Published:Updated:

வரம்பு மீறிய கட்டடங்கள்... அலட்சிய அதிகாரிகள்... நிலச்சரிவு அபாயத்தில் ஏற்காடு!

ஏற்காடு!
பிரீமியம் ஸ்டோரி
ஏற்காடு!

இது குறித்து எனக்கும் புகார் வந்துள்ளது. நான் இப்போதுதான் பணிமாற்றத்தில் இங்கு வந்திருக்கிறேன். கோடை விழா முடிந்த பிறகு இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்கிறேன்

வரம்பு மீறிய கட்டடங்கள்... அலட்சிய அதிகாரிகள்... நிலச்சரிவு அபாயத்தில் ஏற்காடு!

இது குறித்து எனக்கும் புகார் வந்துள்ளது. நான் இப்போதுதான் பணிமாற்றத்தில் இங்கு வந்திருக்கிறேன். கோடை விழா முடிந்த பிறகு இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்கிறேன்

Published:Updated:
ஏற்காடு!
பிரீமியம் ஸ்டோரி
ஏற்காடு!

‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காட்டில், அண்மைக்காலமாக அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டுவருகிறது. ``இதற்குக் காரணம், அரசின் அனுமதி மீறி கட்டடங்கள் கட்டப்படுவதுதான்’’ என்கிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

இது குறித்துப் பேசுகிற இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச்செயலாளர் நல்லமுத்து, “மலைப்பிரதேசக் கட்டட ஒழுங்கு விதிகளின்படி, மலைகளில் கட்டப்படும் கட்டடங்கள் 23 அடிக்கு மேல் உயரமாக இருக்கக் கூடாது. ஆனால், ஏற்காடு பகுதியில் ஒருசில நட்சத்திர ஹோட்டல் முதலாளிகள் அதிகாரிகளைச் சரிக்கட்டி, 70 அடிகளுக்கும் மேல் பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டிவருகின்றனர். இப்படி 70-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளன. இன்னும் சிலர் வீடு கட்ட அனுமதி பெற்றுக்கொண்டு, ஹோட்டல் கட்டிவருகின்றனர். இதனால், மழைக்காலங்களில் மண் அழுத்தம் தாங்க முடியாமல் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. விதி மீறிய கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் இங்குள்ள அதிகாரிகள் அதைப் பொருட்படுத்துவதில்லை. இதனால், ஏற்காடு கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது’’ என்று எச்சரித்தவர் தொடர்ந்து, ‘‘ஏற்காட்டில், தாசில்தார் முதல் வி.ஏ.ஓ வரை அரசு அதிகாரிகள் யாருமே இங்கே தங்கிப் பணியாற்றுவதில்லை. எல்லோருமே கீழிருந்துதான் வருகிறார்கள். இதனால், வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள்தான் பணியிடத்துக்கு வருகிறார்கள். எனவே, அரசு அலுவலர்களுக்காகப் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் பயன்பாடு இல்லாமல் வீணாகிவருகின்றன. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக்கூட மருத்துவர்கள் யாரும் நேரத்துக்கு வருவதில்லை. இங்கு போஸ்ட்மார்ட்டம் செய்யும் வசதி உள்ளது. ஆனாலும்கூட மருத்துவர்கள் இல்லாததால், விபத்தில் இறப்பவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டுபோக வேண்டியிருக்கிறது. அங்கும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். இதனால், இறந்தவர்களின் உறவினர்கள், கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்” என்றார் வேதனையாக.

வரம்பு மீறிய கட்டடங்கள்... அலட்சிய அதிகாரிகள்... நிலச்சரிவு அபாயத்தில் ஏற்காடு!

விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்து ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகனிடம் கேட்டபோது, “இது குறித்து எனக்கும் புகார் வந்துள்ளது. நான் இப்போதுதான் பணிமாற்றத்தில் இங்கு வந்திருக்கிறேன். கோடை விழா முடிந்த பிறகு இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்கிறேன்” என்றார். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் ஏற்காட்டின் பிரச்னைகள் குறித்துப் பேசினோம். “அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கட்டடங்களில் ஒருசில நேரங்களில் தங்கிவருகின்றனர். இந்தப் பிரச்னை தமிழ்நாடு முழுவதுமுள்ள மலைக்கிராமங்களில் உள்ளதுதான். இது குறித்தும், வரம்புமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

வரம்பு மீறிய கட்டடங்கள்... அலட்சிய அதிகாரிகள்... நிலச்சரிவு அபாயத்தில் ஏற்காடு!
வரம்பு மீறிய கட்டடங்கள்... அலட்சிய அதிகாரிகள்... நிலச்சரிவு அபாயத்தில் ஏற்காடு!

ஒரு பக்கம் விதிமீறிய கட்டடங்கள்... மறுபக்கம் அரசுக் கட்டடங்களில் தங்க ஆளில்லை. ஆபத்தான நேரத்தில் உரிய மருத்துவத்துக்கு வழியில்லை. தமிழகத்தின் அழகான ஒரு சுற்றுலாப் பிரதேசத்தை ஏன் மாவட்ட நிர்வாகம் இவ்வளவு அலட்சியமாகக் கையாள்கிறது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism