சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“மறைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம்!”

“மறைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மறைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம்!”

இயல்பான தாத்தா-பேரன் உறவைத் தாண்டி, தலைமுறை இடைவெளி காரணமாக சிறுவயதில் நான் அதிகம் அவரிடம் உரையாடியதில்லை.

வழக்கறிஞரும் எழுத்தாளருமான ச. பாலமுருகனின் முதல் நாவல் ‘சோளகர் தொட்டி’, 2004-ல் வெளியாகி, தமிழ் இலக்கிய உலகத்தை உலுக்கியது; சரியாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு ‘டைகரிஸ்’ என்ற தன்னுடைய இரண்டாவது நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் மீண்டும் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பாலமுருகன். முதலாம் உலகப் போரில் பங்கெடுத்த தன்னுடைய தாத்தாவின் கடிதக் குறிப்புகளில் தோன்றிய நாவலுக்கான பொறியிலிருந்து, சொல்லப்படாத மனிதர்களின் வாழ்வை, சொல்லப்படாத வகையில் ‘டைகரிஸ்’-ஸில் சொல்லியிருக்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து...

“தமிழ்நாட்டின் ‘சோளகர் தொட்டி’யிலிருந்து ஈராக்கின் ‘டைகரி’ஸுக்கு நீங்கள் பயணப்பட்டது எப்படி?”

“என் தாயார் வழிச் சின்னப் பாட்டனார் எச்.வில்லியம்ஸ் பொள்ளாச்சியில் வாழ்ந்துவந்தார். இயல்பான தாத்தா-பேரன் உறவைத் தாண்டி, தலைமுறை இடைவெளி காரணமாக சிறுவயதில் நான் அதிகம் அவரிடம் உரையாடியதில்லை. 1980-களின் தொடக்கத்தில் அவர் இறந்துவிட்டார். அப்போது எங்களுக்கு வந்துசேர்ந்த அவருடைய பொருள்கள் சிலவற்றில், அவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்களும் இருந்தன. எந்தக் காரணமும் இன்றி அவற்றைச் சேமித்து வைத்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு எதையோ தேடப் போக, தாத்தாவின் கடிதங்கள் கைகளில் அகப்பட்டன. அப்போதுதான் அவற்றை வாசித்தேன். முதலாம் உலகப் போரில் அன்றைய மெசபடோமியாவின் (ஈராக்) குட் நகரில் பிரிட்டிஷ் ராணுவத்துக்காக இந்தியர்களின் படையில் அவர் போரிட்டதற்கான குறிப்புகளை அந்தக் கடிதங்களில் கண்டு பிரமித்துப்போனேன். பழுப்பேறியிருந்த அந்தக் கடிதங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை உடனடியாக லேமினேட் செய்து வைத்தேன். போரில் தன்னுடைய சேவை அங்கீகரிக்கப்படாதது குறித்த ஏமாற்றத்தையும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்கிற தொடர் கோரிக்கைகளையும் அந்தக் கடிதங்கள் தாங்கியிருந்தன. அதனால் ஏற்பட்ட ஆர்வத்தில் மெசபடோமியாவில் முதல் உலகப் போர் நேரத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிப் படிக்கத் தொடங்கினேன். இது அரசியல், வரலாறு சார்ந்து மிகப் பெரிய திறப்புகளை எனக்கு ஏற்படுத்தியது!”

“மறைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம்!”

“இந்தக் கண்டுபிடிப்பு எப்படி ஒரு நாவலாக வளர்ந்தது?”

“முதலாம் உலகப் போரின் மிக மோசமான சண்டைகள் ஒன்றில் குட் நகரில் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் ஈடுபட்டது. பாக்தாத் நகரைக் கைப்பற்ற முன்னேறிக்கொண்டிருக்கும் இந்தப் படையினரை, துருக்கியின் ஒட்டாமன் படைகள் குட் நகரில் சுற்றி வளைக்கின்றன. இந்தச் சூழலில், பிரிட்டிஷ் இந்தியப் படையினர் அன்றாடம் போருக்கு உள்ளே எப்படி இயங்கினர் என்பதை ஆராய விரும்பினேன். முதலாம் உலகப் போரின் முக்கியச் சண்டைக் களமான குட் பற்றி ஆங்கிலத்தில்கூடப் புனைவுகள் அதிகம் வரவில்லை; இந்திய அளவிலும் இப்பகுதியில் பெரிய வெற்றிடம் நிலவுகிறது. தொடர்ந்து இது சார்ந்து படிக்கப் படிக்க, இதை ஒரு புனைவாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் தீவிரமடைந்தது.

முதலில் என் தாத்தாவின் வரலாறாகவே இதைச் சொல்ல நினைத்தேன்; அவரைப் போன்றே அங்கீகாரம் மறுக்கப்பட்டு, பென்ஷன் நிராகரிக்கப்பட்டு, வாழ்க்கை முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதியே சோர்ந்துபோன வீரர்கள் எத்தனையோர் பேர் இங்கு வாழ்ந்ததுண்டு. ஆக, என் தாத்தா ஒரு குறியீடுதான். வரலாறு என்பது தனித்த ஒன்றல்ல; வரலாற்றைச் சுமந்து செல்பவர்கள், அதைப் பிரதிபலிப்பவர்கள் மனிதர்களே. உலக வரலாற்றின் தொடர்ச்சியான முதலாம் உலகப் போரில் என் தாத்தா போன்ற மனிதர்களின் வழி, எழுதப்படாத மனிதர்களின் வரலாற்றைச் சொல்வது என்று முடிவெடுத்தேன்.”

ச. பாலமுருகன்
ச. பாலமுருகன்

“இந்த வரலாறு நமக்குச் சொல்லப்படவே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது...”

“ஆம். முதலாம் உலகப் போரின் வரலாறுகளில் இந்தியர்களின் பெரும் பங்களிப்பு மறைக்கப்பட்டது. பிரிட்டனின் காலனி நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் போரில் பிரிட்டிஷ் வீரர்கள் என்றே அடையாளம் காட்டப்பட்டனர். ‘பிரிட்டிஷ் என்றால் வெள்ளையர்கள்தான்’ என்று பொதுப்புத்தியில் பதிவாகியிருக்கிறது. ஆனால், இந்தியர்கள், ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்ட காலனிய நாடுகளின் வீரர்கள் பங்களிப்பு இல்லாமல் போரில் பிரிட்டன் வென்றிருக்க முடியாது. ‘1917’ போன்ற படங்கள், வெள்ளையர்கள் மட்டுமே முதலாம் உலகப் போரில் ஈடுபட்டதாகச் சித்திரிக்கின்றன. இது மிகவும் தவறானது. வரலாற்றிலிருந்து மட்டுமல்ல, ஏதோ ஒரு வகையில் நம் நினைவுகளிலிருந்தும் அந்தப் பங்களிப்பை நீக்க வேண்டும் என பிரிட்டிஷ்காரர்கள் விரும்பினர். ஏறக்குறைய அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

போருக்கு வீரர்கள், விலங்குகள், பணம், பொருள்கள், கப்பல் என எண்ணிலடங்காதவை இந்தியாவின் பங்களிப்பாக வழங்கப்பட்டன. இந்திய வீரர்களில் போரில் இறந்தவர்கள், காணாமற்போனவர்கள், காயம்பட்டுத் திரும்பியவர்கள் என ஒருவருக்கும் முறையான அங்கீகாரமோ, ஓய்வூதியமோ பிரிட்டிஷ் அரசு வழங்கவில்லை. தன்னாட்சி தருகிறோம் என்று சொல்லியே, போரில் இந்தியர்களைப் பங்கெடுக்க வைத்தது பிரிட்டிஷ் அரசு. ஆனால், கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் பிரிட்டிஷ் அரசு நமக்கு துரோகம் இழைத்தது.”

“மறைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம்!”

“தமிழுக்கு முற்றிலும் புதிய களத்தைப் புனைவில் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் யாவை?”

“தாத்தாவின் கடிதங்கள் இந்த நாவலுக்கு ஒரு தொடக்கமாக அமைந்தாலும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை பென்ஷன் கோரிக்கைகளே. போர் சார்ந்த அவருடைய எண்ண ஓட்டங்களைக் கடிதங்களிலோ, தனியாகவோ அவர் பதிவு செய்திருக்கவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர் கோவை அய்யாமுத்து கூட இதே காலகட்டத்தில் மெசபடோமியாவில் போரில் பங்கெடுத்திருக்கிறார். இதுபற்றி அவருடைய ‘எனது நினைவுகள்’ நூலில் வெறும் குறிப்புகளோடு கடந்துவிடுகிறாரே தவிர, விரிவான பதிவுகள் இல்லை. இதுவொரு பிரச்னை. ஆனால், இந்திய அளவில் மராத்தி, வங்காளம் போன்ற மொழிகளில் இது சார்ந்த ஆவணங்கள் இருக்கின்றன. படைத் தளபதிகளின் நினைவுக் குறிப்புகள், குட் பகுதியில் நடந்த சண்டையின் பதிவுகள் பிரிட்டிஷ் கமிஷன் ரிப்போர்ட்டில் பதிவாகியிருக்கின்றன. இவற்றை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆவணப்படுத்தியிருக்கிறது. இந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு போரின் அன்றாடத்தை எழுதுவது சவாலான பணி. அந்தச் சவாலை நான் எடுத்துக்கொண்டேன். ஒரு மனிதன் போருக்குச் செல்வதற்கான அக-புறச் சூழல் எப்படி உருவாகிறது என்பதில் தொடங்கி, போர்ச் சூழல், எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் ஏற்படும் கையறு நிலை எனப் போரின் உளவியலை ஆராய முயன்றிருக்கிறேன்.

முதலாம் உலகப் போரின் காலகட்டத்தில் தான் ஆர்மீனிய இனப்படுகொலை அரங்கேறியது. நாவலில் இந்த வரலாற்றைப் பேசியிருக்கிறேன். முதலாம் உலகப் போர், ஆர்மீனிய இனப்படுகொலை என எல்லாமே நிகழ்வது டைகரிஸ் நதிக்கரையில்தான். இவை எல்லாவற்றுக்கும் அதுவே சாட்சியாக இருந்திருக்கிறது. ரத்தத்தையும் கண்ணீரையும் சுமந்து சுமந்து வரலாற்றுச் சாட்சியாக அது மாறிப்போய்விட்டது!”

“மறைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம்!”

“இந்த நாவலை எழுதியதன் மூலம் நீங்கள் கண்டடைந்தது என்ன?”

“முதலாம் உலகப் போரில் இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு எப்படி நடத்தியது, போரில் இந்தியர்களைப் பங்கெடுக்க வைத்ததற்கு அது செய்த கைம்மாறு என்ன, பிரிட்டிஷாரின் நம்பிக்கைத் துரோகத்தால் ஒரு தலைமுறையே வாழ்க்கையை இழந்து நின்றது என நமக்கான நியாயங்களைக் கேள்விகளாக இந்த நாவலில் முன்வைத்திருக்கிறேன். நம்முடைய அடையாளமும் அங்கீகாரமும் மறுக்கப்பட்டதைக் கேள்வி கேட்பதும், அதற்கான உரிமை கோரலுமே இந்த நாவலின் அரசியல். பிரிட்டிஷார் ‘இது மறக்கப்பட வேண்டிய வரலாறு’ என்று நினைக்கின்றனர். பெரிய வரலாற்றுத் தேடலின் வெளிப்பாடாக வந்திருக்கும் இந்த மாதிரியான எழுத்துகள் தமிழ், இந்திய மொழிகளில் இப்போது அதிகம் தேவையாக இருக்கிறது. பரந்துபட்ட பார்வையில் இத்தகைய ஆக்கங்களில் ஈடுபட வேண்டியது இந்திய எழுத்தாளர்களின் கடமை!”

“சர்வதேசத் தன்மை கொண்ட இந்த நாவலை ஆங்கிலத்தில் கொண்டுசெல்லும் திட்டம் இருக்கிறதா?”

“என் முதல் நாவலான ‘சோளகர் தொட்டி’, வேறெந்த மொழியிலும் இதுவரை மொழிபெயர்க்கப்படவில்லை. ஒரு படைப்பாளியாக, நான் சொல்ல விரும்பியதை என் தாய்மொழியில் பதிவுசெய்துவிட்டேன். அத்துடன் என்னுடைய வேலை முடிந்தது. ஒன்று இலக்கியப் படைப்பாக மாறுகின்றபோது உயிரோட்டம் பெற்றுவிடுகிறது. எனவே அதை எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம்.”