிவைக்கத் தெரியாது. அதனால் எனக்கு அதில் விருப்பமில்லை” என்று தட்டிக்கழித்துவிடுவார்.

அவருக்கு ஊர்ப் பாசம் அதிகம். ஆனால், அவர் இந்த ஊரில் இருந்ததே குறைவான காலம்தான். பள்ளியில் படிக்கும்போது மட்டும்தான் அவர் இங்கிருந்தார். அதன் பிறகு மும்பைக்குப் போய்விட்டார். அங்கிருந்து வந்த பிறகு கவிஞராக மாறியதாலோ என்னவோ சென்னையிலேயே தங்கிவிட்டார். ஆனால் அவருக்கு ஊர்மீது தணியாத காதல் இருந்தது.

எடுத்துச் செல்லப்படும் உடல்
எடுத்துச் செல்லப்படும் உடல்

ரெண்டு வருடங்களாகவே அவர் ஊருக்கு வரவில்லை. ஆனால் அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வார். ஊர் நிலவரங்களைக் கேட்பார். எங்க ஊரில் கிடக்கும் இளவட்டக்கல் பற்றித் தன் நாவலில்கூட எழுதியிருப்பார். கடைசியாக அவர் ஊரைவிட்டுப் போவதற்கு முன்பாக இங்குள்ள தெரு முக்கில் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நம்ம ஊரைப் பத்தி வெற்றிகரமான ஒரு படம் எடுக்கும் அளவுக்கு விஷயங்கள் இருக்கு. அதை நிச்சயம் செய்யணும்’ என்று சொன்னார். அவரது ஆசை நிராசையாகிப் போயிருச்சு.

சின்ன வயசில் அவர் நல்லா கிரிக்கெட் விளையாடுவார். சொல்லப்போனால் எங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டை அறிமுகம் செஞ்சுவெச்சதே அவர்தான். அவர் தலைமையில் இங்கே ஒரு கிரிக்கெட் டீமே இருந்துச்சு. சுற்றுப்புற கிராமங்களில் நடக்கும் பல மேட்சுகளுக்குப் போய் பரிசு வாங்கியிருக்கோம்.

இறுதி அஞ்சலி
இறுதி அஞ்சலி

அவரை எங்க ஊரில் இருக்கும் அவர் வயசுக்குரிய பையன்கள் எல்லோருமே `கேப்டன்’னு தான் கூப்பிடுவோம். உங்களுக்கு வேணும்னா அவர் கவிஞரா இருக்கலாம். எங்க ஊருக்கு அவரு இப்பவும் `கேப்டன்’தான். அவரோடு நினைவுகள் எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்” என்று முன்பொரு காலத்தில் ஃபிரான்சிஸ் கிருபா தோளுக்கு மேல் தூக்கி வீசிய இளவட்டக்கல்லை ஏக்கத்துடன் கைகளால் தொட்டபடியே பேசுகிறார், இலியாஸ்.

நாம் அங்கிருந்து விடைபெற்றபோது ஃபிரான்சிஸ் கிருபா நண்பர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் அப்பிக்கிடந்தது, சோகம். .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு