Published:Updated:

தமிழகத்தை உலுக்கும் தங்கக் கடத்தல்.... ஆண்டுக்கு ரூ.5,000 கோடி!

தங்கக் கடத்தல்
பிரீமியம் ஸ்டோரி
தங்கக் கடத்தல்

பாரிஸ் கார்னரிலிருக்கும் சில வியாபாரிகள் மட்டுமல்ல, பிரபல நகைக்கடை ஒன்றின் உரிமையாளரும் இந்த தங்கக் கடத்தல் பிசினஸில் தொடர்பில் இருக்கிறார்.

தமிழகத்தை உலுக்கும் தங்கக் கடத்தல்.... ஆண்டுக்கு ரூ.5,000 கோடி!

பாரிஸ் கார்னரிலிருக்கும் சில வியாபாரிகள் மட்டுமல்ல, பிரபல நகைக்கடை ஒன்றின் உரிமையாளரும் இந்த தங்கக் கடத்தல் பிசினஸில் தொடர்பில் இருக்கிறார்.

Published:Updated:
தங்கக் கடத்தல்
பிரீமியம் ஸ்டோரி
தங்கக் கடத்தல்

2,000 ஆண்டுகளுக்கு முன்பு... பருத்தி ஆடைகள், மிளகு உள்ளிட்ட நறுமண, மசாலாப் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா கொடிகட்டிப் பறந்த நேரம். இந்தப் பொருள்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு, பண்டமாற்றுப் பொருளாகத் தங்கத்தை உலக நாடுகள் பயன்படுத்தின. ரோமானியப் பேரரசின் மொத்தத் தங்க கஜானாவும் இந்தியாவின் மசாலாப் பொருள்களுக்காகக் கரைந்துகொண்டிருந்தது. இதைக் குறிப்பிட்டு, அப்போது கண்டனக் குரல் எழுப்பிய ரோமானிய தத்துவவாதி ப்ளினி, “உலகின் தங்கத்தொட்டியாக இந்தியா மாறிவிட்டது” என்று கூறியிருந்தார். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும், அவரின் வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் தங்க உற்பத்தியில், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்தான் கொட்டப்படுகிறது. கனடாவைச் சேர்ந்த ‘இம்பாக்ட்’ என்கிற ஆய்வு அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை, ‘ஆண்டுக்கு 1,000 டன் தங்கம் ஆபரணங்களாக, தங்கக்கட்டிகளாக, காயின்களாக இந்தியாவில் விற்கப்படுகிறது. இதில், 200 டன் தங்கம் கடத்தல் மூலமாக இந்தியாவுக்குள் கொண்டுவரப்படுகிறது. தங்கத்தின் தேவை இந்தியர்களிடம் அதிகரித்திருப்பதால், தங்கக் கடத்தலும் அதிகரித்திருக்கிறது’ என்று கூறியிருக்கிறது. இப்படி கடத்திவரப்படும் தங்கத்தில், ஆண்டுதோறும் சுமார் 10 டன் தங்கம் தமிழ்நாடு வழியாகக் கடத்தப்படுவதும், இதையொட்டி மிகப்பெரிய நெட்வொர்க் தமிழ்நாட்டையே உலுக்கிவருவதும்தான் அதிர்ச்சியளிக்கும் ‘ரிப்போர்ட்’!

ஏன் கடத்தப்படுகிறது தங்கம்?

தங்கத்துக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்தாலும், அதற்கேற்ப இறக்குமதியையும் மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அப்படியிருக் கும்போது, “தங்கம் ஏன் கடத்தப்படுகிறது, இதனால் யாருக்கு என்ன லாபம்?” கேள்விகளுடன் சுங்கத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

“Gold Control Act-ன் படி, இந்தியாவில் ஆபரணமில்லாத தங்கத்தை இறக்குமதி செய்வதற்குத் தடை இருந்தது. 1960-களுக்குப் பிறகு, தங்கத்துக்கான தேவை இந்தியாவில் அதிகரித்ததால், தங்கக் கடத்தலும் வளரத் தொடங்கியது. 80-களில் மிகப்பெரிய தங்கக் கடத்தல் மாஃபியாக்கள் மும்பை, டெல்லி, கொச்சின் பகுதிகளில் வலம்வந்தனர். 1990-களில் நரசிம்மராவ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களில், Gold Control Act நீக்கப்பட்டது. ‘ஆபரணமில்லாத தங்கத்தையும் இறக்குமதி செய்யலாம். 10 கிராம் தங்கத்துக்கு 450 ரூபாய் வீதம் அரசுக்கு வரி செலுத்தினால் போதும்’ என்கிற விதியை மத்திய அரசு கொண்டுவந்ததால், தங்கக் கடத்தலுக்கான தேவை குறைந்தது. ஆனால், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தச் சூழல் மீண்டும் மாறியது.

தமிழகத்தை உலுக்கும் தங்கக் கடத்தல்.... ஆண்டுக்கு ரூ.5,000 கோடி!

இந்தியாவில் அதிகப்படியாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ததால், அதன் தேவை அதிகரித்தது. ஒரு நாடு ஏற்றுமதி செய்வதைவிட, அதிகப்படியாக இறக்குமதி செய்யும் பட்சத்தில், அந்த நாட்டின் பணமதிப்பு வீழ்ச்சியைச் சந்திக்கும். நடப்புக்கணக்கு பற்றாக்குறை ஏற்படும். இதைச் சரிசெய்வதற்காக, தங்கத்தின் இறக்குமதி வரியை உயர்த்துவது வழக்கம். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை அதிகரித்ததால், தங்கத்தின் சுங்கவரியை எட்டு சதவிகிதமாக அப்போதைய காங்கிரஸ் அரசு உயர்த்தியது. அன்றிலிருந்து, தங்கக் கடத்தல்களும் படுவேகத்தில் அதிகரித்தன.

இன்று இறக்குமதி ஆகும் தங்கத்துக்கு 15 சதவிகிதச் சுங்க வரி, 3 சதவிகித ஜி.எஸ்.டி., ஆபரணத்துக்குப் பயன்படுத்தும் தங்கமாக இருந்தால் 5 சதவிகிதக் கூடுதல் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். ஒரு கிலோ தங்கத்தின் சந்தை மதிப்பு 44,78,417 ரூபாயாக இருக்கிறது. இதை இறக்குமதி செய்தால், சராசரியாக 8 லட்சம் ரூபாயை அரசுக்கு வரியாகச் செலுத்த நேரிடும். இதையே கடத்திவந்தால், அந்தப் பணம் மிச்சம். தவிர, ஒரு கிலோ தங்கத்தின் விலை ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து நாடுகளில் இந்திய மதிப்பைவிடக் குறைவாக இருக்கிறது. அங்குள்ள கள்ள மார்க்கெட்டில் விலை இன்னும் குறைவாகக் கிடைக்கிறது. அங்கே கொள்முதல் செய்து இந்தியாவில் விற்கும்போது, ஒரு கிலோ தங்கத்துக்கு லாபம் 10 லட்சத்துக்குக் குறையாது. இந்த லாபத்தைக் கடத்தல் மாஃபியாக்களோடு, சுங்கத்துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு, லோக்கல் காவல்துறை அதிகாரிகள் எனப் பலரும் பங்கு போட்டுக்கொள்வதால், தங்கக் கடத்தலைத் தடுக்கவே முடியவில்லை” என்றனர் விரிவாக.

தமிழகத்தை உலுக்கும் தங்கக் கடத்தல்.... ஆண்டுக்கு ரூ.5,000 கோடி!

தங்கக் கடத்தலின் மூன்று லேயர்கள்!

இந்தியாவில் நடக்கும் தங்கக் கடத்தலில், தமிழ்நாடு முதலிடம் வகிப்பதுதான் இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம். சமீபத்தில் மத்திய நிதித்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங் களின்படி, 2012-ம் ஆண்டு முதல் ஜூன் 2022 வரை சராசரியாக ஆண்டுக்கு 772 தங்கக் கடத்தல் வழக்குகள் தமிழ்நாட்டில் பதியப்படுகின்றன. அடுத்ததாக, மகாராஷ்டிராவில் 705 வழக்குகளும், கேரளாவில் 295 வழக்குகளும் ஆண்டுதோறும் சராசரியாகப் பதியப்படுகின்றன.

தங்கக் கடத்தலில் மூன்று லேயர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள், இந்தக் கடத்தலில் கைதேர்ந்தவர்கள். தங்கக் கடத்தலில் குருவியாகச் செயல்படும் சிலரிடம் பேசினோம், “வெளிநாட்டிலிருந்து தங்கத்தைப் பாதுகாப்பாகக் கடத்திவருவது குருவிகளின் பொறுப்பு. இந்தக் குருவிகள்தான் முதல் லேயர். சூர்யா நடித்த ‘அயன்’ திரைப்படத்தில், ஷூ, விக், வாட்டர் பாட்டில் எனப் பலவிதமான பொருள்களில் மறைத்துவைத்து வைரம் கடத்துவதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். உண்மையில், அதெல்லாம் பழைய டெக்னிக். நம்மால் யூகிக்கவே முடியாத அளவுக்கு இன்று நுட்பமாகக் குருவிகள் கடத்துகிறார்கள். விழுங்கி எடுத்துவருவது, ஆசனவாயில் வைத்து எடுத்துவருவது, நாப்கின்னில் வைத்து எடுத்துவருவது எனப் பழைய டெக்னிக்குகளும் தொடர்ந்தாலும், தங்கத்தை பேஸ்ட் வடிவில், பேப்பர் வடிவிலெல்லாம் மாற்றிக் கொண்டுவருகிறார்கள். ஒரு கிலோ தங்கத்துக்கு 50,000 ரூபாய் வீதம் குருவிகளுக்கு கமிஷன் கிடைக்கும். வெளிநாட்டிலும் தமிழ்நாட்டிலும் சுங்கத்துறை, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை, இரண்டாவது லேயரில் இருக்கும் மீடியேட்டர்கள் கவனித்துக்கொள்வார்கள். டெல்லியிலிருந்து வரும் ஸ்பெஷல் டீம் ரெய்டில் ஒருவேளை சிக்கிக்கொண்டால், குருவிகளுக்குத் தேவையான சட்ட உதவிகளையும் இந்த மீடியேட்டர்கள் வழங்குவார்கள்.

விமான நிலைய வாசலில் ஒருவர் காத்திருப்பார். அவரிடம் தங்கத்தை ஒப்படைப்பதோடு குருவிகளின் பணி முடிந்துவிடும். வாங்கிய நபர் அதை, சென்னையின் ஏதாவது ஒரு பகுதியில் சிறிய அளவில் பார்சல் சர்வீஸ் நடத்தும் மற்றொரு ஏஜென்ட்டிடம் தங்கத்தை ஒப்படைப்பார். அந்த ஏஜென்ட் மூலமாக, செளகார்பேட்டை, பாரிஸ் கார்னர் உள்ளிட்ட இடங்களிலுள்ள சில வியாபாரிகளின் கைகளுக்குத் தங்கம் போய்ச்சேரும். இப்படியாக, தங்கம் வாங்கப்படும் இடம் தொடங்கி கடைசியாகச் சேரும் இடம் வரை முகம் காட்டாத முக்கியப் புள்ளிகள்தான் ஒருங்கிணைப்பார்கள். அவர்கள்தான் மூன்றாவது லேயர். இந்தத் தொழிற்சங்கிலியில், ஒருவரைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்த மாட்டார்கள். ஒரு ட்ரிப்புக்கு ஒரு ஆள், அவ்வளவுதான். ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் அவருக்கு மறுவாய்ப்பு. ஆட்களை மாற்றிக்கொண்டே இருப்பதால், யார் கண்களையும் உறுத்தாமல் தொழில் நடக்கிறது. தவிர, பெரிய பெரிய கார்கோ பெட்டிகளிலும் தங்கம் கடத்தப்படுகிறது. இதற்கான தொழில் ரூட் தனி.

தமிழகத்தை உலுக்கும் தங்கக் கடத்தல்.... ஆண்டுக்கு ரூ.5,000 கோடி!

நட்சத்திர அறைகளில் டீல்!

மத்திய சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதிதான், இந்தத் தொழிலில் சம்பந்தப்பட்டிருக்கும் பெரும்புள்ளிகளின் மீட்டிங் பாயின்ட். அந்த விடுதியில் சில அறைகளைத் தங்கக் கடத்தல் மாஃபியாக்கள் புக் செய்வார்கள். கடத்தலுக்கு உடன் போகும் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் சிலரை அந்த அறைக்கு வரவழைத்து, அந்தந்த மாதங்களில் எங்கேயிருந் தெல்லாம் கார்கோவில் தங்கம் வருகிறது, அதை எப்படிக் கையாள்வது எனத் திட்டம் வகுக்கப்படும். தங்கக்கட்டிகளுக்கு உலோக நிற பெயின்ட் அடித்து, பொம்மைகள், எலெக்ட்ரானிக் பொருள்களில் மறைத்துவைத்து என கிலோக்கணக்கில் தங்கம் மிகச் சாதாரணமாகக் கடத்தப்படுகிறது. விமான நிலையங்களைத் தொடர்ந்து, இப்போது ரயில்கள் மூலமாகவும் சென்னை சென்ட்ரலுக்குத் தங்கம் கடத்திவரப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்” என்றனர் விரிவாக.

கடந்த 2021-ம் ஆண்டு சென்னை பன்னாட்டு விமான நிலையம், சரக்குப் பிரிவு ஆகியவற்றில் சுங்கத்துறையினர் தங்கக் கடத்தல் தொடர்பாக 234 வழக்குகளைப் பதிவுசெய்திருக்கின்றனர். 70 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 157.75 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். தங்கக் கடத்தல் வழக்கில் 144 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர திருச்சியிலும் தங்கக் கடத்தல் அதிக அளவில் நடக்கிறது. “விமான நிலையங்களில் தங்கக் கடத்தலைத் தடுக்க அதிநவீன ஸ்கேனர்கள் இருந்தாலும், அதிகாரிகள் துணையிருப்பதால், கடத்தப்படும் தங்கத்தில் வெறும் ஒரு சதவிகிதம்தான் பிடிபடுகிறது. அதாவது, ஆயிரம் கடத்தலுக்கு ஒரு குருவியைப் பிடித்துக்கொள்வது என்பது ஒருவித அண்டர்ஸ்டாண்டிங். இப்படி பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணத் தங்கங்களை வரி, அபராதம் கட்டிவிட்டு திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஆபரணமல்லாத தங்கம் அரசு கஜானாவுக்குச் சென்றுவிடும். அப்படி கஜானாவுக்குச் செல்லும் தங்கத்திலும் பல முறைகேடுகள் நடக்கின்றன. அது மற்றொரு பெரிய கதை” என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

தமிழகத்தை உலுக்கும் தங்கக் கடத்தல்.... ஆண்டுக்கு ரூ.5,000 கோடி!

18,000 கோடி வரி இழப்பு... ஆளுங்கட்சிப் பிரமுகர் பதுக்கிய 25 கிலோ தங்கம்!

வருவாய்ப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பேசினோம். “விமானம், ரயில், பெங்களூரிலிருந்து சரக்கு வாகனங்கள் எனப் பல்வேறு வழிகளில் நாளொன்றுக்குச் சராசரியாக 30 கிலோ தங்கம் தமிழ்நாட்டுக்குள் கடத்தி வரப்படுகிறது. இப்படி ஆண்டுக்கு, 10,800 கிலோ தங்கம் கடத்திக் கொண்டுவரப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் சுமார் 5,000 கோடி ரூபாய். இந்திய அளவில் கணக்கிட்டால், ஆண்டுக்கு 200 டன் தங்கம் கடத்தப்படுகிறது. அதாவது 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம். இந்தத் தங்கத்தின் இந்திய ரூபாய் மதிப்பில், சுங்க வரி, ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரிகளைக் கணக்கிட்டால், 18,000 கோடி ரூபாய் அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும், கடத்தல் தங்கக்கட்டிகளை உடனடியாக ஆபரணத் தங்கமாக மாற்றிவிடுவார்கள். சில சமயங்களில், அரசியல் கட்சித் தலைவர்களின் கறுப்புப் பணத்தைத் தங்கக்கட்டிகளாக மாற்றிக்கொள்ளவும், இந்தக் கடத்தல் தங்கம் பயன்படுகிறது. 2017-ம் ஆண்டு கூவத்தூர் சம்பவத்தின்போது, 800 கோடி ரூபாய்க்கு ஓர் அரசியல் பிரமுகர் தங்கக்கட்டிகளை மாற்றிக்கொண்டார். சமீபத்தில்கூட, தென்மாவட்ட ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் 25 கிலோ கடத்தல் தங்கத்தை பாரிஸ் கார்னர் வியாபாரியிடமிருந்து வாங்கியிருக்கிறார். இது தொடர்பாக, அமலாக்கப் பிரிவுக்கும் வருமான வரித்துறைக்கும் `நோட்’ அனுப்பியிருக்கிறோம்.

பாரிஸ் கார்னரிலிருக்கும் சில வியாபாரிகள் மட்டுமல்ல, பிரபல நகைக்கடை ஒன்றின் உரிமையாளரும் இந்த தங்கக் கடத்தல் பிசினஸில் தொடர்பில் இருக்கிறார். தமிழ்நாட்டில் கோலோச்சும் தங்கக் கடத்தல் மாஃபியாக்களோடு சில அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதுதான் இந்த விவகாரத்தில் ஹைலைட். தங்கக் கடத்தல் புகாரில் சுங்கத்துறையினர் மீதே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கடந்த ஜூலை மாதத்தில் சென்னையில் மட்டும் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என 35 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுங்கத்துறை, மத்திய வருவாய்த்துறை, ஜி.எஸ்.டி உள்ளிட்ட துறைகளில் உயர்பதவி வகித்த 99 அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர். நிர்வாகரீதியாக நாங்களும் கடும் நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறோம்” என்றனர் விளக்கமாக.

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டேயிருந்தாலும், நகைக்கடைகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. திருமணம், பிறந்தநாள், திருவிழாக்கள், அட்சய திருதியை போன்ற சம்பிரதாய நாள்கள் எனத் தமிழர்களின் வாழ்வியலோடு மிக உணர்வுபூர்வமாகவும், பொருளாதாரரீதியாகவும் பிணைந்தது தங்கம். ‘ஐரோப்பாவின் பல நாட்டு வங்கிகள் சேமித்துவைத்திருக்கும் தங்கத்தைவிட, தமிழ்நாட்டில் இருக்கும் தங்கத்தின் அளவு அதிகம்’ என்கிறது கனடாவின் ‘இம்பாக்ட்’ ஆய்வு அமைப்பு. லாபம், கறுப்புப் பணத்துக்கான மாற்று உள்ளிட்ட காரணங்களால் அதிகமும் தங்கம் கடத்தப்படுகிறது. ஆனால், சுங்க அதிகாரிகள் மனதுவைத்தால் ஒரு குன்றிமணி தங்கத்தைக்கூடக் கடத்த முடியாது என்கிறார்கள். இந்திய அளவில், தமிழ்நாடு தங்கக் கடத்தலின் தலைநகரமாக மாறியிருக்கிறது. இதைத் தடுப்பதற்கு, இறக்குமதி வரியைக் குறைப்பதும், ஊழல் பெருச்சாளிகளைக் களையெடுத்து கண்காணிப்பை பலப்படுத்துவதுமே நிரந்தரத் தீர்வாக அமையும். நிதி விவகாரங்களைக் கையாளத் தெரியாமல் தள்ளாடும் மத்திய அரசு, தங்கக் கடத்தலிலாவது கவனத்தைச் செலுத்துமா?