கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

அலட்சியத்தால் கருகி உதிர்ந்த கனவு!

பிரியா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா

ஓவியம்: கணேசமூர்த்தி

அமைதியில் உறைந்து கிடக்கிறது வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் உள்ள அந்த வீடு. உள்ளே பிரியாவின் படங்களுக்கு முன் அவர் வாங்கிய டிராபிகள் அடுக்கப்பட்டுள்ளன. இன்னும் கண்ணீர் காயவில்லை பிரியாவின் அம்மா உஷாராணிக்கு. அவ்வப்போது பிரியாவின் புகைப்படங்களைப் பார்த்தபடி ‘பிரியா... பிரியா...' என்று கதறும் உஷாராணிக்கு, உறவினர்கள் தோளணைத்து ஆறுதல் சொல்கிறார்கள்.

‘‘ ‘என் காலை எடுத்திடாதீங்கம்மா... விளையாட முடியாமப்போயிடும்... என்னை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுங்க'ன்னு கெஞ்சுச்சே எம்புள்ள. இப்படி அநியாயமா அது கனவைக் கருக்கிட்டாங்களே...’’ என்று கலங்கும் மனைவியைப் பார்த்து பிரியாவின் அப்பா ரவிக்குமாரும் கலங்குகிறார்.

‘‘எங்களுக்கு மூணு ஆம்பளைப் பசங்க. நாலாவதா பிறந்தா பிரியா. எங்களுக்கு அவ தெய்வக்குழந்தை. வந்து எங்களைச் சந்தோஷப்படுத்திட்டு போய்ச் சேர்ந்துட்டா...’’ கண்கலங்கும் ரவிக்குமாருக்கு ஆறுதல் சொல்ல அங்கு யாரிடமும் வார்த்தைகள் இல்லை.

‘‘நான் துப்புரவுத் தொழிலாளி. வீட்டுல ஒரே புள்ளைங்கிறதால பிரியாவை தகுதிக்கு மீறிதான் வளர்த்தோம். ரொம்ப பொறுப்பான பிள்ளை அவ. இது வேணும், அது வேணும்னு கேட்டுத் தொந்தரவு பண்ணமாட்டா. பலநாள் வீட்டுல சாப்பாடு இருக்காது. டீயையும் பன்னையும் சாப்பிட்டுட்டுப் படுத்துக்குவா.

அலட்சியத்தால் கருகி உதிர்ந்த கனவு!

நான் துப்புரவு செய்றப்போ குப்பைத்தொட்டிகள்ல காற்றுப்போன பந்துகள் நிறைய கிடக்கும். அதையெல்லாம் எடுத்துட்டு வந்து பஞ்சர் ஒட்டிக் காத்தடிச்சு பிரியாகிட்ட கொடுப்பேன். அதுல விளையாண்டு விளையாண்டுதான் அவளுக்கு கால்பந்து விளையாடுற ஆர்வமே வந்துச்சு. ஆறாவது படிக்கும்போதே போட்டிகள்ல விளையாட ஆரம்பிச்சுட்டா. மாவட்ட அளவுல பல போட்டிகள்ல விளையாடிப் பரிசு வாங்கியிருக்கா. ‘வேகமாவும் வித்தியாசமாவும் விளையாடுறா... நல்ல எதிர்காலம் இருக்கு. விட்டுறாதீங்க'ன்னு அப்பவே ஆசிரியர்களெல்லாம் சொல்வாங்க.

ஸ்கூல் முடிச்சதும் ராணிமேரி காலேஜ்ல பிசிக்கல் எஜுகேஷன் சேர்ந்தா. அதுக்குப் பிறகு தீவிரமா விளையாட ஆரம்பிச்சா. தினமும் காலையில 4 மணிக்கு எழுந்து பயிற்சிக்குப் போயிருவா. பயிற்சி முடிச்சு காலேஜ்... திரும்ப சாயங்காலமும் பயிற்சி... கால்பந்துல அவ்ளோ உசுரா இருந்தா. எழுதுற நோட்டுலகூட கால்பந்து அட்டைப்படம் இருக்குற மாதிரிதான் வாங்குவா. நம்மள மாதிரி நம்ம புள்ள தெருக்கூட்டாம மேலே வரட்டும்னு எல்லாக் கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டோம். இன்னைக்கு எல்லாரையும் ஏமாத்திட்டுப் போயிடுச்சு...’’ வார்த்தைகளை இடைநிறுத்தி மகளின் புகைப்படத்தை ஆழ்ந்து பார்க்கிறார் ரவிக்குமார்.

‘‘கால் வலிக்குதுன்னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு. தொடர்ந்து பயிற்சி எடுக்கிறதால வர்ற வலின்னு நினைச்சு சாதாரணமா விட்டுட்டோம். ஒருநாள் ரொம்பவே துடிச்சுப்போயிட்டா. உடனே ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனோம். அங்கே ஸ்கேன்லாம் எடுத்துட்டு, ‘ஜவ்வுல பிரச்னை இருக்கு. இங்கயே அட்மிட் பண்ணுனாலும் பண்ணிக்கோங்க. இல்லன்னா வீட்டுப் பக்கத்துல இருக்கற ஹாஸ்பிட்டல சேர்க்கிறதுன்னாலும் சேர்த்துக்கோங்க'ன்னு சொன்னாங்க.

அலட்சியத்தால் கருகி உதிர்ந்த கனவு!

அப்புறம் பெரியார் நகர் ஆஸ்பத்திரியில சேர்த்து ஆபரேஷன் பண்ணினாங்க. காலையில ஆரம்பிச்ச ஆபரேஷன் சாயங்காலம் 3 மணிக்குத்தான் முடிஞ்சுச்சு. வெளியில வரும்போது தொடை முழுக்க கட்டுப்போட்டிருந்தாங்க. தொடைச் சதையை எடுத்து காலுக்கு ஆபரேஷன் பண்ணியிருக்கோம்னு சொன்னாங்க. அதுக்கப்புறம், நல்லாதான் பேசிக்கிட்டிருந்தா.

திடீர்னு மறுநாள் ‘ரத்தம் எல்லாம் உறைஞ்சுபோயிருக்கு. ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயிருங்க'ன்னு சொல்லிட்டாங்க. பதற்றமாகி தூக்கிட்டு ஓடினோம். அங்கே ‘ரத்த ஓட்டம் இல்லாததால முட்டிக்குக் கீழ இருக்கிற தசை எல்லாம் அழுகிடுச்சு. காலை எடுத்தாதான் உசுரைக் காப்பாத்த முடியும்'னாங்க. அதைக் கேட்டதுமே கதறிட்டா பிரியா. ‘காலை எடுத்திடாதீங்கப்பா... விளையாட முடியாமப் போயிரும்பா'ன்னு அவ அழுத அழுகை அப்படியே மனசுல நிக்குது. ‘உன் உசுருதாம்மா எங்களுக்கு முக்கியம்’னு அவ மனசை மாத்திதான் காலை எடுக்கிறதுக்குச் சம்மதிக்க வெச்சோம்.

அலட்சியத்தால் கருகி உதிர்ந்த கனவு!

கால் எடுக்கப்பட்டதிலிருந்தே அழுதுக்கிட்டிருந்தா. அமைச்சர் வந்து பாத்துட்டு செயற்கைக் கால் பொருத்திக்கலாம்னு ஆறுதல் சொன்னாங்க. அப்போகூட, நடக்கமுடியுமான்னு கேட்கல. செயற்கைக் காலோட விளையாட முடியுமான்னுதான் கேட்டா. அதுக்கப்புறமும் சரியாகலே. எங்களைக் கூப்பிட்டு ‘கடவுளை வேண்டிக்கோங்க. பிரியா பொழைக்கிறது கஷ்டம்’னு டாக்டர்கள் சொன்னபிறகுதான், என்னவோ தப்பு நடந்திருக்குன்னு புரிஞ்சுச்சு. அடிச்சா ஏன்னு கேட்க ஆளில்லாத அடித்தட்டு மனுஷன் நான். என் வீட்டுல பிறந்த புள்ள போராடி முன்னுக்கு வந்தா... அவ உயிரை அநியாயமா பறிச்சுட்டீங்களே பாவிகளா...’’ ரவிக்குமாரால் அதற்கு மேல் பேச இயலவில்லை.

பிரியாவின் அம்மா உஷாராணி கலங்கிய வார்த்தைகளால் பேசினார். ‘‘அக்டோபர் 26-ம் தேதி அவளுக்குப் பொறந்த நாளு. தீபாவளி, பொங்கலுக்குக்கூட டிரஸ் வாங்கமாட்டோம். பிறந்தநாளன்னிக்கு டிரஸ் கேப்பா. பெறந்தநாளன்னிக்குத்தான் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு ஸ்கேன் எடுக்கப் போனோம். அது முடிஞ்ச பிறகு ஃப்ரெண்ட்ஸ்கூட போய் டிரஸ் எடுத்துட்டு வந்தா. ரொம்ப லேட் ஆகிட்டதால அந்த டிரஸ்ஸைப் போடல. ‘ட்ரீட்மென்ட் முடிச்சுட்டு வந்து போட்டுக்குறேன்'னு சொன்னா. கடைசிவரைக்கும் அதைப் போட்டுப் பார்க்காமலேயே போயிட்டா.

அலட்சியத்தால் கருகி உதிர்ந்த கனவு!

கால்பந்துப் போட்டியில ஜெயிச்சு, சொந்தமா வீடு கட்டுவேன்னு சொல்லிக்கிட்டே இருப்பா. ஆனா, இப்போ அவ உசுரைப் பறிகொடுத்து எங்களுக்கு சொந்த வீடும் மூத்த அண்ணனுக்கு அரசாங்க வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கா’’ - மகளின் புகைப்படத்தை வெறித்துப் பார்க்கிறார் உஷாராணி.

அலட்சியத்தால் கருகி உதிர்ந்த கனவு!

ரவிக்குமாரைப் போன்ற எளிய மனிதர்களுக்கு அரசு மருத்துவமனை மட்டுமே நம்பிக்கை. அதுமாதிரி குடும்பங்களிலிருந்து வரும் பிரியாக்களின் உயிர் எல்லோருக்கும் அலட்சியமாக இருக்கிறது. பிரியாவோடு சேர்ந்து மடிந்திருப்பது, ஒரு குடும்பத்தின் எதிர்காலம், ஒரு தலைமுறையின் கனவு. முதல்வர் சொன்னதுபோல வீடோ, பணமோ எதுவும் அதற்கு ஈடாகாது. இனியொரு உயிர், அரசு மருத்துவமனையின் அலட்சியத்துக்குப் பலியாகிவிடக்கூடாது. அதுதான் பிரியாவின் உயிரிழப்புக்கு இந்தத் தேசம் செய்யும் துயரீடு!

அலட்சியத்தால் கருகி உதிர்ந்த கனவு!

****

‘‘பிரியா உயிரிழப்பு நிகழ்வில் மருத்துவர்களைக் கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்’’ என்று அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம். அதன் தலைவர் செந்திலிடம் பேசினேன்.

‘‘எல்லா மருத்துவர்களும் நோயாளிகளைக் காப்பாற்றத்தான் போராடுகிறார்கள். அதேநேரம், இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான துயரச் சம்பவங்களும் நிகழ்கின்றன. இதை வேண்டுமென்றே மருத்துவர்கள் செய்வதில்லை.

சிகிச்சையின்போது ஏற்பட்ட இறப்பு சார்ந்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘மருத்துவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பாக அந்தத் துறையின் மூத்த நிபுணர் ஒருவரின் கருத்தைக் காவல்துறை பெறவேண்டும். அவர், கடுமையான கவனக்குறைவு இருக்கிறது என்று கூறினால் மட்டுமே 304-A பிரிவில் கிரிமினல் வழக்குத் தொடரலாம்’ என்று வழிகாட்டியுள்ளது. அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.

பிரியா உயிரிழப்பில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாக மருத்துவர் குழு அறிக்கைக் கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே கொடுத்துள்ளது. அதனால், இந்தப் பிரச்னையில் சிவில் கவனக்குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே அரசு எடுக்கவேண்டும். கிரிமினல் நடவடிக்கை அதிகப்படியானது. கைது செய்தால், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவே டாக்டர்கள் பயப்படுவார்கள். சுகாதாரப் பணியாளர்களுக்கே எதிரான செயலாகிவிடும். அதனால், ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பாக முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறோம்’’ என்கிறார் அவர்.